Showing posts with label புண்ணியம் செய்....அனைத்தும் கிடைக்கும்...... Show all posts
Showing posts with label புண்ணியம் செய்....அனைத்தும் கிடைக்கும்...... Show all posts

Wednesday, February 16, 2022

புண்ணியம் செய்....அனைத்தும் கிடைக்கும்.....

புண்ணியம் செய்....
அனைத்தும்  கிடைக்கும்.....

அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்..

அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். 

முதியவருக்கு மகிழ்ச்சி. 

'ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். 

இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான். 

சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான். 

முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார். 

இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள். பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது. 

அவள் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார். எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றி திரும்பினார்.

சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர் நடந்ததை கூற...

அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். 

அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்.

அர்ஜுனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்து விடும்?'' எனக் கேட்டான். 

எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன் அர்ஜுனனுடன் முதியவரை பின் தொடர்ந்தார். 

செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் கேட்டான். 

யோசித்த முதியவர், இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார். அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார். 

இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார்.
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார். அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல்.

சந்தோஷ மிகுதியால் 'சிக்கியாச்சு' என்று கூச்சலிட்டார். 

அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, அவன் திடுக்கிட்டு, தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அனைத்தையும் முதியவருக்கு கொடுத்தனர்.

அர்ஜுனன் கண்ணனிடம், ''வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான்.

கண்ணன் சிரித்துக்கொண்டே…

 ''இவர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல், மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை. 

இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்றாலும், தனக்கு உதவா விட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே என கருதினார். 

இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அடைந்தார். பொது நலமுள்ளவர்களு வாழ்வில் அனைத்தும்  கிடைக்கும்,'' என்றார்..

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...