Showing posts with label கொல்லிமலை. Show all posts
Showing posts with label கொல்லிமலை. Show all posts

Sunday, May 22, 2022

கொல்லிமலை

#கொல்லிமலை

              >> கொல்லி மலை தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். அறம்பாடியம்மையை தன் இடப்பாகத்தில் சுமந்து கொண்டு இறைவன் ஆட்சி செய்யும் பெருமையையும், அருள்சித்தர்கள் பலர் ஜீவ நிலையில் குருவருள் கொடுத்துக் கொண்டிருக்கும் பேறு பெற்றதொரு புனிதம் வாய்ந்த இடம் கொல்லிமலையாகும் . இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் அறப்பள்ளீஸ்வரர் - தாயம்மை எனும் அறம்வளர்த்த நாயகியுடன் எழுந்தருளியுள்ளார்.

          >> அனைத்து ஜீவராசிகளும் உய்யும் பொருட்டு தவமியற்றிய சித்தர்கள் கொல்லிமலையில் ஒருங்குகூடி தங்கள் சித்த மரபுப்படி சிவலிங்கம் ஒன்றை (ஆருஷலிங்கம்) நிறுவினர். இந்த ஆருஷ லிங்கத்திற்கு அறப்பள்ளீஸ்வரர் என்று பெயரிட்டு வணங்கினர். நாளடைவில் இப்பகுதி வயல் வெளியானதால் சிவலிங்கம் நிலத்தில் புதையுண்டது. பின்பு ஒரு சமயம் நிலம் உழும்போது ஒரு உழவனின் கலப்பையில் லிங்கம் சிக்கியது. அந்த விவசாயி அந்த இடத்தை அகழ்ந்து பார்த்த போது இலிங்கம் வெளிப்பட்டது. ஊர் மக்கள் பச்சைப் பந்தல் அமைத்து வழிபாடு செய்தனர். நாளடைவில் இங்கு பெருங்கோவில் கட்டப்பட்டது.

         >> தாயம்மை எனும் அறம்வளர்த்தநாயகி எழுந்தருளியுள்ள சன்னதிக்கு முன்பு உள்ள மண்டபத்தின் மேற்கூறையில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்ரீசக்ரத்தின் கீழே அமர்ந்து தவம் செய்ய அருமையாய் இருந்தது. அன்னையின் அருள் நம்மை இருகரம் நீட்டி அழைப்பது போல் இருந்தது . இறைவனின் கருவறை கோபுரம் முழுவதும் சித்தர்களின் திருவுருவமும் மற்றும் அன்னையின் கருவறையை சுற்றிலும் உள்ள சுவரில் சித்தர்களின் திரு உருவங்களைக் காணும் போது இக்கோவில் சித்தர்களின் அருட்கூடம் என்பதை நமக்கு உணர்த்துகிறது ..

          >> இத்தலத்தின் வடக்குப் பகுதியில் என்றும் வற்றாத ஐந்து நதிகள் ஒன்றாக இணைந்து சுமார் 150 அடி உயரத்திலிருந்து ஆகாயகங்கை என்ற அருவியாய்க் கொட்டுகிறது. இந்த அருவி நீர் பஞ்சநதி என்று பெயர் பெற்ற புண்ணிய தீர்த்தமாகும். கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக - 760 படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சியில் நீராடலாம்.. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.    

            >> இக்கோவில் அருகில் உள்ள பஞ்சநதியில் உள்ள மீன்களுக்கு இங்கு வரும் பக்தர்கள் உணவு பொருட்களை வழங்குவதும், சிலர் மீனைப் பிடித்து மூக்கு குத்தி விளையாடுவதும் உண்டாம். சில காலத்திற்கு முன்பு ஒரு அறியாமையுடைய பக்தர் அங்குள்ள மீனைப் பிடித்து வெட்டிச் சமைக்கத் தொடங்கினார். குழம்பு கொதிக்கத் தொடங்கியதும் அக்குழம்பில் இருந்து மீன்கள் உயிர்பெற்று தாவிக் குதித்து நதிக்குள் ஓட ஆரம்பித்தன. இந்தச் சமயம் ஒரு அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவன் இருப்பதாகக் கூறி ஒலித்தது. எனவே, இந்த கோவில் ஈஸ்வரனுக்கு, அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்ற பெயர் வழங்கலானது. தினமும் காலையில் மூலவருக்குப் படைத்த படையலை, இத்தீர்த்தத்திலுள்ள மீன்களுக்கு போடுகிறார்கள்.

      >> அறப்பள்ளீஸ்வரர் மீன் வடிவில் இருப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். எனவே இவர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு முன்பே இந்த ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பல்வேறு தின்பண்டங்களைக் கொடுத்து வழிபடுகின்றனர். இதற்குப் பின்னரே இவர்கள் கோவிலுக்கு சென்று சிவனையும் அம்மனையும் வழிபடுகின்றனர். கொல்லிமலையில் இருந்து பார்க்கும் போது மலையின் காட்சி அன்னை படுத்து உறங்குவது போல் தென்படுகிறது .

சித்தர்களின் அருட்கடாட்சியம் : 

       சித்தர்கள் வாழும் இந்தக் கொல்லிமலையில் அனேகச் சித்தர்களின் குகைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவைகளைக் கண்டறிவதில் மிகவும் கடினமான நிலை உள்ளது. மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் குகைகள் இருப்பதாகவும் அங்கு பல சிவலிங்கங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள். மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தர் , பாம்பாட்டி சித்தர் குகை மேலும் மகான்களின் ஆசிரமங்கள் மற்றும் காகபுஜண்டர் மற்றும் காலாங்கி நாதரின் பரிபூரண கடாட்சியம் நிறைந்த மலையாக கொல்லி மலை திகழ்கிறது ..

     >> கொல்லிமலையைக் காப்பாற்றுவதற்காக நான்கு திசைகளிலும் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர். தென் திசையைக் கொல்லிபாவையும், வடதிசையை மாசி பெரியண்ணன் சாமியும், மேற்கு திசையை எட்டுக்கை காளியும், கிழக்குத் திசைக்கு சின்ன அண்ணன் சாமியும் காவலுக்காகப் பிரதிஷ்டை செய்துவைத்துள்ளனர்.

      >> அறப்பள்ளீஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆகாயகங்கைக்கு கீழ்த்திசையில் ஒரு கிலோ மிட்டர் தொலைவிற்குப் படிக்கட்டுப் பாதை உள்ளது.அவ்வழியாகச் சென்று ஆகாயகங்கையின் மூலிகைத் தீர்த்தத்தில் நீராடியப் பின் அங்கிருந்து மேல்நோக்கிச் செல்லும்போது இடதுப் புறமாகக் கோரக்கர் குகைச் செல்லும் வழியுள்ளது. இங்கிருந்து பன்னிரண்டு கிலோமிட்டர் நடக்க வேண்டும் வழி நெடுக்க கரடு முரடான அடர்ந்தக் காட்டுப் பகுதியாக உள்ளது. இங்குள்ள மரத்தினிலுள்ள அம்புக்குறியிட்ட பாதையைக் கவனித்துச் செல்ல வேண்டும் .எனவே ஒரு வழிகாட்டியை அழைத்துச் செல்வது சால சிறந்தது.

            >> அறப்பள்ளீஸ்வரர் ஆலயத்தின் நேர் பின்புறம் ஸ்ரீ ராமபிரசன்ன நாதானந்த ராஜயோகி சமாதி கொண்டு அருள் செய்கிறார் மேலும் கொல்லி மலையில் அறப்பள்ளீஸ்வரர் ஆலயத்திலிருந்து ஒரு கிலோமிட்டர் முன்பு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ மாணிக்க சாமிகள் எனும் ஓசானி சித்தர் சமாதி பெற்று உள்ளார் ..இவர் நூற்றி நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தவர் . பாம்பாட்டி சித்தரின் பரிபூரணமான அருளை பெற்றவர் .

           >> ஓசானி சித்தர் சமாதி பீடத்தில் இருந்து இரண்டு பவுர்ணமிவிட்டு (மூன்று மாதத்திற்கு ஒரு முறை) மூன்றாம் பவுர்ணமிக்கு குழுவாக இவர்களே கோரக்கர் மற்றும் பாம்பாட்டி சித்தர் குகைக்கு அழைத்து செல்கிறார்கள்.. இரவில் சித்தர்களுக்கு பூசை மற்றும் யாகம் நடைபெறுகிறது.. இவர்களே உணவு ஏற்பாடு செய்து தருவார்கள்.. சித்தர் குகைக்கு செல்ல விரும்பம் உள்ளவர்கள் பவுர்ணமிக்கு முதல் நாள் ஓசானி சித்தர் பீடத்திற்கு வந்தால் போதும் அவர்களே அழைத்து செல்வார்கள் .(தொடர்புக்கு 8110043267.) 

            >> அறப்பள்ளீஸ்வரர் கோவிலுக்கு மேல்புறம் கொல்லிப்பாவை என்ற பெயரில் பேரழகும், தெய்விக சக்தியும் நிறைந்த பதுமை ஒன்று இருந்ததாக தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. இம்மலையில் தவமியற்றிய சித்தர்களும் முனிவர்களும் தங்கள் தவத்திற்கு இடையூறு வராதபடி காப்பதற்காக இந்தக் கொல்லிப்பாவையை உருவாக்கினார்களாம்..

          >> அழகிய பெண் உருவுடன் அமைந்த இப்பாவை அரக்கர்களின் வாடையைக் கண்டு பின்பு பெரும் சிரிப்புடன் பயமுறுத்தி அவர்களைக் கொன்று விடுவாளாம். அறப்பள்ளீஸ்வரர் கோவிலில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எட்டுக்கை அம்மன் தான் கொல்லிப்பாவை என்றும் சொல்லபடுகிறது . 

          >> இக்கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், வரலாற்று சிறப்பும் உடையது. சுமார் 280 கி.மீ.பரப்பளவும் 1300 மீட்டர் உயரமும் கொண்ட இம்மலைத்தொடரை சேர வேந்தர்கள் ஆண்டனர். கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி எனும் மன்னன் ஆண்ட கொல்லிமலை நாட்டின் ஒரு பகுதிக்கு அறப்பள்ளி என்று பெயர். 

          >> இக்கோவிலில் 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோழ மன்னன் கண்டராதித்தனின் மனைவியும், சோழ சக்ரவர்த்தி இராசராசசோழனின் பெரிய பாட்டியுமான செம்பியன் மாதேவி தன் விலைமதிப்பற்ற அணிகலன்களை அறப்பள்ளீஸ்வரருக்கு அணிவித்ததற்கான 12 சோழர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன.

அமைவிடம்:

       >> நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சோளக்காடு வரை 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டமலைப் பாதையின் தூரம் சுமார் 26 கி.மீ. இது கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும். கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப் பாதைகளில் பயணிக்க ஏதுவான சிறிய ரக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொல்லிமலைக்கு மேல் உள்ள ஒவ்வொரு இடமும் நான்கு - ஐந்து கிலோ மிட்டர் தொலைவில் உள்ளது தனியாக வாகனத்தில் வந்தால் எளிமையாக இருக்கும் ..

வந்து பாருங்கள் அருமையாக உள்ளது ...


Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...