Showing posts with label வெள்ளியங்கிரி மலை பயணம். Show all posts
Showing posts with label வெள்ளியங்கிரி மலை பயணம். Show all posts

Thursday, March 21, 2024

வெள்ளியங்கிரி மலை பயணம்

🔱வெள்ளியங்கிரி மலை பயணம் 🔱

மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலை, ஏழு மலைகளை உள்ளடக்கியது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில்,ஏழாவது மலையின் உச்சியில், சுயம்புலிங்கமாய் வீற்றிருக்கிறார் நம் வெள்ளியங்கிரி ஆண்டவர்.

 பொதுவாக மற்ற தெய்வங்களை தரிசிக்க நாம் முழுமனதாக வேண்டினால் போதும். ஆனால், சிவபெருமானை தரிசிக்க அந்த சிவபெருமான் அருள் புரிந்தால் மட்டுமே முடியும் என்பார்கள். அது 100க்கு 200% பொருந்தும். உடல் வலிமை மனவலிமை மற்றும் ஈசனின் அருள் இருந்தால் மட்டுமே ஏழாவது மலையின் உச்சியை அடைய முடியும்.

 ஏழாவது மலையின் உச்சி அடைய நாம் பயணிக்க வேண்டிய தூரம் வெறும் 6km மட்டுமே. ஆனால் அது சுலபம் அல்ல.
இந்த 6km தூரத்தை கடக்க பொதுவாக 8-ல் இருந்து 10 மணி நேரம் ஆகும். மீண்டும் கீழே இறங்க 6ல் இருந்து 8 மணி நேரம் ஆகும்.
 முடிந்த அளவுக்கு பழங்களை எடுத்துச் செல்ல வேண்டும் .குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு torchlight மிக மிக அவசியம். 

முதல் மலை:

அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரின் அருளை பெற்று, மூங்கில் தடியின் துணை கொண்டு ஆரம்பிக்கிறது முதல் மலை.
ஏழு மலைகளில் மிகவும் கடினமானது இந்த முதல் மலையும் ஏழாவது மலையும் தான்.இம்மலை மிகவும் செங்குத்தாக படிக்கட்டால் ஆனது. முதல் மலை மட்டுமே 1½ km.
முதல் மலையே நம்மை மிகவும் சோதித்து விடும். சிவபெருமான் எப்போதும் தன் பக்தர்களின் நம்பிக்கையை சோதிப்பார். அப்படியான சோதனைதான் இந்த முதல் மலை.
பலமாக மூச்சு இரைக்கும். நமது உடல் தகுதியின் மேல் நமக்கே சந்தேகம் வர வைக்கும். முதல் மலையில் எங்கும் தண்ணீர் கிடைக்காது. கடைகளும் இருக்காது. ஆங்காங்கே படிக்கட்டுகளில் இரு பக்கமும் தர்பூசணி பழம் விற்று கொண்டிருப்பார்கள். அது மட்டுமே கிடைக்கும்.
அனைவரும் இரண்டு அல்லது மூன்று முறையாவது திரும்பி போய் விடலாமா என்ற எண்ணம் எழாமல் இருக்காது. அந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு உடல் உறுதிக்கு தேவையான ஓய்வும் நீர்ச்சத்தும் பெற்றுக்கொண்டு. மன உறுதிக்கு "ஓம் நமசிவாய" என்ன உச்சரித்து சிவனை சிந்தையில் நிறுத்தி தொடர்ந்தாள் மட்டுமே ஏழாம் மலை வரை செல்லும் தைரியமும் தன்னம்பிக்கையும் வரும்.
1½ முதல் 2 மணி நேரம் நடந்தால் வெள்ளை விநாயகர் ஆலயம் தென்படும். இத்துடன் முடிகிறது முதல் மலை.

இரண்டாம் மலை:

முதல் மலை முடிவில் கடைகள் இருக்கும். அது நம் கண்களுக்கு சொர்க்கம் போல் காட்சியளிக்கும். ஆனால் இங்கும் தண்ணீர் கிடைக்காது. அதனால், லெமன் ஜூஸ் லெமன் சோடா என்று முடிந்த அளவுக்கு அருந்திவிட்டு நல்ல ஓய்வெடுத்து முடிந்தால் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு கலைப்பாறிய பின்பு வெள்ளை விநாயகரின் ஆசிக்கொண்டு இரண்டாம் மலையை ஏற தொடங்குவோம்.

இரண்டாம் மலை செங்குத்தான படிக்கட்டுகளும் சமதரைகள்ளும் வழுக்குப் பாறைகளாலும் ஆனது. முதல் மலையை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் சுலபம்தான். இரண்டாம் மலை கிட்டத்தட்ட முடியும் நிலையில் மிகப்பெரிய வழக்குப் பாறை தென்படும் அதைக் கடந்து சிறிது தூரம் சென்றால் இடது பக்கம் பாம்பாட்டி சித்தர் குகையும் வலது பக்கம் பாம்பாட்டி சித்தர் உருவாக்கிய சுனையும் தென்படும் இத்துடன் முடிவடைகிறது இரண்டாம் மலை.

 மூன்றாம் மலை :

 பாம்பாட்டி சூனையில் நம்மிடம் உள்ள பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். கூட்டம் வெகுவாக இருக்கும் இருந்தாலும் பொறுமையாக இருந்து தண்ணீரை நிரப்புவது நல்லது. இதனால் நமக்கு தேவையான ஓய்வும் கிடைக்கும், தண்ணீரும் கிடைக்கும். இந்தத் தண்ணீர் தான் நம் மூன்றாவது மலை முழுவதும் உபயோகப்பட போகிறது தண்ணீரை நிரப்பி விட்டு ஓய்வெடுத்த பின் பாம்பாட்டி சித்தரை வணங்கி மூன்றாவது மலையேற்றத்தை தொடங்குவோம்.

 மூன்றாவது மலை முழுக்க முழுக்க வழுக்குப் பாறையாளானது. நம் உடன் இருக்கும் மூங்கில் தடி மட்டுமே நமக்கு பாதுகாப்பு. சிறியதாக தவறினாலும் பெரிய காயங்கள் உண்டாகும். மூன்றாவது மலையுமே செங்குத்தாகவே அமைந்திருக்கும் ஆனால் முதல் மலை அளவுக்கு இருக்காது. இருந்தாலும் இதுவும் கடினம்தான் மிகவும் கடினம்.
 எப்பொழுது மலை முடியும் என்ற எண்ணத்தை தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். மூன்றாவது மலை ஏற ஏற குளிர்ந்த காற்று வீச தொடங்கும்.
 மூன்றாவது மலையுமே நீண்ட நெடிய பயணமாக இருக்கும் எனவே ஆங்காங்கே தேவையான ஓய்வும் நீர் சத்தும் மிகவும் அவசியம்.
 மூன்றாவது மலை கிட்டத்தட்ட முடியும் நிலையில் ஒரு அதிசய சுனையானா கைதட்டி சுனை இருக்கும்.நம் கைதட்டும் ஓசைக்கேற்ப்ப தண்ணீர் வேகமாகவும் மெதுவாகவும் வழிய தொடங்கும். இந்த சுனையும் மிகவும் முக்கியமானது. இதைத் தவிர விட்டால் அடுத்து நான்காவது மலை முழுவதும் தண்ணீர் இருக்காது.
 சுனையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு சிறிது தூரம் ஏறினால் மலையின் உச்சியை அடைவோம். உச்சியில் இருந்து கீழே அழகான பள்ளத்தாக்கும் சிறுவாணி நதியும் தென்படும். இதுவே மூன்றாவது மலை முடிந்து நான்காம் மலை தொடங்கும் இடம்.

நான்காம் மலை:

நான்காம் மலையில் கோரைப்புற்கள் நம்மை வரவேற்கும். சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் காண இது மிகவும் சிறந்த இடம்.
 நான்காம் மலை குறுகிய பாதைகளும் மேடான மணல் திட்டுகளும் பெரிய பாறைகளும் கொண்டது. நான்காம் மலையின் உச்சிக்கு செல்லும் வரை ஓய்வெடுக்க பெரியதாக இடங்கள் இருக்காது ஏதேனும் பாறை மேலே தான் அமர வேண்டும் அதுவும் ஆபத்தானதே.
 எனவே நான்காம் மலை ஏறும் முன் நன்றாக ஓய்வு எடுத்து நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

 ஏறி வந்த மூன்று மலைகளை விட நான்காம் மலை சிறிது சுலபமாகவே இருக்கும். நான்காம் மலை உச்சியை தொட்டு சிறிது தூரம் நடந்தால் ஒட்டன் சித்தர் சமாதியை வந்தடைவோம்.இதுவே நான்காம் மலையின் எல்லை.

 ஐந்தாம் மலை:

 ஒட்டன் சித்தர் சமாதியை வணங்கி விட்டு தொடர்கிறது ஐந்தாம் மலையின் பயணம்.
 ஐந்தாம் மலை ஒரு சமதரை பகுதியாகும்.
 இந்த மலை முழுவதும் மணல் வெந்நிறத்தில் இருக்கும். இதை பார்க்க திருநீறு போன்று காட்சியளிக்கும் எனவே இது திருநீறு மலை என்றும் அழைக்கப்படும். 
 ஐந்து, ஆறு, ஏழு மூன்று மலைகளிலும் வெயிலோ குளிரோ இரண்டும் மிகவும் கடுமையானதாக இருக்கும்.
 ஐந்தாம் மலையில் பயணிக்க தொடங்கிய சிறிது தூரத்தில் ஒரு சுனை தென்படும். இந்தத் தண்ணீரை தவறவிட்டால் ஐந்து ஆறு இரண்டு மலைகளிலும் தண்ணீர் கிடைக்காது.
 தொடர்ந்து பயணித்து வந்தால் பீமன் களி உருண்டை என்னும் பாறையை வந்தடைவோம் இதுவே ஐந்தாம் மலையின் முடிவு.

ஆறாம் மலை :

 ஐந்தாம் மலை சமதரை என்பதால் பெரியதாக சிரமம் இருக்காது எனவே ஓய்வும் பெரியதாக தேவைப்படாது. இருந்தாலும் பீமன் களி உருண்டையின் கீழ் சற்று இளைப்பாரி விட்டு மேலும் பயணத்தை தொடரலாம்.
 நான்கு மலைகளை ஏரியும் ஐந்தாவது மலை நடந்தும் பயணம் செய்த பிறகு ஆறாவது மலையை கீழே இறங்கி பயணிக்க வேண்டும்.
 ஆறாவது மலையின் பாதை மிகவும் குறுகலானது ஒருவர் பின் ஒருவராக தான் செல்ல வேண்டும். ஆறாம் மலை இறங்குவதும் மிகவும் எளிதான பயணமே. மலை இறங்க இறங்க மணல் குளுமையானதாக இருக்கும். இதற்கு காரணம் ஆறாம் மலை கீழே இருக்கும் ஆண்டி சுனை. இந்த ஆண்டி சுனையுடன் ஆறாம் மலை முடிவடைந்து ஏழாம் மலைக்கான பயணம் தொடங்கும்.

ஏழாம் மலை:

 வெள்ளிங்கிரி மலை பயணத்தில் மிகப்பெரிய சுனை இந்த ஆண்டி சுனை.
 இச்சுணை பெரும்பாலும் பக்தர்கள் நீராடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
 உறைய வைக்கும் இந்நீரில் மூழ்கி எழுந்தாள் ஆறு மலைகளை கடந்து வந்த சோர்வு முழுமையாக நீங்கும். அந்த சோர்வு நீங்கினால் மட்டுமே நாம் ஏழாம் மலை ஏற முடியும். எனவே ஆண்டி சுனையில் நீராடுவது மிக மிக அவசியம்.

 சுனையில் மூழ்கி அதன் மத்தியில் இருக்கும் சிவலிங்கத்தை வணங்கி ஆசி பெற்று நெற்றி நிறைய திருநீறு பூசி புத்துணர்வு கொண்ட உடலோடு "ஓம் நமசிவாய" என்று சொல்லி மனதையும் புத்துணர்வு ஆக்கிக் கொண்டு நம் வெள்ளியங்கிரி ஆண்டவர் வசிக்கும் ஏழாம் மலையான கிரி மலையை ஏற தொடங்குவோம்.
 ஏழாம் மலை தொடக்கத்தில் ஒரு சுனை உண்டு அங்கு தேவையான அளவு தண்ணீரை நிரப்பிக் கொண்டு பயணத்தை தொடங்க வேண்டும். அதை தவறவிட்டால் ஏழாம் மலை ஏறி இறங்கும் வரை எங்கும் தண்ணீர் கிடைக்காது.

 ஏழாம் மலை மிகவும் செங்குத்தானது இங்கு படிக்கட்டுகள் எதுவும் இருக்காது. வெறும் பாறைகள் மீதே தான் பயணம் செய்ய வேண்டும். முதல் மலையில் ஏற்பட்ட அனைத்து சோதனைகளும் ஏழாம் மலையிலும் ஏற்படும். உடலும் மனதும் மிகப்பெரிய சோர்வடையும். வெயில் நேரத்தில் ஏறினால் கால்களில் கொப்பளங்கள் வரும். இரவில் பயணத்தை தொடங்கினால் குளிர்ந்த காற்று நம் உடலை நடுங்கவும் உரையவும் செய்யும். எனவே ஆங்காங்கே ஓய்வு மிக மிக அவசியம்.
உடல் சோர்வை தணிக்க தண்ணீரும் கொண்டு சென்ற பழங்களும் மனச்சோர்வை தவிர்க்க ஓம் நமசிவாய என்னும் மந்திரமே நமக்கு துணை. அப்படியே 1½ முதல் 2 மணி நேரம் பயணித்தால் கிரி மலையின் உச்சியை நாம் அடைவோம்.

 உச்சியை அடைந்ததும் நம்மில் ஏற்படும் மாற்றம் மிகவும் அலாதியானது. அதை உணர மட்டுமே முடியும். இயற்கை எவ்வளவு அழகானது என்பதை பார்க்க முடியும். நாம் மேகங்களுக்கும் மேலே இருப்போம். சூரிய உதயத்திலும் அஸ்தமனத்திலும் பள்ளத்தாக்கு தென்படாதவாறு மேகங்கள் மூடி வெள்ளியைப் போற்றியது போல் காட்சி அளிக்கும். இதால்தான் இம்மலை வெள்ளியங்கிரி என அழைக்கப்படுகிறது.

 வரிசையில் நின்று சுயம்பு லிங்கமாய் வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசித்து பின்னர் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தால் நம்முள் ஏற்படும் மாற்றம் நம் வாழ்நாளில் மிக முக்கியமானதாக இருக்கும்.
 ஈசன் தன் மன அமைதிக்காக வந்து அமர்ந்த இடத்தில் நாமும் இருக்கிறோம் என்று நினைக்கும் போது உள்ளத்தில் ஈசனும், உதடுகளில் ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சரமும், கண்களில் கண்ணீரைத் தவிர வேறொன்றும் இருக்காது.

 "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" இன்னும் சிவபுராண வரிகளுக்கு ஏற்ப, அவன் அருளாலே அவனை தரிசிக்க முடிந்தது.
 அவன் கருணையால் எனக்கு உடல் உறுதியும் மன உறுதியும் தந்து அவனை தரிசிக்க இரண்டு முறை அருள் புரிந்திருக்கிறான் என் ஈசன். தொடர்ந்து அருள் புரிவான் எனவும் நம்புகிறேன்.

ஓம் நமசிவாய🔱
சிவாய நம🔱

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...