Saturday, March 19, 2022

பசுவும் புண்ணியங்களும்

**பசுவும் புண்ணியங்களும்**

பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.

பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.

பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.

பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

" மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.

பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.

மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் , எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

கோமாதாவை காப்போம் , நேசிப்போம் , பூஜிப்போம்...

இறைவன் சன்னதி முன் ஆமையின் திருவுருவம் ?

இறைவன் சன்னதி முன் ஆமையின் திருவுருவம் ???? ( இந்த திருவுரு உத்தரகோசமங்கை ஆலயத்தில் இறைவன் எழுந்தருளும் மண்டபமாக உள்ளது )

பெரும்பாலும் வடநாட்டில் உள்ள சிவாலங்களில் கருவறையில் உள்ள இறைவன் திருமேனியை நோக்கியவாறு ஆமையின் திருமேனி இருக்கும் !!

இங்கும் சில சிவாலயங்களில் ஆமையின் திருமேனியோ, படமோ இடம்பெற்று இருக்கும் இதன் அர்த்தம் அறிவோமா ??

அதை அப்படியே கொஞ்சம் காப்பி அடித்து இன்று நவீன ஆலயங்கள் அதை வைத்துகொண்டு இருக்கிறது !!

ஆமை என்ற உயிரினத்தை கேட்டவுடன் !! நம் நினைவில் வருவது ??

அது நீண்டகாலம் உயிர்வாழும் என்பதே !!

ஆனால் 
ஒவ்வொரு உயிரினத்தின் தனித்தன்மை போல !!

மனிதர்கள் தாங்கள் சுமக்கும் கருவை தன்னுள்ளே வைத்திருந்து தங்கள் காணும் காட்சி, அனுபவிக்கும் இன்பம், போன்ற உணர்வுகள் வழியே உயிர்பெற செய்வார்கள் !!

கோழி முட்டையிட்டு தன் ஸ்பரிசம் தீண்டல் வழியே தன் உடலின் சூட்டை கொண்டு அந்த முட்டையில் உள்ள கருவை உயிர்பெற செய்யும் !!

அதேபோல 
மீன் தான் முட்டையிட்டு தன் கண்கள் வழியே அந்த முட்டையை பார்த்துக்கொண்டே தன் பார்வையின் வழியே முட்டையை உயிர்பெற செய்யும் !!

ஆனால் 
ஆமை கொஞ்சம் வித்தியாசமானது, அது கடலில் இருந்து வெளியே வந்து கடற்கரையில் தன் முட்டைகளை இட்டுவிட்டு அதை மணல் கொண்டு மூடிவிட்டு, உடனே கடலுக்குள் சென்று விடும் !!

அதன் அன்றாட வாழ்வை / பயணத்தை மேற்கொண்டு இருக்கும்,

ஆனால் அதன் சிந்தை அந்த முட்டைகள் மீதே இருக்கும், 

அது எத்தனை கடல் கடந்து இருந்தாலும் அதன் சிந்தனை அந்த முட்டைகள் மீதே இருக்கும் !!

இந்த சிந்தை என்ற எண்ணம் எங்கோ இருக்கும் அந்த முட்டைகள் உள் ஓர் தாயின் அரவணைப்பை கொடுத்து அந்த முட்டைகளை உயிர் பெற செய்யும் !!

அதுபோலவே 

நம் இறைவனின் படைப்புகள், 
நாம் எங்கு இருந்தாலும், 
எப்படி இருந்தாலும் 
என்ன செய்து கொண்டு இருந்தாலும் 
நம்மை படைத்த இறைவன் நம்மை எப்போதும் இடைவிடாது இந்த பிரபஞ்ச பேற்றால் வழியே நம்மை நோக்கி கொண்டே இருக்கிறான் !!

அவன் எங்கும் நிறைந்து எப்போதும் நம் மீது நமக்கே இல்லாத அக்கறையோடு காத்தருளிகொண்டு இருக்கிறான் என்ற மெய்யை உணர்த்தவே !!

ஆமையை கொண்டு நமக்கு அறிவுறுத்துகிறார்கள் நாம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டின் வழியே !!

ஏதோ இவன் அறிவுக்கு எட்டிய வரையே !!
எட்டவைத்தவன் திருவருளால் !!

திருச்சிற்றம்பலம் 

நற்றுணையாவது நமச்சிவாயவே 


கோபுர தரிசனம்

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 🍂🛐🍂 

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். 
நேரம் போய்க்கொண்டே இருந்தது. 
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் முதல் குழந்தை பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? 
ஒரு அப்பாவி ஏழை இப்படி விடு பட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா... ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.

குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...

நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...🗣 

மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா...

இன்று நீ என்னோடும் குழந்தை ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். 

குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...

இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்....🗣 

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.
சும்மாவா சொன்னார்கள் :: 

🛕 கோபுர தரிசனம் கோடி புண்னியம்        


பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும்

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும், இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கும் வந்து வழிபடவேண்டிய தலம்.

மூலவர் - மணல் (பிருதிவி) லிங்கம். 

உமாதேவியார் கம்பை நதிக்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட, இறைவன் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்ய, உமையம்மை இலிங்கத்தைத் தழுவிக் காத்தாள்.

தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் தழுவலை ஏற்றுத் தழுவக் குழைந்தார். இதனால் இறைவனுக்குத் ‘தழுவக் குழைந்த பிரான்’ என்றும் பெயர்.

சக்தி பீடங்களுள் சிறந்ததாகிய காமகோடி பீடத்தலம். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வாழ்ந்த தெய்வப் பதி.

      தலமரம் மாமரம். ஆம்ரம் - மாமரம்.
      ஏகம்+ஆம்ரம் = ஏகாம்ரம் - ஒற்றை மாமரம்.

இம்மாவடியின் கீழ் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இறைவன் ஏகாம்அரநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பெயரே ஏகாம்பரநாதர் என்று வழங்கலாயிற்று. 

மாமரம் இத்தல மரம். இவ்விடம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். திருமணங்கள் நடைபெறுமிடம். புத்திரப் பேறில்லாதவர்கள் அப்பேறு வேண்டி, தொட்டிலைக் கட்டி வேண்டிக்கொள்ளும் நிலையை இன்றும் காணலாம். 

வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு 
மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்மரத்தின்மீது ஏறுவதுகூடாது. இயல்பாகவே பழுத்துக் கீழே விழும் கனிகளைச் சுவைத்தோர், நான்கு கிளைகளிலிருந்தும் கிடைக்கும் மாங்கனிகள் நான்கு விதமான சுவையுடையதாகச் சொல்கின்றனர். 

தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார்.

காஞ்சிபுர மண்டலம் முழுமைக்கும் தேவி, காமாக்ஷியே யாவாள். ஆதலின் காஞ்சியில் எச்சிவாலயத்திலும் தனியாக அம்பாள் (மூல) சந்நிதி கிடையாது. 

எனினும் ஒவ்வொரு கோயிலிலும் உற்சவமூர்த்தமாக ஓர் அம்பாள் சந்நிதி ஒரு பெயர் தாங்கி இருக்கும்.   

கோயிலுக்கு முன்புள்ளது ‘திருக்கச்சி மயானம்’ கோயிலாகும். இது வைப்புத் தலமாகும். அப்பரால் வைத்துப் பாடப்பட்டதாகும். ஏகம்பத்தின் நாற்புறத்திலும் நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் கச்சிமயானம் ஒன்று. மற்றவை வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம் என்பன.

கண் பார்வையிழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்தில் (பூண்டி) ஊன்றுகோலைப் பெற்றவாறே இத்தலத்திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த் திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற அற்புதம் நிகழ்ந்த தலம்.

திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக வைத்து அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். 

ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். 

சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீஸ்வரர் திருக்கோயில் வந்தார் சுந்தரர்.

அங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே! என்று சொல்லி வேண்டினார். 

சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவன், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து "நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்' என்றார். 

தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். 

சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் கொம்பு ஒடிந்து விட்டது. 

மறைந்த கண்களைத் தரவேண்டிப் பல தலங்களிலும் வணங்கிப் பாடி, திருவெண்பாக்கத்தில் (பூண்டி) ஊன்றுகோலைப் பெற்றுத் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், தக்கோலம் (திருவூறல்) ஜலநாதீஸ்வரர் திருக்கோயில்களைத் தொழுது காஞ்சிபுரத்தை அடைந்து, காமக்கோட்டத்தில் அறம்புரக்கும் அம்மையை வணங்கித் திருவேகம்பத்தை அடைந்து, 

"கச்சி ஏகம்பனே, கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணளித் தருளாய்' 

என்று வேண்டிப் பெருமான், இடக்கண் கொடுக்கப்பெற்று மகிழ்ந்து பாடியருளியது இத் திருப்பதிகம். 

குறிப்பு: இத்திருப்பதிகம், தமக்குக் கண் அளித்த இறைவரது திருவருளை வியந்து சுந்தரர் அருளிச்செய்தது.

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்.
(இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு)

1. ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும், முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

2. உற்றவர்க்கு உதவும் பெருமானை 
ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனைப் 
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப் 
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை 
அற்றம்இல் புகழாள், உமை நங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக்கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய, அழிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

3. திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் 
செங்கண் மால்விடை மேல் திகழ்வானைக் 
கரியின் ஈர்உரி போர்த்து உகந்தானைக் 
காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை 
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
பெரிய கம்பனை, எங்கள் பிரானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை, சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

4. குண்டலம் திகழ் காது உடையானைக் 
கூற்று உதைத்த கொடுந் தொழிலானை
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை 
வாள்அரா மதிசேர் சடையானைக் 
கெண்டை அம் தடங்கண் உமை நங்கை 
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும், கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய, கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற, கண்டத்தில் நஞ்சினையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

5. வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை 
வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை 
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை, 
அருமறை அவை அங்கம் வல்லானை, 
எல்லை இல் புகழாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
நல்ல கம்பனை எங்கள் பிரானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

யாவரையும் வெல்லும் தன்மையுடைய, வெள்ளிய மழு ஒன்றை உடையவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும், அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும், அரிய வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும், துதித்து வழிபடப்பெற்ற, நன்மையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

6. திங்கள் தங்கிய சடை உடையானைத், 
தேவ தேவனைச், செழுங்கடல் வளரும் 
சங்க வெண்குழைக் காது உடையானைச் 
சாம வேதம் பெரிது உகப்பானை, 
மங்கை நங்கை மலைமகள் கண்டு 
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கங்கை யாளனைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, 'வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை யணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

7. விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, 
வேதம்தான் விரித்து ஓத வல்லானை, 
நண்ணினார்க்கும் என்றும் நல்லவன் தன்னை, 
நாளும் நாம் உகக்கின்ற பிரானை, 
எண்இல் தொல் புகழாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக், 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும், வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர்கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும் துதித்து வழிபடப்பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

8. சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் 
சிந்தையில் திகழும் சிவன் தன்னைப், 
பந்தித்த வினைப் பற்று அறுப்பானைப், 
பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை, 
அந்தம் இல் புகழாள் உமைநங்கை 
ஆதரித்து வழிபடப் பெற்ற 
கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

நாள்தோறும் தன்னையே சிந்தித்து, துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்குகின்ற மங்கலப் பொருளானவனும், உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும், பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய, முடிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற, கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய, நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

9. வரங்கள் பெற்று உழல், வாள் அரக்கர் தம் 
வாலிய புரம் மூன்று எரித்தானை, 
நிரம்பிய தக்கன்தன் பெரு வேள்வி 
நிரந்தரம் செய்த நிட்கண்டகனைப், 
பரந்த தொல் புகழாள் உமை நங்கை 
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானைக், 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய, பரவிய, பழைய புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

10. எள்கல் இன்றி இமையவர் கோனை, 
ஈசனை வழிபாடு செய்வாள் போல் 
உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை 
வழிபடச் சென்று நின்றவா கண்டு, 
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி 
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட 
கள்ளக் கம்பனை, எங்கள் பிரானைக், 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே, தான் வழிபடவேண்டுவது இல்லை பயனின்மை யறிக. இத் திருப்பதிகத்துள், "நல்ல கம்பன்", "கள்ளக் கம்பன்" என வந்தவையும், அம்மை வழிபட்ட நிலையைக்கருதி அருளினவே யாதலின், அவற்றை உருத்திரர் வழிபட்ட நிலை, திருமால் வழிபட்ட நிலைகளாகக் கூறும் புராண வரலாற்றோடு இயைக்க முயலுதல் பொருந்தாமை யறிக.

11. பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானைப் 
‘பெரிய எம்பெருமான்” என்று எப்போதும் 
கற்றவர் பரவப் படுவானைக், 
“காணக் கண் அடியேன் பெற்றது” என்று 
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானைக் 
குளிர் பொழில், திரு நாவல் ஆரூரன் 
நற்றமிழ் இவை ஈர்ஐந்தும் வல்லார், 
நன்நெறி உலகு எய்துவர் தாமே.

குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந்நூல்களைக் கற்றவர்கள், 'இவன் எம் பெரிய பெருமான்' என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...