Showing posts with label அகோரிகள். Show all posts
Showing posts with label அகோரிகள். Show all posts

Tuesday, July 9, 2024

அகோரிகள்

அகோரிகள்..

நிர்வாண உடலெங்கும் சாம்பல் பூசிக்கொண்டு, நீண்ட ஜடாமுடிகளோடு உலா வரும் இவர்கள்தான் கும்பமேளாவில் முதலில் குளிக்கும் உரிமை பெற்றவர்கள். 

ஹரி ஓம் ஷம்போ சிவ ஷம்போ மகாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்

நுனி நாக்கு ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவதில்லை, தங்க நாற்காலியில் அமர்வதில்லை, கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பதில்லை, ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வதில்லை, டி.வி கேமராவைப் பார்த்ததும் புன்னகை பூப்பதில்லை. ஆனாலும் இவர்களை விடாமல் மக்கள் கூட்டம் துரத்துவது ஏன்?

‘நங்கா’ என்ற இந்தி வார்த்தைக்கு ‘நிர்வாணம்’ என அர்த்தம். ‘நங்கா சாது’ என்ற பெயர்தான் பேச்சுவழக்கில் ‘நாகா சாது’ ஆனது. அகோரிகள் எனவும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ‘அகோரப் பசியோடு மனித உடல்களைத் தின்பவர்கள் என்பதால் இப்படி பெயர் பெற்றார்கள்’ என பலர் தப்பாக திகில் கதை விட்டிருக்கிறார்கள். ‘கோரம்’ என்றால் கொடூரமானது; 

‘அகோரா’ என்றால் கால பைரவர். அவரை வணங்கும் சாதுக்கள் என்பதால் இவர்களுக்கு இந்தப் பெயர்.

நாகா சாதுக்கள் தத்தாத்ரேயர் உருவாக்கிய படை என்பார்கள். சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு இவர்களை சங்கராச்சாரியார் பயன்படுத்தினார். அறிவாலும் ஆயுதத்தாலும் எப்போதும் சண்டையிடத் தயாராக இருக்கும் படை இவர்கள். மரணத்தைப் பற்றிய அச்சம் இவர்களுக்குத் துளியும் கிடையாது. வாள், மண்டை ஓடு குத்திய திரிசூலம், ஈட்டி என ஆயுதங்களை ஏந்தியபடி இவர்கள் பயணம் மேற்கொள்வார்கள். எந்த ஊருக்குப் போனாலும் சுடுகாட்டில்தான் தங்குவார்கள். 

இந்தியாவிலும் நேபாளத்திலும் இமயமலையை ஒட்டிய பகுதிகளில் இவர்கள் இருக்கிறார்கள். நாகா சாதுக்கள் இருக்குமிடம் ‘அகாரா’ எனப்படும். சைவம், வைணவம் என சகல பிரிவிலும் சேர்த்து மொத்தம் 16 அகாராக்கள் உண்டு. இந்த அகாராக்களை சாராமல் தனியாக நாகா சாதுக்கள் கிடையாது. ஏதோ ஒரு குகையில் தனியாக அடைந்து கிடந்து தவம் இருப்பதெல்லாம் வழக்கம் இல்லை. 

நாகாக்கள் கூட்டமாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர் உண்டு. சும்மா வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு வருகிற எல்லோரும் நாகா ஆகிவிட முடியாது. உறவுகளை முற்றிலுமாகத் துண்டிக்க வேண்டும்; சோப்பு, சீப்பு, இனிப்பு என உலக வாழ்க்கை இன்பங்களைத் தரும் எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது; ஆசைகளைத் துறக்க வேண்டும்; உடைகள்தான் குடும்ப உறவோடு ஒரு மனிதனைப் பிணைக்கிறது என்பதால் அதையும் துறக்க வேண்டும். விபூதி சாம்பலை உடலில் பூசிக்கொள்ள வேண்டும். இமயமலைச் சூழலின் கடுங்குளிரிலிருந்து இவர்களை இந்த சாம்பலே காக்கிறது. உடலோடு இணையாத பொருளாக இவர்கள் அணிந்திருப்பது ருத்ராட்ச மாலை மட்டுமே! நீண்டிருக்கும் தலைமுடியை சடை போல சுருட்டி தலையில் கொண்டை போல வைத்திருப்பார்கள். சுடுகாட்டு சாம்பலைப் பூசியிருந்தாலும், இவர்கள்மீது துர்நாற்றம் வீசுவதில்லை.

பிறப்பதும் இறப்பதும் மறுபடியும் பிறப்பதுமான உலகச் சுழற்சியிலிருந்து தாங்கள் விடுபட்டு மோட்சத்தை அடைவதாக நாகாக்கள் நம்புகிறார்கள். காடுகளில் கிடைக்கும் மூலிகைகளை உண்டு வாழும் இவர்களுக்கு வயதானாலும் முடி நரைப்பதில்லை; கிழப்பருவத்தின் சுவடுகளும் உடலில் தெரிவதில்லை. யோகா, தியானம், மூலிகை ஆராய்ச்சி என இவர்களின் தினப்பொழுதுகள் கழிகின்றன. தங்களுக்குள் கூட இவர்கள் அநாவசியமாக ஒரு வார்த்தை பேசிக் கொள்வதில்லை. 

கும்பமேளா போன்ற காலங்களில் மட்டுமே மக்கள் கூடும் இடங்களுக்கு இவர்கள் வருகிறார்கள். அதன்பின் அமைதியாக நடந்தே இமயமலைக் காடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். பொதுவாக இவர்கள் கூச்ச சுபாவிகள். பொதுமக்களை தங்கள் அருகில் நெருங்க விட மாட்டார்கள். 

சண்டையில் எத்தனை பேரையும் எதிர்கொள்ளும் உடல்பலமும், மாயங்களை நிகழ்த்தும் சக்தியும் இவர்களுக்கு உண்டு என்பது பலரின் நம்பிக்கை. இறந்தவர்களை இவர்கள் உயிர்பிழைக்க வைத்த அதிசயமும் நடந்திருக்கிறதாம். ஒருமுறை டார்ஜிலிங் மன்னரை இப்படி நாகா சாதுக்கள் உயிர்பெற வைத்திருக்கிறார்களாம். இந்த வித்தைகளைக் கற்றுக்கொள்ளும் ஆசையில் பலர் இமயமலைக் காடுகளில் நாகா சாதுக்களைத் தேடி அலைகிறார்கள். 

நாகா சாதுக்களின் 16 அகாராக்களில் ஸ்ரீபஞ்ச்யாதி அகாரா மட்டும் ஒவ்வொரு கும்பமேளாவிலும் புதிதாக சாதுக்களை சேர்த்துக் கொள்கிறது. ‘பால நாகா சாது’ என்ற பெயரோடு இவர்களுக்கு தீட்சை தரப்படும். இவர்களுக்கு கோவணம் மட்டும் அணிந்துகொள்ள அனுமதி உண்டு. கடுமையான பரீட்சைகளில் தேறியே இவர்கள் ‘நாகா சாது’ ஆக முடியும். ஐந்து குருக்களிடம் தங்கள் மன உறுதியை இவர்கள் நிரூபிக்க வேண்டும். இடையில் சிறு சலனம் ஏற்பட்டாலும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். 

எல்லாம் துறந்த நாகாக்கள், கும்பமேளாவின்போது மணப்பெண் போல தங்களை அலங்கரித்துக் கொண்டு குளிக்கிறார்கள். நெற்றியில் குங்குமப் பொட்டு, கண்களில் மை, உடலெங்கும் சந்தனம், கழுத்திலும் கைகளிலும் இடுப்பிலும் மாலை, கம்மல், வளையல் எல்லாம் அணிந்துகொண்டு மங்களகரமாக குளிக்கிறார்கள். 

அதன்பின் சாம்பலில் கலக்கிறது வாழ்க்கை

அன்புடன்
 அன்பே சிவம் கணேஷ் 

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...