Showing posts with label அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்.... Show all posts
Showing posts with label அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்.... Show all posts

Saturday, March 23, 2024

அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்...

லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்...

சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.

பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது. கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.

"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார்.

அதில் வரும்,

(1) 480வது ஸ்லோகமான, " *பாயஸான்ன* *ப்ரியாயை* " என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்" எனப் பொருள்.

(2) 501வது ஸ்லோகமான, " *குடான்ன ப்ரீத* *மானஸாயை'* என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்" என்று அர்த்தம்.

(3) 526வது ஸ்லோகமான, " *ஹரித்* *ரான்னைக* *ரஸியை'* என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்" என பொருள் வருகிறது.

(4) அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, " *தத்யான்ன ஸக்த* *ஹ்ருதயாயை'* என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!" என்று பொருள்.

(5) " *முத் கௌத* *நாஸக்த...* என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!" என்று அர்த்தம்.

(6) " *ஸர்வெளதன* *ப்ரீதசித்தா* ' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!" எனப் பொருள்.

(7) இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், " *தாம்பூல பூரிதமுகிச்யை* " என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.
         "தாம்பூலம்" என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம். 

இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம். அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!யார் யார் எப்படி என்னை வழிபடுகறார்களோ அவ்வாறே அருள்கிறேன் என்கிறார் பகவான் தன் கீதையில். அம்பாளும் எண்ணத்தின் காரணமாகவும், எண்ணமாகவும், அதை தெரிவிக்கும் மொழியாகவும், வார்த்தையாகவும் பக்தனின்மனதில் அன்னம்போல் சஞ்சரிக்கிறாள் என்கிறது ஸஹஸ்ரநாமம்

*நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, துதித்து, தாயின் அருளை பெறுவோம்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...