Showing posts with label தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம்.. Show all posts
Showing posts with label தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம்.. Show all posts

Monday, July 25, 2022

தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம்.

தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி மாதம்.

சூரியன் கடக ராசியில் உட்புகுந்து அதிலிருந்து வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே ஆடி மாத மாகும்.

முன்முற்காலத்தில் நம் தமிழர் ஆடிப்பிறப்பைச் மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.

ஆடி மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளாக ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு என இம்மாதம் முழுதும் கொண்டாடப்படுகின்றது.

மேலும் ஆடி மாதம் தட்சிணாயனம் அதாவது தென்திசையேகல் ஆரம்பமாகிறது.

தமிழ் ஆண்டினை இரண்டு அயனங்களாக (கதிர் நகர்வு) பிரித்து ஆடி முதல் மார்கழி வரையிலான காலம் தட்சிணாயனமும், தை முதல் ஆனி வரை உள்ள காலம் உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) என்பதாகும்.

அதிகாலை வேளையில் கதிரவன் வடகிழக்கு நோக்கி நகர்தலை விட்டு விட்டு தென்கிழக்கு திசை நோக்கி நகரும்.

நமது இந்து தொன்மயான இயலில் இது சூரியனின் தேர் திசை திரும்புவதாக அறிப்பிடப்படுகிறது.

ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.

கோடி நன்மை தரும் ‘ஆடி வெள்ளி’ ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது.

கிழமைகளில் ‘சுக்ர வாரம்’ என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமை தான் இதன் சிறப்பு.

அள்ளிக் கொடுக்கும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமை அன்று, துள்ளித் திரியும் சிங்கத்தின் மேல் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.

சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம், இறைவியை நாடிச் சென்றவர்களுக்கு எல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் பெருகும் மாதமாகும்.

இந்த மாதத்தில் தான் ஈஸ்வரனின் சக்தி அன்னை லோக நாயகியின் சக்திக்குள் ஐக்கியமாகி விடுகிறது. இம்மாதத்தில் அம்மானை வழிபடுதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் எல்லா ஊர்களிலும் கூழ் ஊற்றுதல், தீ மிதித்தல், அம்மனுக்கு திருவிழா என பல வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
பொதுவாகவே சித்திரை வருடப் பிறப்பு முடிந்ததும் எந்தப் பண்டிகையும் வராது. ஆவணியில்தான் கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி என்று வரிசையாக பண்டிகைகளின் அணிவகுப்புத் துவங்கும். அதனால் ஆடி மாதத்தை பண்டிகைகளை அழைக்கும் மாதம் என்பர். இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்த வேண்டும் என்பதாலேயே பிற விசேஷங்களை செய்யக்கூடாது என்றார்கள். உதாரணமாக கல்யாணம், காது குத்து, புதுமனை புகுதல் போன்றவை இம்மாதத்தில் செய்ய மாட்டார்கள்.

மஞ்சள் பூசினால் மங்களம்!
அம்மனுக்கு உகந்த நாட்கள் செவ்வாயும், வெள்ளியும். அதோடு ஆடி மாதமும் சேர்ந்து விட்டால் இவ்விரண்டு நாட்களுக்கும் சிறப்புத் தன்மை அதிகமாகிவிடுகிறது. சாதாரண நாட்களில் இருக்கும் விரதத்தைப் போல பல மடங்கு பலன் தருகிறது, ஆடி மாத செவ்வாய்கிழமை விரதம், ஆடிச் செவ்வாய் தேடி குளி, அரைத்த மஞ்சளை பூசிக் குளி என்பது பழமொழி. அதாவது ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து விரதமிருந்தால் அன்னை உமையவள் கேட்ட வரம் தருவாள் என்பது ஐதிகம். இந்த விரதம் இருந்தால் வீட்டில் அமைதி என்றும் நிலவும்.
ஆடி வெள்ளியும் விசேஷமானதுதான். அன்றும் எண்ணெய் தேய்த்துக் குளித்து அம்மனை நினைத்து கூழ் ஊற்றி, தானும் அந்தக் கூழையே குடித்தால் அம்மன், செல்வம், ஆரோக்கியம் நல்ல குழந்தைகள் என வரம் அருளுவாள்.

ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பி லைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறும்.

திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

கருடன் பிறந்த ஆடிச் சுவாதி!

பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வ தாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

ஆடிக்குருவி

காவிரி தீரத்தில் வாழும் ஒருவகை பறவைகளை அக்கோ குருவிகள் என்று அழைப்பார்கள். இந்தப் பெயருக்குப் பின்னணியாக சுவாரஸ்ய கதையொன்று உண்டு!

காவிரிக்கரையோரம் சகோதரிகளான இரண்டு குருவிகள் வசித்தன. காவிரி வறண்டு காணப்பட்ட ஒருநாள், மணற்பரப்பில் உலர்த்தி இருந்த பொருட்களை தின்றுகொண்டு இருந்தபோது, காவிரியில் வெள்ளம் திடீரென வந்தது. தங்கைக்குருவி உடனடியாக பறந்து மரத்தில் அமர்ந்துவிட்டது. அக்காள் குருவி கவனிக்காததால், வெள்ளத்தோடு அடித்து சென்று விட்டது. அதைக் கண்ட தங்கைக்குருவி, ‘அக்கோ, அக்கோ’ என கதறி அழுதது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் அக்காள் குருவி திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையில் காவிரி கரை ஓரத்தில் மறத்தில் அமர்ந்து கொண்டு, அக்கோ.... அக்கோ.... என்று குரல் எழுப்பி, அக்காள் குருவியை தேடுமாம். இப்போதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் அந்தக் குருவியின் குரலைக் கேட்கலாம் என்கிறார்கள் அந்தப் பகுதியில் வாழும் பெரியவர்கள்!

’ஆடி வேல்' வைபவம்!

இலங்கையில் மிகவும் கோலாகலமாக கொண் டாடப்படும் விழா ஆடிவேல் வைபவம். ஆடி மாதத்தில் வேல் எடுத்து கொண்டாடப்படுவதால் ஆடிவேல் என அழைக்கிறார்கள்.

கதிர்காமத்தில் இவ்விழாவை கண்டுகளிக்க பக்த பெருமக்கள் பெருந்திரளாக வருவார்கள். இந்த ஆடிவேல் திருவிழா நான்கு தினங்கள் நடைபெறும்.

அழகன் முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை!

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

தீமித்துக்கும் வழக்கும் வந்தது எப்படி?
ஆடியில் தேய்பிறையின் போது வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி என்றும், வளர்பிறையில் வரும் ஏகாதசி சயனி ஏகாதசி என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் குபேரனிடம் ஹேம மாலி என்பவன் வேலை பார்த்து வந்தான். அவன் தனது மனைவியின் அழகில் மயங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவனால் வேலையைச் சரியாக செய்ய முடியவில்லை. கோபம் கொண்ட குபேரன் அவனை பெரு நோயாளி ஆகும்படி சபித்தான்.
வேதனைப்பட்ட அவனுக்கு சாப விமோசனத்துக்கு வழி சொன்னார் ரோமச முனிவர். ஆடி மாதம் தேய்பிறை ஏகாதசியின் போது விரதமிருந்து தீமிதித்து அம்மனை வழிபட்டால் நோய் நீங்கி எழில் உருவம் கிடைக்கும் என்றார். அவனும் அதுபோல செய்து சாபம் நீங்கி நல்ல உருவம் பெற்றான். அதனால் ஆடி மாத தேய்பிறை ஏகாதசி யோகினி ஏகாதசி என்று அழைக்கப்பட்டது. அப்போது முதலே ஆடி மாதம் தீமிதி விழாவும் ஆரம்பமானது.
திருவிக்ரமனாக விஸ்வரூபம் எடுத்து மகாபலியை பாதாள உலகத்துக்கு அனுப்பிய மகாவிஷ்ணு மீண்டும் பாம்பணையில் சயனித்தது ஆடி மாத வளர்பிறை ஏகாதசி நாளில்தான். அவருக்கு களைப்பு நீங்கும்படி சேவை புரிந்தவள் ஏகாதசி தேவதையே. அதனால் அதற்கு சயனி ஏகாதசி என்று பெயர் வந்தது. இவ்விரு நாட்களிலும் விரதமிருந்து அம்மனை பூஜித்து வழிபட்டால் எல்லா நோய்களும் நீங்கும்; அம்மனருள் வாழ்வில் நிறைந்திருக்கும்.

பூர்வ புண்ணியம்!
ஆடி மாதம் என்பது தேவர்களுடைய மாலை நேரம் ஆகும். அதுவே நாம் நமது முன்னோருக்கு பித்ருக் காரியங்கள் அதாவது திதி முதலியவை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்த ஏற்ற தருணம். ஆடி மாதம் எந்த நாளில் வேண்டுமானாலும் திதி கொடுக்கலாம். அதிலும் ஆடி அமாவாசை அன்று கொடுக்கப்படும் திதிக்கும் பலன் மிக அதிகம்.
சிலருக்கு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் மிகவும் பலவீனமாக இருக்கும். அப்படி இருந்தால் செய்யும் செயல்களுக்குரிய முழுமையான பலன்கள் கிடைக்காது. எந்தச் சிறு செயலையும் மிகவும் போராடித்தான் செய்ய வேண்டி இருக்கும். அப்படியும் அது வெற்றிகரமாக முடியும் என்று சொல்ல முடியாது. அதை சரி செய்ய முன்னோரின் ஆசியும், சந்தோஷமும் முக்கியம். அதனால்தான் சிரார்த்தம், திதி முதலியவற்றைக் கொடுக்கிறோம். அதனை ஆடி அமாவாசை அன்று செய்தல் கூடுதல் நன்மை பயக்கும்.
அன்று திதி கொடுத்தால் நூறு வருடங்கள் திதி கொடுத்து முன்னோரை திருபதிப்படுத்திய சந்தோஷம் அவர்களுக்குக் கிடைக்கும்.

கர்ப்பிணி அம்மன்
ஆடி மாதத்தின் போது அம்மன் கர்ப்பமாக இருப்பதாக ஐதிகம். அப்போது முளைப்பயிறை வயிற்றில் கட்டிக் கொண்டு அம்மனை வழிபட்டால் குழந்தைப்பேறு கிட்டும். அம்மனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளான வளைகாப்பு, பூச்சூட்டல் போன்றவை ஆடிப்பூரத்தில் செய்யப்படுகின்றன. அப்போது வேண்டுதல் செய்து கொண்டு வளையல்களை வாங்கி கொடுக்க வேண்டும். பின்னர் கோயிலில் பிரசாதமாகத் தரும் வளையல்களை அணிந்து கொண்டால் மாங்கல்யம் நிலைத்து நிற்கும்; நன்மக்கட்பேறு வாய்க்கும்.
பூமாதேவி பெரியாழ்வார் திருமகளாக கோதை நாச்சியாராக துளசிச் செடியின் கீழ் அவதரித்தது ஆடிப்பூர நாளில் தான். அன்றைய தினம் கன்னிப் பெண்கள் ஆண்டாளை வழிபட்டு அவளது பூ பிரசாதத்தை சூடிக் கொண்டால் மனதுக்கினிய கணவர் வருவார் என்பது ஐதிகம்.

அம்பிகை தவம்!
நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் ஆடித்தபசு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ஒரு முறை தேவி ஈசனிடம் நீங்கள் சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்க வேண்டும். அப்போதுதான் சிவ்ன பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற சண்டை இருக்காது. எல்லாமே தாங்கள்தான் என்ற உண்மையை மக்களுக்குத் தெரிய வரும் என்று வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு மனம் இரங்கிய சிவபெருமான், "தென் தமிழகத்தில் புன்னை வனத்திற்குச் சென்று தவமியற்று. நான் சங்கர நாராயணனாகக் காட்சி கொடுத்து உன்னையும் ஆட்கொள்ளுவேன்' என்று கூறினார்.
பெம்மானின் வார்த்தையை கேட்ட அன்னை அவ்வாறே புன்னை வனம் வந்தாள். சுற்றிலும் அக்கினி சூழ ஊசி முனையில் நின்று தவமியற்றினாள். அவளது தவத்தின் உக்கிரம் அனைவரையும் வாட்டியது. உடனே சங்கரன் பாதி, நாராயணன் பாதி என சங்கர நாராயணனாகக் காட்சி கொடுத்தார் சிவபெருமான். நிலவு போல முகம் படைத்தவள் என்ற பொருளில் அம்மனுக்கு கோமதி என்ற பெயரையும் அளித்தார். இன்றும் கூட இந்த விழா கோமதியம்மன் அருளும் சங்கரன் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தபசுக் காட்சியைக் கண்டால் எல்லா துன்பங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

காவிரிக்கரையில் கலந்த சாதம்!
எண்களில் 18 என்ற எண் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகாபாரத யுத்தம் நடந்த நாட்கள் 18, பதினெட்டுப் புராணங்கள், ஐயப்பன் கோயிலின் படிகள் 18, இப்படி நிறைய உண்டு. அதனாலேயே ஆடி 18 சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் நதிகளில் பூரணப் பிரவாகம் பொங்கியிருக்கும். புது வெள்ளம் வந்து பழைய அழுக்குகளை நீக்கிவிடும். வேளாண் பெருமக்கள் ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப விதை தெளிக்கும் பணிகளில் ஈடுபடுவர்.
பூமித்தாய் கண் திறந்து நிறைய மகசூலை அள்ளித்தர வேண்டும் அதற்கு ஆறுகள் துணை புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கொண்டாடப்படுவதே ஆடிப் பெருக்கு பண்டிகையாகும். காவிரி பாயும் இடங்களில் இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காவிரியை அம்மனாக பாவிக்கிறார்கள். ஆடி மாதம் அன்னையின் கர்ப்பகாலம். ஆதலால் காவிரிக்கு, மசக்கையில் இருக்கும் பெண்கள் மிகவும் விரும்பும் உணவு வகைகளான புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சர்க்கரை பொங்கல் என்று படைத்து வழிபடுகிறார்கள்.
அதோடு வருடம் முழுவதும் மங்களம் தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூ, காதோலை, கருகமணி, மஞ்சள் கயிறு முதலியவற்றை ஆற்றில் சமர்ப்பிக்கிறார்கள். பல குடும்பங்கள் தாலி மாற்றும் சடங்கும் நடைபெறுகிறது. அவ்வாறு செய்தால் கணவன் நீண்ட ஆயுளும், மனைவியின் மேல் மாறாத அன்பும் கொண்டிருப்பான் என்பது மக்களின் நம்பிக்கை.
ஆடி மாதம் முழுவதுமே அன்னை உமையவளின் வழிபாட்டுக்குரிய மாதமாக இருந்து வருகிறது. நாமும் ஆடி மாத பூஜைகள், ஆராதனைகளில் கலந்து கொண்டு கூழ் வார்த்து, பாவம் நீங்கி நீண்ட ஆயுளும், பெருமைக்குரிய குழந்தைகளும் பெற்று நிறைவுடன் வாழ்வோம்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...