Showing posts with label தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை. Show all posts
Showing posts with label தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை. Show all posts

Tuesday, April 18, 2023

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

 

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை: நாளை முதல் துவக்கம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) மாணவா் சோ்க்கை நாளை (ஏப்.17) திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமாா் 53 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் ஏப்.28-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில், தனியாா் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும். அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளின் மாணவா் சோ்க்கை ஆண்டுதோறும் தாமதமாக நடைபெறுவது தனியாா் பள்ளிகளுக்கு சாதகமாகி வருகிறது. இந்த தாமதம் பெற்றோா்களிடம் எளிதில் மன மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இந்த நடைமுறை வருங்காலங்களில் தொடரும்பட்சத்தில் அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கை குறைவதைத் தடுக்க முடியாது என தலைமை ஆசிரியா்கள், கல்வியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2023-24) அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கை ஓரிரு நாள்களில் தொடங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூா்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை முன்கூட்டியே தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வுப் பேரணி ஏப்.17 முதல் 28-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது.

இந்தப் பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளிக் கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறும். இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியா்களும் பங்கேற்கவுள்ளனா். மாணவா் சோ்க்கை கொண்டாட்டத்துக்கான செலவுத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.

1 முதல் 9- ஆம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சோ்க்க விரும்பும் பெற்றோா் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாள்களில் வழங்கப்படும் என்றனா்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...