Friday, November 24, 2023

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள்

 சக்தி பீடம் 3. மீனாட்சி அம்மன் மதுரை பகுதி - 3

அம்பாள் மீனாட்சி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப் போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார். மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார். அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன. மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது.
மீனாட்சியம்மன் கோவிலில் தினமும் முதலில் அம்பாளுக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சிவனுக்கு பூஜை நடக்கிறது. மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால் அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள் பாலிக்கிறாள். திருவனந்தல் விளாபூஜை காலசந்தி திரிகாலசந்தி உச்சிக்காலம் சாயரட்சை அர்த்தஜாமம் பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது. இந்த எட்டு காலங்களில் முறையே மஹாஷோடசி புவனை மாதங்கி பஞ்சதசாட்சரி பாலா சியாமளா சோடஷி ஆகிய திருக்கோலங்களில் காட்சி கொடுக்கிறாள். இப்பூஜைகள் திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.
பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் கனவில் வந்த சிவனாரின் சடாமுடியிலிருந்து தேனாகிய மதுரம் இத்தலத்தில் வழிந்திட மதுராபுரி என அழைக்கப்பட்டு அது மருவி மதுரை ஆயிற்று. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் 8 கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம் இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. இதில் 32 சிங்கங்களும் 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...