Sunday, August 27, 2023

டாஸ்மாக்

டாஸ்மாக்
நேற்று டாஸ்மாக்கில் RC விஸ்கி கேட்டு நின்றேன். விஸ்கி இல்லை. 1848 என்ற விஸ்கி இருப்பதாகச் சொன்னார்கள். முன்பு ஒருமுறை அதை முயற்சி செய்த அனுபவம் இருப்பதால் வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். என்ன குடிக்கலாம் என யோசித்தபோது உடன் வந்த நண்பன் Chevalier பிராந்தி எடுக்கச் சொன்னான். பல வருடங்களுக்குப் பிறகு பிராந்தி பக்கம் திரும்பினேன்.

இரவு பதினோரு மணிவரைக்கும் பேசிக்கொண்டே இருவரும் மது அருந்தினோம். பிராந்தியின் சுவையை என்னால் ரசித்து அனுபவிக்க முடியவில்லை. பெர்ஃபியூமில் தண்ணீர் கலந்து குடித்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது மணமும் சுவையும். ஒரு மிடற் கூட என்னிஷ்டப்படி இறங்கவில்லை. ஒரு குவாட்டர் மற்றும் இரண்டு அவுன்ஸ் குடித்திருப்பேன். அதற்குமேல் ம்ம்ஹூம். இரவு உணவு முடித்து அரை சொம்பு அளவுக்குத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தேன். 

காலையில் எழுந்தபோது தலையில் தனியாக எதோ ரசாயன மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தது. தலை தனியாக செயல்பட்டது. இரண்டு நெற்றிப்பொட்டை சுற்றியும் அப்படி ஒரு அழுத்தம். Leh Ladakh பக்கம் பல இடங்களில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அங்கெல்லாம் தலைக்குள் இது மாதிரி அழுத்தம் ஏற்பட்டு மூச்சுத் திணறல் வரும். இன்று காலையில் எனக்கு மூச்சுத் திணறல் மட்டும் இல்லை. மற்றபடி எல்லாம் உண்டு. நெற்றிப்பொட்டின் இரண்டு பக்கமும் விரலால் அழுத்தியபடி அமர்ந்திருந்தேன்.

இந்தப் புதிய உணர்நிலைக்கு மத்தியில் மனம் மதுவை வேண்டியது. கொஞ்சம் மது எடுத்துக்கொள்ளுமாறு மூளை என்னை உந்தியது. உலகின் எத்தனை பெரிய மதுவையும் நான் அதிகாலையில் குடித்தது கிடையாது. ஆனால் பின்னிரவின் தொடர்ச்சியை கைவிடாமல் மறுபடியும் போதையில் திளைக்கத் தூண்டிய என் எண்ணங்கள் எனக்குப் புதிய அனுபவம். 

தொடந்து மது எடுத்துக்கொள்ளச் சொன்ன என் மனதின் குரலை தீர்க்கமாக நிராகரித்தேன். செல்ஃபோனை எடுத்து இரவில் உடனிருந்த நண்பனை அழைத்தேன். பிரந்திக்குப் பிறகான என் உடல் மற்றும் மனநிலை குறித்த விளக்கத்தை அவனிடம் பகிர்ந்தேன்.

தமிழ்நாட்டு மக்கள் காலையில் எழுந்ததும் குடிக்கிற காரணம் இப்போது புரிந்தது. இரவில் இவர்கள் அருந்துவது மதுவே கிடையாது. எல்லாம் கெமிக்கல். இந்தக் கெமிக்கல் மனித மூளையை சிறை பிடிக்கிறது. அதனுடைய கட்டுப்பாட்டை இழக்கவைக்கிறது. போதை இறங்கிய பின்னர் மறுபடி உடனே போதையேற்றிக்கொள்ளத் தூண்டுகிறது. 

என்னோட வாழ்நாள்ல இப்டி காலைல சரக்கடிக்கனும்னு தோனுனதே கெடையாது மாப்ள என நண்பனிடம் புலம்பினேன். நான் புலம்புவதை சிரித்துக்கொண்டே கேட்டான்.

கண் விழித்த பத்து நிமிடத்தில் ஒரு மனிதனை மது அருந்த மனம் உந்தினால் அவன் பாவமில்லையா? காசு கொடுத்துக் குடிக்கும் மக்களுக்கு கெமிக்கலை கலந்து கொடுத்து தீராத குடிப்பழக்கத்துக்கு ஆளாக்குவது கருணையற்ற கேடான செயல்.

தேடி வந்த போதையுடன் திருப்தியாக திரும்பிச் செல்லும் ஒருவனுக்கு உபரியாக ஒன்றைத் தருகிறது அரசாங்கம். போதை தெளிந்த கொஞ்ச நேரத்தில் அவன் மறுபடியும் திரும்பி வரவேண்டும். இதுதான் இலக்கு. கெமிக்கல் கலந்து கொடுத்தால் மூளை அவன் கட்டுப்பாட்டில் இருக்காது. ரசாயனத்தின் சொற்படி கேட்கும். திரும்ப வருவான். திரும்பத் திரும்ப வருவான்.

உலகின் பல நாட்டு மது வகைகளை ருசித்திருக்கிறேன். ஒவ்வொரு ஊரின் பிரத்தியேக வடிப்பு சாராயங்களை குடித்திருக்கிறேன். இதில் எங்குமே இல்லாத அதிமோசமான ஒன்று டாஸ்மாக்கில் விற்கப்படுகிறது. 

மக்களை குடிகாரர்கள் எனக் கைகாட்டி சுலபமாகத் தப்பிக்கலாம். ஆனால் வியாபாரம் செய்யும் அரசாங்கம் கெமிக்கல் கலந்து கொடுத்து தொடந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கும் வேலையைச் செய்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

குடி குடியை கெடுக்கும்

மாறுவோம் ...🙏

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...