Showing posts with label கேரள மாநிலத்திலுள்ள சிவாலயங்களில். Show all posts
Showing posts with label கேரள மாநிலத்திலுள்ள சிவாலயங்களில். Show all posts

Wednesday, January 25, 2023

கேரள மாநிலத்திலுள்ள சிவாலயங்களில்

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், அகவூர் திருவைராணிக்குளம் செல்லும் சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரமும் என மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது.

மூலவர்:  மகாதேவர்
அம்மன்: பார்வதி தேவி
ஊர்:திருவைராணிக்குளம் ,அலுவா மாவட்டம்:எர்ணாகுளம் 
மாநிலம்: கேரளா

வரலாறு:

வெடியூர், அகவூர், வெண்மணி எனும் மூன்று உயர்வகுப்பினரின் குடும்பங்கள் கேரளப் பகுதியில் வசித்து வந்தனர். அகவூர் குடும்பத்தின் மூத்த நபருக்குத் ‘தம்பிரான்’ எனும் சிற்றரசர் பட்டமிருந்தது. அதனால், அந்தக் குடும்பத்தினருக்கு உதவியாளராக அகவூர் சாத்தன் என்பவர் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வந்தார். அகவூர் தம்பிரான், அங்கிருந்த ஆற்றின் மறுகரையிலிருந்த மகாதேவர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அகவூர் தம்பிரானுக்கு வயதாகி விட்ட நிலையில், ஆற்றைக் கடந்து சென்று, மகாதேவரை வழிபட்டு வருவது கடினமாக இருந்தது. அதைக் கண்ட அகவூர் சாத்தன், படகு ஒன்று செய்து, அதன் மூலம் எளிமையாக ஆற்றைக் கடந்து சென்று மகாதேவரை வழிபட்டுத் திரும்ப உதவி செய்தார்.

அகவூர் தம்பிரானுக்கு மேலும் வயதாகிய நிலையில், படகின் மூலம் ஆற்றைக் கடந்து சென்று வழிபாடு செய்து திரும்புவதும் கடினமாகிப் போனது. இதனால் வரும் காலத்தில் மகாதேவரை வழிபட முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இருப்பினும், அவர் தன் வழிபாட்டை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவர், மகாதேவரை வழிபட்டுத் திரும்பி வந்த போது, தன் கையில் வைத்திருந்த ஓலைக்குடை மிகவும் கனமாக இருப்பது போல் உணர்ந்தார். அவர் தனது உதவியாளரிடம், தனது வயது மூப்பால், இந்த ஓலைக்குடையைக் கூடத் தன்னால் சுமக்க முடியாமல் போய்விட்டதே என்று சொல்லி வருந்தினார்.

ஆற்றைக் கடந்து, படகை விட்டு இறங்கிய அவர், கரைப்பகுதியில் அந்த ஓலைக்குடையை வைத்துக் கொண்டு நடக்க முடியாமல் துன்பப்பட்டார். எங்காவது சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்ல நினைத்த அவர், அருகில் ஓரிடத்தில் தன் கையில் வைத்திருந்த ஓலைக்குடையை வைத்து விட்டுச் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தார். பின்னர், அங்கிருந்து எழுந்த அவர், தனது ஓலைக்குடையுடன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு அந்த ஓலைக்குடை எப்போதும் போல் கனமில்லாமல் இருந்தது. ஓய்வுக்குப் பின்பு ஓலைக்குடை தற்போது இலகுவாக இருக்கிறது என்று உதவியாளர் சாத்தனிடம் தெரிவித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கையில் வைத்திருந்த கதிர் அரிவாளைக் கூர்மைப்படுத்துவதற்காக அங்கிருந்த கல் ஒன்றில் தீட்டினார். அப்போது, அந்தக் கல்லிலிருந்து ரத்தம் வெளியேறியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மயக்கமடைந்தார். அந்தப் பெண்ணுடன் வந்த சிலர், கல்லிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த தகவலையும், அந்தப் பெண் மயக்கமடைந்து விட்டதையும் தம்பிரானிடம் சென்று தெரிவித்தனர். தம்பிரான் தனது உதவியாளரான அகவூர் சாத்தனை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார். அந்த இடத்தைக் கண்ட அகவூர் சாத்தன், ‘தம்பிரானே, சில நாட்களுக்கு முன்பு, தாங்கள் மகாதேவரை வழிபட்டுத் திரும்பிய நிலையில், தங்கள் ஓலைக்குடையைச் சுமக்க முடியாமல், இங்கு வந்து சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துச் சென்றீர்களல்லவா? அந்த இடத்தில்தான் இப்போது கல்லிலிருந்து ரத்தம் வந்து கொண்டிருக்கிறது’ என்றார்.

அதைக் கேட்ட தம்பிரானுக்கு அன்று நடந்த நிகழ்வுகளெல்லாம் நினைவுக்கு வந்து சென்றன. அன்று, மறுகரையிலிருக்கும் மகாதேவர், தனது ஓலைக்குடையில் அமர்ந்து, தன்னுடன் வந்து இந்த இடத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது சுயம்புவாக இங்கே தோன்றியிருக்கிறார் என்பதும் அவருக்குத் தெரிந்தது. உடனே அவர் தனது உதவியாளரான சாத்தனிடம், “என்னுடைய வயது மூப்பால் எனக்கு ஏற்பட்ட இயலாமையை அறிந்து, என்னுடனே வந்து இங்கு சுயம்புவாகத் தோன்றியிருக்கும் மகாதேவருக்கு நான் கோவில் அமைத்துச் சிறப்பு செய்வேன்” என்றார். அதனைத் தொடர்ந்து, இங்கு மகாதேவருக்குப் புதியதாகக் கோவில் அமைக்கப்பட்டது....

இக்கோவிலில் வட்டவடிவமான கருவறைப் பகுதியில் முன்புறம் மகாதேவரும், பின்புறம் பார்வதி தேவியும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் சதிதேவி, தர்மசாஸ்தா, பெருமாள், யட்சி ஆகியோர்களுக்குத் தனிச் சன்னிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு அருகில் பெரிய தெப்பக்குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது......

இக்கோவிலில் இருக்கும் பார்வதி சன்னிதி ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே திறந்து வைக்கப்படுகிறது. இதற்குக் காரணமாக ஒரு கதை சொல்லப்படுகிறது. தொடக்கக் காலத்தில், இங்கு பார்வதி தேவியே மகாதேவருக்கு உணவு தயாரித்து வழிபாடுகளைச் செய்து வந்தாராம். இதனால், கோவிலில் உணவு தயாரிக்கும் இடத்திற்கு (மடப்பள்ளி) யாரும் செல்ல மாட்டார்களாம். ஒரு நாள் கோவிலின் நிர்வாகப் பணியைக் கவனித்து வந்த ஒருவர், பார்வதி தேவி எப்படி உணவு தயாரிக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலுடன் உணவு தயாரிக்குமிடத்திற்குச் சென்றாராம்.

அங்கு பார்வதி தேவி உணவு தயாரித்துக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்து, ‘பார்வதித் தாயே’ என்று பக்தியுடன் சத்தமாக அழைத்து விட்டார். அதைக் கேட்டுக் கோபமடைந்த பார்வதி தேவி, ‘நான் உணவு தயாரிக்குமிடத்திற்கு வரக்கூடாது என்று தெரிந்திருந்தும், இங்கு வந்து என்னைப் பார்த்து விட்டதால், இனி, நான் இங்கிருக்க மாட்டேன்’ என்று சொன்னபடி கிளம்பினார். தனது தவறை உணர்ந்த கோவிலின் நிர்வாகி, ‘தாயே, தங்களைக் காணும் ஆவலுடன் நான் இங்கு வந்து பெரும் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள், எனது தவறுக்காக, இக்கோவிலுக்கு வரும் பக்தர்களைத் தண்டிக்க வேண்டாம். எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார்.

அவரது வேண்டுதலுக்கு மனமிரங்கிய பார்வதி தேவி அவரை மன்னித்து, ‘சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த நாளான மார்கழி மாதம் திருவாதிரை நாளில், மாலை வேளைக்குப் பின்பு முழு அலங்காரத்தில் இங்கு வந்து அருள் தருவேன். அன்றிலிருந்து 12 நாட்களுக்கு மட்டும் என்னை இக்கோவிலில் காணமுடியும்’ என்றார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் மாலை வேளையில் பார்வதி தேவி சன்னிதி வழிபாட்டுக்காகத் திறக்கப்படுகிறது. 12 நாட்களுக்குப் பின்பு மீண்டும் சன்னிதி மூடி வைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் இச்சன்னிதியிலிருக்கும் சாளரத்தின் வழியாகப் பக்தர்கள் பார்வதி தேவியை வேண்டிச் செல்கின்றனர்.

தல சிறப்பு:
1. மகாதேவர் சுயம்பு மூர்த்தி ஆவார்.
2. கேரள மாநிலத்திலுள்ள சிவாலயங்களில் இதுவே மிகவும் பிரசித்தி பெற்றது.
3. பார்வதி தேவியின் சிலாரூபம் மரத்தினால் ஆனது. அதனால், தேவிக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மஞ்சள் மட்டும் பூசப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மலையாள மாதமான தனுவில் (தமிழ் மாதமான மார்கழியில்) வரும் திருவாதிரை நட்சத்திரம் தொடங்கி 12 நாட்கள் மட்டுமே பார்வதி தேவியின் சன்னதி திறந்திருக்கும்.        

பயண வழிகாட்டல்:

கேரளாவிலுள்ள சில நகரங்களிலிருந்து கோயிலை அடையும் மார்க்கம் கீழே வழங்கப்பட்டுள்ளது: 
1. ஆதி சங்கரரின் அவதாரத் தலமான காலடியிலிருந்து சுமார் 7.9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
2. த்ரிச்சூர் நகரத்திலிருந்து சுமார் 60.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
3. பாலக்காடு நகரத்திலிருந்து சுமார் 118 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
4. கொடுங்கலூர் நகரத்திலிருந்து சுமார் 35.9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தலவரலாறு:

பண்டைய காலத்தில், ஐராணிக்குளம் என்ற கிராமத்தில் "அக்காவூர் மனா" என்ற பிராமண குலத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஐராணிக்குளத்தில் குடிகொண்ட ஐராணிக்குளத்தப்பன் என்ற திருநாமம் கொண்ட மகாதேவரை வழிப்பட்டு வந்தனர். ஒருசமயம் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, சில குடும்பங்கள் ஐராணிக்குளம் கிராமத்தை நீங்கி, வெள்ளரப்பிள்ளை என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும், ஐராணிக்குளத்தப்பனை தரிசனம் செய்யாமல் இருக்க முடியவில்லை. இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களை ஐராணிக்குளம் கிராமத்தில் உள்ளோர் தடுக்கவில்லை. காலம் இவ்வாறாக கரைந்தது. வெள்ளரப்பிள்ளையிலிருந்து தினமும் ஐராணிக்குளம் சென்று ஐராணிக்குளத்தப்பனை வணங்கும் பக்தர் ஒருவர் இருந்தார். வயது முதிர்ந்த போதிலும் தொடர்ந்து ஐராணிக்குளம் செல்லலானார். அச்சமயம், வெள்ளரப்பிள்ளையிலிருந்த அக்காவூர் மனா குலத்தில், "அக்காவூர் சாத்தன்" என்பவர் தஞ்சம் புகுந்தார். வயதான பக்தர் தினமும் ஐராணிக்குளம் செல்ல, திண்பாறை (granite) கல்லினாலான படகு ஒன்றை அக்காவூர் சாத்தன் உருவாக்கினார். பக்தரும் அப்படகில் ஏறி, அனுதினமும் ஐராணிக்குளத்தப்பனை தரிசிக்க சென்று வரலானார். ஒருநாள், ஐராணிக்குளத்தப்பனை தரிசனம் செய்த பிறகு மனமுருக வேண்டினார் பக்தர். "மகாதேவரே! வயது முதிர்ச்சியின் காரணமாக, தம்மை தரிசனம் செய்ய தினமும் இவ்விடம் வர வெகு சிரமமாக உள்ளது. தங்களை தரிசனம் செய்யாமல் இருக்கவும் இயலாது. என் செய்வேன்?!" என தன் மனக்குறையை மகாதேவரிடம் கூறிவிட்டு வெள்ளரப்பிள்ளை நோக்கி பயணப்பட, தன் ஓலகுடையை எடுத்தார். குடை கனமாக இருப்பதை உணர்ந்தார். படகில் ஏறி பயணித்த அவர், படகோட்டியான அக்காவூர் சாத்தனிடம் குடை கனமானது குறித்துக் கூறினார். அக்காவூர் சாத்தன் "இதை பெரியதாக பொருட்படுத்த வேண்டாம். விடுங்கள்" எனக் கூறினார். திருவைராணிக்குளம் அருகில் படகு வந்தபோது, வயதான பக்தருக்கு வயிற்று உபாதை ஏற்பட, படகை கரை ஒதுக்கும் படி கூறினார். அக்காவூர் சாத்தன் அவ்வாறே செய்ய, பக்தர் படகை விட்டு எழுந்து, தன் ஓலகுடையை எடுத்தார். குடை கனமற்று எப்போதும் உள்ளது போல இருப்பதை உணர்ந்தார். ஆச்சரியம் அடைந்த அவர், அதையும் அக்காவூர் சாத்தனிடம் கூறினார். பக்தருக்கு பதில் எதுவும் கூறாத அக்காவூர் சாத்தன், நடந்தது யாது என்பதை நன்கு உணர்ந்துக் கொண்டார். வயதான தன் பக்தனுக்காக ஐராணிக்குளத்தப்பனே ஓலகுடையில் ஏறி வந்துள்ளார். எனவே, குடை கனமானது. பக்தர் படகை விட்டு நீங்கையில், ஓலகுடை கனமற்று காணப்பட்டது. அப்படியென்றால், ஐராணிக்குளத்தப்பன் இன்னமும் தன் படகில் தான் உள்ளார் என்பதை அறிந்துக்கொண்டார். வயதான பக்தர் சென்ற பிறகு, ஐராணிக்குளத்தப்பன் உறையும் படகை கரைக்கு கொண்டுவந்து, மணலில் கவிழ்த்துப் போட்டார். பிறகு, வயதான பக்தரிடம் மகாதேவரின் கருணையை எடுத்துரைத்தார். மகிழ்ந்து போன பக்தர், அன்று முதல் படகில் உறையும் மகாதேவரை அனுதினமும் வணங்கி வந்தார். இவ்விடம் வெள்ளரப்பிள்ளைக்கு வெகு அருகில் உள்ளது. 

பண்டைய காலத்தில், மகாதேவர் படகில் உறையும் தலம் வனமாகவே இருந்தது. புலையர் என்ற குலத்தை சேர்ந்த ஒரு பெண் தினமும் இத்தலத்திற்கு செல்வது வழக்கம். வனத்தை சுத்தம் செய்வது அவள் தொழில். ஒருநாள், தன் அரிவாளை படகில் சாணம் தீட்டியபோது இரத்தம் பீறிட்டது. பயந்து போன அவள், சுயபுத்தியை இழந்து பைத்தியம் ஆனாள். இங்கும் அங்குமாக சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஓடி கொண்டே இருந்தாள். இந்நிகழ்வுக்கு பிறகு, படகில் வாசம் செய்த ஐராணிக்குளத்தப்பர், படகை விட்டு நீங்கி, அருகில் இருந்த கிணற்றுக்குள் புகுந்து, நிலத்தின் கீழ் சென்று, சுயம்பு மூர்த்தியாக ஒரு குகைக்குள் முளைத்தெழுந்தார். மக்களும் மகாதேவரின் வருகையை அறிந்துக் கொண்டனர். புலையர் குல பெண் ஓடிய நிலங்களை எல்லாம் மகாதேவருக்கு வழங்கிவிட்டனர். இந்த நிலப்பரப்பிற்கு "வரநாட்டு மடம்" என்று பெயர். பிற்காலத்தில், தன் பக்தனுக்காக ஐராணிக்குளத்திலிருந்து இவ்விடம் வந்த மகாதேவருக்கு திருக்கோயில் எழுப்பினர். திருக்கோயிலில் உறையும் மூர்த்தியை "புனலூர் பிராமணர்" குலத்தை சேர்ந்தோர் பிரதிஷ்டை செய்தனர். "திருவைராணிக்குளம் மகாதேவர்" என்ற திருநாமம் சூட்டி அனைவரும் வழிப்பட்டனர்.    

மகாதேவர் குடிகொண்ட தலத்திற்கு பார்வதி தேவியும் தானே எழுந்தருளினாள். புராணங்களின் படி, அனுதினமும் பார்வதி தேவி மகாதேவருக்கு  திருக்கோயில் வளாகத்திலுள்ள திடப்பிள்ளியில் (தமிழில் மடப்பள்ளி) அமுது சமைப்பதாக ஐதீகம். அச்சமயம்,  திடப்பிள்ளியினுள் யாரும் நுழையக்கூடாது என்ற வழக்கம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இது உண்மையா என்ற சந்தேகம் ஒரு சிலருக்கு எழ, திடப்பிள்ளியினுள் சென்று பார்க்க துணிந்தனர். ஒரு நாள், திருக்கோயிலில் பூஜை செய்யும் தாந்திரி (பிராமணர்) ஒருவர், பார்வதி தேவி அமுது சமைப்பதாக நம்பப்படும் சமயத்தில், திடப்பிள்ளியின் கதவுகளை திறந்து உள்ளே சென்றார். புராணங்கள் பொய்க்காது. திடப்பிள்ளியினுள் அமுது சமைத்துக் கொண்டிருந்த பார்வதி தேவியைக் கண்டார். தன்னை மறந்து, தான் செய்த தவறை மறந்து, "அம்மே! ஜெகதாம்பிகே! லோகமாதா!" என கூவி தேவியை வணங்கினார். திரும்பி அவரை கண்ட தேவியோ சினம் கொண்டாள். ஒப்பந்தத்தை மீறிய காரணத்தால், தான் அவ்விடம் தங்க இயலாது எனக் கூறினாள். அதற்குள், தாந்திரியின் கூக்குரலை கேட்ட பலரும் திடப்பிள்ளியினுள் விரைந்து வந்தனர். சினம் கொண்ட பார்வதி தேவியைக் கண்டனர். தேவியைத் தொழுது மன்னிப்பு வேண்டினர். தாந்திரி தான் செய்த மகாபாவத்தை பொறுத்தருளும் படி வேண்டினார். அனைவரும், தேவி அவ்விடம் விட்டு நீங்கக்கூடாது என மன்றாடி வேண்டினர். சினம் தணிந்த பார்வதி தேவி, தான் நீங்குவதை எவராலும் தடுக்க இயலாது எனவும், பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, வருடத்தில் 12 நாட்கள் மட்டும் தான் திருவைராணிக்குளம் வந்து, வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தருவதாகவும் வாக்களித்தாள். மகாதேவரின் ஜென்ம நட்சத்திரமான, மலையாள மாதமான தனுவில் (தமிழ் மாதமான மார்கழியில்) வரும் திருவாதிரை தொடங்கி 12 நாட்கள் வரை தான் திருக்கோயிலில் வந்து தங்குவதாக கூறிவிட்டு சென்றாள். 

நடத்துறப்பு (தமிழில் நடைதிறப்பு) மகோத்சவம்: பண்டைய காலத்திலிருந்து இன்று வரை 12 நாட்கள் மட்டுமே பார்வதி தேவியின் சன்னதி திறந்திருக்கும். ஏனைய நாட்களில், மகாதேவர் சன்னதி மட்டுமே திறந்திருக்கும். பார்வதி தேவியின் சன்னதியை திறப்பது பெரும் விழாவாக நடைபெறுகிறது. சன்னதி திறக்கும் திருநாள் அன்று, பார்வதி தேவியின் திரு ஆபரணங்கள் "அக்காவூர் மனா" திருத்தலத்திலிருந்து திருக்கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும். அக்காவூர் மனாவுக்கு உட்பட மூன்று மனாக்களை சேர்ந்த அனைவரும் தேவியின் சன்னதி முன் கூடுவர். இவர்களால் தேர்ந்தெடுக்கபட்ட "சமுதாயீ" என்பவரும், "புஷ்பினி" என்றழைக்கப்படும் ஒரு பெண்ணும் அங்கு இருக்கவேண்டியது அவசியம். புஷ்பினி என்பவள் தேவியின் நெருங்கிய தோழி. குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து, சிறு வயது முதல் புஷ்பினிக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. நடத்துறப்பு மகோத்சவத்தின் போது புஷ்பினிக்கே முதல் உரிமை வழங்கப்படுகிறது. தேவியின் சன்னதிக்கு முன் இருக்கும் மண்டபத்தில், "உறன்மக்கர்" என்றழைக்கப்படும் பிராமணர்கள், வாழை இலை பரப்பி, அதன் மேல் மரக்கால் மற்றும் திருக்கோயிலின்  சாவிக்கொத்தை வைத்து, தொட்டுக் கொடுப்பர். மூன்று மனாக்களை சேர்ந்த அனைவரும், சமுதாயீக்கு அரிசி மற்றும் பணம் அளித்து, திருக்கோயிலை நிர்வகிக்க கோருவதையே இந்த சடங்கு உணர்த்துகிறது. திருக்கோயிலின் வழிப்பாட்டு முறைபடி அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்று கொள்வதைக் குறிக்கும் வண்ணம் வாழை இலையின் அருகில் சமுதாயீ வந்து நிற்பார். சன்னதி திறப்பதற்கு உரிய நேரம் வரும்போது, மூன்று மனாக்களை சேர்ந்த பிராமணர்கள், சமுதாயீ, மற்றும் புஷ்பினி சன்னதியின் முன் நிற்பர். புஷ்பினியின் கரங்களில் ஒரு தாளம் (தமிழில் தாம்பாளம்) இருக்கும். அதில் அக்ஷதம், பூக்கிலா (பூக்கள்), மற்றும் தீபம் ஒன்று இருக்கும். பார்வதி தேவி முழு அலங்காரத்துடன் மக்களை காணும் வேளை நெருங்க, புஷ்பினி சமுதாயீயை நோக்கி, "திருக்கோயிலின் காவலரே! மூன்று மனாக்களை சேர்ந்த அனைவரும் வந்து விட்டனரா?" என்று மூன்று முறை வினவுவாள். ஒவ்வொரு முறை வினவும் போதும், சமுதாயீ "ஆம்" என பதில் கூறுவார். அதன் பிறகு, புஷ்பினி சமுதாயீயை நோக்கி, "அடியேன் தேவியின் ஸ்ரீ கோயிலை (சன்னதியை) திறக்க சொல்லி உத்தரவு அளிக்கலாமா?" என்று மூன்று முறை வினவுவாள். ஒவ்வொரு முறை வினவும் போதும், சமுதாயீ "ஆம்" என பதில் கூறுவார். அதன் பிறகு, புஷ்பினி தாந்திரியிடம் தேவியின் ஸ்ரீ கோயிலை திறக்கும் படி உத்தரவு பிறப்பிப்பாள். தாந்திரி சன்னதியைத் திறப்பார். பிறகு, பார்வதி தேவியை திருக்கோயில் வளாகத்திலுள்ள இசை மண்டபத்திற்கு எடுத்து வந்து, சதுர வடிவ பலகையில் அமர செய்து, நைவேத்தியம் படைப்பர். புஷ்பினி சிறப்பு பாடல்களை பாடுவாள். இரவு நேரம், பார்வதி தேவியை மீண்டும் ஸ்ரீ கோயிலினுள் எடுத்து செல்வர். இவ்வாறாக, பகல் பொழுதை இசை மண்டபத்திலும், இரவு பொழுதை ஸ்ரீ கோயிலிலும் பார்வதி தேவி கழிப்பாள். அணைத்து சமயங்களிலும் புஷ்பினி பார்வதி தேவியுடன் இருக்கவேண்டியது அவசியம்....

12 நாட்களுக்கு பிறகு, ஸ்ரீகோயிலை மூடும் சமயம், மேற்கூறிய அனைவரும் மீண்டும் கூடுவர். புஷ்பினி சமுதாயீயை நோக்கி, "அனைவரும் பார்வதி தேவியை தரிசனம் செய்து விட்டனரா?" என்று மூன்று முறை வினவுவாள். ஒவ்வொரு முறை வினவும் போதும், சமுதாயீ "ஆம்" என பதில் கூறுவார். அதன் பிறகு, புஷ்பினி சமுதாயீயை நோக்கி, "அடியேன் தேவியின் ஸ்ரீ கோயிலின் நடையை அடைக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்கலாமா?" என்று மூன்று முறை வினவுவாள். ஒவ்வொரு முறை வினவும் போதும், சமுதாயீ "ஆம்" என பதில் கூறுவார். அதன் பிறகு, புஷ்பினி தாந்திரியிடம் தேவியின் ஸ்ரீ கோயிலை மூடும் படி உத்தரவு பிறப்பிப்பாள். தாந்திரி அவ்வண்ணமே செய்ய, அனைவரும் அவ்விடம் விட்டு நீங்குவர். "மனர்" எனப்படும் நபர், முரசு கொட்டி திருவிழாவை முடித்து வைப்பார். அடுத்த வருடமே தேவியின் சன்னதி திறக்கப்படும் என்பதை அறிவிக்கவே முரசு கொட்டப்படுகிறது. கேரள மாநிலத்திலுள்ள திருக்கோயில்களில், இப்படிப்பட்ட நடத்துறப்பு மற்றும் நடைமூடும் திருவிழா திருவைராணிக்குளம் திருக்கோயிலில் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது...

1.திருவைராணிக்குளம் மகாதேவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். அவருக்கு நேர் பின்புறம் மேற்கு நோக்கி பார்வதி தேவி அருள்பாலிக்கின்றாள். இப்படிப்பட்ட அமைப்பு காண்பதற்கு அரிது. 
2. அனுதினமும் மகாதேவருக்கு நாலுகால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. ஒரு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. 12 நாட்களுக்கு மட்டுமே பார்வதி தேவி இத்தலத்தில் வாசம் செய்கிறாள் என்ற போதும், அனுதினமும் ஒரு நைவேத்தியம் தேவியின் மூடியிருக்கும் சன்னதியின் முன் படைக்கப்படுகிறது. 12 நாட்கள் திருவிழாவின் போது, பலவகையான நைவேத்தியங்கள் தேவிக்கு படைக்கப்படுகின்றன. 
3. அனைத்து திருத்தலங்களிலும் நந்திதேவர் வாகனமாகவே வணங்கப்படுகிறார். இத்தலத்தில் மட்டும் பிரதான தெய்வங்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அனுதினமும் இவருக்கு ஒரு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. தாந்திரியைத் தவிர, நந்திதேவரை தொடும் உரிமை எவருக்கும் இல்லை. கோயிலை சுத்தம் செய்யும் ஊழியர், சமுதாயீ என எவருக்கும் உரிமை இல்லை. தவறுதலாக எவரேனும் தொட்டு விட்டால், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. 
4. அக்காவூர் சாத்தன் கவிழ்த்துப்போட்ட படகை திருக்கோயில் வளாகத்தில் இன்றும் நாம் காணலாம். இது "சாத்தன் கல்" என அழைக்கப்படுகிறது.
5. வரநாட்டு மடம் என்ற மிகப்பெரிய நிலப்பரப்பை திருக்கோயில் வளாகத்தில் இன்றும் காணலாம். மகாதேவர் சென்ற கிணறு, வெளிப்பட்ட குகை என அனைத்தும் திருக்கோயில் வளாகத்தில் உள்ளன.
6. திருக்கோயில் வளாகத்தில் உள்ள "பலிக்கால் புரா" (தமிழில் பலிபீடம் உள்ள தலம்) என்ற இடத்தில் உள்ள மரப்பலகையில் ராமாயணம் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. இந்த அற்புத ஓவியத்தைக் காண வெளிநாட்டவரும் வருகின்றனர். 
7. பார்வதி தேவிக்கு பட்டு, தாலி, மஞ்சள் போன்றவற்றை பக்தர்கள் வழங்குகின்றனர். இப்போது ஒருவர் வழங்க எண்ணினால் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். இதுதவிர, வாழ்க்கண்ணாடி (கேரளா மாநிலத்தில் மட்டுமே கிடைக்கும்), நெல்பரா, மலர்பரா, அரிப்பரா, சர்க்கரபரா, தீபம், த்ரிமதுரம் போன்றவற்றை தேவிக்கு வழங்குகின்றனர். தேவியின் மேல் சாற்றப்பட்ட பட்டு துணியை பக்தர்களிடம் திருக்கோயில் அளிக்கிறது. இதை இல்லத்தில் வைத்துக் கொள்வது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. 
8. திருமண தடை நீங்க "சுயம்வர அர்ச்சனை" செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு நடை திறப்பதற்கு முன், திருமணம் கைகூடிவிடும் என்பது நம்பிக்கை.
9. பார்வதி தேவி வாசம் செய்யும் 12 நாட்களும் திருக்கோயில் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

இக்கோவிலில் தினசரி காலை 4.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் மகாதேவருக்குத் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு, சிவராத்திரி, பிரதோசம் போன்ற சிவபெருமானுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் மகாதேவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைத் திருநாளில் தொடங்கி எட்டு நாட்கள் இங்கு சிறப்பு விழா ஒன்றும் நடைபெறுகிறது. இவ்விழாவில் நடைபெறும் ஆறாட்டு விழா மிகவும் சிறப்புடையதாக இருக்கிறது. இவ்விழா நாட்களில் நடைபெறும் அன்னதானத்தில் கலந்து கொண்டு, உணவு உண்பவர்களுக்கு வயிறு தொடர்புடைய அனைத்து நோய்களும் நீங்கிவிடும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இக்கோவிலில் இருக்கும் பார்வதி தேவி சன்னிதி திறந்திருக்கும் பன்னிரண்டு நாட்களில் இங்குள்ள பார்வதி தேவியைத் திருமணத்தடை உடையவர்கள் வழிபட்டுச் சென்றால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர் களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும். பிரிந்திருக்கும் தம்பதியர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மறைந்து, அவர்களிருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வர் என்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

திருவைராணிக்குளம் கோவிலில் இருக்கும் சிவபெருமானின் சடை முடி பின்பகுதியில் விரிந்து கிடக்கிறது என்று இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், இக்கோவிலில் அடையாளமிட்ட பகுதியைக் கடக்காமல் திரும்பி வந்து விட வேண்டும். இதன் காரணமாக, இங்கு கோவிலை முழுமையாகச் சுற்றி வர முடியாது. இக்கோவிலில் பார்வதி தேவி சன்னிதி 12 நாட்கள் மட்டும் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்படும். மற்ற நாட்களில் சாளரம் வழியாக வழிபட்டுக் கொள்ள வேண்டும். கோவில் பிரகாரத்தில் பழமையான அரசமரம் ஒன்றும், நெல்லிமரம் ஒன்றும் மேடையமைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

இக்கோவிலில் திருமணம் வேண்டி மலர் வழிபாடு செய்பவர்களுக்கு பழக்கலவை சிறப்புப் பிரசாதமாக வழங்கப் படுகிறது. 

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவிலிருந்து அங்கமாலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீமூலநகரம் சென்று, அங்கிருந்து வல்லோம் சாலையில் 1½ கிலோ மீட்டர் தூரமும், அங்கிருந்து அகவூர் திருவைராணிக்குளம் செல்லும் சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரமும் என மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. ஆலுவா, காலடி ஆகிய ஊர்களிலிருந்து திருவைராணிக்குளத்திற்குக் கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...