Sunday, May 22, 2022

திருப்பதியில் தரிசிக்க வேண்டிய வேறு சில இடங்கள்

திருப்பதியில் தரிசிக்க வேண்டிய வேறு சில இடங்கள்
 திருப்பதியில் அவசியம் தரிசிக்க வேண்டிய வேறு சில இடங்களும் உண்டு.

அவை #என்னென்ன_தெரிந்துகொள்வோமா?

#பாதாள_மண்டபம்:
இது மலை அடிவாரத்தில் உள்ளது. ஸ்ரீ நிவாஸனின் விஸாலமான இரண்டு பாதங்கள் சிற்பத்துடன் பெரியதாகக் காணப்படுகின்றன. திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் இங்கு அர்ச்சனை ஆரத்தி செய்வதற்கு வசதியாக தேவஸ்தான அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தை அலிபிரி என்று அடிபுளி என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள புளிய மரத்தின் கீழேதான், உடையவர் ராமானுஜருக்கு, திருமலை நம்பிகள் ஸ்ரீ மத் ராமாயண ரகசியங்களை உபதேசித்தார் என்றும், அப்போது அவர் ஸேவிக்க வசதியாக திருமலை ஸ்ரீ நிவாஸனின் பாதங்கள் தோன்றிய தாகவும் வேங்கடாசல இதிஹாஸ மாலா என்ற நூல் கூறுகிறது.

#தலயேரு_குண்டு:
பாதாள மண்டபம் தாண்டியவுடன் சிறிது தூரத்தில் தலயேரு குண்டு என்கிற பெரியபாறையைக் காணலாம். இந்தப் பாறையின் மீது பக்த ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட் டுள்ளது. மலை ஏறுவோரும் இறங்குபவர்களும் தலைவலி அல்லது கால்வலி வராமல் இருக்க, தங்களின் தலையை இப்பாறையின் மீது தேய்ப்பார்கள். அந்த அடையாளம் சிலையில் தென்படுகிறது.

#கும்மர_மண்டபம்: 
தலயேரு குண்டு தாண்டியதும் காணப்படும் மிகவும் சிதிலமான மண்டபம் கும்மர மண்டபமாகும். கும்மர மண்டபம் என்றால், குயவன் மண்டபம் என்று பொருள். தொண்டமான் சக்ரவர்த்தி அரசாண்ட காலத்தில், குரவ நம்பி என்கிற குயவன் திருமலை ஸ்ரீநிவாஸன் திருமடைப்பள்ளிக்குத் தளிகை செய்யத் தேவையான மட்பாண்டங்க ளைத் தயார் செய்து அனுப்புவான். அவன் அனுதினமும் தான் இருக்கும் இடத்திலேயே ஸ்ரீ நிவாஸனின் மண் விக்கிரகத்துக்கு பூஜைகள் செய்து, மண் புஷ்பங்களை பக்தியுடன் சமர்ப்பித்து வந்தான். அவ்வாறு அவன் சமர்ப்பித்த மண் புஷ்பங்கள், திருமலையில் பெருமாள் சந்நிதியில் தென்பட்டதாம்! அவன் வசித்த இந்த இடம் அவன் பெயராலேயே அழைக்கப் படுகிறது.

#முக்கு_பாவி: 
திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் கோயிலுக்கு முன்பாக முக்கு பாவி என்கிற ஆழமான கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் கரையில் பக்த ஆஞ்சநேய ஸ்வாமி மண்டபம் உள்ளது. மஹந்து மடத்தைச் சேர்ந்த ஸாதுக்கள் பூஜை செய்கின்றனர். ‘முக்கு’ என்றால் கோலம் போடுதல் என்று பொருள். கோலம் போடும் கற்கள் அதிகமாக இங்கு தென்படுவதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. ஸ்வேத சக்ரவர்த்தி என்கிற அரசனின் குமாரர் ஸம்பு என்பவர் இங்கு தவமியற்றினாராம். ஸ்ரீ நிவாஸன் நேரில் தோன்றி அவரை அனுக்கிரஹித்தாராம்.

#த்ரோவ்வ_நரஸிம்முடு: 

திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஒன்பதாவது மைலில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் ஆலயம் ஒன்றுள்ளது. திருமலைக்கு நடந்து வந்த மார்க்கண்டேய மஹரிஷி வேண்டிக் கொண்டதன் பேரில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் இங்கு அவருக்கு தரிசனம் அளித்தாராம். சாலுவ நரஸிம்மராயுலு என்கிற அரசன் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறான்.

#கண்டா_மண்டபம்: 

திருமலையில் அவ்வசரிகோண என்கிற இடத் துக்கு அருகில் பெரிய மலையின் மீது இதை நிர்மாணித்துள்ளனர். மலையில் பெருமாளுக்கு நைவேத்தியம் ஆகும் நேரம், திருமலைக் கோயிலில் இரண்டு மணிகளை அடிப்பார்கள். திருமலை பூராவும் எதிரொலிக்கும் அந்த நாதத்தைக் கேட்டு கண்டாமண்டபத்திலுள்ள மணியை அடிப்பார்கள். அந்த கண்டாநாதம் கீழ்த் திருப்பதி சந்த்ரகிரி போன்ற இடங்களிலும் கேட்குமாம். விஜயநகர ராஜாக்கள் சந்த்ரகிரியில் முகாமிடும் நேரத்தில் #இந்தகண்டாநாதத்தை (மணியொலியை)க் கேட்ட பிறகே #சாப்பிடுவார்களாம்.

#மோகாள்ள_முடுபு: 
திருமலைக்கு நடந்து வரும் பக்தர்கள், தங்களின் முழங்காலைப் பிடித்துக் கொள் கிற மாதிரியான வலியை உண்டாக்கும் இடம் இது. அந்த நாளில் பக்தர்கள் இந்த இடம் வரும்போது, முழங்காலில் கையை வைத்தபடி மலை ஏறுவார்களாம். எம்பெருமானாருக்கும் வியாஸராயருக்கும் திருமலை பூராவும் சாளக்கிராமமாக ஸ்வாமி தென்பட்டதால், இருவரும் முழங்காலால் மலை ஏறினார்களாம். ஸங்கீத மூர்த்தி அந்நமாசார்யருக்கு இந்த இடத்தில் தாயார் (அலமேலுமங்கை தாயார்) பிரசாதம் கொடுத்து வழி காட்டியதாகக் கூறுவர்.

#அவ்வசரிகோண:  

மோகாள்ள முடுபு என்கிற இடத்துக்கு அருகில் உள்ள பள்ளமான இடம் இது. ‘அந்தப் பக்கத்தில் உள்ள பள்ளம்’ என்று பொருள்.

#த்ரோவ்வ_பாஷ்யகாருலு: 
திருமலைக்குச் செல்லும் வழியில் மோகாள்ள முடுபுவுக்கு அருகில் பாஷ்யகாரர் ஸந்நிதி உள்ளது. ‘த்ரோவ்வ’ என்றால் நடந்து போகும் வழி எனப் பொருள். நடந்து போகும் வழியில் உள்ள பாஷ்யகாரர் ஸந்நிதி இது. உடையவர் திருமலைக்கு வந்தபோது இங்கு சிறிது நேரம் இளைப்பாறினார் என்றும், திருமலை நம்பி அவருக்கு ஸ்வாகதம் (நல்வரவு) கூறி வரவேற்றதாகவும் ஐதீகம்.

#ஸார்ல_பெட்டெலு: 
மோகாள்ள மலை தாண்டியவுடன் பெட்டி பெட்டியாக சிலைகள் காணப்படுகின்றன. இவற்றைக் காவல் காப்பது போல் அனுமன் சிலை ஒரு பெட்டியில் உள்ளது. ஸ்ரீ நிவாஸ கல்யாணம் ஆனவுடன் சீர் வரிசைகளுடன் வந்த பத்மாவதித் தாயாரைப் பார்த்து ஸ்ரீ நிவாஸன் இந்தப் பெட்டிகளில் கறிவேப்பிலை இருக்கிறதா எனக் கேட்டதாகவும், கோபம் அடைந்த தாயார் திருச்சானூர் சென்றுவிட்டதாகவும் செவிவழிக் கதை ஒன்றுண்டு!

இனி, திருமலையை அடைந்ததும் அங்கே தரிசிக்க வேண்டிய சில இடங்களைப் பார்ப்போம்.

#ஹைஜ_ஸிலா #தோரணம்:

திருமலையில் பெருமாள் சந்நிதிக்கு வடக்கில் சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இது உள்ளது. இதற்கு முன்பு இந்த ஸிலா தோரணம் ஸ்படிக சிலையாக இருந்ததாம். கடல் பொங்கி அலைகளால் தள்ளப்பட்ட சிலைகள் எனக் கூறுகிறார்கள். உலகிலேயே அபூர்வமான ஸிலா தோரணம் இது.
#நாராயணகிரி_பாதாலு: 
பெருமாள் சந்நிதிக்குச் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நாராயணகிரி சிகரத்தின் மேல் பெருமாள் பாதங்கள் உள்ள சிலை ப்ரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நேராக பூலோகத்தில் கீழே இறங்கிய பகவான் இங்கு பாதத்தை வைத்து இறங்கினாராம். வருடம்தோறும் ஆடி மாதம் சுக்ல துவாதசி அன்று இங்குள்ள மண்டபத்தில் உள்ள தூண்களுக்கு 2 குடைகளைக் கட்டிப் பெருமாள் பாதங்களுக்குப் பூஜை நடக்கிறது.

இந்த இடங்கள் மட்டுமின்றி, ஆயிரங்கால் மண்டபமும் கொலு மண்டபமும், திருமலை நம்பி ஸந்நிதியும், அநந்தாழ்வான் தோட்ட மும், வஸந்த மண்டபமும் திருமலையில் உள்ளன. மேலும் ஸ்ரீ மத் அழகியசிங்கர் நிர்மாணித்துள்ள ஸ்ரீ அஹோபில மடம், ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரம், பரகால மடம், பெரிய ஜீயர் மடம், சின்ன ஜீயர் மடம் ஆகியனவும் திருமலையில் அழகுற மிளிர்கின்றன.
திருமலை தீர்த்தங்கள்!
ஸ்ரீநிவாஸா... கோவிந்தா...
திருவேங்கடத்து எழில்கொள் சோதியாய் விளங்கும் சர்வேஸ்வரன் உறையும் திருமலையில் புண்ணியத்தை நல்கும் விதத்தில் ஆகாஸ கங்கை, பாபநாஸம் முதலான புண்ணிய தீர்த்தங்கள் பல உள்ளன. ஸ்வாமி தேஸிகனும் 'தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு’ என 'அதிகார ஸங்க்ரஹம்’ என்கிற தமது ப்ரபந்தத்தில் குறிப்பிடுகிறார். 
மகிமைமிகு அந்தத் திருமலையில் உள்ள தீர்த்தங்கள்:
ஆகாஸ கங்கை: திருமலையில் கோயிலுக்கு வடக்கே 2 மைல் தூரத்தில் இது உள்ளது. இதில் நீராடினால் மோட்சம் உண்டு என்கிறது வராஹ புராணம். அனுமனின் தாய் அஞ்சனை தவமியற்றிய இடம் இது. எனவே, அஞ்சனாத்ரி என்று இதை அழைப்பர். ராமாநுஜர் என்ற அந்தணர் ஒருவர் தவம் செய்து ஸ்ரீ நிவாஸனை நேரில் தரிசித்த இடம் இது. முன்பொருமுறை அந்தணர் ஒருவர், கழுதை முகம் நீங்கி மனித முகம் பெறுவதற்காக, தினமும் இங்கு வந்து நீராடி னார் என்கின்றன புராணங்கள். பெருமாளுக்கு இரண்டு குடங் களில் தீர்த்தம் இங்கிருந்து தினந்தோறும் எடுக்கப்படுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் முக்தி கிட்டும் என்கின்றன புராணங்கள்.
பாபவிநாஸநம்: 
திருமலைக் கோயிலுக்கு வடக்கே 3 மைல் தூரத்தில் இந்தப் புண்ணிய தீர்த்தம் உள்ளது. கடுமையான பாவம் செய்திருந்தாலும் இங்கு நீராடினால் பாவம் தொலையும். ஓர் அந்தணன் பிரம்ம ராட்சஸனிடம் இருந்து விடுபட, இங்கு நீராடி வழிபட்டு பலன் பெற்றானாம். பலவிதமான பாவங்களைச் செய்த த்ருடமதி கழுகாகப் பிறந்து, இந்தத் தீர்த்தத்தில் நீராடி முக்தி அடைந்ததாகவும், பத்ரமதி என்பவன் இதில் நீராடி, பணம் பொருள் பெற்றதாகவும் புராணத் தகவல் உண்டு. ஐப்பசி சுக்லபட்சம் சப்தமி அன்று அஸ்த நட்சத்திரத் தன்று (ஞாயிற்றுக் கிழமையும் சேர்ந்தால் இன்னும் விசேஷம்)நீராடுபவன் கோடி ஜன்மங்களில் ஸம்பாதித்த பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.
கோகர்ப்பம் அல்லது பாண்டவ தீர்த்தம்: 
திருமலை ஆலயத்துக்கு வட கிழக்கில் ஒரு மைல் தூரத்தில் இது உள்ளது. பாண்டவர்கள் ஆரண்ய வாசம் செய்தபோது இங்கு சிறிது காலம் இருந்தார்களாம். இங்குள்ள குகை யில் பாண்டவ சிற்பங்கள் உள்ளன. இந்தக் குகை கோயில் பசுவின் கர்ப்பம் போல உள்ளதால் கோகர்ப்பம் என அழைக்கப்படு கிறது. இதில் எவன் நீராடுகிறானோ அவன் துக்கங்களை அடைய மாட்டான். மேலுலகிலும் சுகம் பெறுகிறான் என வராஹ புராணம் விவரிக்கிறது.
ஜாபாலி தீர்த்தம்: 
ஸ்வாமி புஷ்கரிணிக்கு 2 மைல் தூரத்தில் வடக்கில் இது உள்ளது. ஜாபாலி என்கிற மஹரிஷி தவம் செய்த இடம் இது. துராசாரன் என்கிற அந்தணன் இங்கு நீராடி பிரம்ம ராக்ஷஸனிடமிருந்து விடுபட்டு முக்தி அடைந்தான். அகத்தியர் இங்கு தினந்தோறும் நீராடித் தவமிருந்து ஸ்ரீ நிவாஸனை நேரில் தரிசிக்கும் பேறு பெற்றார். இங்கு அனுமனுக்கு பழைமையான ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மஹந்து மடத்தாரின் நிர்வாகத்தில் உள்ளது.
வைகுண்ட தீர்த்தம்:.
 ஸ்வாமி புஷ்கரிணிக்கு வடகிழக்கில் இரண்டு மைல் தூரத்தில் ஒரு குகை உள்ளது. இதற்கு வைகுண்ட குகை என்று பெயர். இதை வைகுண்ட தீர்த்தம் என்றும் அழைப்பர். சக்ரவர்த்தித் திருமகன் ஸ்ரீ ராமன் வானரங்களுடன் திருமலைக்கு வந்தபோது, வானரங்களுக்கு இந்த குகையில் ஸ்ரீ மஹாவிஷ்ணு தரிசனம் கொடுத் தாராம். இந்த குகையில் வானரங்கள் தங்கியிருந்தபோது ஆயுதபாணி களான வீரர்கள் வானரங்களைத் துரத்தினார்களாம். இதனால் வெளியே ஓடிவந்த வானரர்களிடம் சக்ரவர்த்தித் திருமகன் ஸ்ரீ ராமன் ’இது பூலோக வைகுண்டம்' என்றாராம். இவை புராணம் கூறும் தகவல். இங்கு செல்வதற்குச் சரியான வழி இல்லை.
சக்ர தீர்த்தம்: 
திருமலைக் கோயிலுக்கு தென்மேற்கே இரண்டு மைல் தூரத்தில் இந்தத் தீர்த்தம் உள்ளது. 250 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 'ஸிலா தோரணம்' என்ற இடத்துக்குப் பக்கத்தில் 100 அடி தூரத்தில் சக்ர தீர்த்தம் உள்ளது.
பத்மநாபன் என்ற விஷ்ணு பக்தன் இடையூறின்றித் தவம் இயற்றும் வகையில், அவருக்கு பாதுகாப்பாக சக்கரத்தாழ்வானை பகவான் நியமித்தார். அதனால் இந்தத் தீர்த்தத்துக்குச் சக்ர தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. ஸ்ரீ ரங்கத்திலிருந்து வந்த சுந்தரம் என்கிற அந்தணர் தமக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையை இங்கு நீராடிப் போக்கிக் கொண்டாராம். கார்த்திகை மாதத்தில் கிருஷ்ணபட்ச துவாதசியன்று இங்கு முக்கோடி என்கிற விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் இங்குள்ள நரசிம்மருக்கும் சக்ரத்தாழ்வாருக்கும் ஆராதனை, நைவேத்தியம் ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன.
ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்தம்: திருமலைக் கோயிலுக்கு வடக்கே 6 மைல் தூரத்தில் இது உள்ளது. கிருஷ்ணன் என்கிற மஹரிஷியும் ராம கிருஷ்ணன் என்கிற மஹரிஷியும் இங்கு நீராடித் தவமிருந்து பெருமாளை தரிசித்ததால் ராமகிருஷ்ண தீர்த்தம் என்று வழங்கப் படுகிறது. தை மாதம் புஷ்ய நட்சத்திரம் பௌர்ணமி அன்று இங்குள்ள ராமகிருஷ்ண விக்கிரகங்களுக்குத் திருமஞ்சனம், அர்ச்சனை, நைவேத்தியம் நடைபெறுகிறது. பாபவிநாஸ தீர்த்தம் வரை பேருந்தில் வந்து அங்கிருந்து இந்த தீர்த்தம் இருக்கும் இடத் துக்கு நடந்துவர வேண்டும்.
குமாரதாரா தீர்த்தம்:
 திருமலை ஆலயத்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் இது உள்ளது. பாபவிநாஸ தீர்த்தத்திலிருந்து நடந்து வர வேண்டும். வியாதியால் பீடிக்கப்பட்ட முதியவர் ஒருவர் இங்கு நீராடி இளைஞனாக (குமரானாக) மாறினாராம். ஆகையால், இது குமாரதாரா தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மற்றுமொரு தகவலும் உண்டு. சுப்ரமணியர், தாரகாசுர வதம் செய்த பிறகு பிரம்மஹத்தி பாவம் போக இங்கு தவம் இயற்றி நீராடி, அந்தப் பாவத்தைப் போக்கிக்கொண்டாராம். தை மாதம் பௌர்ணமி அன்று பிற்பகலில் இங்கு நீராடுவது நல்லது. இங்கு நீராடி தட்சணையுடன் கூடிய அன்னதானம் செய்வதால், பெரும் புண்ணியம் கைகூடும்.
தும்புரு தீர்த்தம்: 
திருமலைக் கோயிலுக்குப் பத்து மைல் தூரத்தில் வடக்கில் இது உள்ளது. இதை கோண தீர்த்தம் என்றும் சொல்கிறார்கள். தும்புரு தவமியற்றிய இடம் இது. ஸர்வபத்ரன் என்கிற நாத்திகன் இங்கு நீராடி மோட்சம் அடைந்தான். இந்தத் தீர்த்தக் கரையில் தரிகொண்ட வெங்கமாம்பா என்கிற பக்தை 300 ஆண்டுகளுக்கு முன்பு தவம் செய்தாள். இங்கு நீராடுபவர்களுக்கு மறு பிறப்பு இல்லை என வராஹ புராணம் கூறுகிறது. பாபவிநாஸ தீர்த்தம் வரை பேருந்தில் வந்து, அங்கிருந்து ஏழு மைல் தூரம் நடந்து வர வேண்டும்.
ஸ்வாமி புஷ்கரிணி:
 திருமலைக் கோயிலுக்குப் பக்கத்தில் வடக்கே இந்த திருக்குளம் அமைந்துள்ளது. பார்ப்பதற்கு ஒரு குளம் போல் தோற்றமளித்தாலும் இரண்டு குளங்கள் இங்கு அமைந்துள்ளன. வராஹப் பெருமாளுக்கு ஒன்று, ஸ்ரீ நிவாஸனுக்கு ஒன்று என இரண்டு திருக்குளங்கள்.
'திராவிட தேசத்தில் தேவர்களால் சேவிக்கப் பெறும் வேங்கடம் என்னும் புண்ணியம் தரும் மலை உள்ளது. அதன் சிகரத்தில் மிகவும் பெரியதும், புண்ணியம் நிறைந்ததும், சகல பாவங்களையும் போக்குவதுமான ஸ்வாமி புஷ்கரிணி என்ற திருக் குளம் அமைந்திருக்கிறது’ என்று மார்க்கண்டேய மஹரிஷியிடம் பிரம்ம தேவர் கூறியதாகப் புராணம் கூறுகின்றது. மார்கழி மாதம், சுக்லபட்ச துவாதசி அதாவது வைகுண்ட ஏகாதசி திருநாளுக்கு மறுநாள் அருணோதய காலத்தில் பாரதத்திலுள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் மகிமை மிகுந்த இந்த ஸ்வாமி புஷ்கரிணியில் சங்கமிக் கின்றனவாம். அந்தத் திருநாளில் அருணோதய காலத்தில் இந்தத் தீர்த்தத்தில் நீராடி னால், நமது பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. ஸ்வாமி புஷ்கரிணியில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாக ப்ரஹ்ம புராணம் கூறுகிறது.
தநத தீர்த்தம்: 
இது ஸ்வாமி புஷ்கரிணியின் வடபாகத்தில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், கடன்கள் தீர்ந்து அளவற்ற செல்வம் பெறலாம்.
காலவ தீர்த்தம்:
 இது ஸ்வாமி புஷ்கரிணியின் வடகிழக்கு மூலையில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினாலும், இந்தத் தீர்த்தத்தைப் பருகினாலும் இம்மையில் போகத்தையும், மறுமையில் முக்தியையும் அடையலாம்.
மார்க்கண்டேய தீர்த்தம்:
 இது ஸ்வாமி புஷ்கரிணியின் கிழக்கே உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் ஆயுள் விருத்தி அடையுமாம்.
அக்னி தீர்த்தம்:
 இது ஸ்வாமி புஷ்கரிணியின் வடகிழக்கே உள்ளது. இங்கு நீராடினால் பாபம் தொலையுமாம்.
யமதீர்த்தம்: 
இது ஸ்வாமி புஷ்கரிணியின் தெற்கே அமைந்துள்ளது. இங்கு நீராடினால் நரகத் துன்பத்தில் இருந்து விடுபட முடியுமாம்.
பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் திருமலையில் 68 கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாக (887வது திருநாமத்தில்) கூறப்படுகிறது. திருமலையில் எண்ணற்ற புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதால் திருமலைக்கு புஷ்கராத்ரி என்றும் ஒரு பெயருண்டு. ஆகவே, திருப்பதிக்குச் செல்லும் அன்பர்கள் இந்த தீர்த்தங்கள் எல்லாவற்றிலும் நீராட முடியாவிட்டாலும், ஸ்வாமி புஷ்கரிணியிலாவது நீராடி, அந்த மலையப்பனை வழிபட்டு மகிமைகள் பெறலாம்.

கொல்லிமலை

#கொல்லிமலை

              >> கொல்லி மலை தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். அறம்பாடியம்மையை தன் இடப்பாகத்தில் சுமந்து கொண்டு இறைவன் ஆட்சி செய்யும் பெருமையையும், அருள்சித்தர்கள் பலர் ஜீவ நிலையில் குருவருள் கொடுத்துக் கொண்டிருக்கும் பேறு பெற்றதொரு புனிதம் வாய்ந்த இடம் கொல்லிமலையாகும் . இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் அறப்பள்ளீஸ்வரர் - தாயம்மை எனும் அறம்வளர்த்த நாயகியுடன் எழுந்தருளியுள்ளார்.

          >> அனைத்து ஜீவராசிகளும் உய்யும் பொருட்டு தவமியற்றிய சித்தர்கள் கொல்லிமலையில் ஒருங்குகூடி தங்கள் சித்த மரபுப்படி சிவலிங்கம் ஒன்றை (ஆருஷலிங்கம்) நிறுவினர். இந்த ஆருஷ லிங்கத்திற்கு அறப்பள்ளீஸ்வரர் என்று பெயரிட்டு வணங்கினர். நாளடைவில் இப்பகுதி வயல் வெளியானதால் சிவலிங்கம் நிலத்தில் புதையுண்டது. பின்பு ஒரு சமயம் நிலம் உழும்போது ஒரு உழவனின் கலப்பையில் லிங்கம் சிக்கியது. அந்த விவசாயி அந்த இடத்தை அகழ்ந்து பார்த்த போது இலிங்கம் வெளிப்பட்டது. ஊர் மக்கள் பச்சைப் பந்தல் அமைத்து வழிபாடு செய்தனர். நாளடைவில் இங்கு பெருங்கோவில் கட்டப்பட்டது.

         >> தாயம்மை எனும் அறம்வளர்த்தநாயகி எழுந்தருளியுள்ள சன்னதிக்கு முன்பு உள்ள மண்டபத்தின் மேற்கூறையில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்ரீசக்ரத்தின் கீழே அமர்ந்து தவம் செய்ய அருமையாய் இருந்தது. அன்னையின் அருள் நம்மை இருகரம் நீட்டி அழைப்பது போல் இருந்தது . இறைவனின் கருவறை கோபுரம் முழுவதும் சித்தர்களின் திருவுருவமும் மற்றும் அன்னையின் கருவறையை சுற்றிலும் உள்ள சுவரில் சித்தர்களின் திரு உருவங்களைக் காணும் போது இக்கோவில் சித்தர்களின் அருட்கூடம் என்பதை நமக்கு உணர்த்துகிறது ..

          >> இத்தலத்தின் வடக்குப் பகுதியில் என்றும் வற்றாத ஐந்து நதிகள் ஒன்றாக இணைந்து சுமார் 150 அடி உயரத்திலிருந்து ஆகாயகங்கை என்ற அருவியாய்க் கொட்டுகிறது. இந்த அருவி நீர் பஞ்சநதி என்று பெயர் பெற்ற புண்ணிய தீர்த்தமாகும். கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக - 760 படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சியில் நீராடலாம்.. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.    

            >> இக்கோவில் அருகில் உள்ள பஞ்சநதியில் உள்ள மீன்களுக்கு இங்கு வரும் பக்தர்கள் உணவு பொருட்களை வழங்குவதும், சிலர் மீனைப் பிடித்து மூக்கு குத்தி விளையாடுவதும் உண்டாம். சில காலத்திற்கு முன்பு ஒரு அறியாமையுடைய பக்தர் அங்குள்ள மீனைப் பிடித்து வெட்டிச் சமைக்கத் தொடங்கினார். குழம்பு கொதிக்கத் தொடங்கியதும் அக்குழம்பில் இருந்து மீன்கள் உயிர்பெற்று தாவிக் குதித்து நதிக்குள் ஓட ஆரம்பித்தன. இந்தச் சமயம் ஒரு அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவன் இருப்பதாகக் கூறி ஒலித்தது. எனவே, இந்த கோவில் ஈஸ்வரனுக்கு, அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்ற பெயர் வழங்கலானது. தினமும் காலையில் மூலவருக்குப் படைத்த படையலை, இத்தீர்த்தத்திலுள்ள மீன்களுக்கு போடுகிறார்கள்.

      >> அறப்பள்ளீஸ்வரர் மீன் வடிவில் இருப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். எனவே இவர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு முன்பே இந்த ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பல்வேறு தின்பண்டங்களைக் கொடுத்து வழிபடுகின்றனர். இதற்குப் பின்னரே இவர்கள் கோவிலுக்கு சென்று சிவனையும் அம்மனையும் வழிபடுகின்றனர். கொல்லிமலையில் இருந்து பார்க்கும் போது மலையின் காட்சி அன்னை படுத்து உறங்குவது போல் தென்படுகிறது .

சித்தர்களின் அருட்கடாட்சியம் : 

       சித்தர்கள் வாழும் இந்தக் கொல்லிமலையில் அனேகச் சித்தர்களின் குகைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவைகளைக் கண்டறிவதில் மிகவும் கடினமான நிலை உள்ளது. மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் குகைகள் இருப்பதாகவும் அங்கு பல சிவலிங்கங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள். மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தர் , பாம்பாட்டி சித்தர் குகை மேலும் மகான்களின் ஆசிரமங்கள் மற்றும் காகபுஜண்டர் மற்றும் காலாங்கி நாதரின் பரிபூரண கடாட்சியம் நிறைந்த மலையாக கொல்லி மலை திகழ்கிறது ..

     >> கொல்லிமலையைக் காப்பாற்றுவதற்காக நான்கு திசைகளிலும் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர். தென் திசையைக் கொல்லிபாவையும், வடதிசையை மாசி பெரியண்ணன் சாமியும், மேற்கு திசையை எட்டுக்கை காளியும், கிழக்குத் திசைக்கு சின்ன அண்ணன் சாமியும் காவலுக்காகப் பிரதிஷ்டை செய்துவைத்துள்ளனர்.

      >> அறப்பள்ளீஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆகாயகங்கைக்கு கீழ்த்திசையில் ஒரு கிலோ மிட்டர் தொலைவிற்குப் படிக்கட்டுப் பாதை உள்ளது.அவ்வழியாகச் சென்று ஆகாயகங்கையின் மூலிகைத் தீர்த்தத்தில் நீராடியப் பின் அங்கிருந்து மேல்நோக்கிச் செல்லும்போது இடதுப் புறமாகக் கோரக்கர் குகைச் செல்லும் வழியுள்ளது. இங்கிருந்து பன்னிரண்டு கிலோமிட்டர் நடக்க வேண்டும் வழி நெடுக்க கரடு முரடான அடர்ந்தக் காட்டுப் பகுதியாக உள்ளது. இங்குள்ள மரத்தினிலுள்ள அம்புக்குறியிட்ட பாதையைக் கவனித்துச் செல்ல வேண்டும் .எனவே ஒரு வழிகாட்டியை அழைத்துச் செல்வது சால சிறந்தது.

            >> அறப்பள்ளீஸ்வரர் ஆலயத்தின் நேர் பின்புறம் ஸ்ரீ ராமபிரசன்ன நாதானந்த ராஜயோகி சமாதி கொண்டு அருள் செய்கிறார் மேலும் கொல்லி மலையில் அறப்பள்ளீஸ்வரர் ஆலயத்திலிருந்து ஒரு கிலோமிட்டர் முன்பு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ மாணிக்க சாமிகள் எனும் ஓசானி சித்தர் சமாதி பெற்று உள்ளார் ..இவர் நூற்றி நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தவர் . பாம்பாட்டி சித்தரின் பரிபூரணமான அருளை பெற்றவர் .

           >> ஓசானி சித்தர் சமாதி பீடத்தில் இருந்து இரண்டு பவுர்ணமிவிட்டு (மூன்று மாதத்திற்கு ஒரு முறை) மூன்றாம் பவுர்ணமிக்கு குழுவாக இவர்களே கோரக்கர் மற்றும் பாம்பாட்டி சித்தர் குகைக்கு அழைத்து செல்கிறார்கள்.. இரவில் சித்தர்களுக்கு பூசை மற்றும் யாகம் நடைபெறுகிறது.. இவர்களே உணவு ஏற்பாடு செய்து தருவார்கள்.. சித்தர் குகைக்கு செல்ல விரும்பம் உள்ளவர்கள் பவுர்ணமிக்கு முதல் நாள் ஓசானி சித்தர் பீடத்திற்கு வந்தால் போதும் அவர்களே அழைத்து செல்வார்கள் .(தொடர்புக்கு 8110043267.) 

            >> அறப்பள்ளீஸ்வரர் கோவிலுக்கு மேல்புறம் கொல்லிப்பாவை என்ற பெயரில் பேரழகும், தெய்விக சக்தியும் நிறைந்த பதுமை ஒன்று இருந்ததாக தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. இம்மலையில் தவமியற்றிய சித்தர்களும் முனிவர்களும் தங்கள் தவத்திற்கு இடையூறு வராதபடி காப்பதற்காக இந்தக் கொல்லிப்பாவையை உருவாக்கினார்களாம்..

          >> அழகிய பெண் உருவுடன் அமைந்த இப்பாவை அரக்கர்களின் வாடையைக் கண்டு பின்பு பெரும் சிரிப்புடன் பயமுறுத்தி அவர்களைக் கொன்று விடுவாளாம். அறப்பள்ளீஸ்வரர் கோவிலில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எட்டுக்கை அம்மன் தான் கொல்லிப்பாவை என்றும் சொல்லபடுகிறது . 

          >> இக்கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், வரலாற்று சிறப்பும் உடையது. சுமார் 280 கி.மீ.பரப்பளவும் 1300 மீட்டர் உயரமும் கொண்ட இம்மலைத்தொடரை சேர வேந்தர்கள் ஆண்டனர். கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி எனும் மன்னன் ஆண்ட கொல்லிமலை நாட்டின் ஒரு பகுதிக்கு அறப்பள்ளி என்று பெயர். 

          >> இக்கோவிலில் 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோழ மன்னன் கண்டராதித்தனின் மனைவியும், சோழ சக்ரவர்த்தி இராசராசசோழனின் பெரிய பாட்டியுமான செம்பியன் மாதேவி தன் விலைமதிப்பற்ற அணிகலன்களை அறப்பள்ளீஸ்வரருக்கு அணிவித்ததற்கான 12 சோழர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன.

அமைவிடம்:

       >> நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சோளக்காடு வரை 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டமலைப் பாதையின் தூரம் சுமார் 26 கி.மீ. இது கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும். கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப் பாதைகளில் பயணிக்க ஏதுவான சிறிய ரக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொல்லிமலைக்கு மேல் உள்ள ஒவ்வொரு இடமும் நான்கு - ஐந்து கிலோ மிட்டர் தொலைவில் உள்ளது தனியாக வாகனத்தில் வந்தால் எளிமையாக இருக்கும் ..

வந்து பாருங்கள் அருமையாக உள்ளது ...


நடவாவி கிணறு

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் நடவாவிக் கிணறு உற்ஸவ விவரங்கள் முழுதும் இப்போது தெரிந்துகொள்வோம் முதலில் வீடியோ பார்த்தோம் இப்போது விவரங்கள் இங்கே !
பூமிக்கு அடியில் நடைபெறும் அதிசய வரதராஜ பெருமாள் உற்சவம் இன்று 21/5/2022 சனிக்கிழமை தரிசிப்போம் 

காஞ்சிபுரத்திலிருந்து கலவை செல்லும் வழியில் ஐயங்கார் குளம் எனும் திருத்தலம் உள்ளது இங்குள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி உள்ள பெரிய குளத்தின் அருகே நடவாவிக் கிணறு என்ற சிறப்பு வாய்ந்த கிணறு உள்ளது. இந்தக் கிணற்றுக்குள் செல்ல சிறப்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
வளர்பிறையில் பிரம்மாவின் வேள்வியில் இருந்து அவதரித்தவர் வரதராஜ பெருமாள் என்கிறது தலபுராணம். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று அந்த வைபவம் நடவாவி உற்சவமாகக் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலிலிருந்து வரதர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அழகே தனி. அந்த திருநாளில் யாகம் வளர்த்து நெருப்பாலும், நடபாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் வரதராஜ பெருமாளை ஆலயத்திற்கு கொண்டு வருகின்றார்கள்.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் யாத்திரையை தொடங்கும் வரதர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, செவிலிமேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐய்கங்கார் குளம் வழியாக நடவாவி கிணற்றுக்கு வருகிறார். அங்கிருந்து பாலாறு, மீண்டும் செவிலிமேடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறமாக விளக்கடிக்கோயில் தெரு, காந்தி ரோடு வழியாக வரதராஜ பெருமாள் கோயிலுக்கு பெருமாளை அழைத்து வருகின்றார்கள்.

பெருமாளை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வருபவர்களுக்கு தனது அழகைக் காட்டி மயக்கிவிடுகிறார் பெருமாள். அவர்கள் மனதில் என்னென்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என நினைக்கின்றார்களோ, அவர்கள் வேண்டாமலேயே பெருமாள் அதை பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

சுட்டெரிக்கும் வெயிலில் வீதிகளில் நீரை தெளித்து குளிர்வித்து, கோலமிட்டு பெருமாளை வரவேற்கிறார்கள் பக்தர்கள். வழியெங்கும் தோரணங்கள், இளைப்பாற பந்தல்கள் என குதூகலத்தோடு பெருமாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றார்கள். புளியோதரை, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், சாம்பார்சாதம் என வழியெங்கும் அன்னதானம் செய்கிறார்கள். வெயிலில் வருபவர்களின் தாகம் தணிக்க பானகம், மோர், தண்ணீர் என கொடுக்கிறார்கள்.

நடவாவி கிணறு

வாவி என்றால் கிணறு என்று பொருள். நட என்றால் நடந்து வருதல் என்று பொருள். கிணற்றுக்குள் ஒரு கிணறு. தரைத்தளத்திலிருந்து படிக்கட்டுகளால் சுரங்கம் போன்றதொரு பாதை செல்கிறது. அதற்குள் மண்டபம். மண்டபத்திற்குள் கிணறு. இதுதான் நடவாவி கிணறு என்று அழைக்கப்படுகின்றது. சித்திரை பௌர்ணமியின் இருதினங்களுக்கு முன்பே, மண்டபத்தில் நீர் தேங்காத அளவிற்கு கிணற்றிலிருக்கும் நீரை வெளியேற்றுகின்றார்கள்.

48 மண்டலங்களை குறிக்கும் வகையில் 48 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. 27வது படி வரை கீழே இறங்க முடியும். இந்த 27 படியும் 27 நட்சத்திரங்களை குறிக்கின்றன. 27 படி ஆழத்தில் மண்டபத்தை அடையமுடியும். 12 ராசிகளை குறிக்கும் வகையில் 12 தூண்களால் கிணற்றை சுற்றி மண்டபம் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு தூணிலும் நாற்புறமும் பெருமாளின் அவதாரம் சிறிய மற்றும் பெரிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளன.

மேளங்கள் முழங்க, சிறப்பு அலங்காரத்துடன் நடவாவி கிணற்றுக்குள் இறங்கும் வரதராஜர், கிணற்றை மூன்றுமுறை சுற்றுகிறார். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் நான்கு திசைக்கும் ஒரு முறை தீபாராதனை நடைபெறுகிறது. இதுபோல் மொத்தம் 12 முறை தீபாராதனை நடைபெறுகிறது. கல்கண்டு, பழங்கள், என மொத்தம் 12 வகையான பிரசாதங்களை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

இரண்டாம் நாள் ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் நடவாவி கிணற்றுக்கு வந்து செல்கின்றார்கள். அதைத் தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் கிணற்றில் நீராடி மகிழ்கின்றனர். சித்திரை பௌர்ணமி முடிந்தும் 15 முதல் 20 நாள்வரை நீராடலாம்.

நடவாவி கிணற்றில் இருந்து கிளம்பும் வரதருக்கு, பாலாற்றில் வைத்து பூஜை செய்கிறார்கள். ஆற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் ஊறல் (அகழி போன்ற பள்ளம் ) எடுத்து, அதற்கு பந்தல் போட்டு அபிஷேகம் நடக்கின்றது. இதற்கு ஊறல் உற்சவம் என்று பெயர். அதைத் தொடர்ந்து காந்தி ரோடு வழியாக கோயிலுக்கு வந்தடைகிறார் வரதர்.

பெருமாள் செல்லும் இடங்களில் எல்லாம் திருவிழாவாகவே இருக்கின்றது.

படிக்கட்டுகள் வழியாகக் கீழே சென்றால் கருங்கல்லால் ஆன, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும் இந்தப் பெரிய கிணற்றில் ‘சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றிவிடுவார்கள் அன்று மாலை பூமிக்கு அடியில் (கிணறு) அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமானை எழுந்தருளப் பண்ணுவார்கள்.

மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம்.

அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும் வான்வழி பார்வையில் இந்த கிணறு சாவி போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. நடவாவி கிணறு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என கூறப்படுகிறது.

கிணற்றின் மூன்று பக்கங்கள் கருங்கற்களால் அமைந்துள்ளன. நான்காவது பக்க சுவற்றில் கதவு போன்ற அமைப்பு காணப்படுகிறது. இந்த கதவிற்கு பின்புறம் பாதை உள்ளதா? அது எங்கு செல்கிறது என்பது தேவ ரகசியமாகவே உள்ளது.

சஞ்சீவிராயர் ஆலயத்தில் மூன்று நாடாவி கிணறுகள் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது தற்போது ஒரு கிணறு மட்டுமே மக்கள் வழிபாட்டில் உள்ளது. மற்றொரு கிணறு சஞ்சீவிராயர் ஆலயத்தில் உள்ளே இருந்ததாகவும் தற்போது அந்த கிணறு முற்றிலும் அழிந்து இருக்கும் இடம் தெரியாமல் மாயமானது. மற்றொரு நடவாவி கிணறு ஐயங்கார் குளம் கிராமத்தில் ஒதுக்குப்புறத்தில் பாழடைந்து புதர் மண்டி அழியும் விளிம்பில் பரிதாபமாக காட்சியளிக்கிறது.

கிணற்றின் வெளித்தோற்றத்தில் இருக்கக்கூடிய கல்மண்டபம் மட்டுமே புதருக்குள் ஐந்தாயிரம் ஆண்டுகால வரலாற்றை தாங்கி நின்று கொண்டிருக்கிறது கல் மண்டபத்தில் இருந்து படிக்கட்டுகள் உள்ளே செல்கின்றன சுமார் 20 அடி உயரத்திற்கு கேட்பார் கவனிப்பார் யாரும் இல்லாத காரணத்தினால் மண்மூடி பாதை தடைசெய்யப்பட்டு அழியும் விளிம்பில் நடவாவி கிணறு பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

கிணற்றை சுற்றி இருக்கக்கூடிய கற்கள் வலுவிழந்து பெயர்ந்து தரையில் விழுந்துள்ளது இந்தக் கிணறு போதிய விழிப்புணர்வும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லாமல் தொடர்ந்து சேதமடைந்துகொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த நாடாவி கிணறு முற்றிலுமாய் அழிந்து போகும் அபாயம் உள்ளது.

மகாபாரதத்திலிருந்து ஒரு குட்டிக் கதை.!

மகாபாரதத்திலிருந்து ஒரு குட்டிக் கதை.!

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்...

குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்...

ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. 

அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது...

தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர்...

சிட்டுக்குருவி, பறந்து போய், 
ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது...

“கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது...

“நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்...

“எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்” என்றது குருவி..!

"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”

இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்..!

குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை..

போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்...

அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! 
போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய 
ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை...

ஆனாலும் அவற்றை எடுத்து 
ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்...

ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்...

யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்...

ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது..!

மனிதன் தானே..!

“நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன்...

ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்..!

“பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம்,

“அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது” என்று மட்டும் சொன்னார் பகவான்..!

அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை..!

போர் நடந்து, பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர்...

அர்ஜுனனுடன் பரமாத்மா 
ஸ்ரீ கிருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்..!

தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான்...

ஹே அர்ஜுனா! "இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்கிறார்..!

“எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்..

அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன..

தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள் தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது!

“பகவானே! என்னை மன்னித்து விடு!
உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்...

அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்!

அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்.
அவனை சரணடைவோம்.. மற்றவை நம்மை படைத்தவனின் பொறுப்பு...!!!


கும்பாபிஷேகம் என்பது என்ன, அதில் என்னென்ன பூஜை செய்கிறார்கள்

அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனடியை சிந்திப்போம் 

ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா?*

கோயில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். 
ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன, அதில் என்னென்ன பூஜை செய்கிறார்கள் என்பது பலருக்கு தெரிந்திருக்காது.

இந்துக்கள் ஆகிய நாம் அனைவரும் இவை தெரிந்துகொள்ள வேண்டும்.!

அதைப் பற்றி ஒரு சிறு விளக்கம் இங்கே...👇

இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. 
அது எப்போது முழுமை பெறும்?...

ஆலயத்தில், *'கும்பாபிஷேகம்'* நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது.

*கும்பம்* என்றால் *'நிறைத்தல்'* என்று பொருள். 
நம் ஆலயங்களில் வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்கள் மூலம் *இறை சக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம்.*

இதனை சைவர்கள் 
*'மகா கும்பாபிஷேகம்'* என்றும்
வைணவர்கள் *'மகா சம்ப்ரோக்ஷணம்'* என்றும் அழைக்கிறார்கள்.

மேலும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் யாகங்கள் செய்யப்பட்ட தீர்த்தங்களால் இறைவன் மீதும், கோபுரக் கலசங்கள் மீதும் புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

கும்பாபிஷேகம் மூலமாகவே விக்கிரகங்கள் தெய்வசக்தியைப் பெறுகின்றன.

பெரும்பாலும், 
*கும்பாபிஷேகமானது 12 வருடங்களுக்கு* ஒருமுறை செய்யப்படுகிறது. 

இதன் காரணம், நாம் கும்பாபிஷேகம் செய்யும் போது சாத்தப்பட்ட அஷ்டபந்தனமானது (மருந்து) 12 வருடங்கள் வரைதான் சக்தியோடு இருக்கும். 

மேலும் கோயில்களில் ஏதேனும் புனரமைப்பு செய்தாலும் கும்பாபிஷேகம் செய்யப்படும்.

*கும்பாபிஷேகத்தின் வகைகள்:-)*

ஆவர்த்தம் – 
புதிதாக கட்டப்படும் ஆலயங்களில் செய்யப்படுவது. 
இது மும்மூர்த்திகளுக்காகச் 
செய்யபடுகின்றன 

அனாவர்த்தம் – 
வெகுநாட்கள் யாராலும் முறையாக பராமரிக்கப்படாமல், பூஜை, புனஷ்காரங்கள் நடைபெறாமல் இருக்கும் ஆலயங்களைப் புனரமைப்பு செய்து பின்னர் செய்யப்படுவது. 

மேலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்த கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்யும் முறை.

புனராவர்த்தம் – 
கருவறை, பிரகாரம், கோபுரம் ஆகியன பாதிப்படைந்திருந்தால், அவற்றைப் புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யும் முறை.

அந்தரிதம் – 
ஆலயத்தினுள்ளே தகாத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் செய்யப்படும் பரிகாரம்.

*கும்பாபிஷேகத்தில்.........*

○ கும்பம் - கடவுளின் உடலையும்,

○ கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் - 72,000 நாடி, நரம்புகளையும்,

○ கும்பத்தில் ஊற்றப்படும் நீர் - ரத்தத்தையும்,

○ அதனுள் போடப்படும் தங்கம் - ஜீவனையும்,

○ மேல் வைக்கப்படும் தேங்காய் - தலையையும்,

○ பரப்பட்ட தானியங்கள்: ஆசனத்தையும் குறிக்கின்றது.

இது மட்டும் இல்லாமல் யாக மேடையில் சந்தனம், மலர்கள் மற்றும் வஸ்திரம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன

*கும்பாபிஷேகத்தில் விக்கிரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ள வேண்டிய பூஜைகள் :-)*

அனுக்ஞை – 
ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இறைவனின் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

சங்கல்பம் – 
இறைவனிடம் நமது தேவைகளைக் கோரிக்கையாக வைத்தல்.

பாத்திர பூஜை – 
பூஜை பாத்திரங்களுக்குரிய தேவதைகளுக்குப் பூஜை செய்தல்

கணபதி பூஜை – 
கணபதியை வழிபடுதல் .

வருண பூஜை – 
வருண பகவானையும், சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

பஞ்ச கவ்யம் – 
பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசு நீர், பசு சாணம் ஆகியவற்றை வைத்துச் செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – 
தேவர்களை வழிபடுதல்.

பிரவேச பலி – 
திக்பாலர்களை வணங்குதல்.

மிருத்சங்கிரஹணம் – 
ஆலயம் நிர்மாணம் செய்ய பூமாதேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் பரிகாரம். மண் எடுத்து வழிபடுவது.

அங்குரார்ப்பணம் – 
எடுத்த மண்ணில் விதைகளைப் பயிரிட்டு முளைப்பாரி வளரச் செய்தல். 

இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்றவர்களை வழிபடுதல். 
மேலும் சந்திரனையும் வழிபடுதல்.

ரக்ஷாபந்தனம் – 
ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் கையில் காப்புக் கட்டுதல்.

கும்ப அலங்காரம் – 
கும்பங்களை இறைவன் உடலாக நினைத்து அலங்காரம் செய்தல்.

கலா கர்ஷ்ணம் – 
விக்கிரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்துக்கு மந்திரப் பூர்வமாக அழைத்தல்.

யாகசாலை பிரவேசம் – 
கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

சூர்ய, சோம பூஜை – 
யாகசாலையில் உள்ள சூரிய சந்திரனை வழிபடுதல்.

மண்டப பூஜை – 
யாகசாலையை பூஜை செய்தல்.

பிம்ப சுத்தி – 
விக்கிரகங்களை மந்திரத்தின் மூலமாக சுத்தம் செய்தல்.

நாடி சந்தானம் – 
இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை ஒரு இணைப்பு மூலமாக விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்

விசேஷ சந்தி – 
36 தத்துவத் தேவதைகளுக்குப் பூஜை செய்வது. உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது.

பூத சுத்தி – 
பூத (மனித) உடலை தெய்வத்தின் உடலாக மந்திரப் பூர்வமாக மாற்றி அமைத்தல்.

ஸ்பர்ஷாஹுதி – 
36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்.

அஷ்டபந்தனம் – 
(மருந்து சாத்துதல்) எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல்.

பூர்ணாஹுதி – 
யாகத்தைப் பூர்த்தி செய்தல்.

கும்பாபிஷேகம் – 
யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட கும்ப நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல்.

மஹாபிஷேகம் – 
கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்துக்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்தல்.

மண்டலாபிஷேகம் – 
இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்தல்.

*யாக குண்டத்தின் வகைகள்:-)*

ஏக குண்டம் – 
ஒரு குண்டம் அமைப்பது

பஞ்சாக்னி – 
ஐந்து குண்டம் அமைப்பது

நவாக்னி – 
ஒன்பது குண்டம் அமைப்பது

உத்தம பக்ஷம் – 
33 குண்டம் அமைப்பது

*யாக குண்டங்கள் தெய்வங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன. அவை :-)*

விநாயகர் - பஞ்சகோணம்

முருகர் - ஷட்கோணம்

சிவன் - விருத்தம்

அம்மன் - யோணி

பரிவாரம் - சதுரம்

*கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால்,*

முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசி நமக்குக் கிட்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், 

48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்துகொண்டு நன்மைகளைப் பெறலாம். பிறவிப்பெரும்பயன் அடையலாம். 

*ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது...*

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம் எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் சரணம்

அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜

Saturday, May 21, 2022

கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம்

கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம். எனவே அன்னையின் ஜயந்தி தினமான இன்று, வாசவி ஜெயந்தி விரதம் அன்று பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்
   
.
அன்னையின் மூல மந்திரமான

ஓம் பாலாரூபிணி வித்மஹே

பரமேஸ்வரி தீமஹி

தன்னோ கந்யா ப்ரசோதயாத்

என்னும் மந்திரத்தைச் சொல்லிவர சகல நன்மைகளும் கைகூடும்.

கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம். எனவே அன்னையின் ஜயந்தி தினமான இன்று, வீட்டிலிருக்கும் அம்மன் படத்துக்கு பூ சாத்தி, நீர் மோர், பானகம் ஆகியன செய்து படைத்து வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால் அன்னை மனம் குளிர்ந்து நம்மைச் சூழ இருக்கும் இன்னல்களிலிருந்து விலக்கிக் காப்பாள் என்பது ஐதிகம்.

இன்று வாசவி ஜெயந்தி விரதம்
ஒரு பெண்ணின் வாழ்வில் பிறந்த வீடும், புகுந்த வீடும் சரிசமமான சிறப்பைப் பெறுகிறது. பிறந்த இடத்தின் பெருமையை பேணிக்காக்க வேண்டிய கடமையும், புகுந்த இடத்தின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வும் கொண்ட பெண்கள் இங்கு போற்றப்படுகின்றனர். அப்படி.. தான் பிறப்பெடுத்த பிறந்த இடத்தின் பெருமையைக் காப்பாற்றி, அதன் வழி வந்தவர்களின் குலதெய்வமாக வணங்கப்படுபவளே ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி என்னும் பெண்தெய்வம். இவளே ‘வாசவி’ என்ற திருநாமத்திலும் அழைக்கப்படுகிறாள்.

ஒரு சமயம் ஈசனும் அம்பாளும் கயிலாயத்தில் வீற்றிருந்தனர். கயிலையின் முதன்மை காவலாளியான நந்தியம் பெருமான், புனித கங்கையில் நீராடுவதற்காக புறப்படத் தயாரானார். தான் சென்றால், இறைவனுக்கு காவல் வேண்டுமே என்பதற்காக, சமதி என்ற மகரிஷியிடம், தான் வரும் வரை கயிலையின் வாசலில் காவல் காக்கும்படியும், யார் வந்தாலும் இறைவனின் அனுமதி பெற்றே உள்ளே அனுமதிக்கும்படியும் கூறிச் சென்றார்.

 
சமதி முனிவரும் கண்ணும் கருத்துமாக காவல் காத்து வந்தார். அப்போது கோபத்திற்கு பிரசித்தி பெற்ற துர்வாச முனிவர், அங்கு வந்தார். அவரை சமதி மகரிஷி உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவரை, பூமியில் மனிதனாக பிறக்கும்படி துர்வாசர் சாபமிட்டார். அதன்படி சமதி மகரிஷி, பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டியாக பிறந்தார்.

அதன்பின் வந்த நாள் ஒன்றில், ஈஸ்வரனின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த நந்தி, ஈசனின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது தன் காலிலும் விழாமல் அவமதித்து விட்டதாக நினைத்த பார்வதி, நந்தியை பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

தவறு செய்யாத தன்னை சபித்ததால் பார்வதி மீது கோபம் கொண்ட நந்தி, அவரையும் பூமியில் பிறந்து கன்னியாக வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார்.

அவர்கள் இருவரும், துர்வாசரால் சாபம் பெற்று ஏற்கனவே பூமியில் அரசராக வாழ்ந்து வந்த குசும ஸ்ரேஷ்டி- குசுமாம்பிகை தம்பதிக்கு பிள்ளை களாக பிறந்தனர். விருபாஷன் என்ற பெயருடன் நந்தியும், வாசவாம்பா என்ற பெயருடன் பார்வதியும் வளர்ந்தனர்.

வாசவாம்பா மணப் பருவம் அடைந்தாள். அந்த சமயத்தில் சித்திரகாந்தன் என்னும் அரசன் பல இடங்களில் வெற்றிக்கொடி நாட்டி, இந்த நாட்டிற்கு வந்தான். அவன் வாசவாம்பாவைக் கண்டு காதல் கொண்டான். அவளை மணம் செய்து தரும்படி, அவளது தந்தையான குசும ஸ்ரேஷ்டியிடம் கேட்டான். ஆனால் அவர் தன்னுடைய இன மக்களிடம் கேட்க வேண்டும் என்றும், இன்னும் சில நாட்களில் தகவல் சொல்வதாகவும் கூறினார்.

பின்னர் தன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி அரசன் விவாதித்தான். பெனுகொண்டா ஆட்சிக்குட்பட்ட 18 நகரங்களில் வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களை சேர்ந்த வைஸ்சியர்களின் சபை இதுபற்றி விவாதித்தது. 612 கோத்திரத்தார் மணமுடிக்கலாம் என்றும், 102 கோத்திரத்தார் குலப்பெருமை காக்க இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறினர். கருத்து வேறுபாடு அதிகரிக்க, சம்மதம் தெரிவித்த 612 கோத்திரத்தார் தங்கள் குடும்பங்களுடன் ஊரை விட்டு வெளியேறினர்.

இதையெல்லாம் அறிந்த வாசவாம்பா, தன் திருமணம் தொடர்பாக வாதிட்டு, தன் இனத்தவர்கள் பிரிந்ததை நினைத்து வேதனை அடைந்தாள். தன்னால் தான் அனைவருக்கும் வேதனை என்று நினைத்தவள், தன் குலப்பெருமை காப்பதற்காக தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தாள். அதற்கு பெரியவர்களின் சம்மதத்தையும் வாங்கினாள்.

அதன்படி அங்கிருந்த ஆலயம் முன்பு பெரிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் வாசவியின் அக்னிப் பிரவேசம் நிகழ்ந்தது.

வாசவி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் அருள்காட்சி தந்து மறைந்தாள்.

அன்னை தீக்குளித்த நாளான தை அமாவாசைக்குப் பின் வரும் இரண்டாம் நாளை அக்னி பிரவேச தினமாகவும், அன்னை இந்த பூமியில் அவதரித்த சித்திரை மாத வளர்பிறை தசமியை வாசவி ஜெயந்தியாகவும் பக்தர்கள் கடைப்பிடிக்கின்றனர். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்.

வீட்டில் பணவரவு அதிகரிக்க

💸 வீட்டில் பணவரவு அதிகரிக்க...          

இன்று எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும்.

சிலர் வீட்டில் பணவரவு அதிகமாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் பணமானது செலவாகி கொண்டே இருக்கும்.

என்னதான் பணம் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் முழுவதும் ஏதாவதொரு பட்ஜெட்டிற்குள் அடங்கி விடுகிறது. ஒரு ரூபாய் கூட அதில் இருந்து சேர்த்து வைக்கவே முடியவில்லை.

பொதுவாக சிலரிடம் பணம் சேருவது கிடையாது. இதற்கு காரணம் அவர்களை அறியாமல் அவர்கள் செய்யும் சில தவறுகளாக கூட இருக்கலாம்.

இத்தகைய சூழ்நிலையை மாற்றி, வீட்டில் பணவரவு தங்க, சக்தி வாய்ந்த பரிகார முறையை பற்றி பார்க்கலாம் வாங்க..

💷 வீட்டில் பணம் தங்குவதற்கு அரிசி மற்றும் மாவு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் 5 துளசி மற்றும் 2 குங்குமப்பூ போன்றவற்றை வைக்கவும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் செய்தால் வீட்டில் பணம் அதிகரிக்கும்.

💷 வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது கண்டிப்பாக ஒரு 100 ரூபாயாவது சட்டை பையிலோ அல்லது பர்சிலோ வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வியாபாரிகள் இதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் பணத்தை ஈர்க்கும் சக்தி பணத்திற்கு தான் உண்டு.

💷 தொழில் புரிவோர் தாங்கள் தொழில் செய்யும் இடத்தில் தினமும் தொழிலை ஆரம்பிக்கும் முன்பு கடவுள்களுக்கு ஊதுபத்தியை ஏற்றுவதன் மூலம் பணவரவு உண்டாகும்.

💷 வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர, வீட்டில் நிதி நிலைமை கட்டுக்குள் வரும்.

💷 பணத்தை வைக்க நாம் உபயோகிக்கும் பர்ஸ், பணப்பெட்டி, சிறிய டப்பா போன்றவை எப்போ தும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமான இடத்தில் தான் லட்சுமி எப்போதும் தங்க விரும்புவாள்.

💷 நமது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் முன்பு மகாலட்சுமியை மனதார நினைத்து இதில் அதிகம் பணம் சேர வேண்டும் என வேண்டிக்கொண்டு பணத்தை வைக்க வேண்டும். பெண்கள் பொதுவாக சமையலறையில் ஏதாவது ஒரு டப்பாவில் பணத்தை சேமிப்பர் அவர்களுக்கும் இது பொருந்தும்.

💷 இலவங்கப்பட்டையை நம் பணப்பெட்டியில் வைத்து வர பண வரவு அதிகரிக்கும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.

💷 பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காட்டி பூஜித்து வந்தால் வீட்டில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

💷 வீட்டில் அத்தியாவசிய பொருட்களான உப்பு, பருப்பு போன்றவை எப்பொழுதும் குறையாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

இந்த முறைகளை கடைபிடித்து பணவரவை அதிகரிப்போம்.. நலமுடன் வாழ்வோம்..!

சிவதனுசு

🏹 சிவதனுசு! 

சிவபெருமானிடம் கோடிக் கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. இவை அனைத்தையுமே சிவதனுசு என்றே கூறுகின்றோம். மக்களின் சிற்றறிவுக்குத் தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ளார். இதில் ஒன்று ராவணனுடைய தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது.

சிவபெருமாளே வழங்கிய வில் என்றால் அதன் மகிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா? சிவ தனுசுவை வைத்திருக்கும் ஒருவனை எந்த உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாது. ஆனால், இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரைதான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும்.

இதை பூரணமாக உணர்ந்தவன்தான் இராவணன், ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து எல்லா லோகங்களுக்கும் சென்று அனைத்து லோகங்களையும் வென்று தேவர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் வென்றான்.

நவகிரக லோகங்களுக்கும் சென்று எல்லா நவகிரகங்களையும் தன் அடிமையாக்கி தன் சிம்மாசனப் படிகளாக்கி அவர்களை அவமானப்படுத்தினான். இத்தகைய அதர்மமான செயல்களால் சிவதனுசுவின் சக்தி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது.

அனைத்து லோகங்களையும் வென்ற இராவணன் கடைசியில் பிரம்ம லோகத்திற்கும் சென்றான். பிரம்மாவையும் வென்று தன் அடிமையாக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். பிரம்ம லோகம் சென்ற ராவணனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இராவணனின் தவறான செய்கைகளால் தன் சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்த சிவதனுசு இராவணன் பிரம்ம லோகத்தை அடைந்தவுடன் முழுதுமாகத் தன் சக்தியை இழந்து விட்டது.

இதைச் சற்றும் எதிர்பாராத இராவணன் செய்வதறியாது திகைத்தான். பிரம்ம லோகத்தை ஆளும் பிரம்மாவை எதிர்க்க முடியாமல் வெட்கம் அடைந்து தலை குனிந்தான் இராவணன். தன் செய்கையால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைந்து வருந்தி உடனடியாகத் தன் சொந்த அரக்க லோகத்திற்கு வெறுங் கையுடன் திரும்பி விட்டான்.

இனி சிவ தனுசால் என்ன பயன் என்று எண்ணி அதைத் துõக்கி எறிந்து விட்டான். இதைப் பார்த்தார் ஜனக மகாராஜா. சிவ பிரசாதம் என்றுமே சிவப் பிரசாதம் அல்லவா? இதை இராவணன் அறியவில்லையே என்று வருந்தி அந்த சிவதனுசுவை தான் எடுத்து வைத்துக் கொண்டு அதற்குத் தினமும் எல்லா விதாமன அபிஷேக ஆராதனைகளையும் பூஜைகளையும் பன்னெடுங் காலமாக ஆற்றி வந்தார் ஜனக மகாராஜா.

காலச் சக்கரம் சுழன்றது…

குழந்தை பாக்கியம் இல்லாததால் சீதையைப் பூமியில் கண்டெடுத்துத் தன் மகளாக ஜனகர் வளர்த்து வந்தார் அல்லவா? சீதை சிறுமியாக இருக்கும்போது ஒரு நாள் தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்தப் பந்து உருண்டு போய் சிவ தனுசுவின் கீழ் மறைந்து விட்டது. பந்தைத் தேடி வந்த சீதை தன் இடது கையால் சிவ தனுசுவைச் சாதாணமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையால் பந்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.

இந்தக் காட்சியைக் கண்ட ஜனக மகராஜாவுக்கு ஒரே ஆச்சரியம். ஏனென்றால் அந்த சிவ தனுசுவை 10,000 வீர மல்லர்கள் சேர்ந்தால்தான் நகர்த்தவே முடியும். ஆனால், இந்தக் குழந்தை அலட்சியமாக இடது கையால் தூக்கி விட்டதே. அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதே சமயத்தில் இன்னொரு வருத்தமும் அவருக்கு எற்பட்டது.

இந்தப் பராக்கிரமம் பொருந்திய கன்னியை எவருக்கு மணம் முடிப்பது? இவளுக்கே இவ்வளவு ஆன்மீக பலம் இருந்தால் இந்தச் சிறுமியை மணக்கும் வீரன் எத்தகைய பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும்? உண்மையில் அப்படி ஒருவன் ஈரேழு உலகத்திலும் இருக்கிறானா என்பதே சந்தேகம். இருந்தாலும் எப்படி, எங்கே அவனைத் தேடுவது? இப்படி பல்வேறு சிந்தனைகளிடையே உழன்றார் ஜனக மகாராஜா.

மகளுக்கு திருமண வயது வந்தவுடன் தகுந்த மணவாளணைத் தேர்ந்தெடுப்பது என்று ஆலோசித்தார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய அற்புதமான யோசனைகளையெல்லாம் கூறினர்.

இறுதியில் சிவ தனுசுவை நாணேற்றி உடைப்பவருக்கே சீதா தேவி மனைவி ஆவாள் என்று அறிவித்தார். அதன் பிறகு நடந்தவைகள் உங்களுக்கு நன்றாக தெரியும். ஸ்ரீராமர் சிவதனுசை நாணேற்றி உடைத்துவிட்டார். அதன் பிறகு அவருக்கு திருமணம் நடந்தது.

அதற்குப் பின் முறிந்த சிவ தனுசு என்னவாயிற்று? என்பதனைப் பற்றி பார்ப்போம்.

நாம் நினைப்பது போல சிவ தனுசு என்பது சண்டைக்காகப் பயன்படுத்தக் கூடிய ஒரு வில் மட்டுமன்று. சிவ தனுசு சிவபெருமானுடைய திரண்ட சக்தியின் ஒரு கூறு. சிவ தனுசில் ஆயிரக் கணக்கான தனுர் வேத தேவதைகளும் தெய்வங்களும் ரிஷிகளும் முனிவர்களும் வாசம் செய்தனர்.

தனுசு முறிந்ததால் அனைத்து தெய்வ சக்திகளும் வெளிவந்து தாங்கள் எங்குச் செல்வது என்று தெரியாமல் திகைத்தன. எல்லோரும் ஜனக மகாராஜாவை வணங்கி, சுவாமி, பன்னெடுங் காலமாக நாங்கள் இந்த சிவ தனுசிலே குடி கொண்டுள்ளோம்.

இப்போது இந்தத் தனுசு முறிந்து விட்டால் நாங்கள் எங்கே செல்வது? எங்களுக்கு சாத்வீகமாக எதிலும் ஈடுபட முடியாது. தனுர் வேதத்தில் இலயித்துள்ள எங்களுக்கு வீரம், சண்டை இவற்றில்தான் மனம் ஈடுபடும். எனவே, தாங்களுக்கு எங்கள் மார்கத்திலேயே ஒரு நல்ல வழியைக் கூற வேண்டும், என்றவுடன் ஜனகர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார்.

பின்னர் சிவ தனுசிலிருந்து வெளிவந்த எல்லா தேவ, தெய்வ சக்திகளையும் 1008 அஸ்திரங்களில் ஆவாஹணம் செய்தார். அந்த 1008 அம்புகளையும் ராமபிரானுக்கே வெற்றிப் பரிசாக அளித்து விட்டார். அந்த தனுர் வேத சக்திகளும் ராமபிரானுடைய அம்பாரத் துணியிலேயே குடி கொண்டு ராமருக்கு உறுதுணையாக நின்றன.

இலங்கையில் ராவணனுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் இராவணனின் உடலைத் துளைத்து அவனைப் பரலோகத்திற்கு அனுப்பியதும் இந்த 1008 அஸ்திர சக்திகளே. இராவணன் சிவ தனுசை முறையாகப் பயன்படுத்தாது யாரை எல்லாம் அதர்மமாகத் துன்புறத்தினானோ அவர்களுடைய சாபங்களே சிவ தனுசு அஸ்திரங்களாக மாறி அவன் உயிரைக் கவர்ந்தன.

உண்மையில் இராமர் இராவணனைக் கொல்லவில்லை. இராவணனுடைய தீவினைகளே அவன் உயிரைக் கவர்ந்தன. தன் வினை தன்னைச் சுடும் என்று முதுமொழிக்கு நிரூபணமாக நின்றதும் சிவ தனுசே.

ஓம் நம சிவாய...


Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...