Tuesday, March 15, 2022

பாவமூட்டையை ஏத்தாதே

பாவமூட்டையை ஏத்தாதே!...

பெரியவாளை தர்ஶனம் பண்ண பெரிய க்யூ ! ஒரு பக்தரின் முறை வந்தது. கையில் வைத்திருந்த பூ, பழங்களை பெரியவா பக்கத்தில் இருந்த தட்டில் வைத்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தார்.

"பாரு..... ஒம்பிள்ளேளுக்கும்...ஒன் குடும்பத்துக்கும் ரொம்ப நல்லது பண்றதா நெனைச்சிண்டு, மேல மேல பாபமூட்டையத்தான்.... அவா பேர்ல ஏத்திண்டே இருக்க!..."

பெரியவாளின் குரலில் கண்டிப்புத் தெரிந்தது...!

பக்தர் திடுக்கிட்டுப் போனார்.

"#பெரியவா என்ன சொல்றேள்? மனஸறிஞ்சு நா... எந்தத் தப்பும் பண்ணலியே!..."

"ப்ராஹ்மணனா பொறந்தவன்... அன்னத்தை விக்கப்படாதுன்னு ஶாஸ்த்ரத்ல சொல்லியிருக்கு! நீ... அத.... படிச்சதில்லியோ?....."

பக்தர் முழித்தார்...! ஏனென்றால்... அவர் ஹோட்டல் ஒன்று நடத்திக் கொண்டிருந்தார்.

எனவே...என்ன பதில் சொல்லுவார்?

"ஸெரி ....பொழைப்புக்காக அன்னத்தை விக்கற..ன்னு வெச்சிண்டாக்கூட, அதுக்கு மேலே இன்னொரு பெரிய பாபத்தையும்ன்னா பண்ணிண்டிருக்க!...."

பக்தர் குழம்போ குழம்பென்று.. குழம்பினார்.

"சேத்து வெச்சிருக்கற பணம் போறாதுன்னு... அத... வட்டிக்கு வேற விட்டு, அந்யாயமா பணத்தை வஸூல் பண்றியே! இது... நீ... ஒன்னோட அடுத்த தலைமுறைக்கும்.. சேத்து வெக்கற பாபம்ங்கறத... மறந்துடாத!..."

தான்... பணத்தை வட்டிக்கு விடுவது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? என்று அவர் யோஜனை பண்ணி முடிக்கும் முன், பெரியவா தொடர்ந்தார்....

"...நீ கேக்கற அந்யாய வட்டியை குடுக்க முடியாம, திக்கித் தெணறி ஒருவழியா அதத் திருப்பித் தரச்சே... அவாள்ளாம் வயறெரிஞ்சு ஒன்னையும், ஓங்குடும்பத்தையும் ஶபிக்க மாட்டாளா? சொல்லு...."

பெரியவா இதைச் சொன்னதும், அப்படி ஶாபம் வாங்கிய, பல ஸம்பவங்கள் பக்தரின் மனஸில் ஓடியது.

"இந்த... பாவமூட்டை, ஒன்னோட ஸந்ததிகளோட.. தலைமேலன்னா... ஏறி ஒக்காந்துக்கும்! அத... எப்டி எறக்கப் போற? நீ சேத்து வெச்ச பணம் போறாதா? எதுக்கு... மேல மேல ஆசைப்பட்டு ஒன் ஸந்ததிக்கி...பெரிய்ய... பாவமூட்டையை சேத்து வெக்கற?.." 

பெரியவா முடிக்கவில்லை, பக்தர் அப்படியே 'தடால்' என்று, நெடுஞ்சாண்கிடையாக பெரியவா பாதத்தில் விழுந்து அழுதார்.

"மன்னிச்சிடுங்கோ பெரியவா! இனிமே நா... என்ன பண்ணணும்..ன்னு சொல்லுங்கோ.."

கங்கையாகக் குளிர்ந்தார் பெரியவா....

"ரொம்ப ஸந்தோஷம். நீ இதுவரைக்கும் சேத்து வெச்ச பணம்... ஒன்னோட தலைமொறைக்கு போறும். மொதல்...ல நீ... நடத்தற ஹோட்டலை மூடு! "அன்னம்"ன்னு கேட்டுண்டு வரவாளுக்கு... ஒங்காத்ல ஸாப்பாடு போடு. வட்டிக்கு பணம் குடுத்து வாங்கறத... நிறுத்து!.."

"அப்டியே செய்யறேன் பெரியவா......"

"இரு.இரு. இன்னும் விஷயம் பாக்கி இருக்கே!...இதுவரைக்கும்... நீ வாங்கின வட்டிய....மொத்தமா கணக்கு போடு. எவ்ளோ..பணம் வருதோ....அத.. மொத்தமா எடுத்துண்டு போயி, அப்டியே திருப்பதி ஏழுமலையான் உண்டியல்ல போட்டுட்டு, அவர... கும்புட்டுட்டு வா!..."

"பெரியவா காமிச்ச வழிலேயே போறேன்... மன்னிச்சிடுங்கோ! .."

ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.

உண்மைதான்! பணத்தில் மட்டுமா வட்டிக்கான பாபம் வரும்? வார்த்தைகளால், மனஸால் எத்தனை பேருடைய மனங்களை காயப்படுத்தி, அதில் ஸந்தோஷத்தை காண்கிறோம்? இவற்றையெல்லாம் எங்கு கொண்டு போய் தொலைப்பது?

சிவாலய ஓட்டம்

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது

கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், சிவன் மேல் பெரும் அபிமானமெல்லாம் அவர்களுக்கு இல்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள்

இதெல்லாம் மிகபெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள்

யுத்தத்தில் துரியனை அடித்து கொன்று அதை முடித்துவைத்தவன் என பீமனும் ஒரு கர்வத்தோடு அலைந்தான், காட்சிகளை கவனித்து கொண்டிருந்த கண்ணன் அவர்களின் மாயை அறுக்க ஒரு நாடகம் நடத்தினான்

யுத்தம் என்பது பாவங்களின் முடிவு, அதற்கு யாரும் தப்ப முடியாது, செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு யாகம் நடத்த நினைக்கும் தர்மனிடமும் அகங்காரம் மிகுந்தது, இதுவரை யாரும் கொடுக்காத பொருளை கொண்டு யாகம் நடத்த விரும்பினான்

அங்கேதான் தன் விளையாட்டை ஆரம்பித்தான் கண்ணன், அவனி விளையாட்டு அந்தணர்கள் உருவில் வந்தது

தர்மனிடம் யாகம் செய்ய வந்த அந்தணர்கள் யாரும் இதுவரை பயன்படுத்தாத யாக பொருள் புருஷ மிருகத்தின் பால் என்றார்கள், மானிட உருவும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகத்தின் பால் அபூர்வமானது என சொல்ல அதை கொண்டுவர விரும்பினான், ஆனால் அந்த கொடிய மிருகம் பற்றி தகவலேதும் அவனிடம் இல்லை

அதை தொடர்ந்து காட்சிக்கு வந்தான் கண்ணன்

அந்த புருஷா மிருகம் பற்றி தனக்கு தெரியும் என்றும் ஆனால் அது பொல்லாதது என்றும் கோபாலன் பெயரை சொன்னால் ஓடும் ஆனால் சிவன் பெயரை சொன்னால் அப்படியே உருகி நிற்கும், அந்நேரம் பாலை கறக்கலாம் ஆனால் சிறிது நேரத்தில் விரட்டும் என்றும் அதன் இயல்பை சொன்ன கண்ணன் ஒரு உத்தியும் சொன்னான்

12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுப்போம், அவன் நாழிக்கு ஒன்றாக இரவு முழுக்க அதை கொண்டு அந்த மிருகத்தை ஓடவைத்து நிறுத்தி பால்கறக்கட்டும் என 12 ருத்திராட்சங்களை கொடுத்து பீமனை அனுப்ப சொன்னான்

ஆம், அகபாவத்தில் இருந்த பீமனின் கர்வம் ஒழிக்க அவனையே கிளம்ப சொன்னான் கண்ணன்

அந்த ருத்திராட்சத்தை தரையில் வைத்தால் அது லிங்கமாகிவிடும், அதை கண்டு உருகும் மிருகம் அப்படியே பூஜை செய்யும் அப்பொழுது பால்கறக்கலாம் ஆனால் பூஜை முடியும் பொழுது லிங்கம் மிருகம் சீறும் என சொல்லியும் அனுப்பினான் கண்ணன்

அன்று மகா சிவராத்திரி நாளாய் இருந்தது, கண்ணனின் கணக்கு அதில் சரியாய் இருந்தது

பீமன் காட்டுக்குள் சென்று கோபாலா கோபாலா என்றதும் அந்த மிருகம் விரட்டியது பீமன் ஒரு ருத்திராட்சம் வைக்க அது லிங்கமாகும் கொஞ்சநேரம் மெய்மறக்கும் மிருகத்திடம் பீமன் பால் எடுப்பான் பின் அவன் கோபாலா கோபாலா என ஓட மிருகம் விரட்டும்

இப்படி 12 ருத்திராட்சங்களும் லிங்கமாகி பீமன் தப்பியபின்னும் மிருகம் அவனை விரட்டியது அடுத்து ருத்திராட்சம் இல்லா பீமன் யாகசாலையினை நெருங்கியிருந்தான், அது விடியும் பொழுதாய் இருந்தது காலை 6 மணி ஆகியிருந்தது

ஆனாலும் மிருகம் விரட்ட யாக சாலைக்குள் ஒரு காலை அவன் வைத்த நிலையில் இன்னொரு காலை மிருகம் பற்றியது

இப்பொழுது யாகசாலைக்குள் இருக்கும் கால் அவனுக்கு, வெளியில் தான் பிடித்த கால் தனக்கு என அது வாதிட்டது, அங்கு வந்தான் தர்மன்

ஏ மிருகமே 12 சிவலிங்கத்தை உனக்கு காட்ட ஓடிய புண்ணிய பாதத்தையா கடித்து விழுங்கபார்க்கின்றாய் என உருக்கமாக அவன் கேட்கவும் மிருகத்துக்கு தன் தவறு விளங்கிற்று

அய்யய்யோ ஆமாம், லிங்கத்தரிசனம் காட்டிய புண்ணிய காலையா கடித்தேன் என அவனை விடுவித்த மிருகம் பின் ஏன் அவன் கோபாலா கோபாலா என கத்தினான் என்பதை யோசித்து சொன்னது. கோபாலா கோபாலா என இவன் அழைத்து ஓடினாலும் அவன் ருத்திராட்சம் வைத்தவுடன் சிவலிங்கம் வந்ததென்றால் "ஹரியும் சிவனும் ஒன்றல்லவா"

அந்த வார்த்தை தர்மனுக்கும் பீமனுக்கும் சுட்டது, அதுவரை குழம்பியிருந்த அவர்கள் இரண்டும் ஒரே சக்தி என்பதை உணர்ந்து அகந்தை ஒழிந்து நின்றனர்

இரவெல்லாம் ஓடி அரியும் சிவனும் ஒன்று என பீமன் ஞானம் பெற்ற கதை இப்படி உண்டு, அதை நினைவு கூறும் விதமாக முன்பு சிவராத்திரியில் 12 சிவாலங்களுக்கு ஓடும் நிகழ்ச்சியும் இருந்தது

புராணகதை இப்படி இருந்தாலும் 12 லிங்கம் என்படு 12 ராசிகளை குறிப்பது என்றும், எல்லா ராசிகளின் அருளும் அந்நாளி கிடைக்க 12 லிங்கங்களை வணங்க வேண்டும் என்பதும் ஏற்பாடு என்பார்கள்

இன்னும் அழுத்தமாக சொன்னால் சிவராத்திரி இரவில் தூங்காமல் லிங்க தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யபட்டிருந்தது

அதில் ஹரியும் சிவனும் ஒன்று எனும் மாபெரும் தத்துவமும் இருந்தது

இதனை பாரதத்தின் பல பாகத்தில் வாழ்ந்த இந்துக்கள் ஒரு காலத்தில் செய்தனர், சிவராத்திரி அன்று "கோபாலா கோபாலா" என கத்திய படியே 12 லிங்கங்கள் இருக்கும் ஆலயத்துக்கு ஓடுவார்கள்

இதனை பல இனங்கள் பின்னாளில் கைவிட்டது, அதற்கு புத்தமத எழுச்சி பின் சமண மதம் அதை தாண்டிய ஆப்கானியர் ஐரோப்பியர் குழப்பம் என பல காரணம் உண்டென்றாலும் அந்நியர் ஆட்சியில் அதிகம் சிக்காத கன்னியாகுமரி பக்கம் இந்த ஓட்டம் உண்டு

சாலிய மகரிஷி வழிவந்தவர்கள் என தங்களை சொல்லும் சாலியர் இனம் எனும் நெசவாளர் இனம் அதனை தொடர்ந்தது

சிவராத்திரி அன்று இப்படி ஆதிகேசவ பெருமாள் கோவிலை சுற்றிய 12 சிவாலயங்களை இப்படி சிவராத்திரியன்று கோபாலா கோபாலா என சொல்லியபடியே ஓடி சுற்றுவார்கள்
இது சிவாலய ஓட்டம் என்றாயிற்று

இப்பொழுது சாலியர் தாண்டி எல்லா இந்துக்களும் பங்கெடுக்கும் நிகழ்வாக அது அமைந்திருக்கின்றது, ஆம் இந்தியா முழுக்க சிவராத்திரி கொண்டாடபடும் நேரம் கன்னியாகுமரி பக்கம் மட்டும் "கோபாலா கோபாலா" என கண்ணனை நினைத்தபடியே சிவராத்திரி அனுசரிக்கபடுவது அங்குதான்

தூங்காமல் விழித்திருந்து சிவனை தரிசிக்கவும் அதில் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை புகுத்தவும் எவ்வளவு நுட்பமான வழிகளை எல்லாம் போதித்திருக்கின்றார்கள் அந்த முன்னோர்கள்

சிவராத்திரி முழுக்க இறைவனை அவன் நினைவிலே தேடு என்பதை இதைவிட எப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய முடியும்?

ஆம் அந்த சமூகம் பரிபூரண ஞானசமூகமாய் இருந்திருகின்றது, சிவாலய ஓட்டம் அதைத்தான் சொல்கின்றது

(யாளி போலவே புருஷா மிருகம் எனும் மனித தலையும் புலி உடலும் கொண்ட சிலைகள் இந்து ஆலயங்களில் உண்டு, சில இடங்களில் அவை கொண்டாடபடுவதும் உண்டு)

குன்றக்குடி திருத்தலம்.குமரனின் அருள் பெற்ற இத்திருத்தலம்


காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம்.குமரனின் அருள் பெற்ற இத்திருத்தலம், பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது. 

திருமண வாழ்க்கை இனிக்கச் செய்யும் குன்றக்குடி முருகன் கோயில்.இக்கோயிலின் சிறப்பே இறைவன் சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த மலையே,மயில் உருவம் போன்று காட்சியளிப்பது தான்.

#தலச்சிறப்பு : குன்னகுடிக்கு காவடி எடுத்தால் நினைத்தது நடக்கும்.“குன்னகுடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது” என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது.

#சுவாமி : சண்முகநாதர்

#அம்பாள் : வள்ளி, தெய்வானை

#தீர்த்தம் : தேனாறு

#தலவிருட்சம் : அரசமரம்

#தல #வரலாறு

முருகப்பெருமானின் வாகனமான மயில்,அவரின் சாபத்தால் மலையாகிப்போனதாக சொல்கிறது ஒரு புராண செய்தி. ஒரு முறை அசுரர்கள், முருகப்பெருமானின் மயிலிடம், “நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள்,மேலும் வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன” என்று பொய் கூறினர். இதைக் கேட்டு உண்மை என்று நம்பிய மயிலும், கண் மூடித்தனமாக கோபம் கொண்டு பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.

பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் இது குறித்து முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமானும், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் மயிலின் கர்வத்தினை அடக்க மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார்.

தன் தவறுக்கு வருந்திய மயிலும் குன்றக்குடி வந்து மலையாகிப்போனது. ஆறுமுகப் பெருமானைக் குறித்து மலையாக இருந்த படியே தவம் இருந்தது.மயிலின் தூய்மையான தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமானும் , மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார் என்கிறது இத்திருக்கோயிலின் தல வரலாறு.

இந்த ஆலயத்தில் விசேஷமாக காவடி வழிபாட்டை சொல்லலாம். இது தவிர பால் குடம் எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் போன்றவை பக்தர்கள் தங்கள் எண்ணிய பிரார்த்தனை நிறைவேறியப் பின் செய்யும் நேர்த்திக்கடன்களாகும். இக்கோவில் வந்து வேண்டுதல் வைத்தால் தீராத தோல் வியாதிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை.வேண்டுதல் நிறைவேறியப் பின் உடல் உறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளி தகட்டை உண்டியலில் சேர்ப்பிக்கின்றனர்.

மலையின் கீழ் பகுதியில் சுயம்புவாக தோன்றிய தேனாற்றுநாதர் கோவில் உள்ளது. இந்த சுயம்பு மூர்த்தியை அகத்திய முனிவர் வணங்கி வழிபாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தல அம்பாள் அருட்சக்தி என்ற திரு நாமத்துடன் அழகே வடிவாக எழுந்தருளியிருக்கிறார்.

#வரலாற்று #செய்தி..

சிவகங்கை மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு ஒரு முறை முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை,குன்றக்குடி முருகப்பெருமானின் அருட்பிரசாதமான திருநீறு குணப்படுத்தியது என்கிற வரலாற்று செய்தி இந்த தலத்தில் உள்ள இறைவனின் பெருமையை நமக்கு பறைசாற்றும்.

வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால், இங்கு திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.  

#திருவிழா..
அருணகிரிநாதரின் பாடல் பெற்ற இந்த திருதலத்தில்,10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவும், 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் தைப்பூசத் திருநாளும் சிறப்பு வாய்ந்தது. இது தவிர முருகப் பெருமானுக்கே உரிய சித்திரை பால் பெருக்கு விழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடி திருப்படி பூஜை, ஐப்பசியில் கந்தசஷ்டி போன்றவையும் சிறப்பாக நடைபெறும்.

#நடைதிறப்பு : காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

வேலுண்டு வினை இல்லை 

மயிலுண்டு பயமில்லை.

ஓம் சண்முகா போற்றி போற்றி..

காரடையான் நோன்பு ஸ்பெஷல் !

காரடையான் நோன்பு ஸ்பெஷல் !

மல்லிகையும் மணமும் போல
மஞ்சளும் மங்கலமும் போல
கம்பனும் கவியும் போல
கண்ணனும் கீதையும் போல!

உமையும் மகேஸ்வரனும் போல
உண்மையும் நிம்மதியும் போல
காஞ்சியும் காமாட்சியும் போல
கருணையும் காஞ்சிகுருவையும் போல!

உருகும்மனமும் குருவருளும் போல
உருகாதவெண்ணையும் ஓரடையும் போல
பிரியாதவுறவும் பிரியமும் போல
தரவேணும் குருவே வரமதுபோல!

ஹரஹர சங்கர எனும் உயர் நாமம்
தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!
ஜயஜய சங்கர என்று இனியேனும்
தினம் துதித்து வளர்வோம் மேன்மேலும்!!

 சுமங்கலிகள் தங்களின் கணவர்களின் நலனுக்காக அனுஷ்டிக்கும் காரடையான் நோன்பு நாளான இன்று மஹாபெரியவாளின் ஆசிகளும் அநுக்கிரமும் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

 ஹர ஹர சங்கர ! 
ஜெய ஜெய சங்கர !

ஸ்ரீ_ஆதிசங்கர_பகவத்பாதர்_அருளிச்செய்த_வில்வாஷ்டகம்_தமிழ்மொழியில்

🌿#ஸ்ரீ_ஆதிசங்கர_பகவத்பாதர்_அருளிச்செய்த_வில்வாஷ்டகம்_தமிழ்மொழியில்🌿

மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம்
மூலமெனக் கோலம் தரும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே
புனிதமெலாம் அள்ளித் தரும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன்
குறைகளின்றி தந்திடுமே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

காசி சேஷ்த்தரம் வசிப்பதனால் கால பைரவ தர்சனத்தால்
வரும் பலனை தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம்
மங்களமே தினம் அருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

திங்கள் எனும் இந்துவாரம் விரதமுடன் பூஜை செய்ய
ஏற்ற தளம் வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வாஜபேயம் சோமயாகம் வளர்க்கின்ற யாகபலன்
அத்தனையும் தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கயைபிரயாகை யாத்திரையை செய்வதனால் வரும் பலனை
தந்திடுமே வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

சாளக்கிராமம் வணங்கும் பலன் சான்றோரை வணங்கும் பலன்
தந்தருளும் எந்நாளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கோடி யானை தான பலன், அஸ்வமேத யாக பலன்
ஆயிரமாய் தந்திடுமே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

காண்பதுவும் புண்ணியமே தொடுவதுவும் புண்ணியமே
கனிவருளும் நெஞ்சினிலே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

பாடசாலை ஆலயங்கள் பல ஆயிரம் அமைப்பதனால்
வருகின்ற பலன் அருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

அன்னதானம் ஆயிரமாய் செய்கின்ற ஜென்ம பலன்
அளித்திடுமோர் அர்ச்சனையே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வில்வாஷ்டகம் தன்னை சிவனருகில் உரைப்போர்க்கு
செல்வமெலாம் கூடி வரும்
சிவனருளும் தினம் வரும்

🍃நமசிவாய🍃

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...