Wednesday, February 23, 2022

ராமசீதா புராணத்தில் வரும் மாரீசன்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், மேலசெம்மங்குடி சிவன்கோயில்.

Melasemmangudi sivan temple 

பாபநாசம்- திருக்கருகாவூர் சாலையில் உள்ள வெட்டாற்றினை தாண்டாமல் அதன் மேற்கு நோக்கி செல்லும் அதன் வடகரையில் நான்கு கிமி தூரம் பயணித்தால் கோடுகிழி எனும் கிராமம் உள்ளது. அங்கிருந்து வடக்கில் இரண்டு கிமி தூரத்தில் மேலசெம்மங்குடி உள்ளது. சுற்றிலும் பசுமையான நெல் வயல்கள், அதில் ஆங்காங்கே நின்றிற்கும் மரங்களில் குடியிருக்கும் மயில்களின் அகவல்களும், தவிட்டுகுருவிகளின் சொல்லாடல்களும் நம்மை பரவசப்படுத்துகின்றன.  

ராமசீதா புராணத்தில் வரும் மாரீச மானை பிடிக்கும் படலத்தில் இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது மாரீசன் எனும் மான் மேய்ந்த ஊர் பொன்மான் மேய்ந்த நல்லூர். மான்தங்கியஅகரம்(மாதாகரம்), மான்நல்லூர்(மானல்லூர்), புள்ளமான்குடி (புள்ளமாங்குடி), மான்மேய்ந்ததிடல்(மட்டியாந்திடல்), பெருமான் குடி(பெருமாங்குடி),பெருமான்கள் நல்லூர் (பெருமாக்கநல்லூர்) மான் குண்டு(மாங்குண்டு), மான்தங்கிய கரை (மாதங்கரை), மாயமான்பேட்டை(நாயகன்பேட்டை) மான்குடி (மாங்குடி) ராமன் சோர்ந்த இடம் சோர்ந்தமங்கலம் (சோத்தமங்கலம்) மானை வளைத்த மங்கலம் (வலத்தமங்கலம்)லட்சுமணன் பர்ணசாலையினை தாண்டி சீதை வரக்கூடாது என ஒரு கோடு கிழிக்கிறார். அந்த இடம் தான் இந்த கோடுகிழி. 

அவ்வகையில் இவ்வூர் பெயர் செம்மான்குடி தற்போது மேலசெம்மங்குடி.

சிறிய கிராமம் ஊரின் மையத்தில் ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் ஐயனார் கோயிலும், ஒரு சிவன் கோயிலும் இருந்தனவாம். சிவாலயம் முற்றிலும் சிதைந்துவிட லிங்கம் மட்டுமே தற்போது உள்ளது. கோவை அரன்பணி அறக்கட்டளை மற்றும் கிராமத்தினரின் உதவியுடன் புதியகோயில் உருவாகிறது. பெரிய லிங்கமூர்த்தி. ஆதலால் அவருக்கு கோயிலும் அப்படித்தானே அமையவேண்டும். உயர்ந்த அதிட்டானம் அதன்மீது நெடிதுயர்ந்து நிற்கும் விமானம். கஜபிருஷ்ட வடிவில் அமைகிறது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் வடபாகத்தில் சண்டேசர் சன்னதியும் கட்டப்பட்டு வருகிறது. நகாசு வேலைகள் மற்றும் முகப்பு மண்டபம் இவை அமைந்துவிட்டால் உடன் குடமுழுக்கு தான். 

வயிற்றுக்கு உணவிடும் கிராமத்திற்கு நாம் செய்யும் கைம்மாறு அவர்கள் ஆன்மீக நாட்டத்துடன் வாழ கிராம சிவாலயங்களை புதுப்பித்து கொடுத்தலே ஆகும். 

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.

காஞ்சி மகானின் அபூர்வ நிகழ்ச்சிகள்

*காஞ்சி மகான்* ---- *முதல்வர் எம்.ஜி.ஆர். சந்திப்பில்*…. 

காஞ்சி மகானின் சங்கர மடத்தில் அவ்வப்போது அபூர்வ நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்களைத் தான்  இப்போது படிக்கப் போகிறீர்கள். இதைச் சொன்னவர் திரு. பிச்சாண்டி ஐ.ஏ.எஸ். அவர்கள்.  

திரு. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது அவருடைய நேர்முக உதவியாளராக பிச்சாண்டி இருந்தார்.  அப்போது உடலில் ஏற்பட்டிருந்த கோளாறுகள் காரணமாக திரு. எம்.ஜி.ஆர். அவர்களால் சரியாகப் பேச முடியவில்லை.  திரு. எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அப்போதெல்லாம் ஆன்மீக விஷயங்களில் உறுதுணையாக இருந்தவர் ‘இதயம் பேசுகிறது’  மணியன் அவர்கள்.  

காஞ்சி மகானை நேரில் பார்க்க வேண்டும் என்று முதல்வர் தமது விருப்பத்தைத் தெரியப்படுத்திய உடன்,  மணியன் உடனே அதற்கு செயல்வடிவம் கொடுத்து முதல்வரையும் அவரது துணைவியார் ஜானகி அம்மாளையும் அழைத்துக் கொண்டு,  காரில் காஞ்சி மாநகருக்குப் புறப்பட்டுவிட்டார்.  ஆன்மீக விஷயமாயிற்றே,  தனது தேவை அங்கே இருக்காது என்று நினைத்த பிச்சாண்டி அவர்கள் முதல்வருடன் செல்லத் தயங்கினார்.  ஆனால் முதல்வர் விடவில்லை.  தனது உதவியாளர் எந்த சந்தர்ப்பத்திலும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து, அவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார். 

ஏற்கனவே முதல்வர் அங்கே வரும் விஷயம் ஸ்ரீ மடத்திற்குத் தெரியப்படுத்தி விட்டதால், மகான் சற்றே உடல் நலம் குன்றியிருந்தாலும் முதல்வரைப் பார்க்க அனுமதி அளித்திருந்தார்.  மகானுக்கு உடல் நிலையில் ஏதோ மாற்றம் என்பதைக் கேள்விப்பட்டுத் தான் முதல்வர் இந்தச் சந்திப்புக்குத் திட்டமிட்டார். 

மகான் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே சற்று தூரத்தில் முதல்வர் தன் துணைவியாரோடும், மணியனோடும் அமர்ந்திருந்தார்.  செயலாளர் பிச்சாண்டியோ சற்று தள்ளி — போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்கு அப்பால் — இருந்தார்.  இதைக் கவனித்த முதல்வர் திரும்பி, அவரை சைகை காட்டி உள்ளே வரும்படி அழைத்தார்.  

திரு. பிச்சாண்டி உள்ளே போக அடி எடுத்து வைத்த போது அருகே இருந்த காவல்காரர் அவரைத் தடுத்து நிறுத்தினார்.  முதல்வர் வரச் சொல்கிறார் என்று அவர் சொன்ன பின்னால் தான், காவல்காரர் அவரை உள்ளே அனுமதித்தார்.  பிச்சாண்டியைத் தன் அருகே அமர்த்திக் கொண்ட முதல்வரைப் பார்த்து மகான்,  “உங்கள் பி.ஏ. வா ?”  என்று கேட்க  ‘ஆமாம்’  என்று தலையை ஆட்டினார் முதல்வர்.  அங்கிருந்தபடியே தன் வணக்கத்தைப் பிச்சாண்டி தெரிவிக்க, தனது திருக் கரத்தை உயர்த்தி அவரை ஆசீர்வதித்தார் காஞ்சி மகான். 

பிறகு முதல்வர் மகானைப் பார்த்து,  “உங்கள் தேகம் எப்படி இருக்கிறது ?”  என்று கேட்டார். 

தேகம் என்று அவர் கேட்டது மகானுக்கு,  ‘தேசம்’  என்பதுபோல் ஒலிக்க, 

“தேசத்திற்கு என்ன,  நன்றாகத் தானே இருக்கிறது”  என்றார் மகான். 

முதல்வர் பிச்சாண்டியைத் திரும்பிப் பார்க்க அவர் மகானிடம் விளக்கினார். 

“தங்களது தேகம் எப்படி இருக்கிறது என்று முதல்வர் கேட்கிறார்” 

“அதற்கென்ன,  நன்றாகத்தான் இருக்கிறது”  என்றார் மகான் லேசாகப் புன்முறுவல் செய்தபடி.  ஆனால் அப்போது திடீரென இவர்கள் பேச்சில் குறுக்கே பாய்ந்த மடத்து சிப்பந்திகள், 

“பெரியவாளுக்கு உடம்பு ரொம்ப முடியல்லே.  மருந்தே சாப்பிட மாட்டேங்கிறார்.  முதல் மந்திரி தான் சொல்லணும்”  என்றார்கள். 

“சொல்லுங்கள்,  நான் என்ன செய்ய வேண்டும் ?”  முதல்வர் மகானிடம் கேட்கிறார்.  அப்போதும் அவர் தன் உடம்பைப் பற்றிப் பேசவில்லை. 

“எனக்கு நீங்கள் மூன்று காரியங்களைச் செய்வதாக வாக்குறுதி தர வேண்டும்”  என்றார். 

“சொல்லுங்கள்,  செய்கிறேன்”.  முதல்வர் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்கிறார். 

“முதல் விஷயம் – தமிழ் நாட்டிலே பல கோவில்கள்ளே விளக்கே எரியறது இல்லை.  விளக்கு எரிய நீங்கள் ஏற்பாடு பண்ணனும்.”  முதல்வர் தலையாட்டுகிறார். 

“இரண்டாவதாக,  பல கோவில்கள் மிக மோசமான நிலையில் இருக்கு.  அதையெல்லாம் ஒழுங்குபடுத்தி கும்பாபிஷேகம் நடத்தணும்.” 

“செய்துவிடுகிறேன்” 

மூன்றாவது விஷயம் என்ன என்பதைச் சொல்ல மகான் சற்றுத் தயங்குகிறார். 

முதல்வர் அவரது முகத்தை உற்றுப் பார்த்த வண்ணம் இருக்கிறார். 

“நாகசாமியை மன்னிச்சுருங்கோ”  என்கிறார்.  

நாகசாமி யார் என்பதைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். 

பழங்கால கோவில்கள், சின்னங்கள் போன்றவைகளைப் பற்றி ஆராய்ந்து புதிய புதிய தகவல்களை சேகரித்து வந்த ஒரு அதிகாரி.  தொல்பொருள் ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக அவர் கண்டுபிடிக்கும் பல பழமையான விஷயங்களை, நேரடியாக பத்திரிகைகளுக்குச் செய்தியாகத் தொகுத்துக் கொடுத்து விடுவார்.  பத்திரிகைகளில் பார்த்துத்தான் முதல்வரே அவைகளைப் பற்றி அறிந்து கொள்வார்.  முதல்வருக்கு இது தம்மை உதாசீனப் படுத்தும் செயல் என்கிற எண்ணம்.  அரசுக்குச் சொல்லி விட்டுத்தானே அதை வெளியில் சொல்ல வேண்டும்.  இதனால் முதல்வர் நாகசாமியை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துவிட்டார்.  அதை நாகசாமி மகானிடம் சொல்லவும் இல்லை.  முதலமைச்சரிடம் எதுவும் கேட்கவும் இல்லை….. 

முதல்வர் ஒரிருநிமிடம் மௌனம் சாதிப்பதைக் கண்ட மகான் பேசினார்: 

“நாகசாமி பல கோவில்களைப் பத்தி விவரமா ஆராய்ச்சி செய்து எவ்வளவோ விஷயங்களை நாட்டுக்காகத் தெரியப்படுத்தி இருக்கார்.  அவர் ஆராய்ச்சி பண்ணலேன்னா பல விஷயங்கள் வெளியிலே தெரியாமலேயே போய் இருக்கும்.” 

‘மன்னித்து விடுகிறேன்’  என்பது போல் முதல்வர் தலையை ஆட்டினார். 

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ்நாட்டுக் கோவில்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்பட்டன என்பதுடன்,  தன் உடல் நிலையைப் பற்றியே கவலைப் படாமல், மகான் எதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டார் என்பதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!


தர்மசங்கடம்

 நமக்கு ஒரு காரியத்தைச் செய்வதற்கு இஷ்டம் இல்லை. ஆனால் செய்துதான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறது. அப்படி என்றால் அப்படிப்பட்ட ஒரு நிலைமை தான் நாம் தர்மசங்கடம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது தவறு என்கிறார் ஒரு ஆன்மீகப் பேச்சாளர். 

தர்மசங்கடம் என்பது மனுஷன் எத்தனையோ தர்மங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. சில சமயங்களில் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு தர்மங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்தச் சமயத்தில் அவன் இந்த இரண்டு தர்மத்தில் எந்த தர்மத்தை செய்வது எந்த தர்மத்தை விடுவது என்று தவிக்கிறான்
அதுதான் தர்மசங்கடம்.

 இராமாயணத்தை எடுத்துக்கொண்டால் தசரதனுக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்படுகிறது.

 அதாவது ஒரு பக்கம் கைகேயிக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற பரதனுக்கு முடிசூட்ட வேண்டும். இன்னொருபக்கம் அவனுடைய குல மரபுப்படி மூத்தவனான இராமனுக்குத்தான் பட்டம் சூட்ட வேண்டும். இப்போது என்ன செய்வது சத்திய தர்மத்தை காப்பாற்றுவதா? மரபு தர்மத்தை காப்பாற்றுவதா? தசரதன் தவிக்கிறான். இதுதான் தர்மசங்கடம்.

 கடைசியில் சத்திய தர்மத்தை காப்பாற்றும் முடிவுக்குத்தான் தசரதன் வருகிறான். இருந்தாலும் அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தசரதன் சத்திய தர்மத்தை காப்பாற்ற போக அதுவே அவனுடைய மரபு தர்மத்தையும் காப்பாற்றி விடுகிறது. எப்படி தெரியுமா தான் முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் பரதனுக்கு வராமலே செய்துவிடுறது அது.

அதனாலேயே தசரதன் ஒரே சமயத்தில் சத்தியத்தையும் காப்பாற்றினான். மரபையும் காப்பாற்றினான். 

" வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் அவன் " இது தசரதனை பற்றி வாலி சொல்கிற வார்த்தை்

 அதனால் நமக்கெல்லாம் ஒரே நேரத்தில் பல தருமங்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்து அதிலேயே எந்த தர்மத்தை செய்வது என்கின்ற சங்கடம் வந்தால் குழப்பிக்கொள்ளக்கூடாது. சத்திய தர்மத்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் எல்லா தர்மங்களையும் விட சத்தியம் தான் உயர்ந்தது.

 பீஷ்மருக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர் சத்தியத்தை தான் காப்பாற்றுவேன் என்று உறுதியாக இருந்தார். வாழ்நாள் பூராகவும் பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் பீஷ்மர். ஆனால் அவருடைய ஆச்சாரியார் பரசுராமரோ அம்பையை கல்யாணம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும் என்கின்றார்.

 ஒரு பக்கம் சத்தியம். இன்னொரு பக்கம் குருவின் கட்டளை. எதைச் செய்வது இவர் சத்தியத்தை தான் காப்பேன் என்று திடமாக இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது கடைசியில் என்ன ஆனது வாய்மை தான் உயர்ந்தது. பரசுராமர் தோற்றுப்போனார்.

எனவே தர்மசங்கடம் ஏற்பட்டால் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும். இந்தத் தெளிவு நம்முள் இருந்தால் எந்த குழப்பங்களும் நம்மை அண்டாது.

குற்றாலநாதர் கோவில், குற்றாலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

குற்றாலநாதர் கோவில், குற்றாலம்

சிவஸ்தலம் பெயர் குற்றாலம்

இறைவன் பெயர் குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர்.
இறைவி பெயர் குழல்வாய் மொழியம்மை

பதிகம் சம்பந்தர் - 2
எப்படிப் போவது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மி. தொலைவிலும், செங்கோட்டையில் இருந்து 7 கி.மி. தொலைவிலும் குற்றாலம் சிவஸ்தலம் உள்ளது. தென்காசியிலிருந்தும் செங்கோட்டையிலிருந்தும் அடிக்கடி பேருந்துகள் உள்ளன. மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்தும் தென்காசி செல்ல பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. ரயிலில் செல்ல விரும்புவோர் சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு வண்டியில் செங்கோட்டை சென்று அங்கிருந்து பேருந்தில் குற்றாலம் செல்லலாம்.

ஆலய முகவரி அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்
குற்றாலம் அஞ்சல்
திருநெல்வேலி மாவட்டம்
PIN - 627802

திருக்குற்றால தல புராண வரலாறு: கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற போது, அங்கு கூடியிந்தவர்களின் பாரம் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயரத் தொடங்கியது. பூமியின் நிலையை சரிப்படுத்த சிவபெருமான் அகத்தியரை தென்திசையிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்புகிறார். அகத்தியருக்கு அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார். அகத்தியரும் பொதிகை மலை வந்து அருவியில் நீராடிவிட்டு அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றார். ஆனால் அக்கோவில் ஒரு வைணவக் கோவில். அகத்தியர் வைணவர் இல்லை என்று கோவிலுக்குள் செல்ல தடை விதித்தனர். மிகுந்த கவலையுடன் அருகிலுள்ள இலஞ்சி சென்று அங்குள்ள முருகரை வழிபட்டார். முருகப் பெருமான் அகத்தியரை வைணவர் வேடத்தில் கோவிலுக்குள் செல்லும் படியும், உள்ளே சிவனின் திருமணக் கோலத்தைக் காணலாம் என்றும் கூறினார்.
கோவிலுக்குள் அவ்வாறே சென்ற அகத்தியர் விஷ்ணு சிலாவுருவில் கருவறையில் இருப்பதைக் கண்டார். கண்களை மூடிக்கொண்டு சிவனை பிரார்த்தனை செய்பவாறு அச்சிலையின் தலையில் தனது கையை வைத்து அழுத்த, விஷ்ணுவின் சிலை குறுகி ஒரு சிவலிங்கமாக மாறியது. அகத்தியருக்கு சிவபார்வதி திருமணக் காட்சியும் கிடைத்தது. அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதால் லிங்கத் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்த அடையாளம் இருப்பதைக் காணலாம். விஷ்ணுவின் சிலாரூபம் லிங்கமாக மாறியதைப் போல ஸ்ரீதேவியை குழல்வாய் மொழியம்மை ஆகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றியதாகவும் ஐதீகம்.
கோவில் அமைப்பு: கோயில் மலைகள் சூழ்ந்த இயற்கையழகு வாய்ந்த சூழலில் சுமார் 5000 அடி உயரம் கொண்ட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைத்தொடர் திரிகூடமலை என்றழைக்கப்படுகிறது. ஆலயம் சுமார் 3.5 ஏக்கர் திலபரப்பளவில் நான்கு வாயில்களோடு சங்கு வடிவத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதை திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து காணலாம். திரிகூடநாதர் என்றும் குற்றாலநாதர் என்று அழைக்கப்படும் இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குழல்வாய் மொழியம்மை சந்நிதியும் சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. பிரகார வலமாக வரும்போது அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பராசக்தி பீடம் உள்ளது. மிகக் குறுகலான பிராகாரத்தை வலம் வரும் போது, அதிகார நந்தி, சூரியன், கும்பமுனி, எதிரில் கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர், சப்தகன்னியர் முதலிய சந்நிதிகளைத் தரிசிக்கலாம். பஞ்சபூதலிங்கங்களும், நன்னகரப்பெருமாள், சுப்பிரமணியர், சனிபகவான் சந்நிதிகளும் உள்ளன.
இத்தலத்திலுள்ள தீர்த்தங்களில் வடவருவியும், தேனருவி என்ற சிவமதுகங்கையும் சிறப்புடையவை. வடவருவியில் மூழ்கினாரது பாவம் கழுநீராகப் பிரிந்து ஓடும் என்பது இத்தல ஐதீகம். இத்தலத்தின் தலவிருட்சமாக பலாமரம் உள்ளது. இந்த பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், லிங்கத்தின் வடிவில் இருப்பது பார்த்து பரவசப்பட வேண்டிய ஒன்றாகும்.
குற்றாலநாதர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. குற்றாலநாதர் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் தனிக்கோயிலாக அமைந்திருக்கிறது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் இருக்க நடுவே சித்திர சபை அமைந்திருக்கிறது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும். மரக்கோவிலின் கூரை சிதம்பரத்துக் கோவிலின் கூரையை நினைவூட்டுகிறது. இந்த சித்திர சபையில் இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இந்த கூடத்தின் நடுவே ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து எல்லோருக்கும் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் அனைத்தும் சித்திரங்களாக அழகுடன் தீட்டப்பட்டிருகின்றன. மற்றும் உள்ள பல சித்திரங்களைக் காணச் சென்றால் எதைப் பார்ப்பது எதை விடுவது என்ற பிரமிப்பைத் தூண்டும் வகையில் இந்த வண்ண ஓவியங்கள் அமைந்திருக்கின்றன. கிழக்கு நோக்கியுள்ள இந்த சித்திர சபையின் உள்ளே இருக்கும் நடராச சிற்பம் தெற்கு நோக்கியுள்ளது.

அம்மணி அம்மாள்.திருவண்ணாமலை

இந்த சித்தர் பாட்டியை பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். 

சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் கோபுரமாய் உயர்ந்த அம்மணி அம்மாள்.

பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அம்மணி அம்மாள் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம்.

ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.

அதுவும் 18-ம் நூற்றாண்டில் 

ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.

அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். 

பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். 

குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். 

பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். 

அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.

அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.

ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.
தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.

இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். 

ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.

குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது. தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.

அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.

பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார். மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.

அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.

இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார். மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.

பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.

அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார். உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார்.

மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.

171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.

திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார். திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது. மனக் கவலைகளை விரட்டும் மகத்துவம் அந்த ஜீவ சமாதி திருநீறுக்கு உண்டு.

அம்மணி அம்மாள் ஈசனோடு கலந்து சுமார் 150 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு அருவமாக வந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். குறிப்பாக கிரிவலம் வரும் பக்தர் களிடம் அவர் பேசுவதாக, அறிவுரைகள் சொல்வதாக நம்பப்படுகிறது. அவர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்தாலே மனம் லேசாவதை உணரலாம்.
ஓம் ஸ்ரீ அம்மணி அம்மன் தாயே நமஹ
ஓம் ஸ்ரீ அம்மணி அம்மன் தாயே போற்றி

Ammani Amman Jeevasamathi
Girivalam Rd, Opp Eesaanya Lingam, Mathalangulam,
Tiruvannamalai, Tamil Nadu 606601, India

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...