Thursday, February 8, 2024

தை பூசம் - 25.01.2024

 தைப் பூச தாண்டவம்

ஆனந்த நடனம் காண்போம் ! ஆனந்தம் அடைவோம் !!

(சிதம்பரம் சித்ஸபையில் நடராஜர் நடனமாடிய நாள் - தை பூசம் - 25.01.2024)     

                                                                                                                                        

ஓம் க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்

சதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி ||

எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி

எங்குஞ் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்குந்

தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.

- திருமந்திரம்

பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் பெரும் தவம் செய்து வேண்டியதற்கு இணங்க, சிதம்பரத்தில் தை மாதம், பூச நட்சத்திரம், பெளர்ணமி, பகல் நேரம் கூடிய நன்னேரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் கொண்டருளினார்.சிதம்பரம் - மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் - இம்மூன்றினாலும் சிறப்புற்ற ஸ்தலம்.

தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம். 

சிதம்பர க்ஷேத்ரத்தின் தச (10) தீர்த்தங்களுள் முக்கியமானது. காசியில் உள்ள கங்கையை விட மேலானது. மிகவும் புனிதம் வாய்ந்தது. சிவசக்தி ரூபங்கள் இணைந்தது. ஸ்ரீ நடராஜப் பெருமானின் தங்க மேனியில் தவழ்ந்த அபிஷேக தீர்த்தம் சேரும் இடமாதலால், சிவகங்கையே பொற்குளம் போல் காட்சியளிக்கின்றது. இங்கு ஸ்நானம் செய்வதால் பொன்னார் மேனியனின் திருவருளால் தேகம் புனிதமடைகின்றது. கெளடதேசத்து சிம்மவர்மன் உடல் குறை நீங்க இங்கு ஸ்நானம் செய்து தங்க மேனியனாக ஹிரண்யவர்மனாக மாறினான்.

இக்குளத்தின் வருண (மேற்கு) திசை வாயிலில், ஸ்வாமி தீர்த்தம் கொடுப்பதே தைப் பூச தினத்தின் மிக முக்கிய நிகழ்வு.ஸ்தலம் : சிதம்பரம். 

சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம்.

மூர்த்தி : ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.

வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.

புராண விளக்கம் :

ஒரு சமயம், மஹா விஷ்ணு யோக நித்திரையிலிருந்து பரவசத்துடன் எழ, அவரைத் தாங்கிய ஆதிசேஷன், திடீர் மகிழ்விற்கான காரணம் கேட்க, விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தக் கூத்தினை அனுபூதியாக விளக்க, தானும் அக்காட்சியைக் கண்டுணர வேண்டும் என வரம் கேட்க, விஷ்ணு அருள்பாலிக்க, ஆதிசேஷன், அத்ரி ரிஷியின் பத்னியாகிய அநசூயயின் குவிந்த கைகளில் (அஞ்சலி -குவிந்த கரம்) நாகமாக வந்து, பாதங்களில் விழுந்ததால் பதஞ்சலி என பெயர் பெற்று, தில்லை ஸ்ரீ மூலநாதரை, மத்யந்தின மகரிஷியின் மகனாகிய ஸ்ரீ வியாக்ரபாதர் என்ற புலிக்கால் உடைய முனிவருடன் வழிபாடாற்றி வந்தார்.

தேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது.தை மாதம் - மகிழ்ச்சி பொங்கும் மாதம். சூரியன் தனது அயனத்தை (பாதையை) மாற்றும் மாதம். யோக குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு உரிய நக்ஷத்திரம் பூசம். ஆடுவதும் (dynamic) அவரே, அமைதியும் அவரே (static) என்றுணர்த்தவே, ஆட்டமாடி ஆட்டுவிக்க, ஆடாமல் ஆட்டுவிக்கும் யோக தக்ஷிணாமூர்த்திக்குரிய நாள், நக்ஷத்திரம், பகல் நேரம் என உத்தமமான வேளை வந்தது.தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.ஆனந்த நடனமாடிய அம்பலவாணர், தவம் செய்த பதஞ்சலியை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, பதஞ்சலியோ தாம் கண்ட இத்திருக்காட்சியை எதிர்காலத்தில் அனைவரும் காண வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில், நடராஜ ராஜர் பொன்னம்பலத்தின் எப்பொழுதும் பதஞ்சலியாமல் (பாதம் சலிப்படையாமல்) ஆடவேண்டும் என பெருவரம் கேட்டார். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றௌ உடன் அருளும் குஞ்சிதபாதர், பதஞ்சலிக்கு அவ்வண்ணமே அருள்பாலித்தார்.

நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.

அண்டத்தின் அசைவைக் காட்டுவது ஆனந்த நடனம். இந்நடனத்தை வேதாந்த சித்தாந்தங்கள் மிக அற்புதமாக விளக்குகின்றன. உருவம் (ஸ்ரீ நடராஜர்), அருவம் (சிதம்பர ரகசியம்), அருவுருவம் (ஸ்படிக லிங்கம்) என மூன்று வடிவங்களிலும் அமைந்து, மும்மலங்களை (ஆணவம், கண்மம், மாயை) அகற்ற காட்சி தருகின்றார். அசைவதும், அசையாததும், இரவும், பகலும், ஒலியும், ஒளியும், வெம்மையும், குளிரும் அனைத்தும் அவரே.அணுவுக்குள்ளும், அண்டசராசரமெங்கும் நடமிடுபவரும் அவரே. பக்தர்களின் வேண்டுதல்களை செவி கொடுத்துக் கேட்டு வரமருளும் தோடுடைய செவியன். எவரும் விரும்பாத ஊமத்தம்பூ, பாதி வளர்ந்த சந்திரன் போன்ற குறைகள் கொண்ட அனைத்தையும் தாம் ஏற்றுக் கொண்டு, தம்மை தரிசிப்பவர்களுக்கு அருளை நிரம்ப வாரி வழங்குபவர்.தைப் பூச தினத்தில் பஞ்ச மூர்த்தி வீதியுலா வந்து, பகல் நேரத்தில், சிவகங்கைக் குளத்தின் மேற்கு வாசலில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி அருகிருக்க, ஸ்வாமி தீர்த்தவாரி (அனைவருக்கும் அருளுதல்) நடைபெறும். மதிய வேளையில் கனகசபையில் தரை முழுவதும் அன்னம் நிரப்பி, ஸ்ரீ நடராஜ ராஜருக்கு நிவேதனம் செய்து, அனைவருக்குமான அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.

தைப்பூச அன்னதான பாவாடை ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகின்றது. எதிரிலிச் சோழன் குலோத்துங்கன் சிவபாதசேகரன் எனும் சோழ மன்னன் தைப்பூச அன்னப்பாவாடையை நிகழ்த்தினான் என்று பழங்கால செப்பேடு தெரிவிக்கின்றது.தைப்பூச தினத்தில் சிவகங்கையில் ஸ்நானம் செய்வதால், பாபங்கள் அனைத்தும் நீங்கி, பெரும் செல்வம் மற்றும் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

தைப்பூச நன்னாளில் சிவகங்கையில் நீராடி, ஆனந்த நடனமிடக் காரணமாகிய ஸ்ரீ மூலநாதரையும், பொன்னம்பலத்தில் விளங்கும்                ஸ்ரீ நடராஜ ராஜரையும் தரிசித்து பேரின்பப் பயன்பெறுவோம்.

பதவி உயர்வு அளிக்கும் பாதாள செம்பு முருகன்

 













ஶ்ரீவானமாமலை திவ்ய சேத்திரத்தில் உள்ள எண்ணை கிணறு

 கீழே படத்தில் நீங்கள் காண்பது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஶ்ரீவானமாமலை திவ்ய சேத்திரத்தில் உள்ள எண்ணை கிணறு


ஆகா இது நீங்கள் நினைப்பது போல் அரபுநாட்டு எண்ணை கிணறல்ல


வானமாமலை திவ்யதேச பகவானுக்கு தினமும் சாற்றுபடி (அபிஷேகம்) ஆகும் தைலகாப்பு ( நல்லெண்ணை அபிஷேகம்) தேக்கி வைக்கபடும் கிணறு போன்ற ஒன்று

அதாவது பகவான் ஶ்ரீவானமாமலை தெய்வநாயக பெருமாள் ஜீயர்ஊற்றில் (சேற்று தாமரை என்னும் குளத்தில் உள்ள ஒரு இடம்) ஸ்வமாயாக தோன்ற  திருவுள்ளம் கொண்டு பகவானே கருடன் மூலம் காட்டி கொடுத்த (ஸ்வயம்வக்த சேத்ரம் மொத்தம் 8 அந்த எட்டில் முதன்மையான ஸ்தலம் நம் வானமாமலை) இடத்தை தோண்டும் போது தவறுதலாக தோண்ட உபயோகித்த ஆயுதம் பகவான் தலையில் பட்டு அதன் காரணமாக பகவான் தலையில் இருந்து வடிந்த திரவத்தை தடுக்க எண்ணி அவருக்கு சிறப்பு தைலம் சாற்ற 

அன்றுமுதல் இன்றை வரை பகவானுக்கு தினமும் சாற்றுபடி ஆகும் தைலம் மற்றும் பால் இளநீர் போன்ற இதர அபிஷேக தீர்தங்கள் கோயில் கருவரை கோமுகி வழியாக உட்பிராகரத்தில் இருக்கும் ஶ்ரீராமர் சன்னதி அருகே வந்து சேரும் அந்த தைலத்தை தகர டப்பாக்களில் பிடித்து இந்த கிணற்றில் (கிணறு போன்ற இடத்தில்) கொட்டி வைத்து காலம் காலமாக பாதுகாக்க படுகிறது இதனையே இவ்வூரில் எண்ணைகிணறு என பழங்காலத்தில் இருந்தே அழைக்கின்றனர்

இந்த பகவானுக்கு அபிஷேகம் செய்து சேர்த்து வைக்கும் எண்ணை கிணற்றுக்கு சில வருடம் முன்பு வரை மேற்கூரை கிடையாது  ஆகையால் வெயில் மழை என இதன் மேல் பட்டு பட்டு இந்த எண்ணை காலப்போக்கில் இயற்கையாகவே மேலும் மேலும் பக்குவமடைவதால் சிறந்த மருத்துவ தைலமாக மாறி விடுகிறது இதனை சஞ்சீவினி தைலம் ( எண்ணை) என்பர்

அதாவது இந்த எண்ணையை ஒருமண்டலம் உடலில் நன்கு தெப்ப தெப்ப தேய்த்து உடலை நன்கு ஊரவைத்து நீராடிவர உடலில் உள்ள பல நேரடி மற்றும் மறைமுக வியாதிகள் குணமாவதாக அதீத நம்பிக்கை மற்றும் பலரது அனுபவமும் கூட

இந்த தைலத்தை தினமும் ஒருசிறு அளவில் உள்ளுக்கு உட்கொண்டு வர உடலின் உள்ளே ஏற்பட்ட பல தீராத உடல் வியாதிகள் தீருகிறது என்பது நம்பிக்கை பலர் அனுபவத்திலும் கண்டு உள்ளனர்

கோயிலிலேயே இந்த தைலம் சிறு சிறு பாட்டிலில் கிடைக்கிறது (விலை ₹25/- என நினைக்கிறேன் முன்பு ₹15 ஆக இருந்து)

தற்போது இந்த எண்ணை கிணற்றுக்கு மேல் வெளிச்சம் படுமாறு வெள்ளை நிற கூரை வேய்ந்து உள்ளதால் மழைஜெலம் விழுவதில்லை சூரிய கதிரும் முன்புபோல் விழுவதில்லை

பகவான் அபிஷேக தைலம் கோமுகியில் இருந்து மோட்டார் மூலம் கிணற்றுக்கு செல்கிறது

ஆனாலும் இதன் மருத்துவகுணம் இன்றும் மாறவில்லை

பகவானுக்கு அனுதினமும் நடக்கும் (21/2 லிட்டர் தைலம் கொண்டு) தைல காப்போடு அன்றைய தினம் ஏதாவது அபிமானிகள் பக்தர்கள் தங்களது பிறந்தநாள் திருமணநாள் அல்லது உறவினர் நண்பர் மற்றும் தங்களது குழந்தைகளின் நட்சத்திரம் போன்ற வைபவத்துக்காக பிரார்தனை செய்து காணிக்கையாக தரும் எண்ணையை (கோவிலில் பணம் கட்டிவிட்டால் அவர்களே நல்ல செக்கில் உருவாக்கபட்ட நல்எண்ணையை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளனர் அதில் இருந்து தேவைக்கு எடுத்து கொள்வர்) கொண்டும் தைல காப்பு நடைபெறும் 

இது போக வருடத்துக்கு தற்காலத்தில் சில வருடங்களாக 6 முறை ஒருகோட்டை (256 லிட்டர்) எண்ணையால் அபிஷேகம் நடைபெறும் இதனை ஒருகோட்டை எண்ணை காப்பு என்பர்

இந்த வருடம் இந்த தை மாதம் அமாவாசை (01/2/2022 திங்கட்கிழமை) அன்று இவ்வூர் அதாவது வானமாமலை திவ்யதேச அபிமானிகள் சிஷ்யர்களால் இன்றைக்கு சுமார் 43 ஆண்டுக்கு முன் வானமாமலை மடம் /திருவல்லிகேணி வானமாமலை மடம் ஆகிய இடங்களில் அப்போதைய ஶ்ரீமடத்தின் ஆச்சாரியரான  ஶ்ரீவானமாமலை மடம் 27வது பட்டம் ஸ்வாமி ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீசின்ன ராமானுஜ ஜீயர் ஸ்வாமி வழிகாட்டுதல் படி கூடி பேசி வானமாமலை வித்வான்கள் பெரியோர்கள் அன்றய இளைஞர்களால் ஏற்படுத்தபட்ட  ஶ்ரீவானமாமலை ஶ்ரீவரமங்கை நாச்சியார் பக்த சபா மூலம் இவ்வருடம் தொடர்ச்சியான 43வது வருட ஒருகோட்டை எண்ணை காப்பு வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது

(01/2/2022) இரண்டு வருடங்களுக்கு முன் திங்கட்கிழமை பல்வ வருட தைமாத ( சேஷம்)அமாவாசை திருவோண நட்சத்திரத்தில் அன்று காலை 8.45 மணி அளவில் வானமாமலை ஶ்ரீமடத்தின் வர்த்தமான ஜீயரான(31வது பட்டம்) ஶ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் முனலனிலையில் நடைபெற தொடங்கும் தைலகாப்பு சுமார் 9.15 மணி அளவில் நிறைவடையும் அதை தொடர்ந்து பால் இளநீர் சந்தனம் திருமஞ்சனதிரவியம் வெள்ளி தங்க குடதீர்தம் என அபிஷேகம் 9.45 வரை நடைபெறும் தொடர்ந்து பகவத்அலங்காரம் அர்ச்சனை தூபதீப ஆராதனை சேவகாலகோஷ்டி ஆசாரியர் மரியாதை ஆசாரியர் மற்றும் கோஷ்டி பகதர்கள் என முறையே தீர்தம் சடகோபம் திருத்துழாய் ஜீரான்னபிரசாத விநியோகம் என வரிசையாக சுமார் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்

அன்றய தினம் ஶ்ரீமடத்தின் ஆச்சாரியரான  ஶ்ரீவானமாமலை மடம் 27வது பட்டம் ஸ்வாமி ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீசின்ன ராமானுஜ ஜீயர் ஸ்வாமி தீர்தம் நாள் (ஸ்வாமி பரம்பதித்த திதி) எனவே அன்று ஶ்ரீமடத்தில் விசேஷ சேவகாலம் கோஷ்டி தீர்தம் சடகோபம் மற்றும் அபிமானிகள் பக்தர்களுக்கு விசேஷ ததியாராதனை {தினமும் ததியாராதனை உண்டு ( ஜீயர் மடத்தில் எழுந்தருளி உள்ள காலங்களில்)} என நடைபெறும் (ததியாராதனை அநேகமாக மதியம் 2.30 மணி அளவில் நடைபெறும்)

அன்றய தினம் வானமாமலை ஊரே கோலகாலமாக இருக்கும்

மாலை கோவிலில் ஶ்ரீமடத்தில் அல்லது முன் மண்டபத்தில் விசேஷ உபன்யாசம் மற்றும் ஆடல் பாடல் விசேஷ வாத்யம் மற்றும் இரவு ஶ்ரீதோதாத்ரி ஸ்வாமி கருடவாகனத்திலும் தாயார்கள் முறையே அன்னவாகனம் கிளிவாகனம் என விசேஷபுறப்பாடு கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்

அனைத்து வைபவங்களும் முடிய மறுநாள் அதிகாலை 2.00 மணி ஆகிவிடும்

முடிந்தால் அன்பர்கள் வந்தருளி கண்டு பகவத் க்ருபைக்கும் ஆசாரியன் க்ருபைக்கும் ஒருமுறையாவது பாத்திரமாகும் படி கேட்டு கொள்கிறோம்


ஜெய் ஶ்ரீராம்!

குருவாயூரப்பன் தோன்றிய சரித்திரம்

 குருவாயூரப்பன் தோன்றிய சரித்திரம்

திருப்பாற்கடலில் திருப்பள்ளி கொண்டுள்ள மாலவன் எண்ணற்ற திருக்கோலங்களில் பக்தர்களுக்காக சேவை சாதித்து அருளுகின்றான். திருமலையில் ஸ்ரீவேங்கடவனாகவும், 

ஸ்ரீரங்கத்திலே ஸ்ரீரங்கநாதராகவும், இப்படி இன்ன பிற திருநாமங்கள் கொண்டு எண்ணற்ற க்ஷேத்திரங்களில் அருள் பாலித்து வருகின்றான். அப்படிப்பட்ட திருக்கோலங்களுள் குருவாயூரப்பனாக குடிகொண்டுள்ள குருவாயூர் மிகவும் புராதனமான திருத்தலம்.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீகிருஷ்ண பகவான் குருவாயூரப்பனாகத் திருக்கோயில் கொண்டுள்ளான். நாள் ஒன்றுக்கு இங்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய கோயில் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.அதிகாலை மூன்று மணிக்கே குளித்து விட்டு குருவாயூரப்பனின் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதை தினமும் இங்கு பார்க்கலாம்.குருவாயூரப்பன் ஆலய வரலாறு மிகவும் பழைமை வாய்ந்தது. நாரத புராணத்தில் உள்ள குருபாவனபுர மகாத்மியம் என்ற பகுதியில் இந்தக் கோவில் வரலாறும், தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.குருவாயூர் திருக்கோயிலில் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு கொண்டதாகும். மிகவும் புனிதமானது எனக் கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது.இந்த விக்கிரகத்தை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார். அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார். பிறகு பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபா பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது. கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது. துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது. அதற்கு முன்னதாகத் தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது. அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்றார் கிருஷ்ண பகவான்.அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது. அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது. இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும் அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்தார்கள்.இறுதியில் அவர்கள் கேரள தேசத்தை அடைந்தார்கள். அங்கே பரசுராமரை சந்தித்தனர். இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான் என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார். பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தரும் அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார்.அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த க்ஷேத்திரம் பின்னாளில் ‘குருவாயூர்' ஆயிற்று. தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது.மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் நாம் பெறலாம் என்பது ஐதீகம்.கிழக்கு வாசல், மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும், கிழக்கு நோக்கிய வாசல்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பம் கண்களைக் கவர்கிறது. இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும்போது காணக் கண் கொள்ளா காட்சியாக அமையும். கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்போது மனத்தில் பரவசம் ஏற்படுகிறது.கொடிக்கம்பத்துக்கு வடமேற்கே ஸ்ரீகிருஷ்ணனை துவாரகையில் இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்த குரு பகவான் மற்றும் வாயு பகவானின் பலிபீடங்கள் உள்ளன. தினமும் இவர்களுக்கு நைவேத்தியமாக அன்னம், பூ, தீர்த்தம் அளிக்கப்படுகிறது.நின்ற கோலத்தில் அருள் புரியும் பகவான், கண்களில் அன்பும் கருணையும் கொண்டு காட்சி தருகிறார். மேலிரண்டு கரங்களில் சங்கு& சக்கரமும், கீழிரண்டு கரங்களில் கதையும், தாமரையும் கொண்டு துளசி, முத்து மாலைகள் கழுத்தில் தவழ, கிரீடம், மகர குண்டலம், கேயூரம், கங்கணம், உதர பந்தனம் பூண்டு, வலப்பக்க மார்பில் ஸ்ரீவத்ஸம் எனும் சந்தனமும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துப மணியும் அணிந்து திருக்காட்சி தருகிறார்.கருவறைக்கு வடகிழக்கே வருண பகவானால் ஏற்படுத்தப்பட்ட கிணறு அமைந்துள்ளது. இந்த நீர்தான் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. குருவும் வாயுவும் வருணனை பூஜித்த ஐதீகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கிணற்றில் வருணனை ஆவாஹனம் செய்துள்ளார்கள். பரிவார தேவதைகளுக்கு பூஜை நடப்பதுபோல் தினமும் இந்த கிணற்றுக்கும் பூஜை நடக்கிறது. இந்தக் கிணற்றில் எந்நாளும் தீர்த்தம் குறைந்ததில்லை. இந்தப் புண்ணிய தீர்த்தத்துக்குள் எண்ணற்ற சாளக்கிராம கற்களும் சிலைகளும் உள்ளன. இந்த நீர் சுவையாக இருக்கும்.பக்தர்களுக்கு தங்கள் மனத்தில் என்ன வடிவம் தோன்றுகிறதோ, அதை முன்னிறுத்தியே குருவாயூரப்பனை வழிபட்டு வருகிறார்கள். ஞானிகளான மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி, பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி போன்றோர் குருவாயூரப்பனை மகா விஷ்ணுவாக வழிபட்டனர். பூந்தானம், வில்வமங்களன், மானதேவன், குரூர் அம்மையார் ஆகியோர் பாலகிருஷ்ணனாக வழிபட்டனர். எது எப்படி இருந்தாலும் குருவாயூரப்பனை ஒரு குழந்தையாக பாவித்து, இங்கு வழிபடும் பக்தர்களே அதிகம்!அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் சொல்லி மாளாது. குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்!இரவு மூன்றாம் யாமம் முடிந்ததும் மூன்று மணிக்கு நாகஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர்.நிர்மால்ய தரிசனத்தின்போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர்.விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கோவிலுக்குச் சொந்தமான செக்கில் ஆட்டப்பட்டதாகும். தைலாபிஷேகத்துக்குப் பின் அந்த தெய்வத் திருமேனியை வாகைத் தூளால் தேய்ப்பர். இதற்கு ‘வாகை சார்த்து’ என்று பெயர். அடுத்து சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது புருஷ ஸூக்தம் சொல்வர்.இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் பூர்ணத் திருமஞ்சனம் செய்வர். கிட்டத்தட்ட இது கும்பாபிஷேகம் செய்து வைப்பது போல் ஆகும்.இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். அப்போது உன்னி கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன்.காலை பூஜை இதன் பின் ஆரம்பமாகும். இதற்கு உஷத் பூஜை என்று பெயர். இந்த பூஜையின்போது நெய் பாயசமும் அன்னமும் பிரதான நைவேத்தியம். இது முடிந்து நடை திறக்கும்போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், இடையில் பொன் அரைஞாண், திருக்கரங்களில் ஓடக்குழல், மஞ்சள்பட்டு ஆகிய ஆபரண அலங்காரங்களுடன் தரிசனம் தருவார்.இத்தனை பூஜைகளும் காலை ஆறு மணிக்குள்ளாக பூர்த்தி ஆகி விடும்.பகவானுக்கு சாயங்காலம் (சந்தியாகாலம்) மட்டும்தான் தீபாராதனை செய்கிறார்கள். ஏழடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரி விளக்கு என்று பல தீபங்கள் ஏற்றி ஆராதனை செய்து, கடைசியில் கற்பூர ஆரத்தி நடக்கும். மங்கள ஆரத்தியின்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து குருவாயூரப்பனை வணங்குவதாக ஐதீகம். பந்தரடி (பந்தீரடி) என்று சொல்லப்படும் இந்த பூஜையை வேதம் ஓதும் நம்பூதிரிகள் செய்கின்றனர். இதற்கு அன்னமும், சர்க்கரை, பாயசமும் முக்கியமான நைவேத்தியம்.ஸ்ரீகுருவாயூரப்பனுக்குப் பிடித்த நைவேத்தியம், பால் பாயசம், நெய் பாயசம், சர்க்கரை பாயசம், அப்பம், திரிமதுரம், மற்றும் பழ வகைகள்.குருவாயூர் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை மேல்சாந்தி, கீழ்சாந்தி மற்றும் தந்திரிகள் என்று அழைப்பர்.மேல்சாந்தி என்றால் தலைமை குருக்கள் என்று பொருள். முக்கியமான பூஜைகள், அலங்காரங்கள், அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர் மேல்சாந்தி. இவரைத் தவிர மற்றவர்களுக்கு மூல விக்கிரகத்தைத் தொடும் உரிமை கிடையாது. கோயிலின் மேல்சாந்தி விடியற்காலை இரண்டரை மணிக்கே ஸ்ரீகோயிலின் கருவறைக்குள் நுழைந்து விடுவார். மேலும் உச்சி பூஜை முடியும் 12.30 மணி வரை பொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். அப்படி ஒரு ஆசார முறை இங்கே கடைப் பிடிக்கப்படுகிறது.ஒரு மேல்சாந்தி தொடர்ந்து ஆறு மாத காலமே பணி புரிய வேண்டும். இந்த ஆறு மாத காலமும் குருவாயூர் கோயிலை விட்டு அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே தங்குவதற்குத் தனி இடம் வழங்கப்படும். இந்த ஆறு மாத காலமும் பிரம்மச்சர்ய விரதம் அவசியம்.கீழ்சாந்தி எனப்படுபவர் உதவி அர்ச்சகர் என்று வைத்துக் கொள்ளலாம். விளக்கு ஏற்றுவது, அபிஷேகத்துக்குப் புனித நீர் எடுத்துத் தருவது, மலர் மாலைகளை எடுத்துத் தருவது, நைவேத்தியம் தயாரிப்பது இவை கீழ்சாந்தியின் வேலை. பரம்பரையாக வாரிசு உரிமை பெற்றவர்களே கீழ்சாந்தியாக நியமிக்கப்படுவார்கள்.தந்திரி எனப்படுபவர்கள் வேத மந்திரம் கற்றவர்கள். பூஜைகளைத் தந்திர முறையில் செய்வதால் இவர்கள் தந்திரிகள் ஆனார்கள். பல முக்கியமான நிகழ்வுகளுக்கு ப்ரஸ்னம் பார்த்துத் தீர்மானிப்பது தந்திரிதான். சென்னமனா என்னும் பரம்பரை குடும்பத்தினரைச் சார்ந்தவர்களே தந்திரி ஆக முடியும்.

கார்த்திகை 1ஆம் தேதியில் இருந்து மார்கழி மாதம் 11ஆம் தேதி வரையிலான 41 நாட்கள் மண்டல காலம் எனப்படும். இந்த நாட்களில் திரளான பக்தர்கள் வந்து குருவாயூரப்பனை தரிசிப்பார்கள். 

மண்டல கால பூஜையின்போது 40 நாட்களுக்குப் பஞ்சகவ்ய அபிஷேகமும் 41ஆவது நாளன்று சந்தன அபிஷேகமும் செய்து வைக்கப்படும். குருவாயூரப்பன் விக்கிரகத்தின் மார்பில் தினமும் சந்தனம் சார்த்தப்படுவது வழக்கம் என்றாலும், ஆண்டுக்கு ஒரு முறை இந்த நாளில் செய்யப்படும் சந்தன அபிஷேகத்தைத் தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள்.கோவில் தந்திரி சிறப்பு பூஜைகளைச் செய்த பிறகு இந்த சந்தன அபிஷேகம் மூலவர் குருவாயூரப்பனுக்குச் செய்யப்படும். இதற்கான சந்தனக் கலவை தயாரிப்பதற்கு மைசூரில் இருந்து சந்தனக் கட்டைகளும், காஷ்மீரில் இருந்து குங்குமப்பூவும் வரவழைக்கப்படும். தவிர பச்சைக் கற்பூரம், பன்னீர், கஸ்தூரி போன்ற வாசனைப் பொருள்களும் கலந்து சந்தனக் கலவையைத் தயாரிப்பார்கள். இதைத் தயாரிப்பதற்கு உண்டான செலவில் ஒரு பகுதியை கோழிக்கோடு சாமுதிரி மன்னர் குடும்பமும், எஞ்சிய தொகையை குருவாயூர் தேவஸ்வம் போர்டும் ஏற்றுக் கொள்ளும்.சந்தன அபிஷேகத்தில் நீராடிய குருவாயூரப்பனை அன்றைய தினம் முழுதும் பக்தர்கள் தரிசிக்கலாம். சந்தன அபிஷேகம் நடந்த தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. குருவாயூரப்பனின் திருமேனியைத் தீண்டிய இந்த சந்தனத்தைப் பெறுவதற்குப் பக்தர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குவார்கள்.வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாராயண பட்டத்ரி, குருவாயூரப்பன் சந்நிதிக்கு முன் நின்று தினம் பத்து ஸ்லோகங்கள் வீதம் நூறு நாட்கள் பாடினார். ஆயிரம் ஸ்லோகங்கள் பாடியதும் வாத நோய் நீங்கி விட்டது.பட்டத்ரி ஸ்ரீநாராயணீயம் சொல்லச் சொல்ல... அந்த குருவாயூரப்பன் ‘ஆமாம் ஆமாம்’ என்று தலை அசைத்து அவற்றை ஏற்று ஆனந்தமாகக் கேட்டு ரசித்ததாகத் தன் உபன்யாசத்தில் சொல்வார் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர். கர்நாடக இசை வித்துவான் செம்பை வைத்தியநாத பாகவதர், சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் ஆகியோர் குருவாயூரப்பனின் பரம பக்தர்கள்.ஆலயத்தில் உள்ள நமஸ்கார மண்டபத்தில் அமர்ந்து நாராயணீயம் எழுதினார் நாராயண பட்டத்ரி. அவர் அமர்ந்து எழுதிய இடத்தைப் புனிதமாகக் கருதி, அங்கு எவரும் அமர்வதில்லை. நாராயணீயத்தை 'பாகவத ஸாரம்' என்று கூறுவர். இதில் நூறு தசகங்கள். மொத்தம் 1,034 செய்யுள்கள். குருவாயூர் கிருஷ்ணனை முன்னிலைப்படுத்தி பாகவதத்தின் சாரத்தை சம்ஸ்கிருதத்தில் பக்தி சொட்டச் சொட்ட நாராயண பட்டத்ரி எழுதி இருக்கிறார்.நாராயண பட்டத்ரியுடன் குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் சுவையானது.பட்டத்ரி: ‘நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனப் பொருள் எது?’குருவாயூரப்பன்: ‘நெய்ப் பாயசம்.’ப: ‘ஒருவேளை நெய்ப்பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால்..?’கு: ‘அவலும் வெல்லமும் போதுமே...’

ப: ‘அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால் என்ன செய்வது?’

கு: ‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு.’

ப: 'மன்னிக்க வேண்டும் பகவானே... இப்போது நீ சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?'

கு: 'துளசி இலைகள் அல்லது உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்.'

ப: 'அதுவும் என்னிடம் இல்லை என்றால்..?'

கு: 'எனக்கு நைவேத்தியம் செய்விக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா... அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும். வேறு ஒன்றும் வேண்டாம்.'குருவாயூரப்பனிடம் இருந்து இப்படி ஒரு பதிலைக் கேட்டதும் பக்திப் பரவசம் மேலிட நாராயண பட்டத்ரி கதறி அழுதார்.பட்டத்ரியின் நாராயணீயத்துக்கு மூலமாக அமைந்தது ஞானப்பானை என்னும் நூல். இதுவும் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் படைப்பு ஆகும். மலையாள மொழியில் இதை எழுதியவர் பூந்தானம் என்பவர். இப்படி எண்ணற்ற பக்தர்களை ஆட்கொண்டு, தன்வயம் ஆக்கி இருக்கிறார் குருவாயூரப்பன்.எந்த நேரமும் ஏதாவது பிரார்த்தனைகள், வழிபாடுகள் என்று எப்போதும் ஆலயம் பிஸியாகவே இருக்கும்.துலாபார நேர்ச்சைக்கடன் இங்கே பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள்.அதுபோல் குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதலும் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்றும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை. எனவே, தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இங்கே அன்னம் ஊட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள புன்னத்தூர் கோட்டாவில் தேவஸம் போர்டுக்குச் சொந்தமான யானைகள் கொட்டாரம் அமைந்துள்ளது. குருவாயூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்த யானைகள் கொட்டாரத்துக்கும் வந்து பார்த்து மகிழ்கிறார்கள். சுமார் 100க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கின்றன. 200க்கும் மேற்பட்ட பாகன்கள் பணி புரிகிறார்கள். இதைத்தான் உலகிலேயே தனியார் கண்காணிப்பில் உள்ள மிகப் பெரிய யானைகள் பூங்கா என்கிறார்கள்.பத்மநாபன் மற்றும் கேசவன் என்கின்ற இரண்டு யானைகளின் படங்களை ஆலயத்தில் மாட்டி வைத்திருக்கிறார்கள். தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும், இந்த யானைகளுக்குத் தனி மரியாதை பக்தர்களிடம் இருந்து வருகிறது.திருச்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது குருவாயூர்.அதிகாலை மூன்று மணி முதல் இரவு ஒன்பதேகால் மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

குடும்பத்தோடு சென்று குருவாயூரை தரிசியுங்கள். குருவாயூரப்பனின் அருள பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.

ஸ்ரீ காமாக்ஷி ஸ்தோத்திரம்

 ஸ்ரீ காமாக்ஷி ஸ்தோத்திரம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

சிவமுக விநுதே பவசுக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

பக்த சுமானஸ தாப வினாசினி மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

கேனோ பநிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி

பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி.

ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் சம்பூர்ணம்

16008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவான

 🌹🌺"  16008 சாளக்கிராம கற்களை  இணைத்து உருவான கேட்டதையெல்லாம் கொடுக்கும் பெருமாள்....  பற்றி - விளக்கும் எளிய கதை* 🌹🌺

--------------------------------------------------------

🌺🌹ஒரு முறை பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.

🌺திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர்.

🌺இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள், திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் "வட்டாறு' என அழைக்கப்பட்டது.🌺இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார், "மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்', என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார்.

🌺கேசியின் மீது சயனித்த போது, அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன.🌺மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.🌺 இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது.

🌺ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.🌺அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி, தமிழ்நாடு*இவருக்கு கேட்டதையெல்லாம் கொடுக்கும் பெருமாள் என வேறு பெயரும் உண்டு 🌹🌺

🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க 🌷🌹

திருவண்ணாமலை அருணாசல புராணம் வச்சிராங்கத பாண்டியச் சருக்கம்

 திருவண்ணாமலை அருணாசல புராணம் 

வச்சிராங்கத பாண்டியச் சருக்கம்🌹

🔥அவன் அருளாலே அவன் தாள் பணிந்து🌺  பக்தியுடன்🙏 ...மாங்காடு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் ....       வச்சிராங்கத பாண்டியன் 

சந்தனக் காட்டு மணம் போல் தமிழ் மணத்தில் நெடுநாள் திளைத்து ஆடும் மயிலும் நடக்கும் அன்னமும் வருவது போல வாடையும் தென்றலும் புகும் நாடு வையை வளநாடு. 

விரும்பும் கண் கொண்ட மகளிர் இடையை மின்னல் என மருண்டு தாழை பூக்கும். மான் போன்ற மகளிர் கூந்தலை இருள் என்று எண்ணி மௌவல் மலரும். - நாடு. அந்த வளநாட்டின் அரசன் தேவேந்திரன் முடி சிதறும்படி தன் வளைதடி வீசியவன். தன் வெற்றி கயிலாயன் நெற்றிக்கண் போல் விளங்கும்படித் தன் மீன் கொடியை இமயத்தில் எழுதி வைத்தவன். 

காமன் போல் அழகு, மறைகள் பலவும் தெளிந்த அறிவு, சிவன்மீது பத்தி, மகளிர் விரும்பும் தோள் ஆகியவற்றை உடையவன் வையை வளநாடனாகிய வச்சிராங்கத பாண்டியன் 

வான், மண் என்னும் ஈருலகிலும் புகழ் பெற்றவன். சிவன் தலைமாலை மணத்தை முர்ந்துகொண்டு மனையறம் பேணுபவன்.

தங்கள் குலத் தலைவன் நிலாவையும், சிவன் அடிகளையும் தலையில் சூடினான். நன்றி அறிதலில் இணையில்லாதவன். 

10 திசையிலும் புகழ் பெற்றவன். சங்கு ஈன்ற முத்துக்கள் கிடக்கும் முற்றம் கொண்டவன்.  தன் வெற்றிக் கடலில் கப்பல் ஓட்டுபவன். 

கடலின் பவளக்கொடி போன்றவர் அவன் குடிமக்கள் (செம்மை திரம்பாதவர்)

எங்கும் நலம் பெற உலகை ஆள்பவன். அவன் பெயர் வச்சிராங்கதன்.

போரில் தோற்ற அரசர்களையும், கொடையில் தோற்ற மேகத்தையும் சிறையில் வைத்தவன். சித்திராங்கதன் வேட்டையாட விரும்பி கரி, பரிப் படைகளுடன் வடதிசை நோக்கிப் புறப்பட்டான். 

நிலவைக் கண்டு இருள் ஓடுவது போல, திங்கள் குலத்தவனைக் கண்டு கரிய நிற யானைகள் ஓடின. அம்புலி குலத்தவன் அம் புலிகளைக் கொன்றான். ஆறில் ஒரு பங்கு கடமை (வரி) வாங்குபவன் ஆறில் (வழியில்) கடமை மாடுகளைக் கைப்பற்றினான். அரசன் சேரமானைச் சிதைத்தவன் சேரும் மான்களைச் சிதைத்தான். தமிழ்ச்சங்கத்தில் கலை வளர்த்தவன் கலைமான்களை வளைத்துக் கொண்டான். 

நாற்படையை ஓட்டியவன் நாவி என்னும் புனுகுப்பூனையைத் தொடர்ந்தான். 

அந்தப் புனுகுப்பூனை அருணாசல  மலையை வலம்வருவது போல் ஓடிற்று. குதிரையைத் துரத்தினான். பூனை அவன் கண் முன் விழுந்தது. 

பச்சைநாவி என்னும் நஞ்சு பருகியவர் போல விழுந்த அந்தப் பூனை மலையை வலம்வந்ததால் தன் உடலை விட்டு, வித்தியாதரன் உருவம் கொண்டு விமானத்தில் ஏறி வானுலகம் சென்றது 

குதிரை கால் இடறி விழுந்தது. அரசனும் விழுந்தான். மலையை வலம்வந்ததால் குதிரை ஓவியராலும் எழுத முடியாத உருவம் கொண்டவனாக மாறி பூ விமாத்தில் ஏறி வானுலகம் சென்றது. அவன் யானை போன்றவன். இலங்கை அரசன் இராவணன் கயிலாய மலை அடியில் விழுந்தது போல அண்ணாமலை அடிவாரத்தில் விழுந்தான். விலங்கின் பின்னே ஓடினால் யார்தான் விழமாட்டார்கள்? 

வானுலகம் செல்லுமுன் பூனையும், குதிரையும் காந்திசாலி, கலாதரன் என்பவர்களாக மாறினர். அவர்கள் பாண்டியனுக்கு நண்பர் ஆயினர். காந்திசாலி, கலாதரன் இருவரும் பாண்டியனிடம் வந்து  கலங்கினான். பாண்டியன் அவர்களை அஞ்சவேண்டாம் என்று கையமர்த்தினர் 

நீங்கள் இங்கு வந்தது நீதியே. உங்கள் துயருக்குக் காரணம் என்ன என்று பாண்டியன் வினவியபோது கலாதரன் சொல்கிறான். 

இவன் பெயர் காந்தசாலி. என் பெயர் கலாதரன். நாங்கள் இருவரும் நண்பர்களாக விளையாடினோம். 

மேருமலைச் சாரலில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஊழ்வினை எங்களைத் தொடர்ந்தது 

துருவாச முனிவர் சினம் மிக்கவர். அவர் ஊற்றிய நீரால் பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் நுழைந்தோம். 

அப்போது காந்திசாலி சில பூச்செடிப் புதர்களை மிதித்தான். நான் அதில் இருந்த பூக்களைப் பறித்தேன். முனிவர் கண்டார். சினம் கொண்டார். 

அவர் முகத்தில் முத்தாரம் போல் வியர்வை. பவளம் போன்ற அவரது இதழ்கள் துடித்தன. உடல் நடுக்கத்தால் நழுவும் மேலாடையை அடிக்கடி உயர்த்திக்கொண்டார். விசித்திரமான அனல் பொறிகள் உடலிலிலிருந்து தெறித்தன. அவர் சொன்னார். 

செங்கதிர்,  தென்றல், நத்தை, தேன் உண்ணும் வண்டு ஆகியனவும் இந்தப் பூங்காவில் நுழைய முடியாது. இதில் உதிர்ந்த இலைகள் காய்வதில்லை. இப்படிப்பட்ட நந்தவனத்தில் ஒருவர் நுழைய முடியுமா 

காளை ஊர்தியான் சிவனுக்குப் பூசை செய்யும் மலரை, என் வனத்தில் புகுந்து பறித்தீர். பாவிகளே என் கோபக் கனலுக்கு ஆளானீர். செடியை மிதித்த காந்திசாலி குதிரையாகவும், மலரைப் பறித்தவன் (நான்) நாவிப் பூனையாகவும் ஆவீர்க்களாக என்று சபித்தார். முனிவனைப் போற்றிப் புகழ்ந்து இந்தச் சாபம் நீங்கும் காலம் எப்போது என்று வினவினோம். 

சோணாசலம் என்னும் திருவண்ணாமலையை வலம்வந்தால் சாபம் தீரும். பாண்டியன் ஒருவன் உங்களை அம் மலையை வலம்வரச் செய்வான் என்றும் முனிவர் கூறினார். 

அத்துடன் அந்த முனிவர் ஒரு கதையும் சொன்னார். சிவன் தன்னிடம் இருந்த நீண்ட காட்டுப் பழம் ஒன்றைத் தன் பிள்ளைகள் இருவரும் தனக்குத் தரும்படிக் கேட்க, உங்களில் யார் இந்த உலகை முதலில் சுற்றிவருகிறாரோ அவருக்குத் தருவேன் என்று கூறினார். கந்தன் தன் மயிலின்மீது ஏறி உலகை வலம்வரச் சென்றான். ஆனைமுகன் எல்லோர்க்கும் தந்தையான தன் தந்தையை வலம்வந்து பழத்தை வரங்களுடன் பெற்றுக்கொண்டான். 

விரைந்து உலகைச் சுற்றிவந்த வேலவன் தனக்குக் கனியைத் தருமாறு வேண்டினான். சிவன் நடந்ததைக் கூறினார். ஏழு உலகங்களை வலம்வந்தாலும், பல பல  தவங்கள் செய்தாலும் தன் அடிகளை வலம்வந்ததற்கு இணை ஆகாது என்றும் கூறினார். 

சிவன் முருகனிடம் சொல்கிறான். நான் இந்தச் சிவந்த மலை உருவில் இருக்கிறேன். என்னை வலம்வந்தோர் பிரமன், வீட்டுணு, நீ, உமை, நான் ஆகியோரைக் காட்டிலும் அதிக பேறு பெற்றவர் என்றான்.

என் மேனியாகிய இந்த மலைக்குத் தேவர்கள் பூசை செய்யமாட்டார்கள். இதனை வலம்வருதலே எனக்குச் செய்யும் பூசை. இதனை வலமவரக் கூசுபவர் எனக்குத் தீமை செய்தவர் ஆவார் என்று சிவன் முருகனிடம் கூறினான். 

முருகனுக்குச் சிவன் சொன்னதைச் சொல்லிவிட்டு துருவாச முனிவன் சென்றான். அதன்படிக் குதிரை, பூனையாகப் பிறந்த நாங்கள் தென்னாடனாகிய உன்னால் இந்த மலையை வலம் வந்தோம். சாபம் நீங்கிப் பண்டைய வடிவம் பெற்றோம் - என்று கூறிவிட்டு விமானத்தில் ஏறினர். 

எங்கள் ஆவி உன்னைத் துன்புறுத்தியது. நீ இந்த மலையை வலம் வந்ததால் அந்தத் துன்பமும் நீங்கும் - என்று காந்திசாலி, கலாதரன் இருவரும் பாண்டியனிடம் சொல்லிவிட்டுத் தங்களுடைய ஊருக்குச் சென்றனர். 

மன்னன் சென்ற குதிரைக் காலடிச் சுவடுகளின் வழியில் அவனைத் தேடிக்கொண்டு வந்த அவன் படைகள் அவனிடம் வந்து சேர்ந்தன. பாண்டியன் துன்பம் தீர்ந்தது. 

வச்சிராங்கத பாண்டியன் அரதனாங்கதன் (இரத்தினாங்கத பாண்டியன்) என்னும் தன் மகனை அழைத்து முன்னொரு காலத்தில் இராமனுக்காகப் பரதன் ஆண்டது  போல நாட்டை ஆளும்படிப் பணித்தான். அவனும் அவ்வாறே சென்று பாண்டிய நாட்டை ஆண்டான். 

வச்சிராங்கதன் தன் மூதாதையர் வழியில் வந்த செல்வம், கடலில் பெறும் முத்தின் செல்வம், பகைவர் பணிந்து தந்த திறை ஆகியவற்றை சிவன் பூசைக்குச் செலவிட்டான். 

பின்னர் கவுதம ஆச்சிரமத்துக்கு அருகில் ஒரு பன்னசாலை அமைத்து அதில் தங்கிக்கொண்டு மலைவலம் வந்தான். (கைதவர் = சிவன், வஞ்சகர்) அவன் எதிரில் சிவன் தோன்றவில்லை. 

தலையில்  பிறை, அருள் பொழியும் விழி, மறை மிடறு, 4 புயம், கயில் மான், கணிச்சி, விடைமேல் அமர்ந்த கோலம் ஆகியவற்றைக் கண்டு களிப்பது என்றோ என ஏங்கினான். 

அண்ணாமலை என்னும் பெயர் உடையவன். விடை கொண்டவன். குளுமையாய் இருப்பவன். எம்மை ஆளாகக் கொண்டவன். நுதலில் கண் கொண்டவன். வினைப்பயன் நீங்காதவரின் அறிவுக்கு எட்டாத ஒளி கொண்டவன். குழந்தை பால் உண்ணாத முலை கொண்டவளின் தலைவன் - என்றெல்லாம் சிவனைப் போற்றிப் புகழ்ந்தான். 


காலால் நடந்து மலையை வலம் வராமல் குதிரை மேல் வந்து பாவம் செய்தேன். இந்தத் தீவினையைத் தீர்ப்பாயாக - என்றெல்லாம் வேண்டினான். 


சிவன் பாண்டியன் முன் தோன்றினார். வச்சிராங்கத பாண்டியனே! நீ முன் பிறவியில் தேவனாக இருந்தாய். அப்போது உன் வச்சிரப் படையால் என்னைத் தாக்கினாய். அதன் வினைப்பயனால் மனிதனாகப் பிறந்தாய். என் மலையை வலம் வந்ததால் பொன்நாடு பெற்றுப் பொலிவுடன் வாழ்வாயாக - என்று வரம் கொடுத்துவிட்டு மறைந்தார். 

திருவண்ணாமலையை நினைப்பவர்கள் சாவில் துன்புறார். சிவன் வடிவமாக மாறுவர். - என்று சிவன் கூறினார். 

இதனை அறிந்தவரும், பெரியவர்களுடன் சேர்ந்து படித்தவரும் சிவ சாயுச்சியம் பெறுவார்கள். மூன்று காலமும் படிப்பவர்களும், இதன் பொருளைப் பகிர்ந்துகொண்டவர்களும் சிவகதி அடைவர் என்பது வியப்பன்று. 

நூல் - எல்லப்ப நாவலரால் பாடப்பட்ட (திருவண்ணாமலை) அருணாசல புராணம் வச்சிராங்கத பாண்டியச் சருக்கம்

அண்ணாமலையாருக்கு அரோகரா

முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் பிப்ரவரி 9ஆம் தேதி

 தை அமாவாசை:

 இவற்றை தானம் செய்யுங்கள்.ஜென்ம பாவம் தீரும். முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்!

முன்னோர்களின் ஆசிகள் கிடைக்க இந்த பொருட்களை தை அமாவாசையில் தானமாக கொடுங்கள். 

இந்து மத சாஸ்திரங்களின்படி வருடம் முழுவதும் வரும் அம்மாவாசை சிறப்பானது என்றாலும் தை அமாவாசை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக கருதப்படுவதால், அந்நாளில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களை வழிபட வேண்டும். 

அதன்படி இந்தாண்டு தை  வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. எனவே, இந்த தை அமாவாசை நாளான பிப்ரவரி 9ஆம் தேதி காலை 08. 05 மணி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று அதிகாலை 04. 28 மணிக்குள் உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.

அமாவாசை நாளில் பக்தர்கள் புனித நதிகள் மற்றும் ஏரிகளில் மூழ்குவார்கள். அதன் பிறகு வழிபாடு, தவம், தானம் முதலியவை செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்நாளில் தர்ப்பணம், திதி வழங்குவது மூலம் முன்னோர்கள் முக்தி அடைகின்றன. 

அமாவாசை நாளில் தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. அமாவாசை தினத்தன்று தானம் செய்வதால் ஒவ்வொருவருக்கு நிச்சயம் வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதில் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பையும் தருகிறது. எனவே இந்த பொருட்களை தை அமாவாசையில் தானம் செய்ய வேண்டும். அவை..

2024 தை அமாவாசை அன்று இவற்றை தானம் செய்யுங்கள்:

ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஒரு பசு தானம் ஒரு சிறந்த தானமாக கருதப்படுகிறது. நீங்கள் பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால் அமாவாசை நாளில் பசுவை ஒருவருக்கு தானம் செய்யுங்கள். இதன் மூலம் ஒருவன் 100 யாகங்களுக்கு சமமானதை அடைகிறான்.

உணவு தானம் செய்வதற்கும் வேதங்களில் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவே தை அமாவாசை அன்றி ஏழு எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

அமாவாசை நாளில் உணவு, தண்ணீர், ஆடை, எள், நவதானியங்கள், உப்பு, புத்தகம், வெள்ளி, தங்கம், பழங்கள், காய்கறிகள், வெல்லம் முதலியனவற்றை தானமாக வழங்கலாம்.

அதுபோல் தை மாதத்தில் கடும் குளிரின் காரணமாக ஏழைகளுக்கு போர்வைகளை தானமாக வழங்கலாம்.

தை அமாவாசை அன்று முன்னோர்களை மகிழ்விக்க பிராமணர்களுக்கு உணவு வழங்கல் அவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருவார்கள்.

தை அமாவாசை நாளில் தீபம் மற்றும் விளக்கு தானமாக கொடுக்கலாம். இதனால் உங்களுக்கு பார்வை கோளாறு அல்லது கண்ணில் பிரச்சனைகள் இருந்தால் அவை அனைத்தும் நீங்கும்.

தை அமாவாசை அன்று அரிசி தானம் செய்யலாம் இதனால் உங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கும். இந்த தானம் செய்யும் போது பிரார்த்தனை செய்து கொடுங்கள்.அதுபோல தை அமாவாசை தினத்தில் யாருக்காவது தேன் வழங்கலாம். இதனால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளை செல்வம் இல்லை என்ற குறை நீங்கும்.சாஸ்திரம் படி, ஒருவருக்கு  தேங்காயை தானமாக கொடுத்தால் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம் உண்டு.ஒருவேளை இவை எதுவுமே உங்களால் செய்ய முடியவில்லை என்றால், இயலாதாவர் ஒருவருக்காவது தயிர் சாதமாவது வாங்கி கொடுங்கள். இதனால் பித்துக்களின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசமே

*ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்.* 

*பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையைநோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது.*

*மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை.*

*எறும்பை பார்த்து பறவை கூறியது எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குதான் என்று.*

*பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா எறும்பை பார்த்து கேலி செய்து பறவை நகைத்தது.*

*வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடாமுயற்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியை சென்றடைந்தது. அப்போது அந்த பக்கமாக மலையை கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாக பார்த்தது.*

*அப்போது பறவையை பார்த்து எறும்பு கூறியது, "வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவடும் சிலருக்கோ தாமதமாகவும்கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம் என்றது. எறும்பு.*

*விடாமுயற்சி வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையைச் சொன்னால் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசமே விடாமுயற்சிதான்.*

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...