Tuesday, April 18, 2023

பிரேசிலில் நூற்றுக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கின

 

பிரேசிலில் நூற்றுக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கின: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி..!!




பிரேசில் நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் உள்ள கடற்கரையில் பெரிய அளவிலான திருக்கை மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கின. நூற்றுக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ரியோடி ஜெனிரோ மாகாணநிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். 

கடலில் நிகழ்த்த சம்பவம் தொடர்பாக சுற்றுச்சுழல் அதிகாரிகள் கடல் தண்ணீரின் மாதிரியை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே கடல் தண்ணீரில் வழக்கத்தை விட ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தும் திருக்கை மீன்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து சுற்றுசூழல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு துணை நிற்போம்

 

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு துணை நிற்போம்: அமெரிக்கா அறிவிப்பு

ரஷியாவுக்கு எதிரான போரில் எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணை நிற்போம் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து, நீடித்து வருகிறது. பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. ரஷியாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு வேண்டிய நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன. எனினும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் பலனற்று காணப்படுகின்றன. 

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  அந்தோணி பிளிங்கன், உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதுபற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ஐரோப்பிய பகுதிகளில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ உக்ரைனின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது என பிளிங்கள் சுட்டி காட்டியுள்ளார். அதனால், போரில் எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

அடுத்து வரவுள்ள காலங்களில் உக்ரைனின் அதிரடி தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராவது பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். அவற்றில், உக்ரைனின் பாதுகாப்பு சார்ந்த உதவிக்கான, கூட்டணி நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் உறுதிமொழி உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்கப்பட்டன என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனையே உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் தனது டுவிட்டரில் "எங்களது பேச்சில், இரும்பு கவசத்துடன் கூடிய அமெரிக்காவின் ஆதரவை பிளிங்கன் மீண்டும் உறுதிப்படுத்தினார். போரில் வெற்றி பெறுவதில் உக்ரைனின் திறமையில் சந்தேகம் கொள்ளும் எந்த முயற்சிகளையும் அவர் நிராகரித்து உள்ளார். உக்ரைனின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளராக அமெரிக்கா நீடிக்கிறது. வெற்றியை நோக்கிய எங்களது முன்னேற்ற பயணத்திலும், அமைதியை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகை குண்டு

 

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகை குண்டு எறியப்பட்டதால் பதற்றம்!



ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகை குண்டு எறியப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் புகை குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.

ஜப்பான் வக்காயமாவில் சிக்காசாக்கி துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திறந்த மேடையில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு மர்மப் பொருள் பாய்ந்து வந்தது. அது சற்று முன்னரே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கிஷிடா நல்வாய்ப்பாக தப்பித்துக் கொண்டார். துரிதமாக செயல்பட்டு தன்னைத் தற்காத்துக் கொண்ட பிரதமர் கிஷிடாவை மெய்க்காவலர்கள் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர். 

இந்த நிகழ்வில் பிரதமருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. மர்மப் பொருள் வீசிய நபரை பாதுகாப்புக் குழுவினர் மடக்கிப் பிடித்தனர். அவர் வீசியது ஸ்மோக் பாம்ப் எனப்படும் புகையை எழுப்பும் குண்டாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் இருந்த செய்தி ஊடகங்கள் பதிவு செய்த காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி ஜப்பானின் மேல்சபைக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தெற்கு நகரமான நாராவில் அபே பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போதுதான் ஜப்பான் கடற்படையின் தற்காப்புப் பிரிவு முன்னாள் உறுப்பினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ஷின்சோ அபேவின் மரணம் ஜப்பான் மக்களிடம் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்து 9 மாதங்கள் ஆன நிலையில் இன்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மர்மப் பொருள் வீசப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய மாணவர்கள் தகுதி தேர்வு எழுத உக்ரைன் அரசு அனுமதி

 

இந்திய மாணவர்கள் தகுதி தேர்வு எழுத உக்ரைன் அரசு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு.!


உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட மற்ற வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தங்கள் நாடுகளில் தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்தியாவிற்கு வந்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் இதற்கு ஒப்புதல் வழங்கியதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயா போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கியது. இன்னும் முழுதாக முடிந்தது என்று கூற முடியாத அளவுக்கு போர் நடவடிக்கைகள் நடந்து தான் வருகிறது. போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் அங்கு பயின்று வந்த வெளிநாட்டு மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

வெளிநாட்டு மாணவர்களை அந்தந்த நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக தங்கள் நாட்டுக்கு அழைத்துக் கொண்டது. இதில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் அந்தந்த நாட்டில் தங்கள் மருத்துவம் படிப்பை தொடர தற்போது உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. 4 நாள் பயணமாக உக்ரைன் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் எமின் தபரோவா இந்தியா வந்துள்ளார். அவர் தான் இந்த தகவலை கூறியுள்ளார். வெளிநாட்டு மாணவர்கள் அவரவர் நாடுகளில் தங்கள் மருத்துவ படிப்பை தொடரலாம் என உக்ரைன் அரசு அனுமதி அளித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி

 

ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும்: தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர்மோடி



"உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும்" என தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

மத்திய இணை அமைச்சர் முருகனின் டெல்லி இல்லத்தில், தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது.  பிரதமர் மோடி, ஆளுநர்கள் தமிழிசை மற்றும் சிபி ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக எம்எல்ஏ நயினார் நாகரேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். 

"இந்தியா உலகின் பழமையான ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயும்கூட. இதற்குப் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஒரு முக்கியமான குறிப்பு தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட் 1,100-1,200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நாட்டின் ஜனநாயக மதிப்பீடுகள் குறித்த அம்சங்களை வெளிப்படுத்துகின்றன.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கிராம சபைக்கான உள்ளூர் அரசியலமைப்பு போன்றது. இதில் பேரவையை எப்படி நடத்த வேண்டும், உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த காலகட்டத்தில், ஒரு உறுப்பினர் எப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று சமீபத்தில் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை குறிப்பிடும் விதமாக பேசினார்.

தொடர்ந்து, "ஒரு நாடாக, இந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது நமது பொறுப்பு, ஆனால் இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும், இப்போது எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், "உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும். சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்தில் இருந்து சிங்கப்பூர் வரை என உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழர்களை காணலாம். எந்த நாடுகளுக்குச் சென்றாலும், தமிழர்கள் தங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களையும் எடுத்துச் செல்கிறார்கள். அதனால்தான் பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், தமிழ் பண்டிகைகள் உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றன.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பலமுறை பல சாதனை செய்த தமிழர்களை பற்றி பேசி இருக்கிறேன். ஐ.நா. சபையில் தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிட்டேன். தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுகிறது. தமிழரின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்கு பல படைப்புகளை வழங்கி உள்ளது.

இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கையில் உள்ள தமிழர்கள் உதவிக்காகக் காத்திருந்தனர், எங்கள் அரசாங்கம் அவர்களுக்காக நிறைய செய்தது. நான் யாழ்ப்பாணம் சென்றபோது, அங்கு தமிழர்களுக்காக இந்திய அரசால் கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைக்கபட்டன. வீட்டில் நுழையும் முன் பால் காய்ச்சும் பாரம்பரிய சடங்கு, அதில் நானும் கலந்துகொண்டேன். அதன் வீடியோக்கள் தமிழ்நாட்டில் வெளியானபோது தமிழ் மக்களிடம் இருந்து நான் நிறைய அன்பை பெற்றேன்.

எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற "காசி-தமிழ் சங்கமம்” வெற்றிகரமாக நடத்தப்பட்டது. காசிக்கும் தமிழகத்துக்கும் பழமையான வரலாற்று தொடர்புகள் உள்ளன. காசி நகரத்தில் உள்ள எந்தப் படகோட்டியிடம் பேசினாலும், அவருக்கு பல தமிழ் வாக்கியங்கள் தெரியும். காசி தமிழ் சங்கமத்தில், ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தமிழ் புத்தகங்கள் வாங்கப்பட்டதும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை நிறுவப்பட்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தமிழகம் மற்றும் தமிழர்கள் குறித்தும் பிரதமர் மோடி நெகிழ்ந்து பேசினார்.

தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்

 

தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (19.04.2023) மற்றும் நாளை (20.04.2023) ஆகிய 2 நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 14 முதல் 17 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும்,18 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24-மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

 

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை: நாளை முதல் துவக்கம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) மாணவா் சோ்க்கை நாளை (ஏப்.17) திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமாா் 53 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் ஏப்.28-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில், தனியாா் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும். அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளின் மாணவா் சோ்க்கை ஆண்டுதோறும் தாமதமாக நடைபெறுவது தனியாா் பள்ளிகளுக்கு சாதகமாகி வருகிறது. இந்த தாமதம் பெற்றோா்களிடம் எளிதில் மன மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இந்த நடைமுறை வருங்காலங்களில் தொடரும்பட்சத்தில் அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கை குறைவதைத் தடுக்க முடியாது என தலைமை ஆசிரியா்கள், கல்வியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2023-24) அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கை ஓரிரு நாள்களில் தொடங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூா்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை முன்கூட்டியே தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வுப் பேரணி ஏப்.17 முதல் 28-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது.

இந்தப் பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளிக் கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறும். இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியா்களும் பங்கேற்கவுள்ளனா். மாணவா் சோ்க்கை கொண்டாட்டத்துக்கான செலவுத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.

1 முதல் 9- ஆம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சோ்க்க விரும்பும் பெற்றோா் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாள்களில் வழங்கப்படும் என்றனா்.

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது

 

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது: பேரவையில் முன்வடிவுநிறைவேறியது!

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது.

சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது: 2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த சட்டத்திருத்தத்தில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது. இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயும், நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா பேரவையில் நிறைவேறியவுடன் அமலுக்கு வர உள்ளது.

குமரியில் கோடை விடுமுறை சீசன் தொடங்கியது

 

குமரியில் கோடை விடுமுறை சீசன் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!

உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

தமிழ் புத்தாண்டை முன்னிட் டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டியும் கன்னியாகுமரியில் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான இறுதி ஆண்டு பொதுத்தேர்வு முடிவடைத் துள்ளதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த வண்ண மாக உள்ளனர்.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். அவர்கள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதன் பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறை யில் நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மாலை நேரங்களில் கடற்க ரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்க ரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ண மாக உள்ளனர். இதில் ஏராள மான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இத னால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டிஉள் ளது. இந்த சுற்றுலா தலங் களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப் பகுதி யில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீ சாரும் தீவிர கண் காணிப்பு பணியில்ஈடுபட்டு வந்தனர்.

திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி

 

திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி: பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை!


திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியீட்டார். இது தொடர்பாக அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கூறுகையில், "மாநிலத் தலைவர் ஆன பிறகு மாதம் ரூ.8 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. எனது வீட்டு வாடகை, உதவியாளர்களுக்கான ஊதியத்தை நண்பர்கள் தான் தருகிறார்கள். காருக்கு கட்சி தான் பெட்ரோல் போடுகிறது.

காவல் பணியில் இருந்த போது லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147-வது வாட்சை நான் வாங்கினேன். 3 லட்சத்திற்கு இந்த வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரஃபேல் வாட்சை வாங்கினேன். 2021ம் ஆண்டு இந்த வாட்சை வாங்கிய அவர், மே மாதம் என்னிடம் கொடுத்தார்" என்று தெரிவித்தார். மேலும் ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வட சென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார். இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்தார்.

கோடை காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமாக

கோடை காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?


கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை குறைவாக கொடுக்கவேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். 

கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவரும், பேராசிரியருமான  தூத்துக்குடி மருத்துவர் இரா.வெங்கட சுப்பிரமணியன் கூறியதாவது:  பொதுவாக கோடை காலத்தில் வெப்பத்தின் காரணமாக குழந்தைகள் வெயிலில் விளையாடும்போது சரிவர தண்ணீர் எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் நீர்ச்சத்து குறைந்து (dehydration)  குழந்தைகள் சோர்ந்து போகும். சிலசமயங்களில் நீர்ச்சத்து மிக குறைந்தால் மயக்கம் மற்றும் வலிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது மற்றும் குழந்தைகளுக்கு வெயில் காலங்களில் தோளில் வேர்க்குரு மற்றும் வேணைக்கட்டி, புண்கள் வரவாய்ப்புள்ளது. தொண்டைவலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் அடிக்கடி ஏற்படும்.

மேற்கண்ட உடல் பாதிப்புகளை கீழ்க்கண்ட முறைகளை மேற்கொள்ளும் போது தடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். பருத்தியிலான மேலாடைகளை அணிவிக்கலாம். காலை, மாலை இருவேளைகளிலும் குழந்தைகளை சுத்தமான தண்ணீரில் குளிப்பாட்டலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி சுத்தமான தண்ணீரை தேவையான அளவு அருந்த பழக்க வேண்டும். உணவுகளில் நீர்ச்சத்து அதிகமாகவும், காரம், எண்ணெய் அளவாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

அசைவ உணவுகளை குறைவாக கொடுக்கவேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் முளைக்கட்டிய தானிய வகைகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும். நொங்கு, இளநீர், பப்பாளிபழம், வாழைப்பழம், வெள்ளரிக்காய் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சுபழம், திராட்சைபழம், அண்ணாச்சிப்பழம் இவைகளை சளி, அலர்ஜி உள்ள குழந்தைகள் முடிந்த அளவு குறைத்து கொள்வது சிறந்தது.

தினமும் சுகாதாரமுறையில் தயாரிக்கபட்ட மோர் மற்றும் தயிர் அடிக்கடி குழந்தைகளுக்கு  கொடுப்பது நீர்ச்சத்து குறைந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும். குழந்தைகள் வெயிலில் திறந்த வெளியில்  நீண்ட நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்குள் வரும்பொழுது குழந்தைகளின் உடல் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். குழந்தைகள் நன்றாக காற்றோட்டமான இடத்தில் சிறிது நேரம் இழைப்பாறிய பிறகு தண்ணீர் கொடுப்பது சளி பிடிக்காமல் தவிர்க்கும் என மருத்துவர் இரா.வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசில் 7500 பணியிடங்கள்

 

மத்திய அரசில் 7500 பணியிடங்கள்: மே 3ம் தேதி வரை விண்ணபிக்கலாம் - ஆட்சியர்


மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தேர்வுக்கு மே 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff selection Commission,Government of India ) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 (Combined Graduate Level Examination 2023)” தொடர்பான அறிவிப்பினை 03.04.2023 அன்று வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்/சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் ‘C” மற்றும் குரூப் ‘C” நிலையில், 7500ற்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை அறிவித்துள்ளது.

இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFIles/noticeCGLE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.

இப்பணிக்காலியிடங்களுக்கு WWW.sss.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.

இப்பணிக்காலியிடங்களுக்கு www.sss.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.

தென் மண்டலத்தில் கணினி அடிப்படையினலான தேர்வு ஜூலை 2023ல், தமிழ்நாட்டில் 07 மையங்களிலும், புதுச்சேரியில் 01 மையத்திலும், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 03 மையங்களிலும் என மொத்தம் 21 மையங்கள்/நகரங்களில் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டத்தில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam – CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவ்விணையதளத்தில் ‘TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் AIM TN என்ற YouTube Channel- களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறலாம். எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளர்.

தூத்துக்குடியில் சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்

தூத்துக்குடியில் சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அவசரகால வாகனங்கள் உரிய நேரத்தில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள், கழிவு நீர் கால்வாய், மழைநீர வடிகால் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகரின் பல பகுதிகளில் சாலைகள் சுமார் 3அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பங்களில் வயர்கள் தாழ்ந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

இதனால் தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசரகால வாகனங்கள் உரிய நேரத்தில் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அண்ணா நகர் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டபோது தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சிறிய வாகனம் மூலம் தீ ஆணைக்கப்பட்டது. மேலும் ஜேசிபி போன்ற வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு மின் கம்பங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல வீடுகளின் சாய்தளங்கள் சாலை வரை இழுத்து அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.  இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஐஸ் வாட்டர் உஷார் ஆளையே கொல்லும்... ஜாக்கிரதை...

 ஐஸ் வாட்டர் உஷார் ஆளையே கொல்லும்... ஜாக்கிரதை...

வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. வெய்யில் கொடூரம்... தவறான முடிவெடுக்கத் தூண்டும்.... ஆம்... வெயிலில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்ததும்... வெப்பக் கொடுமையால்.. ஐஸ் வாட்டரை குடித்து விடாதீர்கள்.

40 டிகிரி செல்சியஸ் அல்லது 

105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.

அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார்.

வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள். 

அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்தி, வீட்டுக்குள் நிலவும் வெப்பத்துக்கு நமது உடலை தயார்செய்துவிட்டு பிறகுதான் இயற்கையான குளிர் நீரிலோ, வெதுவெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பமுள்ள தண்ணீரை குடிக்கலாம்.

நல்ல உறுதிவாய்ந்த உடலுடைய நபர் வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். கொதிக்கும் தனது உடலை உடனடியாக குளிர வைக்க விரும்பி குளிர்நீர் ஷவரில் குளித்தார். 

உடனே, அவருடைய தாடைகள் இறுகிக்கொண்டன. வாயை திறக்க முடியவில்லை. நல்லவேளை ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். 

கைகால்கள் முடங்கி, உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. நடப்பதற்கே சிரமப்படும் நிலையில் அவர் இருக்கிறார் என்று ஒரு டாக்டர் கூறுகிறார்.

வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர், ஐஸ் போட்ட வாட்டரை குடிக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள். ஐஸ் வாட்டரை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாப்போம் என்ற பிரச்சாரம் இப்போது பரவி வருகிறது

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மக்கள் அவதி!

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மக்கள் அவதி!

தூத்துக்குடியில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இடையில் இரண்டு நாட்கள் லேசான சாரல் மழை எட்டிப்பார்த்தாலும், போதிய மழை பெய்யவில்லை. இதனால் தொடர்ச்சியாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டியெடுத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். 

ரோடுகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.  வாகனங்களில் செல்பவர்கள் ஆங்காங்கே ரோட்டோரம் உள்ள குளிர்பான கடைகளுக்கு சென்று வெயிலின் தாக்கத்தை தணித்தனர். இதற்காக சாலையோரங்களில் குளிர்பான கடைகள், மற்றும் இளநீர், கம்மங்கூழ்  கடை உள்ளிட்ட கடைகள் முன்பு ஏராளமானோர் குவிந்து தாகத்தை தீர்த்து வருகின்றனர். 

தர்பூசணி பழங்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் சிக்னல்களில் கூட நிற்க முடியாமல் சாலையோர மரங்களின் நிழலில் ஒதுங்கி நிற்கின்றனர். கோடை வெயில் இன்னும் உக்கிரத்தை காட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...