Showing posts with label இராமகிரி. Show all posts
Showing posts with label இராமகிரி. Show all posts

Thursday, February 3, 2022

இராமகிரி

இராமகிரி

பிரதோஷம் நடைபெறாத சிவதிருத்தலம் 
சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருட்டப்பள்ளியை அடுத்து தற்போது இராமகிரி என்றழைக்கப்படும் திருக்காரிக்கரை என்னும் ஊர் உள்ளது. இங்கு மூலவராக வாலீஸ்வரர் அருள்கிறார். அம்பாளின் திருநாமம் மரகதாம்பாள் என்பதாகும். பஞ்ச பிரம்ம திருத்தலங்களில், சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய திருத்தலமாக விளங்குகிறது இத்திருத்தலம். இந்த திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே அனுமன் வீற்றிருப்பது அபூர்வமான அமைப்பாகும். 
இராவணனை வதம் செய்ததால், இராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷத்தை போக்கிக் கொள்வதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்த இராமபிரான், அதற்காக சிவலிங்கம் கொண்டுவர அனுமனை காசிக்கு அனுப்பினார். அனுமனும் காசிக்குச் சென்று அங்கிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு திரும்பினார்.
ஆனால் காசியின் காவல் தெய்வமாக இருக்கும் காலபைரவரின் அனுமதியை அனுமன் கேட்காமல் சிவலிங்கத்தை எடுத்து சென்றதால் அனுமனை, பைரவர் தடுத்து நிறுத்தினார். அதே நேரத்தில் தேவர்கள் பலரும் அங்கு வந்து, இராமரின் பூஜைக்காக சிவலிங்கம் தேவைப்படுவதைக் கூறி, அனுமனை செல்ல அனுமதிக்கும்படி வேண்டினர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலபைரவர், அரைமனதுடன் அனுமன் சிவலிங்கத்தை எடுத்துச்செல்ல அனுமதித்தார்.
இருந்தாலும் காலபைரவரின் மனம் சமாதானம் ஆகவில்லை. எப்படியாவது சிவலிங்கத்தை மீட்க வேண்டும் என்று நினைத்தார். சூரிய பகவான் மற்றும் வருணபகவான் துணையுடன் அனுமனுக்கு கடுமையான தாகம் ஏற்படும் படிச் செய்தார். அதனால் சிவலிங்கத்தை கொண்டு செல்லும் வழியில் தாகத்தால் அனுமன் தவித்தார்.
அப்போது கங்கா தேவியிடம், “அனுமன் செல்லும் வழியில் ஒரு நீர்நிலையை ஏற்படுத்தவேண்டும்” என்று காலபைரவர் கூறினார். அதன்படியே கங்காதேவி அங்கே ஒரு குளத்தை ஏற்படுத்தினாள். குளத்தைக் கண்டதும் அனுமனுக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது. அந்த வேகத்திலேயே அவருடைய உற்சாகம் வடிந்தும் போனது. கையில் வைத்திருக்கும் சிவலிங்கத்தை யாராவது வாங்கிக் தண்ணீர் அருந்தமுடியும்? அனுமன் சுற்று முற்றும் பார்த்தார். அதற்காகவே காத்திருந்த காலபைரவர், ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு அனுமன் முன்பாகத் தோன்றினார்.
அந்தச் சிறுவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்த அனுமன், “எக்காரணத்தைக் கொண்டும் சிவலிங்கத்தைக் கீழே வைக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு தண்ணீர் அருந்தச் சென்றார். அனுமன் அந்தப் பக்கம் போனது தான் தாமதம், சிறுவனாக வந்த காலபைரவர் சிவலிங்கத்தை தரையில் வைத்துவிட்டு மறைந்து விட்டார்.
திரும்பி வந்து பார்த்த அனுமன், தான் கொண்டு வந்த சிவலிங்கம் தரையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அந்தச் சிவலிங்கத்தை கைகளால் எடுக்க முயன்றார். அவரால் எடுக்க முடியவில்லை. வாலினால் கட்டி இழுக்க முயன்றார். ஆனாலும் இயலவில்லை. தன்னிடம் இருந்து சிவலிங்கத்தைப் பெற்று கீழே வைத்தது காலபைரவர்தான் என்பதை உணர்ந்துகொண்ட அனுமன், காலபைரவரை வழிபட்டு அவருடைய அருளால் மற்றொரு சிவலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு இராமேஸ்வரம் சென்றதாகத் தலவரலாறு கூறுகிறது.
‘தனக்கு இப்படி ஒரு நிலை இந்தக் குளத்தால் தானே ஏற்பட்டது’ என்ற கோபத்தில், அனுமன் அங்கிருந்த சிறு மலையைப் பெயர்த்து குளத்தில் வீசினார். இராமபிரானின் வழிபாட்டுக்காக அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் அந்த மலை மீது பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு இராமகிரி என்றும் பெயர் ஏற்பட்டது.
அனுமன் வாலினால் கட்டி இழுத்ததால், இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் ‘வாலீஸ்வரர்’ என்னும் திருப்பெயர் கொண்டார். இறைவனின் சன்னிதிக்கு நேராக ஆஞ்சநேயரும், அவருக்கு அடுத்தபடியாக நந்திதேவரும் காட்சி தருகிறார்கள். நந்தியின் வாய் பகுதியில் இருந்து நீர் சுரந்தபடியே இருக்கிறது. எந்த காலத்திலும் வந்துகொண்டே இருக்கும் இந்த நீர், மலையின் உச்சியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. 
இந்தத் திருத்தலத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் காரணமாக இருந்த காலபைரவர், சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டு வந்து பைரவருக்கு கொடுத்து விட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை விலையாகக் கொடுத்து திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள். ‘திருக்காரிக்கரை’ என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் திருத்தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார். சிவபெருமானுக்கு முன் நந்தி இல்லாததால் இங்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை.
கோவிலுக்கு வெளியில் ஒரு தீர்த்தக் குளம் இருக்கிறது. அந்த தீர்த்தக் குளத்தின் ஒரு கரையில் இருக்கும் நந்தி சிலையின் வாயில் இருந்து, தீர்த்தக் குளத்துக்குள் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தீர்த்தம் ‘நந்தி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் இருந்து வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டு இருக்குமாம். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. தண்ணீர் சுவையாக இருக்கும். நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியம் தரும் வல்லமை மிக்கதாக இத்தீர்த்தம் உள்ளது என்கிறார்கள்.  
ஓம் நமசிவாய.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...