Showing posts with label சிவாலய ஓட்டம். Show all posts
Showing posts with label சிவாலய ஓட்டம். Show all posts

Friday, March 15, 2024

சிவாலய ஓட்டம்

'வாட்டம் தீர்க்கும் சிவாலய ஓட்டம்'....''சிவாலய ஓட்டம்'':8-3-2024.'நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே' என்கிறது திருமூலரின் திருமந்திரம்.ஆம்!அதற்கேற்ப சிவபெருமானைத்தேடி,சிவராத்திரி நாளில் ஓடி  சிவனருளை நாடிப்பெற்றுக்கொள்கின்றனர்.இப்படி சிவனை நாடி,திருமுறைப் பாடி,ஓடி ஓடிச்சென்று வழிபடுகிறார்கள்.தற்போது சிவராத்திரி நன்னாளில்  நடந்தும்,ஓடியும்,சைக்கிள் மூலமாகவும்,கார்,பைக் மூலமாகவும் சென்று வழிபடுகிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை மாசி மகா சிவராத்திரி அன்று அடியவர்கள் காலை முதல் துவங்கி சிவராத்திரி இரவு மறுநாள் அதிகாலைவரை ஓடிச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் ஆகும்.சிவாலய ஓட்டமானது சுமார் 118 கிமீ தூரத்தை உள்ளடக்கியது.சிவராத்திரிஅன்று காலையில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து,ருத்திராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய
 விபூதி பை எடுத்துக்கொண்டு,பனை ஓலை விசிறியுடன் சிவாலய ஓட்டம் ஓட ஆரம்பிப்பர்.திருநீற்றுப்பையில் அந்தந்த சிவாலயங்களில் தரும் திருநீற்றை வைத்துக்கொள்வார்கள்.'அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறு'' அல்லவா அது.கையிலிருக்கும் விசிறியால் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்துக்கு வீசி,பூஜை செய்கிறார்கள்.சிவாலய ஓட்டம் நிகழ்ச்சியின் முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில் ஈசனை வணங்கி விட்டு ஓட ஆரம்பிப்பர் அடியவர்கள்.அப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலான திருநட்டாலம் ஆலய தரிசனம் முடிக்கும்வரை 'கோவிந்தா,கோபாலா...தாணு நாதா..சிவாயநம...இடைமருதா
ஐயாறா...ஆரூரா...கூத்தபிரானே..அருணாசலா சோணாசலா', ''அப்பனே..சிவனே..வல்லபா சங்கர நாராயணா'' எனும் கோஷங்களை ஒலித்தபடியே இருப்பார்கள்.சிவாலய ஓட்ட 12 சிவாலயங்கள் பின்வருமாறு:''முஞ்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் திருக்கோயில்,திக்குறிச்சி மகாதேவர் திருக்கோயில்,திற்பரப்பு மகாதேவர் திருக்கோயில்,திருநந்திக்கரை நந்தீஸ்வரர் திருக்கோயில்,பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் திருக்கோயில்,திருபன்னிபாகம் சிவன் திருக்கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி திருக்கோயில்,மேலாங்கோடு சிவன் திருக்கோயில்,திருவிடைக்கோடு மகாதேவர் திருக்கோயில், திருவிதாங்கோடு சிவன் திருக்கோயில்,திருபன்றிகோடு மகாதேவர் திருக்கோயில்,திருநட்டாலம் சங்கர நாராயணர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்'' என்பனவாகும்.பாண்டவர்களின் தருமர் ஒருமுறை ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷா மிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது.அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும்,விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு.இதனால் வியாக்ரபாத
மகரிசிக்கு சிவனும்,விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த நினைத்த கண்ணபிரான் பீமனிடம் புருஷா மிருகத்தின் பால் கொண்டு வர கட்டளையிட்டார்.கட்டுரையாக்கம்:குமரி.சிவ.அ.விஜய் பெரியசுவாமி.,கூடவே 12 ருத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து,உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டுவிட்டு 'கோபாலா கோவிந்தா' எனச்சொல் என்று கூறி அனுப்பி வைத்தார்.பீமன் புருஷாமிருகத்தை தேடி கானகம் வந்தான்.அன்று மகா சிவராத்திரி நன்னாள்.அங்கே புருஷாமிருகம் சிவதவத்தில் முறளியடத்துப் பாறை எனும் முஞ்சிறை திருமலையில் சிவபூஜை செய்து கொண்டிருந்தது.''சோணாசலா அருணாசலா...மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' என சொல்லி சிவபூஜையில் ஆழ்ந்திருந்தது.அங்கு பீமன் சென்று ''கோபாலா..கோவிந்தா'' என்று கூறி புருஷா மிருகத்தை சுற்றிவந்து அதன் சிவராத்திரி சிவபூஜைக்கு இடையூறு செய்தான்.''கோபாலா..கோவிந்தா'' என பீமன் திருமாலின் திருநாமத்தைக் கூறியபடியே ஓடினான்.திருமாலின் திருநாமத்தைக் கேட்டதும் புருஷாமிருகம் மிகவும் கோபமடைந்து பீமனை துரத்த ஆரம்பித்தது.உடனே பீமன் ஒரு ருத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான்.உடனே அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உருவாகியது.உடனே புருஷாமிருகம் ''சோணாசலா அருணாசலா ..மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' எனச் சொல்லி சிவலிங்க பூஜையை தொடங்கி விடுகிறது.சிறிது நேரம் கழித்து பீமன், ‘கோபாலா
கோவிந்தா’ என குரல் எழுப்பி பால் பெற முயன்றபோது  புருஷாமிருகம் கோபமுற்று மீண்டும் பீமனை துரத்திச் சென்று பற்றிக்கொள்ள எத்தனிக்கும்போது அடுத்த ருத்திராட்சத்தை அங்கு போட்டுவிட்டு ஓடத்தொடங்கினான் பீமன்.இதனால் அந்தஇடத்திலும் ஒரு சிவலிங்கம் உருவானது.உடனே பீமனை விடுத்து சிவலிங்க பூஜையில் ஆழ்ந்தது புருஷாமிருகம்.மறுபடியும் பீமன் ஓட,புருஷாமிருகம் துரத்த,பீமன் ருத்திராட்சம் போட, இவ்வாறு 12 ருத்திராட்சங்களும் 12 சிவத்தலங்களை
உருவாக்கி விடுகிறது.இதில் 12வது ருத்திராட்சம் விழுந்த திருநட்டாலத்தில் ஈசனுடன் கிருஷ்ணர் இணைந்து சங்கர நாராயணனாக புருஷாமிருகத்துக்கு திருக்காட்சி அளித்தார்.கூடவே ஈசன் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்திலும் அருளினார்.கட்டுரையாக்கம்:தென்குமரி.சிவ.அ.விஜய்
பெரியசுவாமி,இதன்படி சிவவிஷ்ணு ஐக்கியத்தை உணர்ந்த புருஷாமிருகம் அரியும்
அரனும் ஒன்றே என்பதனை உணர்ந்து 'அருணாச்சலனே..திருக்கயிலை நாதனே..சங்கர நாராயணா..சிவனே..மகாதேவா' என்றும் 'கோபாலா கோவிந்தா' 'அப்பனே சிவனே வல்லபா' என்றும் கூறி நட்டாலத்தில் தோன்றிய சங்கர நாராயணரைத் துதித்து சந்தோஷக் களிப்பில் தருமரின் யாகத்துக்கு பால் அளிக்க ஒத்துக்கொண்டது.இன்றும் திருநட்டாலத்தில் இரு கோயில்கள் உள்ளன.ஒன்றில் ஈசன் அர்த்தநாரீஸ்வர
மகாதேவர் எனும் திருநாமத்திலும்,இன்னொரு ஆலயத்தில் சங்கர நாராயணராகவும் அருள்கிறார்.சிவாலய ஓட்டம் தொடர்புடைய திருக்கோயில் தூண் சிற்பங்களில்
பீமனைத் துரத்தும் புருஷாமிருகத்தை நாம் காணலாம்.இந்த புராண நிகழ்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நன்னாளில் அடியவர்கள் சிவாலய புருஷாமிருகம் 'சோணாசலா அருணாசலா ..மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' என சிவபூஜை செய்ய,பீமன் 'கோபாலா கோவிந்தா’ எனக் குரல் எழுப்ப புருஷாமிருகம் பீமனை துரத்த என மஹாசிவராத்திரி நன்னாளில் இப்படி பன்னிரண்டு சிவாலயங்களும் உருவானதால் இந்நிகழ்வினை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும்  மஹாசிவராத்திரி நன்னாளில் ''சோணாசலா அருணாசலா .மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' , 'கோபாலா கோவிந்தா’ ,'மகாதேவா சிவனே வல்லபா சங்கரநாராயணா' என்றும் கூறி அடியவர்கள் இந்த பன்னிரு சிவாலயங்களிலும் வழிபடுகிறார்கள்.இதனையே 'சிவாலய ஓட்டம்' என்கிறார்கள்.பன்னிரு சிவாலயங்களும் மஹாசிவராத்திரி நன்னாளில் உருவானதால் இந்த பன்னிரு சிவாலயங்களிலும் மாத சிவராத்திரி,மகா சிவராத்திரி நன்னாட்கள் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.சிவராத்திரி நாட்களில் இந்த தலங்களில் வழிபட கிரக தோஷங்கள்,பழவினைகள் அகன்று பதினாறுவகை நற்பேறுகளும் கிட்டும் என்கிறார்கள். தற்போது சிவராத்திரி நாளில் சைக்கிள் மற்றும் வாகனங்களில் சென்றும் வழிபடுகிறார்கள்.இருந்தாலும் முறைப்படி ஓடிச் சென்று வழிபடுவது மிகச்சிறப்பாம்.உடம்பில் சட்டை அணியாமலும்,காலில் செருப்பு அணியாமலும்,காவி அல்லது மஞ்சள் வேட்டி அணிந்து,ருத்திராட்சம் கழுத்தில் அணிந்து,விபூதி தரித்து,ஒரு திருநீற்று பையும்,கையில் ஒரு விசிறியும் வைத்துக்கொண்டு ''சோணாசலா அருணாசலா ..மகாதேவா..திருக்கயிலை நாதா..தாணு நாதா..இடைமருதா..கூத்தபிரானே..ஆரூரா..ஐயாறா' , 'கோபாலா கோவிந்தா’ ,'மகாதேவா சிவனே வல்லபா சங்கரநாராயணா'' என்றும் கோஷத்தை
ஒலித்தபடியே  பன்னிரண்டு சிவாலயங்களையும் சிவராத்திரி நாளில் தரிசிப்பர்.இவர்களை 'சிவ கோவிந்தன்மார்' என்று அழைக்கிறார்கள்.திருநீற்றுப் பையில் அந்தந்த ஆலயங்களில் தரும் திருநீற்றை
வைத்துக்கொள்கிறார்கள்.அதுபோல கையில் இருக்கும் விசிறியால் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு வீசி பூஜை செய்கிறார்கள் இந்த சிவகோவிந்தன்மார்கள்.வாழ்க்கை ஓட்டத்துக்கான சகல நலன்களையும்,வளங்களையும் மகாசிவராத்திரி சிவாலய ஓட்டத்தின்மூலம் பெற்றுய்யலாம் என்கிறார்கள்.சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர்,காபி,பானகம்,சுண்டல்,கஞ்சி
தானம்,தினைக்கஞ்சி,எரிசேரி,புளியோதரை,எலுமிச்சை சாதம் என பலப்பல தானங்களையும் பொதுமக்கள் செய்கிறார்கள்.முற்காலங்களில் சிவராத்திரி அன்று மாலையில் சிவாலய ஓட்டத்தினை பக்தர்கள் தொடங்குவார்கள்.தற்போது சிவராத்திரி அன்று காலையிலேயே பக்தர்கள் சிவாலய ஓட்டத்தினை
தொடங்குகிறார்கள்.சிவாலய ஓட்ட முதற்கோயிலான முஞ்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் திருக்கோயில் நாகர்கோயில் -திருவனந்தபுரம் சாலையில் உள்ள
மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்பட்டணம் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.இங்கு பக்தர்களின் சிவாலய ஓட்டத்திற்கு தேவையான விசிறி,திருநீற்று பைகள் கிடைக்கின்றன.முஞ்சிறையில்
இருந்து அடுத்துவரும் சிவாலய ஓட்டத் திருத்தலமான திக்குறிச்சி மகாதேவர் திருக்கோயில்10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திக்குறிச்சியில் இருந்து அடுத்துவரும் திருத்தலமான திற்பரப்பு வீரபத்திரர் மகாதேவர் திருக்கோயில் அருமனை எனும் ஊர்வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திற்பரப்பிலிருந்து அடுத்துவரும் திருநந்திக்கரை நந்திகேஸ்வரர் திருக்கோயில் குலசேகரம் சந்திப்பு வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திருநந்திக்கரையில் இருந்து பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் திருக்கோயில் 7கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.பொன்மனையில் இருந்து அடுத்துவரும் திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி மகாதேவர் திருக்கோயில் குமாரபுரம்,முட்டைக்காடு வழியாக 11கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.திருப்பன்னிப்பாகத்திலிருந்து 6
கிலோமீட்டர் தூரத்தில் கல்குளம் எனும் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.கல்குளத்தில் இருந்து அடுத்துவரும் சிவாலய ஓட்டத்திருத்தலமான மேலாங்கோடு காலகாலர் திருக்கோயில் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.மேலாங்கோடு திருத்தலத்தில் இருந்து அடுத்துவரும் திருவிடைக்கோடு எனும் வில்லுக்குறி சடையப்பர் திருக்கோயில் 6 கிலோமீட்டர்
தூரத்தில் அமைந்துள்ளது.திருவிடைக்கோடு திருத்தலத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவிதாங்கோடு நீலகண்ட சுவாமி திருக்கோயில்
அமைந்துள்ளது.திருவிதாங்கோடு திருத்தலத்தில் இருந்து கோழிப்போர் விளை,பள்ளியாடி வழியாக 6 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பன்றிக்கோடு பக்தவச்சலர் திருக்கோயில் அமைந்துள்ளது.திருப்பன்றிக்கோடு திருத்தலத்தில்
இருந்து சிவாலய ஓட்டத் திருத்தலத்தின் நிறைவுக் கோயிலான திருநட்டாலம் சங்கரநாராயணர்,அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.பன்னிரு கோயில்கள் பற்றியும் சுருங்கப்  பார்த்துவிடுவோம்:
''முஞ்சிறை திருமலைக்கோயில்'':
இதுவே சிவாலய ஓட்டத்தின் முதல் கோயிலாகும்.குன்றின் மேல் அமைந்துள்ளது.திருமலை நாயக்கர் மன்னர் இத்தல ஈசனின் அருளால் அவரது தாய் உதிச்சிக்கு மகவாய் பிறந்தார்.பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனை முருகப்பெருமான் இங்கு சிறைபிடித்து வைத்ததால் இத்தலம்  முஞ்சிறை ஆயிற்று.அப்போது பிரம்மனின் முன்தோன்றிய வடிவமே இத்தல ஈசன் சூலபாணியாம்.இங்கு ஈசன் மகாதேவர் என்றும் சூலபாணி என்றும் அழைக்கப்படுகிறார்.பக்தர்களின் சிவாலய ஓட்டத்திற்கு தேவையான திருநீற்று பை,விசிறி முதலியன இங்கு கிடைக்கும்.நாகர்,அய்யப்பன் சன்னதிகளும் உள்ளன.மாசி கும்பாஷ்டமி,கார்த்திகை மாத விருட்சிகாஷ்டமி,பங்குனி திருவிழா சிறப்பாம்.நாகர்கோயில் -திருவனந்தபுரம் சாலையில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்பட்டணம் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திக்குறிச்சி கோயில்'':
இங்கு ஈசன் மகாதேவன் எனப்படுகிறார்.நந்தி கிடையாது.ஆம்!அருகில் உள்ள தாமிரபரணி நதிக்குள் நந்தி இருப்பதாக ஐதீகம்.சாஸ்தா,காலபைரவர்,ஆகாய யட்சி சன்னதிகளும் உள்ளன.மார்கழி திருவாதிரையில் ஆறாட்டு விழா நடக்கிறது.சிவராத்திரி நாளில் பெண்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.முஞ்சிறையில்
இருந்து திக்குறிச்சி மகாதேவர் திருக்கோயில் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.கட்டுரையாக்கம்:குமரி.சிவ.அ.விஜய் பெரியசுவாமி

''திற்பரப்பு திருக்கோயில்'':
 இங்கு மூலவருக்கு தீபாராதனை செய்யும்போது இடது பக்கமாக சுற்றிச்செய்கிறார்கள்.மூலவர் வீரபத்திரர் என்னு திருநாமத்தில் அருள்கிறார்.நந்தி சற்று விலகி வடக்கு நோக்கிய வண்ணம் உள்ளது.இங்கு பூரணை புஷ்கலை  சாஸ்தா,நவநீத கிருஷ்ணன்,ஜுரதேவர்,பத்திரகாளிக்கும்,புளியமர இசக்கி அம்மனுக்கும் தனிக்கோயில்கள் அருகிலேயே உள்ளன.பங்குனியில் பெருவிழா நடைபெறுகிறது.ருத்ர பூஜை,ருத்ர கலச பூஜை,மிருதுஞ்சய ஹோமம்  இங்கு சிறப்பாம்.திக்குறிச்சியில் இருந்து அருமனை எனும் ஊர்வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருநந்திக்கரை கோயில்'':
 மூலவர் நந்திகேஸ்வரர்.அவரின் எதிரில் நந்தி ஆழமான குழிக்குள் உள்ளது.நாகர்,கண்ணன்,சாஸ்தா,பரசுராமர் சன்னதிகளும் உள்ளன.இத்தல மேற்குச்சுற்று சுவரில் கொட்டாரம் யட்சி ஓவியவடிவில் அருள்கிறாள்.திற்பரப்பிலிருந்து குலசேகரம் சந்திப்பு வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''பொன்மனை கோயில்'':
 மூலவர் தீம்பிலான்குடி மகாதேவர்.மூலவரின் சிரசில் வெட்டுப்பட்ட வடு உள்ளது.நாகலிங்க மரங்கள் அதிகம் உள்ளன.நாகர்,யட்சி,சாஸ்தா சன்னதிகளும் உள்ளன.மாதாந்திர ஆயில்யம்,பங்குனி ஆறாட்டு  விழா சிறப்பாம்.திருநந்திக்கரையில் இருந்து  7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருப்பன்னிப் பாகம்  கோயில்'':
 மூலவர் கிராதமூர்த்தி மகாதேவர்.சாஸ்தா,காலபைரவர்,லிங்கவடிவ நிர்மால்ய தேவர் சன்னதிகளும் உள்ளன.இங்கு அக்காலத்தில் பூஜையின் போது புல்லாங்குழல் இசைக்கப்பட்டதாம்.பொன்மனையில் இருந்து  குமாரபுரம்,முட்டைக்காடு வழியாக 11கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''கல்குளம் பத்மநாபபுரம் கோயில்'':
மூலவர் நீலகண்டர்.அம்பாள் ஆனந்தவல்லி என்பதாம்.பன்னிரு சிவாலய ஓட்ட திருக்கோயில்களில் இங்கு மட்டும்தான் அம்பாளுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.சாஸ்தா,நடராஜர்,பூதத்தான்,மாடன் தம்புரான் சன்னதிகளும் உள்ளன.ஐந்துநிலை ராஜகோபுரம்  மிக அழகாம்.திருப்பன்னிப்பாகத்திலிருந்து 6
கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''மேலாங்கோடு கோயில்'':
 வேளிமலை அடிவாரத்தில் இக்கோயில் உள்ளது.மூலவர் காலகாலர் எனப்படுகிறார்.இங்கு வெடிவழிபாடு நேர்ச்சை உண்டு.அருகிலேயே அக்கா இசக்கி,தங்கை இசக்கி கோயில்கள் உள்ளன.நாகர்,பூதத்தான் சன்னதிகளும் உள்ளன.கல்குளத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருவிடைக்கோடு திருக்கோயில்'':
 வில்லுக்குறி என தற்போது இத்தலம் அழைக்கப்படுகிறது.மூலவர் சடையப்பர்.பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் இன்றும் ஈசனை அனுதினமும் வழிபடுகிறாராம்.நாகர்,சாஸ்தா சன்னதிகளும் அமைந்துள்ளன.மாசி கும்பாஷ்டமி,ஆயில்யம்,அமாவாசை,ஆனி துவாதசி வழிபாடு சிறப்பாம்.மஹாசிவராத்திரியில் 114 படி அரிசி சமைத்து 156கட்டி சாதமாக படைத்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். மேலாங்கோடு திருத்தலத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 

''திருவிதாங்கோடு கோயில்'':
 மூலவர் நீலகண்டர் எனும் மகாதேவர்.ஈசான சிவன் என்றும் அழைக்கிறார்கள்.கஜசம்காரர்,புருஷாமிருகம் சிலை மிகவும் அழகு.சாஸ்தா,நாகர் சன்னதிகளும் உள்ளன.மஹாவிஷ்ணுவுக்கும் தனி ஆலயம் உள்ளது.திருவிடைக்கோடு திருத்தலத்திலிருந்து தக்கலை,கேரளபுரம் வழியாக தெற்கில் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

''திருப்பன்றிக்கோடு கோயில்'':
 மூலவர் பக்தவச்சலர் எனும் மகாதேவர்.வள்ளி தெய்வானை முருகர்,சாஸ்தா,நாகர் ,நிர்மால்ய தேவர் சன்னதிகளும் உள்ளன.ஒருமுறை பூமியை மீட்க வேண்டி வராஹம் எனும் பன்றி வடிவம் எடுத்த திருமால்  பின்னர் இத்தலத்தில் ஈசனை வழிபட்டே தம் சுய உருவினை மீண்டும் அடைந்தார். அஷ்டமி வழிபாடு இங்கு சிறப்பு.மாசி மாத அஷ்டமியில் குன்னம்பாறை சாஸ்தா கோயிலில் இருந்து களப கும்பம் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிசேகம் செய்கிறார்கள்.இங்கு அம்பாள் சந்நதி உள்ளது.கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில் தொடங்கி இங்கு பெருவிழா நடக்கிறது.கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமியில் ஆறாட்டு விழா சிறப்பாக நடைபெறுகிறது.திருவிதாங்கோடு திருத்தலத்தில் இருந்து கோழிப்போர்
விளை,பள்ளியாடி வழியாக 6 கிலோமீட்டர் தூரத்தில்  அமைந்துள்ளது.

''நட்டாலம் கோயில்'':
நட்டாலத்தில் மகாதேவர் கோயில் எனும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ஒன்றும்,சங்கர நாராயணர் கோயில் ஒன்றுமாக இருக்கோயில்கள் உள்ளன.புருஷாமிருகத்துக்கும்,பீமனுக்கும் சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த தலம் இதுவாகும்.கருவறையில் லிங்கவடிவில் சங்கரநாராயணர் உள்ளார்.பங்குனியில் ஆறாட்டு விழா சிறப்பாம்.திருப்பன்றிக்கோடு திருத்தலத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில்
அமைந்துள்ளது.
சிவராத்திரி நன்னாளில் விரதமிருந்து இரவு முழுவதும் கால்வலிக்க சிவாலயஓட்டம் ஓடி பன்னிரு சிவாலயங்களையும் வழிபடும் பக்தர்களுக்கு வாழ்வில் பதினாறுவகை நற்பேறுகளும் கிடைக்கும் என்கிறார்கள்.
'நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே' என்பது திருமூலர் வாக்காகும்.அதற்கேற்ப சிவராத்திரி நன்னாளில் சிவாலய ஓட்டம் ஓடி சிவபெருமான் ஆலயங்களைத் தரிசித்து வாழ்வின் வாட்டம் போக்குவோம்.மஹாசிவராத்திரி நன்னாளில் சிவாலய ஓட்டம் பங்கேற்கும் அத்தனை சிவகோவிந்தன்மார்களின்,அடியார்களின் திருப்பாதத்தை என் இதயத்தில் தாங்குகிறேன்.அனைவருக்கும் ''மஹாசிவராத்திரி விரதம்'' சிறப்பாய்  பூர்த்தியடைய அம்மையப்பனை இறைஞ்சுவோம்.
''ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி''.."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது
நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான்
எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன்
மலரடிநிழலில்"

Tuesday, March 15, 2022

சிவாலய ஓட்டம்

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது

கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், சிவன் மேல் பெரும் அபிமானமெல்லாம் அவர்களுக்கு இல்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள்

இதெல்லாம் மிகபெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள்

யுத்தத்தில் துரியனை அடித்து கொன்று அதை முடித்துவைத்தவன் என பீமனும் ஒரு கர்வத்தோடு அலைந்தான், காட்சிகளை கவனித்து கொண்டிருந்த கண்ணன் அவர்களின் மாயை அறுக்க ஒரு நாடகம் நடத்தினான்

யுத்தம் என்பது பாவங்களின் முடிவு, அதற்கு யாரும் தப்ப முடியாது, செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு யாகம் நடத்த நினைக்கும் தர்மனிடமும் அகங்காரம் மிகுந்தது, இதுவரை யாரும் கொடுக்காத பொருளை கொண்டு யாகம் நடத்த விரும்பினான்

அங்கேதான் தன் விளையாட்டை ஆரம்பித்தான் கண்ணன், அவனி விளையாட்டு அந்தணர்கள் உருவில் வந்தது

தர்மனிடம் யாகம் செய்ய வந்த அந்தணர்கள் யாரும் இதுவரை பயன்படுத்தாத யாக பொருள் புருஷ மிருகத்தின் பால் என்றார்கள், மானிட உருவும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகத்தின் பால் அபூர்வமானது என சொல்ல அதை கொண்டுவர விரும்பினான், ஆனால் அந்த கொடிய மிருகம் பற்றி தகவலேதும் அவனிடம் இல்லை

அதை தொடர்ந்து காட்சிக்கு வந்தான் கண்ணன்

அந்த புருஷா மிருகம் பற்றி தனக்கு தெரியும் என்றும் ஆனால் அது பொல்லாதது என்றும் கோபாலன் பெயரை சொன்னால் ஓடும் ஆனால் சிவன் பெயரை சொன்னால் அப்படியே உருகி நிற்கும், அந்நேரம் பாலை கறக்கலாம் ஆனால் சிறிது நேரத்தில் விரட்டும் என்றும் அதன் இயல்பை சொன்ன கண்ணன் ஒரு உத்தியும் சொன்னான்

12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுப்போம், அவன் நாழிக்கு ஒன்றாக இரவு முழுக்க அதை கொண்டு அந்த மிருகத்தை ஓடவைத்து நிறுத்தி பால்கறக்கட்டும் என 12 ருத்திராட்சங்களை கொடுத்து பீமனை அனுப்ப சொன்னான்

ஆம், அகபாவத்தில் இருந்த பீமனின் கர்வம் ஒழிக்க அவனையே கிளம்ப சொன்னான் கண்ணன்

அந்த ருத்திராட்சத்தை தரையில் வைத்தால் அது லிங்கமாகிவிடும், அதை கண்டு உருகும் மிருகம் அப்படியே பூஜை செய்யும் அப்பொழுது பால்கறக்கலாம் ஆனால் பூஜை முடியும் பொழுது லிங்கம் மிருகம் சீறும் என சொல்லியும் அனுப்பினான் கண்ணன்

அன்று மகா சிவராத்திரி நாளாய் இருந்தது, கண்ணனின் கணக்கு அதில் சரியாய் இருந்தது

பீமன் காட்டுக்குள் சென்று கோபாலா கோபாலா என்றதும் அந்த மிருகம் விரட்டியது பீமன் ஒரு ருத்திராட்சம் வைக்க அது லிங்கமாகும் கொஞ்சநேரம் மெய்மறக்கும் மிருகத்திடம் பீமன் பால் எடுப்பான் பின் அவன் கோபாலா கோபாலா என ஓட மிருகம் விரட்டும்

இப்படி 12 ருத்திராட்சங்களும் லிங்கமாகி பீமன் தப்பியபின்னும் மிருகம் அவனை விரட்டியது அடுத்து ருத்திராட்சம் இல்லா பீமன் யாகசாலையினை நெருங்கியிருந்தான், அது விடியும் பொழுதாய் இருந்தது காலை 6 மணி ஆகியிருந்தது

ஆனாலும் மிருகம் விரட்ட யாக சாலைக்குள் ஒரு காலை அவன் வைத்த நிலையில் இன்னொரு காலை மிருகம் பற்றியது

இப்பொழுது யாகசாலைக்குள் இருக்கும் கால் அவனுக்கு, வெளியில் தான் பிடித்த கால் தனக்கு என அது வாதிட்டது, அங்கு வந்தான் தர்மன்

ஏ மிருகமே 12 சிவலிங்கத்தை உனக்கு காட்ட ஓடிய புண்ணிய பாதத்தையா கடித்து விழுங்கபார்க்கின்றாய் என உருக்கமாக அவன் கேட்கவும் மிருகத்துக்கு தன் தவறு விளங்கிற்று

அய்யய்யோ ஆமாம், லிங்கத்தரிசனம் காட்டிய புண்ணிய காலையா கடித்தேன் என அவனை விடுவித்த மிருகம் பின் ஏன் அவன் கோபாலா கோபாலா என கத்தினான் என்பதை யோசித்து சொன்னது. கோபாலா கோபாலா என இவன் அழைத்து ஓடினாலும் அவன் ருத்திராட்சம் வைத்தவுடன் சிவலிங்கம் வந்ததென்றால் "ஹரியும் சிவனும் ஒன்றல்லவா"

அந்த வார்த்தை தர்மனுக்கும் பீமனுக்கும் சுட்டது, அதுவரை குழம்பியிருந்த அவர்கள் இரண்டும் ஒரே சக்தி என்பதை உணர்ந்து அகந்தை ஒழிந்து நின்றனர்

இரவெல்லாம் ஓடி அரியும் சிவனும் ஒன்று என பீமன் ஞானம் பெற்ற கதை இப்படி உண்டு, அதை நினைவு கூறும் விதமாக முன்பு சிவராத்திரியில் 12 சிவாலங்களுக்கு ஓடும் நிகழ்ச்சியும் இருந்தது

புராணகதை இப்படி இருந்தாலும் 12 லிங்கம் என்படு 12 ராசிகளை குறிப்பது என்றும், எல்லா ராசிகளின் அருளும் அந்நாளி கிடைக்க 12 லிங்கங்களை வணங்க வேண்டும் என்பதும் ஏற்பாடு என்பார்கள்

இன்னும் அழுத்தமாக சொன்னால் சிவராத்திரி இரவில் தூங்காமல் லிங்க தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யபட்டிருந்தது

அதில் ஹரியும் சிவனும் ஒன்று எனும் மாபெரும் தத்துவமும் இருந்தது

இதனை பாரதத்தின் பல பாகத்தில் வாழ்ந்த இந்துக்கள் ஒரு காலத்தில் செய்தனர், சிவராத்திரி அன்று "கோபாலா கோபாலா" என கத்திய படியே 12 லிங்கங்கள் இருக்கும் ஆலயத்துக்கு ஓடுவார்கள்

இதனை பல இனங்கள் பின்னாளில் கைவிட்டது, அதற்கு புத்தமத எழுச்சி பின் சமண மதம் அதை தாண்டிய ஆப்கானியர் ஐரோப்பியர் குழப்பம் என பல காரணம் உண்டென்றாலும் அந்நியர் ஆட்சியில் அதிகம் சிக்காத கன்னியாகுமரி பக்கம் இந்த ஓட்டம் உண்டு

சாலிய மகரிஷி வழிவந்தவர்கள் என தங்களை சொல்லும் சாலியர் இனம் எனும் நெசவாளர் இனம் அதனை தொடர்ந்தது

சிவராத்திரி அன்று இப்படி ஆதிகேசவ பெருமாள் கோவிலை சுற்றிய 12 சிவாலயங்களை இப்படி சிவராத்திரியன்று கோபாலா கோபாலா என சொல்லியபடியே ஓடி சுற்றுவார்கள்
இது சிவாலய ஓட்டம் என்றாயிற்று

இப்பொழுது சாலியர் தாண்டி எல்லா இந்துக்களும் பங்கெடுக்கும் நிகழ்வாக அது அமைந்திருக்கின்றது, ஆம் இந்தியா முழுக்க சிவராத்திரி கொண்டாடபடும் நேரம் கன்னியாகுமரி பக்கம் மட்டும் "கோபாலா கோபாலா" என கண்ணனை நினைத்தபடியே சிவராத்திரி அனுசரிக்கபடுவது அங்குதான்

தூங்காமல் விழித்திருந்து சிவனை தரிசிக்கவும் அதில் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை புகுத்தவும் எவ்வளவு நுட்பமான வழிகளை எல்லாம் போதித்திருக்கின்றார்கள் அந்த முன்னோர்கள்

சிவராத்திரி முழுக்க இறைவனை அவன் நினைவிலே தேடு என்பதை இதைவிட எப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய முடியும்?

ஆம் அந்த சமூகம் பரிபூரண ஞானசமூகமாய் இருந்திருகின்றது, சிவாலய ஓட்டம் அதைத்தான் சொல்கின்றது

(யாளி போலவே புருஷா மிருகம் எனும் மனித தலையும் புலி உடலும் கொண்ட சிலைகள் இந்து ஆலயங்களில் உண்டு, சில இடங்களில் அவை கொண்டாடபடுவதும் உண்டு)

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...