Thursday, March 20, 2025

Oatmeal-உளுந்து களி

உளுந்து களி......

தேவையான பொருள்கள்
உளுந்து - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் - 50 கிராம்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - ஒன்று
செய்முறை
உளுந்துடன் கடலைப்பருப்பை சேர்த்து மூழ்கும் அளவிற்கும் அதிகமாக‌ தண்ணீர் சேர்த்து ஒருமணி நேரம் ஊற‌ விடவும்.

பின்னர் தண்ணீர் சேர்த்து சற்று கொரகொரப்பாக‌ அரைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் 50 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள‌ உளுந்தை சேர்க்கவும்.

இதை கைவிடாமல் நன்கு கிளறவும். தேவைப்பட்டால் மேலும் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் ஒரு ஏலக்காயை பொடியாக்கி தூவவும்.

வெல்லத்தை பாகு காய்ச்சவும்.

வெல்லப்பாகை வடிக்கட்டி களியுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த‌ முந்திரியும் திராட்சையும் சேர்க்கலாம்.

சுவையான‌ சத்தான‌ உளுந்து களி தயார்......

80's, 90's Kids

#ஆண்கள்...❤️💚💜 🔵 அடிவயிறு நொந்துவிடும் என்று அந்த மூன்று நாட்களும் தொட்டியில் தண்ணீர் நிறைத்து வைக்கும் அப்பாக்கள்!!! 🔵 கிணற்றடியில் குளிக்கும் போது யாராவது எட்டிப்பார்த்தால் இரண்டு ஓலை கிடுகு வைத்து வேலியை உயர்த்தும் அண்ணன்மார்!!! 🔵 அயர்ந்து தூங்கும் போது சற்று ஆடை விலகியிருந்தால் போர்வையை போர்த்திவிட்டு செல்லும் தம்பிகள்!!! 🔵 பள்ளிக்கு நேரம் சென்றால் தம்பி பிள்ளையை ஒருக்கா அதில் இறக்கிவிடு என நம்பி ஏற்றிவிடும் அம்மாக்கள்!!! 🔵 பிள்ளை பெற்ற காலங்களில் மனைவியை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி பத்தியம் அரைத்து பார்த்த ஆருயிர் கணவன்மார்!!! 🔵 நன்மை தீமை நேரங்களில் மாமா மச்சான் உறவினர்கள் என்று எல்லோரும் ஓர் குறுகிய இடத்தில் கால்மாடு தலைமாடு என உறங்கிய காலம்!!! 🔵 எங்களை கூடிச்செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது, பக்கத்து வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தாலும் நம்பி ஒப்படைத்து விட்டு செல்லும் அம்மா!!! 🔵 பிரத்தியேக வகுப்புக்கள் முடிந்து வரும்போது இருட்டாகிவிட்டால் வீடுவரை சேர்ந்து வந்து விட்டுபோகும் ஆண் நட்புகள்!!! 🔵 ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுவதும் உறவுகளைக் கண்டால் அவர்கள் தோள் மீதும் மடிமீதிருந்தும் செல்லம் கொஞ்சுவதுமாய்... எந்த வக்கிரமும் இலாத உலகில் வாழ்ந்த கடைசி தலைமுறை நாம் என்பதே உண்மை🙏🙏 (80's, 90's Kids)

4- வகையான குழம்பு

4- வகையான குழம்பு
------------------------------------------------
கத்தரிக்காய் பருப்பு

தேவையான பொருட்கள் 
கத்தரிக்காய் 
துவரம் பருப்பு 
தக்காளி 
புளி 
காய்ந்த மிளகாய் 
சின்ன வெங்காயம்
சீரகம் 
பூண்டு 
மஞ்சள் தூள் 
பெருங்காயத்தூள்
நல்லெண்ணெய்
உப்பு 
கறிவேப்பிலை 
கொத்தமல்லி இலை 

செய்முறை 
குக்கரில், ஒரு டம்ளர் துவரம் பருப்பு, பொடியாக நறுக்கிய இரண்டு கத்தரிக்காய், நெல்லிக்காய் அளவு புளி, இரண்டு தக்காளி, மூன்று டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், இரண்டு பல் பூண்டு சேர்த்து இரண்டு விசில் விடவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், 1/4 கப் சின்ன வெங்காயம், ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், வேக வைத்துள்ள பருப்பு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, பின் மசித்து கொள்ளவும்.
💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥😊💥🍁

அவரைக்காய் கூட்டு

தேவையான பொருட்கள் 
அவரைக்காய் 
தேங்காய் 
தக்காளி 
காய்ந்த மிளகாய் 
சாம்பார் தூள் 
மிளகாய் தூள் 
பெரிய வெங்காயம் 
மஞ்சள் தூள் 
கடுகு 
கடலைப்பருப்பு 
உப்பு 
கறிவேப்பிலை 
கொத்தமல்லி இலை 
எண்ணெய் 

செய்முறை 
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய அவரைக்காய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், 1/2 கப் அரைத்த தேங்காய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁
முளைத்த பயிறு குழம்பு

தேவையான பொருட்கள்
பச்சைப்பயிறு
தட்டைப்பயிறு
கொள்ளு பருப்பு
கருப்பு சுண்டல்
சின்ன வெங்காயம்
தக்காளி
தனியா தூள்
சீரகம்
காய்ந்த மிளகாய்
தேங்காய்
புளி
மஞ்சள் தூள்
கத்திரிக்காய்
உருளைக்கிழங்கு
நல்லெண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
உப்பு
பெருங்காயத்தூள்
செய்முறை
முதலில், 50 கிராம் பச்சைப்பயிறு, 50 கிராம் தட்டைப்பயிறு, 50 கிராம் கொள்ளு பருப்பு மற்றும் 50 கிராம் கருப்பு சுண்டல் சேர்த்து ஆறு மணி நேரங்கள் ஊற வைக்கவும்.

பின், ஊற வைத்துள்ள பயிறை முளைக்கட்டி வைத்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், 50 கிராம் சின்ன வெங்காயம், இரண்டு தக்காளி, ஆறு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இரண்டு ஸ்பூன் தனியா தூள், ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். ஆறிய பின் அரைக்கவும்.

மற்றொரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, பத்து சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

100 கிராம் கத்தரிக்காய் மற்றும் 100 கிராம் உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.

1/4 கப் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்க தொடங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தயார் செய்து வைத்துள்ள முளைக்கட்டிய பயிறு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.

இறுதியாக 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்
---------------------------------------------------------
உருளைக்கிழங்கு கிரேவி

தேவையான பொருட்கள் 
உருளைக்கிழங்கு 
பெரிய வெங்காயம் 
தக்காளி 
சோம்பு 
சிக்கன் மசாலா தூள் 
மிளகாய் தூள் 
கறி மசாலா தூள் 
மஞ்சள் தூள் 
பச்சை மிளகாய் 
இஞ்சி-பூண்டு விழுது
தேங்காய்
கறிவேப்பிலை 
கொத்தமல்லி இலை 
கடுகு
எண்ணெய் 
உப்பு 

செய்முறை 
முதலில், கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். இவை ஆறிய பின் நன்கு அரைத்துக் கொள்ளவும் 

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

பின்னர், பொடியாக நறுக்கிய ஒரு கப் உருளைக்கிழங்கு சேர்க்கவும். மேலும், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

இதனுடன், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...