Showing posts with label சோழ மற்றும் பாண்டிய மன்னர்களிடம் இறைவன் புரிந்த லீலை. Show all posts
Showing posts with label சோழ மற்றும் பாண்டிய மன்னர்களிடம் இறைவன் புரிந்த லீலை. Show all posts

Friday, November 24, 2023

சோழ மற்றும் பாண்டிய மன்னர்களிடம் இறைவன் புரிந்த லீலை

 சோழ மற்றும் பாண்டிய மன்னர்களிடம் இறைவன் புரிந்த லீலை

பாண்டிய மாமன்னன் ராஜேந்திரன் சிவபெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். தேவி நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால் சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே என்று உறுதிபடக் கூறிவிட்டான். அப்படி என்னதான் சிவன் மீது உங்களுக்குக் கோபம்? என்று விடாப்பிடியாக வினவினாள் பாண்டிமாதேவி. ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு செல்வது? சிவநேசச் சோழன் உறையூர் வந்திருந்தான். எப்படியும் ஒரு நடை மதுரை சென்று மகேசனைத் தரிசிப்பது என்று முடிவும் செய்து விட்டான். மாறுவேடம் பூண்டு ஒரு சாதாரண யாத்ரீகன் போன்று மதுரைக்குப் புறப்பட்டான். வைகைக் கரைக்கு வந்து சேர்ந்த போது இருள் பரவத் தொடங்கியிருந்தது. வைகையில் வெள்ளமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வழி புரியாமல் மனம் கலங்கி நின்றான் சோழன். அப்போது எங்கிருந்தோ திடீரென வந்து நின்ற ஓர் ஓடக்காரன் வைகையைக் கடக்க சோழனுக்கு உதவினான். அதுமட்டுமல்ல ஆலயம் வரை வழிகாட்டியபடி வந்தான். ஆனால் ஆலயமோ அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. சிவநேசன் பரிதவிப்பதைக் கண்ட ஓடக்காரன் மனமிரங்கி கவலை வேண்டாம். ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கேசப் பெருமானைத் தரிசிக்காமல் ஊர் திரும்ப வேண்டாம் என்றான். அவ்வாறே திறவுகோலை வாங்கி வந்து ஆலயக் கதவுகளைத் திறந்து விட்டான்.
அர்த்தஜாம வழிபாடு முடிந்து ஆலய நடை சார்த்தப்பட்டால் பிறகு இரவில் மீண்டும் திறக்கும் வழக்கமில்லை. அப்படி வழிபடுவதும் தவறு. எல்லாம் தெரிந்திருந்தும் சிவநேசச் சோழன் ஆர்வ மிகுதியால் சொக்கேசனை மகிழ்வுடன் வணங்கினான். ஆலயக் கதவை பழையபடி மூடிச் சாவியை ஒப்படைத்துவிட்டு வந்தான் ஓடக்காரன். சோழனை வைகையின் மறுகரையில் கொண்டு விட்டான். சோழன் கொடுத்த பொற்காசுகளையும் வாங்க மறுத்துவிட்டான் அந்த அதிசய ஓடக்காரன். மறுநாள் ஆலயத்தைத் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய இலச்சினையான மீன முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால் அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம் இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும் முழங்கி படை திரட்ட உத்தரவிட்டான். போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன் சோழநாட்டை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான் இரவு ஒரு கனவு. அதில் சோமசுந்தரப் பெருமான் தோன்றினார்.
குலபூஷணா சோழன் மீதுள்ள சினத்தை விடு பகையை மற. அவனும் உன் போல் ஒரு சிவ பக்தன். அவன் பக்தியை மெச்சி நான்தான் ஓடக்காரனாகச் சென்று அவனை இங்கு அழைத்து வந்தேன். மூடி முத்திரையிட்ட ஆலயக் கதவுகளைத் திறந்து சோழன் சிவதரிசனம் செய்யவும் நானே உதவினேன். திரும்ப மூடி முத்திரையிட்ட போது நந்தி முத்திரையை இட்டுவிட்டேன். பாண்டிய மன்னா நீ நினைப்பதுபோல் நந்தி முத்திரை பல்லவ நாடாளும் உரிமையால் சோழனுக்கு வந்ததல்ல. அது சிவராஜனின் சிறப்பு அடையாளம். இதை ஒரு காரணமாக்கி நீ சோழன் மீது போர் தொடுக்க வேண்டாம். குற்றம் சோழனுடையதல்ல என்னுடையது. ராஜ தண்டனை அளிப்பது என்றாலும் நீ எனக்கே அளிக்க வேண்டும் கனவில் வந்து சிவன் பேசப் பேச மெய் சிலிர்த்து போனார் பாண்டிய வேந்தர். பிறகு சிவநேசச் சோழனுக்குத் தூதனுப்பி நட்பு பேசினார். அதன் அடையாளமாக சோழன் மகளை பாண்டிய குமாரன் மணந்தான். பகை இப்போது உறவாக மலர்ந்து விட்டது. குலபூஷண பாண்டியர் சிவபதம் அடைந்தார். ராஜசேகரன் பாண்டிய மன்னன் ஆனான். ஆனால் ஈசன் சோழனுக்கு ஆதரவாகவே இருந்து விட்டார் என்பது அவன் மனக்குறை. இந்த வஞ்சகமே தன் தந்தையின் உயிரைக் குடித்துவிட்டதாக எண்ணினான். அதனாலேயே ஈசனை வணங்கவும் மறுத்தான்.
சோழன் மகளை மணந்தது பாண்டியனின் இளைய குமாரன் ராஜசிம்மன். மூத்தவன் ராஜசேகரன் மணந்திருப்பதோ சேரன் செல்வியை. இளையவன் சோழ சைன்யத்தோடு சேர்ந்து ஒருமுறை அண்ணனை எதிர்க்க எண்ணிச் சதி வேலைகள் செய்தான். அவை பாண்டிய ராஜதந்திரிகளால் முறியடிக்கப்பட்டன. பாண்டிய ராணி பிரபு பழசையெல்லாம் மறந்து விடுங்கள். உங்கள் தம்பி தன் குட்டு வெளிப்பட்டு விட்டதால் உங்கள் முகத்தில் விழிக்கவே அஞ்சி உறையூரே கதியென்று சோழநாட்டில் போய்க் கிடக்கிறாரே பிறகு ஏன் கவலை? சிவன் மீதான ஊடலையும் விட்டு விடுங்கள் என்றாள். இல்லை தேவி தம்பியை வேண்டுமானால் மன்னிக்கலாம். சிவபெருமான் செய்தது பெரிய அநீதி. எங்களுக்குள் ஒரு வழக்கு நடப்பதாக வேண்டுமானாலும் வைத்துக் கொள். குலதெய்வமாக எண்ணிய எங்களுக்கு அவர் ஓரவஞ்சனை செய்து விட்டார். சோழனுக்கு ஓடக்காரனாக நேரிலேயே சென்று உதவினார். சோழனுக்காக வாதிட என் தந்தையின் கனவில் மட்டுமே தோன்றினார். எங்கள் சிவபக்தி எதில் குறைந்தது? இதுவே என் தந்தையை மனம் நலியச் செய்து மரணத்தில் தள்ளியது. இவ்வளவு வருந்துகிறேனே என் கனவில் ஏன் வரவில்லை சிவன்? அவர் சோழன் ஆதரவாளர். அதனால்தான் நான் வெறுக்கிறேன் என்றான்.
சோழன் மகளை மணந்து உறையூர் ராஜமாளிகையில் தங்கியிருந்த பாண்டிய இளவல் ராஜசிம்மன் மீண்டும் ஒருமுறை மதுரை மீது படையெடுக்கத் திட்டமிட்டான். மதுரை நோக்கிப் புறப்பட்டு விட்டன சோழ சைன்யம். பொழுது புலர்ந்தால் மதுரைக் கோட்டையை முற்றுகையிடுவது அவர்கள் திட்டம். முன்னிரவில் மனைவியிடம் சிவபிரான் மீது ஏகப்பட்ட வசை மொழிகளை அர்ச்சித்து விட்டு கண்ணயரத் துவங்கியிருந்தான் ராஜசேகரப் பாண்டியன். நள்ளிரவில் அவன் கனவில் சிவன் தோன்றினார். குலபூஷண பாண்டியனின் புதல்வனே என் மீது சினம் கொண்ட பிள்ளையே எழுந்திரு. இது நீ உறங்க வேண்டிய தருணமல்ல. அங்கே சிவநேசச் சோழனின் மனத்தைக் கெடுத்து அவனையும் சோழப் படைகளையும் அழைத்துக் கொண்டு உன் தம்பி ராஜசிம்மன் உன்மீது போர் தொடுக்க வருகிறான். விடிந்தால் உன் கோட்டை முற்றுகை இடப்படும் நிலை. நீ என்னை வசை பாடினாலும் நான் உன்னைக் கோபித்ததில்லை. உன் வேண்டுகோள்படி இதோ உன் கனவில் தோன்றி உனக்கு நல்லதைச் செய்துள்ளேன். எழு விழி போராடு எதிரியை வெற்றிக் கொள் என்றார். சிவபிரான் பேசக்கேட்டு சிலிர்த்து எழுந்தான் பாண்டியன். விடியும் வரை காத்திருக்க அவன் விரும்பவில்லை. நிலைப் படையாக இருக்கும் சில நூறு வீரர்களை அழைத்துக் கொண்டு அப்பொழுதே புறப்பட்டான்.
சோழர் படையுடன் வரும் தம்பியை மதுரையின் எல்லைக்குள் நுழையவே விடக்கூடாது என்பது அவன் எண்ணம். வழியெங்கும் அவனுக்கு வியப்பூட்டும் விந்தை காத்திருந்தது. ஆங்காங்கே ஊருக்கு நூறுபேர் ஆயுதங்களும் தீப்பந்தங்களும் ஏந்தி நின்று காத்திருந்து மதுரைப் படையோடு தங்களை இணைத்துக் கொண்டனர். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம் மதுரைக்கு எதிரிகள் புறப்பட்டு வருவதை இவர்கள் எப்படி அறிவார்கள்? விசாரித்தான் பாண்டியன் எல்லோரும் கூறியது ஒரே தகவல் ஆஜானுபாகுவான ஒரு மனிதர் குதிரை மீது வந்தார். ஒவ்வொரு சிற்றூரிலும் மக்களை எழுப்பி சோழ சைன்யம் மதுரையைத் தாக்க வருகிறது. அவர்களை வழிமடக்கிப் போரிட இதோ பாண்டியன் சிறிய படையுடன் வருகிறான். இளம் சிங்கங்கள் எழுந்து ஆயுதம் ஏந்தி வந்து மதுரைப் படையுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என அறிவித்தார். அவர் பாண்டிய ராஜமுத்திரையான மீன் பொறித்த மோதிரத்தைக் காட்டினார். கையில் மீன் கொடியும் ஏந்தியிருந்தார். அவர் பேச்சை ராஜ கட்டளையாக எண்ணியே நாங்கள் திரண்டோம் என்றனர். யார் அந்த மாய மனிதன்? ராஜசேகரப் பாண்டியனால் ஊகிக்க முடியவில்லை. அந்தப் புதிர் அவிழ அவன் மறுநாள் இரவு வரை காத்திருக்க நேர்ந்தது. சோழர் படை முறியடிக்கப்பட்டது. தம்பியும் தம்பிக்கு உதவிய சோழ வேந்தனும் சிறைப்பட்டனர். இரவில் நிம்மதியாகக் கண்ணுறங்கப் போனான் ராஜசேகரன். யார் அந்த மாய மனிதன்? என்கிற வினா மட்டும் இன்னமும் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.
அந்த மாய மனிதன் அதே உருவில் அவன் கனவில் தோன்றினான். என்னவொரு கம்பீரம் பிரபோ தங்கள் கட்டளையை மக்களிடம் அறிவித்த ஊழியன் அடியேன்தான் என்றான். யார் நீ? என் ஊழியரில் எவரும் உன் போல் இல்லையே? நான் எப்போது உன்னிடம் கட்டளையிட்டேன்? இதோ இப்போது பார் என்னை. உன் ஐயம் அனைத்தும் விலகும் பாண்டிய வீரன் சிவனாகிறார். இறைவா தாங்களா எனக்கு ஊழியம் பார்த்தீர்கள்? என்றான். அதற்கு இறைவன் பதற்றம் வேண்டாம் பாண்டிய மன்னா பரிகாரம் என்பது மனிதர்கள் செய்ய வேண்டியது மட்டுமன்று பக்தனுக்காக இறைவனும் செய்யலாம். நான் சோழனுக்கு ஓடக்காரனாக வந்து ஊழியம் புரிந்தேன். உனக்கு உன் சேவகனாக இதோ வந்தேன் உன் ராஜ முத்திரையை ஏந்தி ஊழியம் புரிந்தேன். போதுமா இல்லை இன்னும் என்மீது உனக்குச் சினம்தானா? நான் எதும் ராஜ தண்டனை ஏற்க வேண்டுமா? என்று கேட்டார். சிவ சிவா என்ன பேச்சு சுவாமி இது தாங்கள் எனக்கு ஊழியம் பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய அபசாரத்துக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்கள். இதற்கு நான் ஏதேனும் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள் நீ சினம் தணிந்தால் போதும். போய் சிவநேசச் சோழனை விடுதலை செய். உன் தம்பியையும் விடுவித்து மன்னித்து ஏற்றுக்கொள். அப்படியே ஆகட்டும் ஐயனே இப்போதும் தங்கள் கருணை அவர்கள் பக்கம்தான் இருக்கிறது. ஓடக்காரனாக வந்தீர்கள். மக்கள் முன் பாண்டிய வீரனாக வந்தீர்கள். எனக்கு மட்டும் கனவுக் காட்சிதானா? விண்ணும் மண்ணும் அதிர வாய் விட்டு சிரித்தார் இறைவன். பிறகு ராஜசேகரா என்னிடம் வாதிப்பதிலேயே இன்பம் காணும் முரட்டு பக்தன் நீ. உன் மனைவியிடம் என்ன சொன்னாய்? சிவன் என் கனவில் வரவேண்டும் என்றுதானே? வந்து விட்டேன் சரிதானே? வாழ்வே ஒரு கனவுதான் கனவு ஒரு வாழ்வுதான். கவலையை விடு கடமையைச் செய் சிவன் ஜோதிமயமானார். பாண்டியன் கனவிலிருந்து சந்தோஷமாக விடுபட்டான். கிழக்கு வெளுத்தது. சிவன் கட்டளைப்படி சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. பண்பு சிறந்து பகை மறைந்தது. உறவின் உன்னதம் மலர்ந்தது. சோழ மன்னனை அழைத்துச் சென்று சொக்கேசப் பெருமானைத் தரிசிக்க வைத்தான் ராஜசேகரப் பாண்டியன். அவன் கண்ட கனவுகள் வரலாற்றுப் பக்கங்களில் பதிவாயின.
No photo description available.

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...