Showing posts with label திருவண்ணாமலை அருணாசல புராணம் வச்சிராங்கத பாண்டியச் சருக்கம். Show all posts
Showing posts with label திருவண்ணாமலை அருணாசல புராணம் வச்சிராங்கத பாண்டியச் சருக்கம். Show all posts

Thursday, February 8, 2024

திருவண்ணாமலை அருணாசல புராணம் வச்சிராங்கத பாண்டியச் சருக்கம்

 திருவண்ணாமலை அருணாசல புராணம் 

வச்சிராங்கத பாண்டியச் சருக்கம்🌹

🔥அவன் அருளாலே அவன் தாள் பணிந்து🌺  பக்தியுடன்🙏 ...மாங்காடு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் ....       வச்சிராங்கத பாண்டியன் 

சந்தனக் காட்டு மணம் போல் தமிழ் மணத்தில் நெடுநாள் திளைத்து ஆடும் மயிலும் நடக்கும் அன்னமும் வருவது போல வாடையும் தென்றலும் புகும் நாடு வையை வளநாடு. 

விரும்பும் கண் கொண்ட மகளிர் இடையை மின்னல் என மருண்டு தாழை பூக்கும். மான் போன்ற மகளிர் கூந்தலை இருள் என்று எண்ணி மௌவல் மலரும். - நாடு. அந்த வளநாட்டின் அரசன் தேவேந்திரன் முடி சிதறும்படி தன் வளைதடி வீசியவன். தன் வெற்றி கயிலாயன் நெற்றிக்கண் போல் விளங்கும்படித் தன் மீன் கொடியை இமயத்தில் எழுதி வைத்தவன். 

காமன் போல் அழகு, மறைகள் பலவும் தெளிந்த அறிவு, சிவன்மீது பத்தி, மகளிர் விரும்பும் தோள் ஆகியவற்றை உடையவன் வையை வளநாடனாகிய வச்சிராங்கத பாண்டியன் 

வான், மண் என்னும் ஈருலகிலும் புகழ் பெற்றவன். சிவன் தலைமாலை மணத்தை முர்ந்துகொண்டு மனையறம் பேணுபவன்.

தங்கள் குலத் தலைவன் நிலாவையும், சிவன் அடிகளையும் தலையில் சூடினான். நன்றி அறிதலில் இணையில்லாதவன். 

10 திசையிலும் புகழ் பெற்றவன். சங்கு ஈன்ற முத்துக்கள் கிடக்கும் முற்றம் கொண்டவன்.  தன் வெற்றிக் கடலில் கப்பல் ஓட்டுபவன். 

கடலின் பவளக்கொடி போன்றவர் அவன் குடிமக்கள் (செம்மை திரம்பாதவர்)

எங்கும் நலம் பெற உலகை ஆள்பவன். அவன் பெயர் வச்சிராங்கதன்.

போரில் தோற்ற அரசர்களையும், கொடையில் தோற்ற மேகத்தையும் சிறையில் வைத்தவன். சித்திராங்கதன் வேட்டையாட விரும்பி கரி, பரிப் படைகளுடன் வடதிசை நோக்கிப் புறப்பட்டான். 

நிலவைக் கண்டு இருள் ஓடுவது போல, திங்கள் குலத்தவனைக் கண்டு கரிய நிற யானைகள் ஓடின. அம்புலி குலத்தவன் அம் புலிகளைக் கொன்றான். ஆறில் ஒரு பங்கு கடமை (வரி) வாங்குபவன் ஆறில் (வழியில்) கடமை மாடுகளைக் கைப்பற்றினான். அரசன் சேரமானைச் சிதைத்தவன் சேரும் மான்களைச் சிதைத்தான். தமிழ்ச்சங்கத்தில் கலை வளர்த்தவன் கலைமான்களை வளைத்துக் கொண்டான். 

நாற்படையை ஓட்டியவன் நாவி என்னும் புனுகுப்பூனையைத் தொடர்ந்தான். 

அந்தப் புனுகுப்பூனை அருணாசல  மலையை வலம்வருவது போல் ஓடிற்று. குதிரையைத் துரத்தினான். பூனை அவன் கண் முன் விழுந்தது. 

பச்சைநாவி என்னும் நஞ்சு பருகியவர் போல விழுந்த அந்தப் பூனை மலையை வலம்வந்ததால் தன் உடலை விட்டு, வித்தியாதரன் உருவம் கொண்டு விமானத்தில் ஏறி வானுலகம் சென்றது 

குதிரை கால் இடறி விழுந்தது. அரசனும் விழுந்தான். மலையை வலம்வந்ததால் குதிரை ஓவியராலும் எழுத முடியாத உருவம் கொண்டவனாக மாறி பூ விமாத்தில் ஏறி வானுலகம் சென்றது. அவன் யானை போன்றவன். இலங்கை அரசன் இராவணன் கயிலாய மலை அடியில் விழுந்தது போல அண்ணாமலை அடிவாரத்தில் விழுந்தான். விலங்கின் பின்னே ஓடினால் யார்தான் விழமாட்டார்கள்? 

வானுலகம் செல்லுமுன் பூனையும், குதிரையும் காந்திசாலி, கலாதரன் என்பவர்களாக மாறினர். அவர்கள் பாண்டியனுக்கு நண்பர் ஆயினர். காந்திசாலி, கலாதரன் இருவரும் பாண்டியனிடம் வந்து  கலங்கினான். பாண்டியன் அவர்களை அஞ்சவேண்டாம் என்று கையமர்த்தினர் 

நீங்கள் இங்கு வந்தது நீதியே. உங்கள் துயருக்குக் காரணம் என்ன என்று பாண்டியன் வினவியபோது கலாதரன் சொல்கிறான். 

இவன் பெயர் காந்தசாலி. என் பெயர் கலாதரன். நாங்கள் இருவரும் நண்பர்களாக விளையாடினோம். 

மேருமலைச் சாரலில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஊழ்வினை எங்களைத் தொடர்ந்தது 

துருவாச முனிவர் சினம் மிக்கவர். அவர் ஊற்றிய நீரால் பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் நுழைந்தோம். 

அப்போது காந்திசாலி சில பூச்செடிப் புதர்களை மிதித்தான். நான் அதில் இருந்த பூக்களைப் பறித்தேன். முனிவர் கண்டார். சினம் கொண்டார். 

அவர் முகத்தில் முத்தாரம் போல் வியர்வை. பவளம் போன்ற அவரது இதழ்கள் துடித்தன. உடல் நடுக்கத்தால் நழுவும் மேலாடையை அடிக்கடி உயர்த்திக்கொண்டார். விசித்திரமான அனல் பொறிகள் உடலிலிலிருந்து தெறித்தன. அவர் சொன்னார். 

செங்கதிர்,  தென்றல், நத்தை, தேன் உண்ணும் வண்டு ஆகியனவும் இந்தப் பூங்காவில் நுழைய முடியாது. இதில் உதிர்ந்த இலைகள் காய்வதில்லை. இப்படிப்பட்ட நந்தவனத்தில் ஒருவர் நுழைய முடியுமா 

காளை ஊர்தியான் சிவனுக்குப் பூசை செய்யும் மலரை, என் வனத்தில் புகுந்து பறித்தீர். பாவிகளே என் கோபக் கனலுக்கு ஆளானீர். செடியை மிதித்த காந்திசாலி குதிரையாகவும், மலரைப் பறித்தவன் (நான்) நாவிப் பூனையாகவும் ஆவீர்க்களாக என்று சபித்தார். முனிவனைப் போற்றிப் புகழ்ந்து இந்தச் சாபம் நீங்கும் காலம் எப்போது என்று வினவினோம். 

சோணாசலம் என்னும் திருவண்ணாமலையை வலம்வந்தால் சாபம் தீரும். பாண்டியன் ஒருவன் உங்களை அம் மலையை வலம்வரச் செய்வான் என்றும் முனிவர் கூறினார். 

அத்துடன் அந்த முனிவர் ஒரு கதையும் சொன்னார். சிவன் தன்னிடம் இருந்த நீண்ட காட்டுப் பழம் ஒன்றைத் தன் பிள்ளைகள் இருவரும் தனக்குத் தரும்படிக் கேட்க, உங்களில் யார் இந்த உலகை முதலில் சுற்றிவருகிறாரோ அவருக்குத் தருவேன் என்று கூறினார். கந்தன் தன் மயிலின்மீது ஏறி உலகை வலம்வரச் சென்றான். ஆனைமுகன் எல்லோர்க்கும் தந்தையான தன் தந்தையை வலம்வந்து பழத்தை வரங்களுடன் பெற்றுக்கொண்டான். 

விரைந்து உலகைச் சுற்றிவந்த வேலவன் தனக்குக் கனியைத் தருமாறு வேண்டினான். சிவன் நடந்ததைக் கூறினார். ஏழு உலகங்களை வலம்வந்தாலும், பல பல  தவங்கள் செய்தாலும் தன் அடிகளை வலம்வந்ததற்கு இணை ஆகாது என்றும் கூறினார். 

சிவன் முருகனிடம் சொல்கிறான். நான் இந்தச் சிவந்த மலை உருவில் இருக்கிறேன். என்னை வலம்வந்தோர் பிரமன், வீட்டுணு, நீ, உமை, நான் ஆகியோரைக் காட்டிலும் அதிக பேறு பெற்றவர் என்றான்.

என் மேனியாகிய இந்த மலைக்குத் தேவர்கள் பூசை செய்யமாட்டார்கள். இதனை வலம்வருதலே எனக்குச் செய்யும் பூசை. இதனை வலமவரக் கூசுபவர் எனக்குத் தீமை செய்தவர் ஆவார் என்று சிவன் முருகனிடம் கூறினான். 

முருகனுக்குச் சிவன் சொன்னதைச் சொல்லிவிட்டு துருவாச முனிவன் சென்றான். அதன்படிக் குதிரை, பூனையாகப் பிறந்த நாங்கள் தென்னாடனாகிய உன்னால் இந்த மலையை வலம் வந்தோம். சாபம் நீங்கிப் பண்டைய வடிவம் பெற்றோம் - என்று கூறிவிட்டு விமானத்தில் ஏறினர். 

எங்கள் ஆவி உன்னைத் துன்புறுத்தியது. நீ இந்த மலையை வலம் வந்ததால் அந்தத் துன்பமும் நீங்கும் - என்று காந்திசாலி, கலாதரன் இருவரும் பாண்டியனிடம் சொல்லிவிட்டுத் தங்களுடைய ஊருக்குச் சென்றனர். 

மன்னன் சென்ற குதிரைக் காலடிச் சுவடுகளின் வழியில் அவனைத் தேடிக்கொண்டு வந்த அவன் படைகள் அவனிடம் வந்து சேர்ந்தன. பாண்டியன் துன்பம் தீர்ந்தது. 

வச்சிராங்கத பாண்டியன் அரதனாங்கதன் (இரத்தினாங்கத பாண்டியன்) என்னும் தன் மகனை அழைத்து முன்னொரு காலத்தில் இராமனுக்காகப் பரதன் ஆண்டது  போல நாட்டை ஆளும்படிப் பணித்தான். அவனும் அவ்வாறே சென்று பாண்டிய நாட்டை ஆண்டான். 

வச்சிராங்கதன் தன் மூதாதையர் வழியில் வந்த செல்வம், கடலில் பெறும் முத்தின் செல்வம், பகைவர் பணிந்து தந்த திறை ஆகியவற்றை சிவன் பூசைக்குச் செலவிட்டான். 

பின்னர் கவுதம ஆச்சிரமத்துக்கு அருகில் ஒரு பன்னசாலை அமைத்து அதில் தங்கிக்கொண்டு மலைவலம் வந்தான். (கைதவர் = சிவன், வஞ்சகர்) அவன் எதிரில் சிவன் தோன்றவில்லை. 

தலையில்  பிறை, அருள் பொழியும் விழி, மறை மிடறு, 4 புயம், கயில் மான், கணிச்சி, விடைமேல் அமர்ந்த கோலம் ஆகியவற்றைக் கண்டு களிப்பது என்றோ என ஏங்கினான். 

அண்ணாமலை என்னும் பெயர் உடையவன். விடை கொண்டவன். குளுமையாய் இருப்பவன். எம்மை ஆளாகக் கொண்டவன். நுதலில் கண் கொண்டவன். வினைப்பயன் நீங்காதவரின் அறிவுக்கு எட்டாத ஒளி கொண்டவன். குழந்தை பால் உண்ணாத முலை கொண்டவளின் தலைவன் - என்றெல்லாம் சிவனைப் போற்றிப் புகழ்ந்தான். 


காலால் நடந்து மலையை வலம் வராமல் குதிரை மேல் வந்து பாவம் செய்தேன். இந்தத் தீவினையைத் தீர்ப்பாயாக - என்றெல்லாம் வேண்டினான். 


சிவன் பாண்டியன் முன் தோன்றினார். வச்சிராங்கத பாண்டியனே! நீ முன் பிறவியில் தேவனாக இருந்தாய். அப்போது உன் வச்சிரப் படையால் என்னைத் தாக்கினாய். அதன் வினைப்பயனால் மனிதனாகப் பிறந்தாய். என் மலையை வலம் வந்ததால் பொன்நாடு பெற்றுப் பொலிவுடன் வாழ்வாயாக - என்று வரம் கொடுத்துவிட்டு மறைந்தார். 

திருவண்ணாமலையை நினைப்பவர்கள் சாவில் துன்புறார். சிவன் வடிவமாக மாறுவர். - என்று சிவன் கூறினார். 

இதனை அறிந்தவரும், பெரியவர்களுடன் சேர்ந்து படித்தவரும் சிவ சாயுச்சியம் பெறுவார்கள். மூன்று காலமும் படிப்பவர்களும், இதன் பொருளைப் பகிர்ந்துகொண்டவர்களும் சிவகதி அடைவர் என்பது வியப்பன்று. 

நூல் - எல்லப்ப நாவலரால் பாடப்பட்ட (திருவண்ணாமலை) அருணாசல புராணம் வச்சிராங்கத பாண்டியச் சருக்கம்

அண்ணாமலையாருக்கு அரோகரா

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...