Showing posts with label சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல. Show all posts
Showing posts with label சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல. Show all posts

Friday, November 24, 2023

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல

 சிவ வடிவங்கள் 64 - 46. குருமூர்த்தி

திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மாணிக்கவாசகர் மகனாகப் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராகப் பதவி அமர்த்தினார். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி செல்வம் செல்வாக்கு எல்லாம் இருந்த போதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு செய்து வந்தார்.
ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையில் உள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே ஓரு மரத்தின் அடியில் சிவபெருமான் மானிட வடிவு எடுத்து கையில் ஏடுகள் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்பு சென்று மாணிக்கவாசகர் தங்கள் கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க அவர் சிவஞான போதம் என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல) சிவம் என்பதும் ஞானம் என்பதும் போதம் என்பதும் என்னவென்று அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்து விட்டார் மாணிக்கவாசகர்.
பாண்டிய மன்னன் ஒற்றர்களிடம் அரசனின் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகரை அழைத்துவரக் கட்டளையிட்டான். மாணிக்கவாசகரோ குருவின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி அந்த ஓலைச்சுவடியை குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குரு ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர இப்போது நல்ல நாளில்லை ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.
பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை ஒற்றர்கள் மூலம் பிடித்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றி விடுவித்தான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.
அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். மாணிக்கவாசகர் வெயிலில் நின்றதும் சிவபெருமான் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக் கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கி விட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்க வேண்டும் என்று முரசு அறிவிக்கிறான். ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்கு ஒருவர் செல்கின்றனர். வந்திக் கிழவி எனும் ஒருவள் மட்டும் தன் வீட்டில் யாருமில்லாததால் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய் அதற்கு கூலியாக நான் விற்கும் பிட்டில் உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான்.
மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான். திருவாதவூரரர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். பல சிவ தலங்களுக்கும் சென்று பல பாடல்களை இயற்றினார்.
சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை எழுத வந்தேன். நீங்கள் பாடுங்கள் அவற்றை நான் எழுதுகிறேன் என்று கூறினார் வேதியர். அதற்கு ஒப்புக்கொண்ட மாணிக்கவாசகர் பாட பல செய்யுட்களை எழுதி முடித்தார் வேதியர். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும் ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் ஓத சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையொப்பமிட்டு ஓலைச் சுவடிகளைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லை அந்தணர் ஒருவர் அவ்வோலைகளை எடுத்துப் பார்க்க அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடிகளாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த தில்லை அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று வாதவூரரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜர் முன்பாக அழைத்துச் சென்ற வாதவூரர் இந்தப் பாடல்களின் பொருள் இவரே என்று கூறி நடராஜரைக் காட்டி விட்டு நடராஜர் இருக்கும் மூலஸ்தானத்தினுள் சென்று மறைந்தார். சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி திருவடி தீட்சை கொடுத்து உபதேசம் செய்த உருவமே குருமூர்த்தி ஆகும்.
May be an illustration of 2 people and text that says 'ハ மாணிக்கவாசகர் திருவடி தீட்சை'

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...