Thursday, February 8, 2024

தை பூசம் - 25.01.2024

 தைப் பூச தாண்டவம்

ஆனந்த நடனம் காண்போம் ! ஆனந்தம் அடைவோம் !!

(சிதம்பரம் சித்ஸபையில் நடராஜர் நடனமாடிய நாள் - தை பூசம் - 25.01.2024)     

                                                                                                                                        

ஓம் க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்

சதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி ||

எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி

எங்குஞ் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்குந்

தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.

- திருமந்திரம்

பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் பெரும் தவம் செய்து வேண்டியதற்கு இணங்க, சிதம்பரத்தில் தை மாதம், பூச நட்சத்திரம், பெளர்ணமி, பகல் நேரம் கூடிய நன்னேரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் கொண்டருளினார்.சிதம்பரம் - மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் - இம்மூன்றினாலும் சிறப்புற்ற ஸ்தலம்.

தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம். 

சிதம்பர க்ஷேத்ரத்தின் தச (10) தீர்த்தங்களுள் முக்கியமானது. காசியில் உள்ள கங்கையை விட மேலானது. மிகவும் புனிதம் வாய்ந்தது. சிவசக்தி ரூபங்கள் இணைந்தது. ஸ்ரீ நடராஜப் பெருமானின் தங்க மேனியில் தவழ்ந்த அபிஷேக தீர்த்தம் சேரும் இடமாதலால், சிவகங்கையே பொற்குளம் போல் காட்சியளிக்கின்றது. இங்கு ஸ்நானம் செய்வதால் பொன்னார் மேனியனின் திருவருளால் தேகம் புனிதமடைகின்றது. கெளடதேசத்து சிம்மவர்மன் உடல் குறை நீங்க இங்கு ஸ்நானம் செய்து தங்க மேனியனாக ஹிரண்யவர்மனாக மாறினான்.

இக்குளத்தின் வருண (மேற்கு) திசை வாயிலில், ஸ்வாமி தீர்த்தம் கொடுப்பதே தைப் பூச தினத்தின் மிக முக்கிய நிகழ்வு.ஸ்தலம் : சிதம்பரம். 

சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம்.

மூர்த்தி : ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.

வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.

புராண விளக்கம் :

ஒரு சமயம், மஹா விஷ்ணு யோக நித்திரையிலிருந்து பரவசத்துடன் எழ, அவரைத் தாங்கிய ஆதிசேஷன், திடீர் மகிழ்விற்கான காரணம் கேட்க, விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தக் கூத்தினை அனுபூதியாக விளக்க, தானும் அக்காட்சியைக் கண்டுணர வேண்டும் என வரம் கேட்க, விஷ்ணு அருள்பாலிக்க, ஆதிசேஷன், அத்ரி ரிஷியின் பத்னியாகிய அநசூயயின் குவிந்த கைகளில் (அஞ்சலி -குவிந்த கரம்) நாகமாக வந்து, பாதங்களில் விழுந்ததால் பதஞ்சலி என பெயர் பெற்று, தில்லை ஸ்ரீ மூலநாதரை, மத்யந்தின மகரிஷியின் மகனாகிய ஸ்ரீ வியாக்ரபாதர் என்ற புலிக்கால் உடைய முனிவருடன் வழிபாடாற்றி வந்தார்.

தேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது.தை மாதம் - மகிழ்ச்சி பொங்கும் மாதம். சூரியன் தனது அயனத்தை (பாதையை) மாற்றும் மாதம். யோக குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு உரிய நக்ஷத்திரம் பூசம். ஆடுவதும் (dynamic) அவரே, அமைதியும் அவரே (static) என்றுணர்த்தவே, ஆட்டமாடி ஆட்டுவிக்க, ஆடாமல் ஆட்டுவிக்கும் யோக தக்ஷிணாமூர்த்திக்குரிய நாள், நக்ஷத்திரம், பகல் நேரம் என உத்தமமான வேளை வந்தது.தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.ஆனந்த நடனமாடிய அம்பலவாணர், தவம் செய்த பதஞ்சலியை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, பதஞ்சலியோ தாம் கண்ட இத்திருக்காட்சியை எதிர்காலத்தில் அனைவரும் காண வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில், நடராஜ ராஜர் பொன்னம்பலத்தின் எப்பொழுதும் பதஞ்சலியாமல் (பாதம் சலிப்படையாமல்) ஆடவேண்டும் என பெருவரம் கேட்டார். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றௌ உடன் அருளும் குஞ்சிதபாதர், பதஞ்சலிக்கு அவ்வண்ணமே அருள்பாலித்தார்.

நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.

அண்டத்தின் அசைவைக் காட்டுவது ஆனந்த நடனம். இந்நடனத்தை வேதாந்த சித்தாந்தங்கள் மிக அற்புதமாக விளக்குகின்றன. உருவம் (ஸ்ரீ நடராஜர்), அருவம் (சிதம்பர ரகசியம்), அருவுருவம் (ஸ்படிக லிங்கம்) என மூன்று வடிவங்களிலும் அமைந்து, மும்மலங்களை (ஆணவம், கண்மம், மாயை) அகற்ற காட்சி தருகின்றார். அசைவதும், அசையாததும், இரவும், பகலும், ஒலியும், ஒளியும், வெம்மையும், குளிரும் அனைத்தும் அவரே.அணுவுக்குள்ளும், அண்டசராசரமெங்கும் நடமிடுபவரும் அவரே. பக்தர்களின் வேண்டுதல்களை செவி கொடுத்துக் கேட்டு வரமருளும் தோடுடைய செவியன். எவரும் விரும்பாத ஊமத்தம்பூ, பாதி வளர்ந்த சந்திரன் போன்ற குறைகள் கொண்ட அனைத்தையும் தாம் ஏற்றுக் கொண்டு, தம்மை தரிசிப்பவர்களுக்கு அருளை நிரம்ப வாரி வழங்குபவர்.தைப் பூச தினத்தில் பஞ்ச மூர்த்தி வீதியுலா வந்து, பகல் நேரத்தில், சிவகங்கைக் குளத்தின் மேற்கு வாசலில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி அருகிருக்க, ஸ்வாமி தீர்த்தவாரி (அனைவருக்கும் அருளுதல்) நடைபெறும். மதிய வேளையில் கனகசபையில் தரை முழுவதும் அன்னம் நிரப்பி, ஸ்ரீ நடராஜ ராஜருக்கு நிவேதனம் செய்து, அனைவருக்குமான அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.

தைப்பூச அன்னதான பாவாடை ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகின்றது. எதிரிலிச் சோழன் குலோத்துங்கன் சிவபாதசேகரன் எனும் சோழ மன்னன் தைப்பூச அன்னப்பாவாடையை நிகழ்த்தினான் என்று பழங்கால செப்பேடு தெரிவிக்கின்றது.தைப்பூச தினத்தில் சிவகங்கையில் ஸ்நானம் செய்வதால், பாபங்கள் அனைத்தும் நீங்கி, பெரும் செல்வம் மற்றும் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

தைப்பூச நன்னாளில் சிவகங்கையில் நீராடி, ஆனந்த நடனமிடக் காரணமாகிய ஸ்ரீ மூலநாதரையும், பொன்னம்பலத்தில் விளங்கும்                ஸ்ரீ நடராஜ ராஜரையும் தரிசித்து பேரின்பப் பயன்பெறுவோம்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...