Showing posts with label குற்றாலநாதர் கோவில். Show all posts
Showing posts with label குற்றாலநாதர் கோவில். Show all posts

Wednesday, February 23, 2022

குற்றாலநாதர் கோவில், குற்றாலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

குற்றாலநாதர் கோவில், குற்றாலம்

சிவஸ்தலம் பெயர் குற்றாலம்

இறைவன் பெயர் குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர்.
இறைவி பெயர் குழல்வாய் மொழியம்மை

பதிகம் சம்பந்தர் - 2
எப்படிப் போவது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மி. தொலைவிலும், செங்கோட்டையில் இருந்து 7 கி.மி. தொலைவிலும் குற்றாலம் சிவஸ்தலம் உள்ளது. தென்காசியிலிருந்தும் செங்கோட்டையிலிருந்தும் அடிக்கடி பேருந்துகள் உள்ளன. மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்தும் தென்காசி செல்ல பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. ரயிலில் செல்ல விரும்புவோர் சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு வண்டியில் செங்கோட்டை சென்று அங்கிருந்து பேருந்தில் குற்றாலம் செல்லலாம்.

ஆலய முகவரி அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்
குற்றாலம் அஞ்சல்
திருநெல்வேலி மாவட்டம்
PIN - 627802

திருக்குற்றால தல புராண வரலாறு: கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற போது, அங்கு கூடியிந்தவர்களின் பாரம் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயரத் தொடங்கியது. பூமியின் நிலையை சரிப்படுத்த சிவபெருமான் அகத்தியரை தென்திசையிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்புகிறார். அகத்தியருக்கு அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார். அகத்தியரும் பொதிகை மலை வந்து அருவியில் நீராடிவிட்டு அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றார். ஆனால் அக்கோவில் ஒரு வைணவக் கோவில். அகத்தியர் வைணவர் இல்லை என்று கோவிலுக்குள் செல்ல தடை விதித்தனர். மிகுந்த கவலையுடன் அருகிலுள்ள இலஞ்சி சென்று அங்குள்ள முருகரை வழிபட்டார். முருகப் பெருமான் அகத்தியரை வைணவர் வேடத்தில் கோவிலுக்குள் செல்லும் படியும், உள்ளே சிவனின் திருமணக் கோலத்தைக் காணலாம் என்றும் கூறினார்.
கோவிலுக்குள் அவ்வாறே சென்ற அகத்தியர் விஷ்ணு சிலாவுருவில் கருவறையில் இருப்பதைக் கண்டார். கண்களை மூடிக்கொண்டு சிவனை பிரார்த்தனை செய்பவாறு அச்சிலையின் தலையில் தனது கையை வைத்து அழுத்த, விஷ்ணுவின் சிலை குறுகி ஒரு சிவலிங்கமாக மாறியது. அகத்தியருக்கு சிவபார்வதி திருமணக் காட்சியும் கிடைத்தது. அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதால் லிங்கத் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்த அடையாளம் இருப்பதைக் காணலாம். விஷ்ணுவின் சிலாரூபம் லிங்கமாக மாறியதைப் போல ஸ்ரீதேவியை குழல்வாய் மொழியம்மை ஆகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றியதாகவும் ஐதீகம்.
கோவில் அமைப்பு: கோயில் மலைகள் சூழ்ந்த இயற்கையழகு வாய்ந்த சூழலில் சுமார் 5000 அடி உயரம் கொண்ட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைத்தொடர் திரிகூடமலை என்றழைக்கப்படுகிறது. ஆலயம் சுமார் 3.5 ஏக்கர் திலபரப்பளவில் நான்கு வாயில்களோடு சங்கு வடிவத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதை திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து காணலாம். திரிகூடநாதர் என்றும் குற்றாலநாதர் என்று அழைக்கப்படும் இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குழல்வாய் மொழியம்மை சந்நிதியும் சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. பிரகார வலமாக வரும்போது அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பராசக்தி பீடம் உள்ளது. மிகக் குறுகலான பிராகாரத்தை வலம் வரும் போது, அதிகார நந்தி, சூரியன், கும்பமுனி, எதிரில் கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர், சப்தகன்னியர் முதலிய சந்நிதிகளைத் தரிசிக்கலாம். பஞ்சபூதலிங்கங்களும், நன்னகரப்பெருமாள், சுப்பிரமணியர், சனிபகவான் சந்நிதிகளும் உள்ளன.
இத்தலத்திலுள்ள தீர்த்தங்களில் வடவருவியும், தேனருவி என்ற சிவமதுகங்கையும் சிறப்புடையவை. வடவருவியில் மூழ்கினாரது பாவம் கழுநீராகப் பிரிந்து ஓடும் என்பது இத்தல ஐதீகம். இத்தலத்தின் தலவிருட்சமாக பலாமரம் உள்ளது. இந்த பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், லிங்கத்தின் வடிவில் இருப்பது பார்த்து பரவசப்பட வேண்டிய ஒன்றாகும்.
குற்றாலநாதர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. குற்றாலநாதர் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் தனிக்கோயிலாக அமைந்திருக்கிறது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் இருக்க நடுவே சித்திர சபை அமைந்திருக்கிறது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும். மரக்கோவிலின் கூரை சிதம்பரத்துக் கோவிலின் கூரையை நினைவூட்டுகிறது. இந்த சித்திர சபையில் இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இந்த கூடத்தின் நடுவே ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து எல்லோருக்கும் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் அனைத்தும் சித்திரங்களாக அழகுடன் தீட்டப்பட்டிருகின்றன. மற்றும் உள்ள பல சித்திரங்களைக் காணச் சென்றால் எதைப் பார்ப்பது எதை விடுவது என்ற பிரமிப்பைத் தூண்டும் வகையில் இந்த வண்ண ஓவியங்கள் அமைந்திருக்கின்றன. கிழக்கு நோக்கியுள்ள இந்த சித்திர சபையின் உள்ளே இருக்கும் நடராச சிற்பம் தெற்கு நோக்கியுள்ளது.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...