Showing posts with label உணவில் உள்ள 5 வகை தோஷங்கள். Show all posts
Showing posts with label உணவில் உள்ள 5 வகை தோஷங்கள். Show all posts

Friday, November 24, 2023

உணவில் உள்ள 5 வகை தோஷங்கள்

 உணவில் உள்ள 5 வகை தோஷங்கள்

வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யாரல் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது பிராணனைத் தாங்குவது. அதை யார் சமைக்கிறார்கள் எப்படி சமைக்கிறார்கள் என்பது முக்கியம். உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.
1. அர்த்த தோஷம்
2. நிமித்த தோஷம்
3. ஸ்தான தோஷம்
4. ஜாதி தோஷம் (இது மனித ஜாதியை குறிப்பது அல்ல. சாத்வீக உணவை குறிக்கும்)
5. சம்ஸ்கார தோஷம்
1. அர்த்த தோஷம்
அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.
பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். தவறு செய்து விட்டோமே இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். பணத்தாசை பிடித்து தவறு செய்யும் ஒருவரிடம் உணவு அருந்தினால் வருவது அர்த்த தோஷம் ஆகும்.
2. நிமித்த தோஷம்
உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதோடு நேர்மையானவராகவும் அன்பானவராகவும் நல்ல சுபாவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் திரௌபதி நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் அம்பின் வழியாக வெளியேறும் போது நான் பரிசுத்தவனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது என்று கூறினார். தீய எண்ணத்தோடு இருப்பவன் அளிக்கும் உணவு சாப்பிட்டால் தீமையான எண்ணங்களையே உருவாக்கும் இது நிமித்த தோஷம் ஆகும்.
3. ஸ்தான தோஷம்
உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். உணவு சமைக்கும் இடத்தில் கிருஷ்ணரை எப்படி கைது செய்வது என்று கெட்ட விவாதத்துடன் உணவு சமைக்கப்பட்டது. கிருஷ்ணர் உணவு சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். கிருஷ்ணர் வந்த மகிழ்ச்சியில் எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கி சாப்பிட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி நீர் ஒரு இலை ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் இல்லாத இடத்தில் உணவு சமைக்கப்படவேண்டும் இது ஸ்தான தோஷம் ஆகும்.
4. ஜாதி தோஷம்
மனிதனுக்கு சாத்வீக குணம் ரஜோ குணம் தாமச குணம் என்று மூன்று குணங்கள் உள்ளது. சாத்வீக உணவாக உட்கொள்ள வேண்டும். சாத்வீக உணவு இல்லை என்றால் அது ஜாதி தோஷம் ஆகும்.
சாத்வீக குணம் - உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால் நெய் அரிசி மாவு பருப்பு போன்றவை சாத்வீகமானவை. இதனை சாப்பிட்டால் இறைஉணர்வு. மனஅடக்கம், புலனடக்கம், சகிப்புத் தன்மை, விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு அச்சப்படுதல், தானம், பணிவு, எளிமை ஆகியவை கிடைக்கும். சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.
ரஜோ குணம் - புளிப்பு உரைப்பு உப்பு உள்ளவை ராஜோ குணங்கள் கொண்ட உணவாகும். இந்த உணவை சாப்பிட்டால் ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகிய ரஜோ குணங்கள் வரும். ராஜோ உணவு உலகப்பற்று உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.
தாமச குணம் - பூண்டு வெங்காயம் மாமிசம் முட்டை போன்றவை தாமச உணவாகும். இதனை சாப்பிட்டால் சோம்பலும் ராட்சசத் தன்மையும் மோகமும் அதிகரிகின்றது. தாமச உணவு தீய குணத்தை வளர்க்கிறது.
5. சம்ஸ்கார தோஷம்
தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.
இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். அப்போது தான் மனம் அன்புடனும் தெளிந்த நல்அறிவுடனும் சலனமில்லாமலும் இறை சிந்தனையுடனும் இருக்கும். தானே சமைத்த உணவு தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
No photo description available.
All reactions:

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...