Showing posts with label பாவமூட்டையை ஏத்தாதே. Show all posts
Showing posts with label பாவமூட்டையை ஏத்தாதே. Show all posts

Tuesday, March 15, 2022

பாவமூட்டையை ஏத்தாதே

பாவமூட்டையை ஏத்தாதே!...

பெரியவாளை தர்ஶனம் பண்ண பெரிய க்யூ ! ஒரு பக்தரின் முறை வந்தது. கையில் வைத்திருந்த பூ, பழங்களை பெரியவா பக்கத்தில் இருந்த தட்டில் வைத்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தார்.

"பாரு..... ஒம்பிள்ளேளுக்கும்...ஒன் குடும்பத்துக்கும் ரொம்ப நல்லது பண்றதா நெனைச்சிண்டு, மேல மேல பாபமூட்டையத்தான்.... அவா பேர்ல ஏத்திண்டே இருக்க!..."

பெரியவாளின் குரலில் கண்டிப்புத் தெரிந்தது...!

பக்தர் திடுக்கிட்டுப் போனார்.

"#பெரியவா என்ன சொல்றேள்? மனஸறிஞ்சு நா... எந்தத் தப்பும் பண்ணலியே!..."

"ப்ராஹ்மணனா பொறந்தவன்... அன்னத்தை விக்கப்படாதுன்னு ஶாஸ்த்ரத்ல சொல்லியிருக்கு! நீ... அத.... படிச்சதில்லியோ?....."

பக்தர் முழித்தார்...! ஏனென்றால்... அவர் ஹோட்டல் ஒன்று நடத்திக் கொண்டிருந்தார்.

எனவே...என்ன பதில் சொல்லுவார்?

"ஸெரி ....பொழைப்புக்காக அன்னத்தை விக்கற..ன்னு வெச்சிண்டாக்கூட, அதுக்கு மேலே இன்னொரு பெரிய பாபத்தையும்ன்னா பண்ணிண்டிருக்க!...."

பக்தர் குழம்போ குழம்பென்று.. குழம்பினார்.

"சேத்து வெச்சிருக்கற பணம் போறாதுன்னு... அத... வட்டிக்கு வேற விட்டு, அந்யாயமா பணத்தை வஸூல் பண்றியே! இது... நீ... ஒன்னோட அடுத்த தலைமுறைக்கும்.. சேத்து வெக்கற பாபம்ங்கறத... மறந்துடாத!..."

தான்... பணத்தை வட்டிக்கு விடுவது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? என்று அவர் யோஜனை பண்ணி முடிக்கும் முன், பெரியவா தொடர்ந்தார்....

"...நீ கேக்கற அந்யாய வட்டியை குடுக்க முடியாம, திக்கித் தெணறி ஒருவழியா அதத் திருப்பித் தரச்சே... அவாள்ளாம் வயறெரிஞ்சு ஒன்னையும், ஓங்குடும்பத்தையும் ஶபிக்க மாட்டாளா? சொல்லு...."

பெரியவா இதைச் சொன்னதும், அப்படி ஶாபம் வாங்கிய, பல ஸம்பவங்கள் பக்தரின் மனஸில் ஓடியது.

"இந்த... பாவமூட்டை, ஒன்னோட ஸந்ததிகளோட.. தலைமேலன்னா... ஏறி ஒக்காந்துக்கும்! அத... எப்டி எறக்கப் போற? நீ சேத்து வெச்ச பணம் போறாதா? எதுக்கு... மேல மேல ஆசைப்பட்டு ஒன் ஸந்ததிக்கி...பெரிய்ய... பாவமூட்டையை சேத்து வெக்கற?.." 

பெரியவா முடிக்கவில்லை, பக்தர் அப்படியே 'தடால்' என்று, நெடுஞ்சாண்கிடையாக பெரியவா பாதத்தில் விழுந்து அழுதார்.

"மன்னிச்சிடுங்கோ பெரியவா! இனிமே நா... என்ன பண்ணணும்..ன்னு சொல்லுங்கோ.."

கங்கையாகக் குளிர்ந்தார் பெரியவா....

"ரொம்ப ஸந்தோஷம். நீ இதுவரைக்கும் சேத்து வெச்ச பணம்... ஒன்னோட தலைமொறைக்கு போறும். மொதல்...ல நீ... நடத்தற ஹோட்டலை மூடு! "அன்னம்"ன்னு கேட்டுண்டு வரவாளுக்கு... ஒங்காத்ல ஸாப்பாடு போடு. வட்டிக்கு பணம் குடுத்து வாங்கறத... நிறுத்து!.."

"அப்டியே செய்யறேன் பெரியவா......"

"இரு.இரு. இன்னும் விஷயம் பாக்கி இருக்கே!...இதுவரைக்கும்... நீ வாங்கின வட்டிய....மொத்தமா கணக்கு போடு. எவ்ளோ..பணம் வருதோ....அத.. மொத்தமா எடுத்துண்டு போயி, அப்டியே திருப்பதி ஏழுமலையான் உண்டியல்ல போட்டுட்டு, அவர... கும்புட்டுட்டு வா!..."

"பெரியவா காமிச்ச வழிலேயே போறேன்... மன்னிச்சிடுங்கோ! .."

ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.

உண்மைதான்! பணத்தில் மட்டுமா வட்டிக்கான பாபம் வரும்? வார்த்தைகளால், மனஸால் எத்தனை பேருடைய மனங்களை காயப்படுத்தி, அதில் ஸந்தோஷத்தை காண்கிறோம்? இவற்றையெல்லாம் எங்கு கொண்டு போய் தொலைப்பது?

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...