Tuesday, April 18, 2023

கோடை காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமாக

கோடை காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?


கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை குறைவாக கொடுக்கவேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். 

கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவரும், பேராசிரியருமான  தூத்துக்குடி மருத்துவர் இரா.வெங்கட சுப்பிரமணியன் கூறியதாவது:  பொதுவாக கோடை காலத்தில் வெப்பத்தின் காரணமாக குழந்தைகள் வெயிலில் விளையாடும்போது சரிவர தண்ணீர் எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் நீர்ச்சத்து குறைந்து (dehydration)  குழந்தைகள் சோர்ந்து போகும். சிலசமயங்களில் நீர்ச்சத்து மிக குறைந்தால் மயக்கம் மற்றும் வலிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது மற்றும் குழந்தைகளுக்கு வெயில் காலங்களில் தோளில் வேர்க்குரு மற்றும் வேணைக்கட்டி, புண்கள் வரவாய்ப்புள்ளது. தொண்டைவலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் அடிக்கடி ஏற்படும்.

மேற்கண்ட உடல் பாதிப்புகளை கீழ்க்கண்ட முறைகளை மேற்கொள்ளும் போது தடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். பருத்தியிலான மேலாடைகளை அணிவிக்கலாம். காலை, மாலை இருவேளைகளிலும் குழந்தைகளை சுத்தமான தண்ணீரில் குளிப்பாட்டலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி சுத்தமான தண்ணீரை தேவையான அளவு அருந்த பழக்க வேண்டும். உணவுகளில் நீர்ச்சத்து அதிகமாகவும், காரம், எண்ணெய் அளவாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

அசைவ உணவுகளை குறைவாக கொடுக்கவேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் முளைக்கட்டிய தானிய வகைகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும். நொங்கு, இளநீர், பப்பாளிபழம், வாழைப்பழம், வெள்ளரிக்காய் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சுபழம், திராட்சைபழம், அண்ணாச்சிப்பழம் இவைகளை சளி, அலர்ஜி உள்ள குழந்தைகள் முடிந்த அளவு குறைத்து கொள்வது சிறந்தது.

தினமும் சுகாதாரமுறையில் தயாரிக்கபட்ட மோர் மற்றும் தயிர் அடிக்கடி குழந்தைகளுக்கு  கொடுப்பது நீர்ச்சத்து குறைந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும். குழந்தைகள் வெயிலில் திறந்த வெளியில்  நீண்ட நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்குள் வரும்பொழுது குழந்தைகளின் உடல் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். குழந்தைகள் நன்றாக காற்றோட்டமான இடத்தில் சிறிது நேரம் இழைப்பாறிய பிறகு தண்ணீர் கொடுப்பது சளி பிடிக்காமல் தவிர்க்கும் என மருத்துவர் இரா.வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...