Showing posts with label இயற்கையோடு நாம் பேசலாம். Show all posts
Showing posts with label இயற்கையோடு நாம் பேசலாம். Show all posts

Friday, July 29, 2022

இயற்கையோடு நாம் பேசலாம்

முதலில் இதை நான் நம்பவில்லை. 
என் முக நூல் தோழி ஒருவரின் வாழ்வில் நடந்த உண்மைக் கதை இது.
இந்தப் பெண் கணவனோடு சென்னையில் வசிப்பவள்.
கல்யாணமாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாதவள்.
வழக்கம் போல கணவன் வீட்டின் ஏச்சும் பேச்சும். குறிப்பாக மாமியாரின் குத்தலும்.
ஒருமுறை கணவனின் சொந்த ஊருக்கு கணவனோடு போய் இருக்கிறாள். மதுரை அருகே ஒரு சின்னஞ்சிறு கிராமம். அவர்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு சில மாமரங்கள். அதில் ஒரு மரம் பல வருஷ காலமாக காய்க்கவில்லை.
ஒரு நாள் மாலை. மாமியார் தன் மகனிடம், இவள் கணவனிடம் சொல்லி இருக்கிறாள்:
“ஏம்பா, அடுத்த மாசம் இந்த மரத்தை வெட்ட சொல்லி விடலாம்பா.”
“ஏம்மா ?”
“பின்னே என்னப்பா ? இது கூட சேர்ந்த மரங்கள் எல்லாம் காய்ச்சு தள்ளுது. இது மட்டும் ஒரு காயும் காய்க்கலை. அதனாலே ஆளை வரச் சொல்லி வெட்டிடலாம்னு இருக்கேன்.”
கணவன் இதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும் இந்தப் பெண்ணுக்கு மனம் பொறுக்கவில்லை. உடனேயே அந்த மாமரத்தை தேடிப் போய் இருக்கிறாள். கண்ணீரோடு அந்த மாமரத்தை கட்டிப் பிடித்திருக்கிறாள். கண்களில் நீர் வழிய அந்தப் பெண் இப்படி சொல்லி இருக்கிறாள் : “அட மாமரமே, நான்தான் காய்க்காத மரம். பிள்ளை பெறாத மலடி. என்னைத்தான் எல்லோரும் திட்டுகிறார்கள். நீயும் ஏன் என்னைப் போல் காய்க்காமல் இப்படி நிற்கிறாய் ? என்னையாவது திட்டுகிறார்கள். உன்னை வெட்டப் போகிறார்கள். தயவு செய்து நீயாவது காய்த்து விடு. நீயும் என்னைப் போல் மலட்டுப் பட்டம் வாங்காதே...” என்று கேவி கேவி அழுதிருக்கிறாள்.
அப்புறம் இவள் கணவனோடு சென்னை புறப்பட்டு வந்து விட்டாள். ஆனால் ஒவ்வொரு நாளும் மனசுக்குள் அந்த மரத்தை வெட்டும் காட்சி தெரிய தனியாக போய் உட்கார்ந்து அழுது தீர்த்திருக்கிறாள்.
ஆனால் இதற்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியம்.
அத்தனை வருட காலம் காய்க்காத அந்த மாமரம் , அதற்குப் பின் பூத்து காய்த்து , இப்போது மற்ற மாமரங்களைப் போல செழிப்பாக நிற்கிறதாம். மரத்தை வெட்ட வேண்டாம் என மாமியார் முடிவு செய்து விட்டாராம்.
முதலில் நான் இதை நம்பாவிட்டாலும் விஞ்ஞானபூர்வமாக சில விஷயங்கள் விளங்கிய பிறகு இப்போது அதை முழுமையாக நம்புகிறேன்.
ஆம். இயற்கையோடு நாம் பேசலாம். மனிதர்களை விட மரங்கள் நம்மை புரிந்து கொள்ளும். 
நம்மாழ்வார் வாழ்விலும் கூட இதைப் போல ஒரு விஷயம் நடந்திருக்கிறது.
விழுப்புரத்தில் உள்ள சிறு கிராமத்தில், ஒரு விவசாயியின் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார் நம்மாழ்வார். அந்த விவசாயி, "ஐயா, இந்த பலா மரம் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இருக்கு. ஆனால் இது நாள் வரை ஒரு பழம் கூட தரல. இந்த மரத்தின் நிழலால், மற்ற பயிர்களும் வளர்வதில்லை. அதான், வெட்டிடலாம்னு இருக்கேன்" என்கிறார்.
“பறவையெல்லால் கூடு கட்டி இருக்கே ?”என்று உடைந்த குரலில் கேட்கிறார் நம்மாழ்வார்.
“இல்லைங்கய்யா. நமக்கு இந்த மரத்தால எந்த பயனும்
இல்லை.” 
இதை கேட்டவுடன் ஓடி சென்று, நம்மாழ்வார் மரத்தை கட்டிப்பிடித்து கொள்கிறார். ஓவென்று அழுகிறார். பின்பு மரத்திடம்,“உன்னை பிரயோஜனம் இல்லாதவன்னு சொல்றானே. அவனுக்கு நீ ஏன் பழம் தர மாட்டேங்கிற ?” என்று மரத்துடன் உணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல் நடத்துகிறார். இதை பார்த்த விவசாயியின் மனம் மாறுகிறது. மரத்தை வெட்ட வேண்டாம் என்று முடிவு செய்கிறார். 
ஆனால் இத்துடன் இது முடியவில்லை. ஓராண்டுக்கு பிறகு, அந்த விவசாயி ஒரு பெரிய பலாப்பழத்துடன் திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் இருந்த நம்மாழ்வாரை சந்திக்க வருகிறார். “அய்யா,அந்த மரத்துல காய்ச்ச பழம்யா...” என்று உச்சகட்ட சந்தோஷத்தில் அழுது கொண்டே பழத்தை கொடுக்கிறார்.
(இது விகடனில் வெளிவந்தது )
ஆம். இயற்கை நம்மோடு இணைந்து வாழவே விரும்புகிறது.
இயற்கையோடு நாம் பேசலாம். மனிதர்களை விட மரங்கள் நம்மை புரிந்து கொள்ளும்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...