Showing posts with label இந்த மலர் இறைவன் திருமேனியை. Show all posts
Showing posts with label இந்த மலர் இறைவன் திருமேனியை. Show all posts

Sunday, January 8, 2023

இந்த மலர் இறைவன் திருமேனியை

ஓர் ஊரில் கந்தன் என்ற கோவில் அர்ச்சகர் இருந்தார். அவருடைய மனைவியின் பெயர் ஜானகி. ஜானகிக்கு தன் கணவன் மீது அன்பு உண்டு என்றாலும் மனக்குறைகள் நிறைய உண்டு.

 வெறும் கோவில் அர்ச்சகராக கந்தன் வாழ்க்கை நடத்துவதால் அவன் குடும்ப வாழ்க்கை மிகவும் வறுமையாகவே இருந்தது. நல்ல ருசியான உணவு வகைகளை சமைத்து சாப்பிடவும், உயர்ந்த ஆடை அணிகளை அணிந்து சுவைக்கவும் ஆசைப்பட்ட ஜானகிக்கு அவையெல்லாம் எட்டாத பழமாக இருந்தன.

 ஒரு நாள் ஜானகி தன் மனக்குறையை கணவனிடம் வாய் விட்டுச் சொன்னாள். நீங்கள் கோயில் அர்ச்சகராக இருப்பதால் நமது குடும்பம் எப்பொழுதும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறது. வேறு ஏதாவது உத்தியோகம் தேடினாலோ, வியாபாரம் செய்தாலோ அதிக பணம் கிடைக்கும் அல்லவா என்றாள்.

 ஜானகி மனத்தில் உள்ள கருத்தை கந்தன் தெளிவாகப் புரிந்து கொண்டான். அவளுக்கு தனது பணியின் உண்மை மதிப்பை உணர்த்த எண்ணினான .

ஒரு நாள் கந்தன் கோயிலில் சுவாமிக்கு சமர்ப்பணம் செய்த சிறிய மலர் ஒன்று எடுத்து மனைவியிடம் கொடுத்து இதை கொண்டு போய் நமது அரசரிடம் கொடுத்து இந்த மலருடைய எடைக்குச் சமமான பொன் வாங்கி வா என்றான்.

 ஜானகிக்கு கணவனுடைய எண்ணம் விளங்கவில்லை என்றாலும் கணவன் சொன்னதை நிறைவேற்ற அரண்மனைக்குச் சென்று அரசனை பார்க்க விரும்புவதாக காவலாளிகளிடம் தெரிவித்தாள்.தான் வந்த நோக்கத்தையும் காவலாளிகளிடம் சொன்னாள்.

 காவலாளிகள் ஜானகி சொன்ன தகவல்களை அரசரிடம் சென்று தெரிவித்தார்கள். குடும்பக் கஷ்டம் தீர ஜானகி பொருள் உதவி கூறி வந்திருப்பதாக நினைத்து அரசர் ஒரு பண முடிப்பை அளித்து அவளிடம் கொடுக்கும்படி சொன்னார்.

 ஜானகி பணம் முடிப்பை பெற்றுக் கொள்ளவில்லை . பூஜை மலரின் எடைக்குச் சமமான பொன்னைப் பெற்று வருமாறு தன் கணவன் உத்தரவிட்டிருப்பதால் அதை மீற தனக்கு உரிமை இல்லை என்று ஜானகி வாதாடினாள்.

 காவலாளிகள் அந்த தகவலை அரசனுக்கு தெரிவித்தார்கள். அந்த வினோதமான வேண்டுகோளை செவிமடுத்த அரசன் ஜானகியை தன் முன் வரச் சொன்னார். ஜானகி அரசனை வணங்கி நின்றாள்.

 அம்மா உன் கையில் இருக்கும் மலரின் எடைக்கு என்ன பொருள் கிடைக்க முடியும்? ஒரு குண்டுமணி எடை பொன் கூட இதற்கு சமமாகாதே என்றான் அரசன்.

 துளி அளவு பொன் கிடைப்பதாக இருந்தாலும் என் கணவன் சொன்னபடி தான் நான் நடக்க வேண்டி இருக்கிறது என்று ஜானகி பணிவுடன் சொன்னாள்.

 அரசன் ஒரு தராசை தருவித்தான். ஒரு தட்டில் பூஜை மலரை வைக்கச் சொன்னார். மற்றையதில் கொடுத்த பணமுடிப்பை வைக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம் பூஜை மலர் இருந்த தட்டு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. மற்றொரு பண முடிப்பை தட்டில் வைக்குமாறு அரசன் கட்டளையிட்டார். பூஜை மலர் இருந்த தட்டு உயரவே இல்லை.

 அரசன் வியப்படைந்தான். அரண்மனை பொக்கிஷத்தை திறந்து ஒரு பெரிய தங்க கட்டி எடுத்து வர செய்து தராசு தட்டில் வைத்தான். மலர் இருந்த தட்டு அப்படியே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பொக்கிஷத் தங்கம் முழுவதையும் கொண்டு வரச் சொன்னார். மலர் இருந்த தட்டில் மாற்றமில்லை. தனக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொண்டு வரச் செய்து அரசன் தராசில் வைத்தான்.

 ராணியின் நகைகள் கொண்டுவரப்பட்டன. மன்னனின் அணிகலன்கள் கழட்டி வைக்கப்பட்டன. ஆனால் மலர் இருக்கின்ற தராசு தட்டு மேலே எழவே இல்லை. மன்னன் திகைப்பும் திகிலும் அடைந்தான். இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்று அவனுக்கு விளங்கவில்லை.

கோவில் அர்ச்சகர் கந்தனை அழைத்து வருமாறு அரசன் தன் சொந்த பல்லக்கை அனுப்பி வைத்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் கந்தன் அரசனின் முன் வந்து வணங்கி நின்றான்.

அரசன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து கந்தனை மரியாதை உடன் வரவேற்று தனக்கு சமமாக இருக்கை தந்து அமரச் செய்தான்.

 பிறகு சுவாமி முதலில் தங்களை ஒரு ஏழை அர்ச்சகர் என அலட்சியமாக நினைத்தேன். தங்களுடைய பெருமையும் மதிப்பும் இப்பொழுது தான் எனக்கு விளங்குகிறது என்றான்.

கந்தன் சிரித்துக்கொண்டு அரசே என்னுடைய தகுதியை பற்றி தாங்கள் அளவுக்கு மீறிப் புகழ்கிறீர்கள். என்னிடம் எந்த மகிமையும் இல்லை. இந்த மலர் இறைவன் திருமேனியை அலங்கரித்து அதன் மூலம் பெருமை பெற்றது. தகுதி எல்லாம் இந்த மலரிடம் தான் இருக்கிறது. தவிர என்னிடம் அல்ல என்றான்.

 இந்த மலரின் விலைக்கு சமமான பொருள் உலகத்தில் உண்டா? என்று எனக்கு தெரியவில்லை என்றான் அரசன் திகைப்புடன்.

 இருக்கிறது அரசே! தாங்கள் தயவுசெய்து குளித்து முழுகி பரிசுத்த நிலையில் இறைவனை ஒரு மலரை கொண்டு ஏகாக்கிரக சிந்தனையுடன் அர்ச்சித்து பிறகு அந்த மலரை கொண்டு வந்து அடுத்த தட்டில் வைத்துப் பாருங்கள் என்றான் கந்தன்.

 அரசன் தராசின் மறுதட்டில் இருந்த செல்வப் பொருட்களை அகற்றிவிட்டு கந்தன் சொன்னபடி பரிசுத்த நிலையில் இறைவனை மலர் கொண்டு அர்ச்சித்து அந்த மலரை கொண்டு வந்து தராசின் மறு தட்டில் வைத்தான். என்ன ஆச்சரியம் ஜானகி தந்த மலரின் தட்டு இப்பொழுது மேல் எழுந்து அரசன் மலர் வைத்த தட்டுக்கு சமமாக நின்றது.

 உலகத்தில் எவ்வளவு செல்வமும் பெருமையும் இருந்தாலும் அது இறைவனின் அருளைப் பெற்ற ஒரு மலரை விட எந்த விதத்திலும் உயர்ந்த நிலை அல்ல என்ற உண்மை கண்ணுக்கு மெய்யாக நிரூபிக்கப்பட்டது கண்டு அரசன் மட்டுமல்ல அர்ச்சகரின் மனைவி ஜானகியும் மனம் வருந்தினாள்.

 கடவுளின் அருளுக்கு பாத்திரமாக இருப்பதைவிட வேறு செல்வ நிலை உலகத்தில் எதுவும் கிடையாது. 🙏🙏🙏

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...