Sunday, January 8, 2023

சூதாட்டத்தில் இருந்த பகடையாய் சுழன்றவனே நான் தான்

பாண்டவர்களின் வனவாசத்தின் போது ஒரு மரத்தடியில் யாரும் அறியாதவாறு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான் யுதிஷ்டிரன். துரியோதனன் தன் தேசத்து அரசனானதும் அவனுக்கு முடிசூட்டு விழா நடத்தபட்டு தன் ராஜ்ஜியமெல்லாம் அவன் கொடி பறப்பதையும் அறிந்து தன்னை தானே நொந்து கொண்டான். வீட்டுக்கு மூத்தவன் உடன்பிறந்தோர் முன்னால் அழகூடாது எனும் தர்மத்தை அவன் அப்பொழுதும் காத்துக் கொண்டிருந்தான். இதனை அறிந்த கிருஷ்ணன் அவனை தேற்றும் பொருட்டு "யுதிஷ்டிரா இங்கே அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கின்றாய்" என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டார். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத யுதிஷ்டிரன் சுற்றி யாருமில்லை என்பதை உணர்ந்து கிருஷ்ணனின் கைகளை பற்றி கதறினான். திரௌபதி இப்படி சிரமப்படவும் என் அன்னை வயதான காலத்தில் இப்படி அலையவும் என் தம்பிமார்கள் நாடோடி காட்டுவாசிகளாக திரியவும் நானே காரணமாகி விட்டேன் எனக்கு கிடைத்த தாயும் தம்பிகளும் மனைவியும் நல்லவர்கள். என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவ்வகையில் நான் பாக்கியசாலி. ஆனால் இவர்கள் அனைவருக்கும் என்னால் தானே அனைத்து துன்பமும் வந்தது. துரியோதனன் அழைத்ததும் நான் சூதாடியிருக்க கூடாது. அதுவும் அவன் சகுனி துணையோடு ஆடும் பொழுது நான் உன்னை அல்லவா அழைத்திருக்க வேண்டும் நான் உன்னை அழைக்காமல் உனக்கு தெரியக் கைடாது என்றல்லவா சிந்தித்தேன் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன். அந்த நொடிப் பொழுது செய்த சிறிய தவறு இந்த மாபெரும் துன்பத்தை கொடுத்து விட்டது என கிருஷ்ணனிடம் கண்ணீர் விட்டவாறு கூறினான் யுதிஷ்டிரன்.

கிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். யுதிஷ்டிரா நீ அழைக்காமல் நான் வரமாட்டேன் என நினைத்தாயா? சூதாட்டத்தில் இருந்த பகடையாய் சுழன்றவனே நான் தான் யுதிஷ்டிரா. எப்பொழுது உன்னை துரியோதனன் அழிக்க நினைத்தானோ அப்பொழுதே அவன் அழிவு தொடங்கியது. இந்த நிலையில் எதிரி வாழவும் திருந்தவும் நீ வாய்ப்பளித்தாய் என்பதை உலகுக்கு சொல்லவதற்காகவே இந்த நிகழ்வை நடத்திக் காட்டினேன். யுதிஷ்டிரன் எப்பொழுதும் தர்மனாக நின்றான் என்பதை வரலாறு எழுதவே பகடையினை அவனுக்கு விழவைத்தேன். சகுனி என் நாடகத்தின் ஒரு கருவி அவ்வளவு தான். நாடகத்தை நடத்துபவன் நான் அதில் நீயும் ஒரு பாத்திரம் என்பதை நினைவில் கொள். உண்மையில் நீ உன் மிக உயந்த இயல்பில் நின்றாய். அதை புரிந்து கொள் தெளிவடைவாய் என்றார். அதற்கு யுதிஷ்டிரன் நான் சூதாடி தோற்றேன். என் இயல்பிலிருந்து மாறி சித்தம் கலங்கி சென்றேன். நானா தர்மவான் என்று சந்தேகத்தோடு கேட்டான். அதற்கு கிருஷ்ணர் யுதிஷ்டிரா இப்பொழுதும் நீதான் வென்றாய். சூதாட்டத்தில் நீ தோற்று உன்னை அழிக்க வந்தவர்களை சிறிது காலம் வாழ வழிசெய்திருக்கிறாய். யுதிஷ்டிரன் தன் ராஜ்ஜியத்தில் தன்னை அழிக்க நினைத்த பகைவர்வர்களுக்கும் சிறிது காலம் வாழ இடம் கொடுத்தான் என பெயர் பெற்றாய். நாட்டின் மீதும் அதிகாரத்தின் மீதும் பேராசை கொண்ட அவர்கள் ஆண்டு அனுபவித்து அதன் பிறகாவது திருந்த மாட்டார்களா என வாய்ப்பு கொடுத்த நீ உத்தமன். இது உன் அன்னைக்கு தெரியும். உன் மனைவிக்கு தெரியும். உன் சகோதரரகளுக்கும் தெரியும் அதனால் தான் அவர்கள் உன்னை ஒருவார்த்தை கூட சொல்லவில்லை பகைவனுக்கும் அருளிய நல்ல மனதுடையவன் என்று உன்னை மனதார வாழ்த்தி வணங்கி கொண்டிருக்கின்றார்கள். நீயோ இங்கு அழுது கொண்டிருக்கின்றாய் என்றார்.

கிருஷ்ணா இது போதும் என் மனபாரம் குறைந்ததது என் மனம் குளிர்ந்தது நான் கடைபிடிக்கும் தர்மத்தை காக்க நீ அருள்புரிந்திருக்கின்றாய். இல்லையேனில் சூதாடி வென்றான் யுதிஷ்டிரன் என்ற அவப்பெயர் எனக்கு வந்திருக்கும். சூதாடி வென்று தம்பியருக்கு ராஜ்யம் கொடுத்தான் அயோக்கியன் என்ற அவப்பெயர் காலத்துக்கும் நின்றிருக்கும். இதை என் குடும்பத்தர் எப்படி பொறுப்பார்கள். உலகம் என்னை எப்படி கருதியிருக்கும். நல்ல வேளையாக என்னை காப்பாற்றி இருக்கிறாய் என்று கிருஷ்ணரிடம் மகிழ்ச்சி அடைந்த யுதிஷ்டிரன் தன் கலக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தான். அதற்கு கிருஷ்ணர் நீ கடைபிடிக்கும் தர்மம் உன்னோடு எப்போதும் நிற்கும். அதற்கு ஏற்றபடி தர்மமும் நானும் உன்னை காப்போம். கௌரவர்கள் ஆடாத ஆட்டம் ஆடி அந்த அக்கிரமத்தால் அழிந்தும் போவார்கள். நீ உன் கடமையினை செய் உன் இயல்பிலே இரு குற்றவுணர்ச்சியோ கண்ணீரோ கொள்ளாதே. அவர்களை சிலகாலம் வாழ வழிவிட்டதை எண்ணி உன் புண்ணியம் பெருகியிருப்பதை உணர்ந்து கொள் அது ஒரு நாள் உனக்கு வெற்றியளிக்கும் என்பதை மனதில் கொள் என்றார் கிருஷ்ணர். நடந்து முடிந்த சூதாட்டத்தில் தனக்கு ஏற்பட்ட தோல்வியிலும் தனக்கு கிடைத்த பாடத்தை யுதிஷ்டிரன் புரிந்து கொண்டான். அவனையும் அறியாமல் ஒரு கம்பீரமும் உற்சாகமும் அவனுக்குள் வந்தது. சகோதரர்களை நோக்கி மனநிறைவோடு நடந்தான். அவனுக்கு தர்ம தேவதை புன்னகைத்தபடி குடைபிடித்து நடந்து கொண்டிருந்தாள்.... (கிருஷ்ணனுக்கு மட்டும் அது தெரிந்தது.)

சர்வம் கிருஷ்ணார்பணம்..!
ஓம் நமோ நாராயணா..!

பக்தனுக்காக சமையல்காரனாக மாறிய பாண்டுரங்கன்

பக்தனுக்காக சமையல்காரனாக மாறிய பாண்டுரங்கன்

அது கல்யாண வீடு என்பதற்கு வாசலில் இருந்த இரண்டு வாழை மரங்களே சாட்சியாக நின்றிருந்தன. வேறு எந்த ஆர்ப்பரிப்பும் அங்கு இல்லை. 

ஆடம்பரமாக திருமணத்தை நடத்த அது ஒன்றும் பணக்காரரின் வீடும் அல்ல, ஏதோ ஒரு தொழில் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிழைக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரின் வீடும் அல்ல.

தனக்கும், தன் மனைவி மற்றும் மகளுக்கும் தேவையான உணவை, தினமும் உஞ்ச விருத்தி எடுத்து சாப்பிட்டு வரும், பாண்டுரங்கனின் பரம பக்தன் நீளோபாவின் வீடு. பிம்பளம் என்ற அழகிய நகரத்தின் நடுவே அமைந்திருந்த நீளோபாவின் வீட்டில்தான் திருமண நிகழ்ச்சி.

திருமண ஏற்பாடு

அழகு இருந்தும், பணம் இல்லாததால் தன் மகளுக்கு திருமணம் நடைபெறுமா? என்ற கவலையில் தவித்து வந்தார் நீளோபாவின் மனைவி. 

ஆனால் ‘எல்லாம் இறைவனுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொள்வான்’ என்று அவன்மேல் பாரத்தைப் போட்டு விட்டு, பகவானின் பதத்தை பணிவதிலேயே தன் காலத்தைக் கழித்து வந்தார் நீளோபா.

இந்த நிலையில் நீளோபா புதல்வியின் அழகில் மயங்கிய வாலிபன் ஒருவன், அவளை மணம் செய்து கொள்ள வலிய வந்தான்.

அவனும் ஏழைதான் என்றாலும், அழகிலும் வலிமையிலும் சிறந்தவனாக இருந்தான். திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டு, அந்த நாளும் நெருங்கி விட்டது.

நாளையப் பொழுதில் திருமணம். ஆனால் நீளோபாவின் வீடு உறவுகளின் கலகலப்பின்றி காணப்பட்டது. 

நீளோபாவின் வீட்டில் பணப் பஞ்சம் என்பதால், அவரது உறவினர்களின் மனதில் அன்புப் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் நீளோபாவின் வீடு வெறிச்சோடிப் போய் கிடந்தது. 

எங்கே திருமணம் வீட்டிற்கு முன்பாகவே சென்றால், பொருள் உதவி செய்ய வேண்டியிருக்குமோ என்ற எண்ணத்தில் எவரும் வந்து சேரவில்லை.

முதியவர் வருகை

இரக்க குணம் படைத்த பணக்காரர்கள் சிலர் கொடுத்த காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், இலை போன்றவை கொஞ்சம் இருந்தது. 

ஆனால் அவை திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வைக்க போதுமானதாக இருக்குமா? என்று நீளோபாவின் மனைவி கவலையில் ஆழ்ந்தாள்.

அப்போது வீட்டின் வாசலில் முதியவர் ஒருவர் வந்து நின்றார். வெளியே வந்த நீளோபாவிடம், ‘ஏன்பா! நீளோபா–ன்னா நீதானா. உன் மகளுக்கு கல்யாணமாமே?’ என்று கேட்டார் முதியவர்.

‘எல்லாம் இறைவனின் சித்தம். ஐயா! தாங்கள் யாரென்று தெரியவில்லையே? எந்த ஊர்?’ என்று பணிவாக கேட்டார் நீளோபா.

அதற்கு முதியவர், ‘எனக்கு ஏது ஊரு? எல்லா ஊரும் நம்ம ஊருதான். குருவாயூர், மதுரா, பிருந்தாவனம், கோகுலம், உடுப்பி.. இப்படி ஊர் ஊராய் போய் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கிறேன்’ என்று கூறிக் கொண்டே, தான் அணிந்திருந்த கந்தல் துணியில் போட்டிருந்த சிறு சிறு முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கினார். 

‘ஐயா! எனக்கு இப்போது அபார பசி. என்னிடம் இருக்கும் இந்த அரிசி, பருப்பு, காய்கறி, புளி, மிளகாய் போன்றவற்றை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் சாப்பாடு போட்டால் நல்லது’ என்றார் முதியவர்.

நீளோபா அவரைத் தடுத்து, ‘திருமண வீட்டில் சாப்பாட்டுக்கு பஞ்சமா?. உள்ளே போய் பசியார உணவருந்துங்கள். அரிசி, பருப்பு கொடுத்து தான் சாப்பிட வேண்டுமா?’ என்று கூறினார்.

சமையல் பொருட்கள்

‘நீளோபா! நாளை தான் கல்யாணம். அதற்கடுத்த நாள் வரை இந்த பொருட்களை காப்பாற்ற முடியாது. உனக்கு பிச்சைக்காரனிடம் வாங்குவதற்கு அவமானமாக இருக்கிறது போலும். நானும் மானம் உள்ளவன்தான். எனக்கு உன் வீட்டு சாப்பாடு வேண்டாம்’ என்று கூறி அங்கிருந்து புறப்படத் தயாரானார்.

பதறிப்போய் அவரை தடுத்தார் நீளோபா. ‘ஐயா! நில்லுங்கள். அந்த பொருட்களை தாருங்கள்’ என்று கூறியவர், தன் மனைவியை அழைத்து அதனை வாங்கிக் கொள்ளும்படி கூறினார்.

முதியவரிடம் இருந்து பொருட்களை நீளோபாவின் மனைவி பெற்றுக் கொண்டாள். அவளிடம், ‘தாயே! இதனை கல்யாண சமையலுக்கு வைத்திருக்கும் பொருட்களோடு சேர்க்க வேண்டும்’ என்றார் முதியவர். அவளும் அப்படியே செய்தாள். அதன்பிறகு முதியவருக்கு உணவு அளித்தனர். அதனை சாப்பிட்டு முடித்தார்.

அப்போது சமையல் அறையில் நீளோபாவின் மனைவியும், மகளும் கல்யாண சமையல் பொருட்களை தரம் பிரித்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தார்.

‘என்ன! அனைத்து வேலைகளையும் கல்யாண பொண்ணும், அம்மாவும் செய்து கொண்டிருக்கிறார்கள். வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று நீளோபாவிடம் கேட்டார் முதியவர்.

நீளோபா வருத்தம் தோய, ‘ஐயா! நானே உஞ்சவிருத்தி பெற்று சாப்பிடுபவன். நான் எப்படி வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள முடியும்?’ என்றார்.

சமையல்காரனாக...

‘அப்படியானால் நாளைக்கு சமையல்?’ என்று முதியவர் கேட்க, ‘அதற்காகத்தானே நேரம் கழித்து முகூர்த்தம் பார்த்தது. சீக்கிரமே எழுந்து சமையலை முடிக்க வேண்டியதுதான். தாலி கட்டி முடிந்ததும் அப்பளம் தயார் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்’ என்றார் நீளோபா.

‘நன்றாக இருக்கிறது! தன்னுடைய கல்யாணத்திற்கே மணப்பெண்ணே சமைப்பதா?. நன்றாக இருக்கிறது!. நாளைக்கு அடுப்படிப் பக்கம் நீங்கள் யாருமே வரக்கூடாது. நான் நன்றாக சமைப்பேன்.

சிக்கனமாய், அதே நேரத்தில் சுவையாய், மணமாய், விதவிதமான சமையல் செய்வேன். திருமண விருந்திற்கு என்னென்ன வேண்டும்? என்பது எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன். நாளை திருமணத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்று, விருந்துண்ண அனுப்ப வேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை’ என்று கூறிவிட்டார் முதியவர்.

அவரது வார்த்தையைக் கேட்டதும் மகிழ்ந்து போனார் நீளோபா. ‘அந்த பகவானே உங்களை அனுப்பி வைத்ததாக கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி’ என்றார்.

விருந்தில் மயங்கினர்

அப்போது போய் அடுப்படியில் நுழைந்தவர்தான், அனைத்து பணிகளையும் பார்க்கத் தொடங்கிவிட்டார். இரவு நேரங்கழித்து தூங்கி, வெகு அதிகாலையிலேயே எழுந்து சமையல் பணியை முடித்துவிட்டார்.

திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் சமையலை ‘ஆஹா, ஓகோ’ என புகழ்ந்து தள்ளிவிட்டனர். அந்த வர்ணிப்பைக் கேட்டு நாக்கில் எச்சில் ஊற சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

‘என்ன நீளோபா.. திருமணத்திற்கு வீடு தேடி வந்து அழைத்தாய்.. வராவிட்டால் ஏழை என்று ஒதுக்கிவிட்டதாக நினைத்து கொள்வாய் என்றுதான், அவசர வேலைகளைக் கூட அப்படியே போட்டு விட்டு வந்தேன்’ என்று கூறியபடி வந்த உறவினர்கள் அனைவரும் திருமண விருந்தைக் கண்டு வாயடைத்து போய்விட்டார்கள்.

விருந்தில் அத்தனை பதார்த்தங்களை இதுவரை எவரும் பார்த்திருக்க மாட்டார்கள். லட்டு, முறுக்கு, அதிரசம் என்று கண்களை கவர்ந்தன. சமையலை வாசனை மூக்கைத் துளைத்தது, முந்திரியும், பாதாமும் முதல் பந்தியில் சாப்பிட்டவர்களை, அடுத்த பந்திக்கும் இழுத்தது.

பாண்டுரங்கன் விக்கிரகம்

விருந்தினர்களும், மாப்பிள்ளை வீட்டாரும், சம்பந்தியும் நீளோபாவை பாராட்டித் தள்ளினர். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர். நீளோபா, தன்னை அனைவரும் பாராட்டியதற்கு காரணமான முதியவரைக் கண்டு அவருக்கு பட்டு வஸ்திரம் அணிவிப்பதற்காக மடப்பள்ளிக்கு சென்றார். 

ஆனால் முதியவரை காணவில்லை. அங்கே சமையல் பொருட்கள் குறையாமல் அப்படியே இருப்பது கண்டு திகைத்தார். வந்தவர் சாதாரணமானவர் அல்ல என்பது அவருக்கு தெரிந்தது.

அவரது எண்ணம் பொய்யில்லை என்பதை, மடப்பள்ளியில் சிலையாக நின்று கொண்டிருந்த பாண்டுரங்கனின் விக்கிரகம் மெய்ப்பித்தது.

இந்த மலர் இறைவன் திருமேனியை

ஓர் ஊரில் கந்தன் என்ற கோவில் அர்ச்சகர் இருந்தார். அவருடைய மனைவியின் பெயர் ஜானகி. ஜானகிக்கு தன் கணவன் மீது அன்பு உண்டு என்றாலும் மனக்குறைகள் நிறைய உண்டு.

 வெறும் கோவில் அர்ச்சகராக கந்தன் வாழ்க்கை நடத்துவதால் அவன் குடும்ப வாழ்க்கை மிகவும் வறுமையாகவே இருந்தது. நல்ல ருசியான உணவு வகைகளை சமைத்து சாப்பிடவும், உயர்ந்த ஆடை அணிகளை அணிந்து சுவைக்கவும் ஆசைப்பட்ட ஜானகிக்கு அவையெல்லாம் எட்டாத பழமாக இருந்தன.

 ஒரு நாள் ஜானகி தன் மனக்குறையை கணவனிடம் வாய் விட்டுச் சொன்னாள். நீங்கள் கோயில் அர்ச்சகராக இருப்பதால் நமது குடும்பம் எப்பொழுதும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறது. வேறு ஏதாவது உத்தியோகம் தேடினாலோ, வியாபாரம் செய்தாலோ அதிக பணம் கிடைக்கும் அல்லவா என்றாள்.

 ஜானகி மனத்தில் உள்ள கருத்தை கந்தன் தெளிவாகப் புரிந்து கொண்டான். அவளுக்கு தனது பணியின் உண்மை மதிப்பை உணர்த்த எண்ணினான .

ஒரு நாள் கந்தன் கோயிலில் சுவாமிக்கு சமர்ப்பணம் செய்த சிறிய மலர் ஒன்று எடுத்து மனைவியிடம் கொடுத்து இதை கொண்டு போய் நமது அரசரிடம் கொடுத்து இந்த மலருடைய எடைக்குச் சமமான பொன் வாங்கி வா என்றான்.

 ஜானகிக்கு கணவனுடைய எண்ணம் விளங்கவில்லை என்றாலும் கணவன் சொன்னதை நிறைவேற்ற அரண்மனைக்குச் சென்று அரசனை பார்க்க விரும்புவதாக காவலாளிகளிடம் தெரிவித்தாள்.தான் வந்த நோக்கத்தையும் காவலாளிகளிடம் சொன்னாள்.

 காவலாளிகள் ஜானகி சொன்ன தகவல்களை அரசரிடம் சென்று தெரிவித்தார்கள். குடும்பக் கஷ்டம் தீர ஜானகி பொருள் உதவி கூறி வந்திருப்பதாக நினைத்து அரசர் ஒரு பண முடிப்பை அளித்து அவளிடம் கொடுக்கும்படி சொன்னார்.

 ஜானகி பணம் முடிப்பை பெற்றுக் கொள்ளவில்லை . பூஜை மலரின் எடைக்குச் சமமான பொன்னைப் பெற்று வருமாறு தன் கணவன் உத்தரவிட்டிருப்பதால் அதை மீற தனக்கு உரிமை இல்லை என்று ஜானகி வாதாடினாள்.

 காவலாளிகள் அந்த தகவலை அரசனுக்கு தெரிவித்தார்கள். அந்த வினோதமான வேண்டுகோளை செவிமடுத்த அரசன் ஜானகியை தன் முன் வரச் சொன்னார். ஜானகி அரசனை வணங்கி நின்றாள்.

 அம்மா உன் கையில் இருக்கும் மலரின் எடைக்கு என்ன பொருள் கிடைக்க முடியும்? ஒரு குண்டுமணி எடை பொன் கூட இதற்கு சமமாகாதே என்றான் அரசன்.

 துளி அளவு பொன் கிடைப்பதாக இருந்தாலும் என் கணவன் சொன்னபடி தான் நான் நடக்க வேண்டி இருக்கிறது என்று ஜானகி பணிவுடன் சொன்னாள்.

 அரசன் ஒரு தராசை தருவித்தான். ஒரு தட்டில் பூஜை மலரை வைக்கச் சொன்னார். மற்றையதில் கொடுத்த பணமுடிப்பை வைக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம் பூஜை மலர் இருந்த தட்டு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. மற்றொரு பண முடிப்பை தட்டில் வைக்குமாறு அரசன் கட்டளையிட்டார். பூஜை மலர் இருந்த தட்டு உயரவே இல்லை.

 அரசன் வியப்படைந்தான். அரண்மனை பொக்கிஷத்தை திறந்து ஒரு பெரிய தங்க கட்டி எடுத்து வர செய்து தராசு தட்டில் வைத்தான். மலர் இருந்த தட்டு அப்படியே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பொக்கிஷத் தங்கம் முழுவதையும் கொண்டு வரச் சொன்னார். மலர் இருந்த தட்டில் மாற்றமில்லை. தனக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொண்டு வரச் செய்து அரசன் தராசில் வைத்தான்.

 ராணியின் நகைகள் கொண்டுவரப்பட்டன. மன்னனின் அணிகலன்கள் கழட்டி வைக்கப்பட்டன. ஆனால் மலர் இருக்கின்ற தராசு தட்டு மேலே எழவே இல்லை. மன்னன் திகைப்பும் திகிலும் அடைந்தான். இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்று அவனுக்கு விளங்கவில்லை.

கோவில் அர்ச்சகர் கந்தனை அழைத்து வருமாறு அரசன் தன் சொந்த பல்லக்கை அனுப்பி வைத்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் கந்தன் அரசனின் முன் வந்து வணங்கி நின்றான்.

அரசன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து கந்தனை மரியாதை உடன் வரவேற்று தனக்கு சமமாக இருக்கை தந்து அமரச் செய்தான்.

 பிறகு சுவாமி முதலில் தங்களை ஒரு ஏழை அர்ச்சகர் என அலட்சியமாக நினைத்தேன். தங்களுடைய பெருமையும் மதிப்பும் இப்பொழுது தான் எனக்கு விளங்குகிறது என்றான்.

கந்தன் சிரித்துக்கொண்டு அரசே என்னுடைய தகுதியை பற்றி தாங்கள் அளவுக்கு மீறிப் புகழ்கிறீர்கள். என்னிடம் எந்த மகிமையும் இல்லை. இந்த மலர் இறைவன் திருமேனியை அலங்கரித்து அதன் மூலம் பெருமை பெற்றது. தகுதி எல்லாம் இந்த மலரிடம் தான் இருக்கிறது. தவிர என்னிடம் அல்ல என்றான்.

 இந்த மலரின் விலைக்கு சமமான பொருள் உலகத்தில் உண்டா? என்று எனக்கு தெரியவில்லை என்றான் அரசன் திகைப்புடன்.

 இருக்கிறது அரசே! தாங்கள் தயவுசெய்து குளித்து முழுகி பரிசுத்த நிலையில் இறைவனை ஒரு மலரை கொண்டு ஏகாக்கிரக சிந்தனையுடன் அர்ச்சித்து பிறகு அந்த மலரை கொண்டு வந்து அடுத்த தட்டில் வைத்துப் பாருங்கள் என்றான் கந்தன்.

 அரசன் தராசின் மறுதட்டில் இருந்த செல்வப் பொருட்களை அகற்றிவிட்டு கந்தன் சொன்னபடி பரிசுத்த நிலையில் இறைவனை மலர் கொண்டு அர்ச்சித்து அந்த மலரை கொண்டு வந்து தராசின் மறு தட்டில் வைத்தான். என்ன ஆச்சரியம் ஜானகி தந்த மலரின் தட்டு இப்பொழுது மேல் எழுந்து அரசன் மலர் வைத்த தட்டுக்கு சமமாக நின்றது.

 உலகத்தில் எவ்வளவு செல்வமும் பெருமையும் இருந்தாலும் அது இறைவனின் அருளைப் பெற்ற ஒரு மலரை விட எந்த விதத்திலும் உயர்ந்த நிலை அல்ல என்ற உண்மை கண்ணுக்கு மெய்யாக நிரூபிக்கப்பட்டது கண்டு அரசன் மட்டுமல்ல அர்ச்சகரின் மனைவி ஜானகியும் மனம் வருந்தினாள்.

 கடவுளின் அருளுக்கு பாத்திரமாக இருப்பதைவிட வேறு செல்வ நிலை உலகத்தில் எதுவும் கிடையாது. 🙏🙏🙏

பணம் " ஒரு குரங்கு

" பணம் " ஒரு குரங்கு
"""""""""""""""""""'"""""""""""""""""
பணம் இல்லாத போது ஹோட்டல்ல வேலை செஞ்சாலும் வீட்ல வந்து சாப்பிடுகிறான்.

பணம் இருக்கும் போது வீட்டுல சமச்சாலும் ஹோட்டல்ல போய் சாப்பிடுகிறான்.

பணம் இல்லாத போது வயத்தை நிரப்ப சைக்கிள்ல போறான்.

பணம் இருக்கும் போது வயத்தைக் குறைக்க சைக்கிள்ல போறான்.

பணம் இல்லாத போது சோத்துக்காக அலைகிறான்.

பணம் இருக்கும் போது சொத்துக்காக அலைகிறான்.

பணம் இல்லாதபோது பணக்காரனாக நடந்து கொள்கிறான்.

பணம் இருக்கும் போது ஏழையாக காட்டிக் கொள்கிறான்.'

நிம்மதியாக இருக்கும் போது பணத்தைத் தேடுகிறான்.

பணம் இருக்கும் போது நிம்மதியை தேடுகிறான்.

பிரகலாதன்

*மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்.*

*இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார்.* 

*அதிபயங்கர உருவம்.*
*சிங்க முகம்...*
*மனித உடல்...*

*இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு.*

*இதைப் பார்த்தார்களோ இல்லையோ...*

*இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.*

*தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார்.*

*குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார்.*

*இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர்.*

*அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர்.*
 
*பயனில்லை.* 

*மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.*

*"என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை.*

*முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.*

*அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.* 

*தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர்.*

*பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை.*

*அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!*

*தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார்.*

*மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.*

*"பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.*

*அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.*

*"சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு* 
*பெரிய வார்த்தையைச்*
*சொல்லுகிறீர்கள்?'' என்றான்.*

*"உன்னை நான்* *அதிகமாகவே* 
*சோதித்து விட்டேன்*
*சிறுவனான நீ, என் மீது கொண்ட* *பக்தியில் உறுதியாய்* *நிற்பதற்காக* 
*பல கஷ்டங்களை* *அனுபவித்து விட்டாய்.*

*உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன்.* 

*அதற்காகத்தான் மன்னிப்பு,'' என்றார்.*

*இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.*

*"மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம்,* 

*பிரகலாதன்,"ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான்.*

*பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம்.*

*ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.*

*குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல!* 

*பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு!* 

*பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது.* 

*பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான்.*

*இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.*

*"இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது!*
*ஆசை வேண்டாம் என்கிறானே!''*

*ஆனாலும், அவர் விடவில்லை.*

*விடாமல் அவனைக்  கேட்டார்.*

 *"இல்லையில்லை!*

*ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.*

*பகவானே இப்படி சொல்கிறார் என்றால்,*
 *"தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்" என்று முடிவெடுத்த பிரகலாதன்,* 

*"இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார்.*

*அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,'' என்றான்.*

*நரசிம்மர் அவனிடம்,*

 *"பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல!*

*உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள்.*

*அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்,'' என்றார்.*

*நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை.*

*அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது.*

இருக்கன்குடி மாரியம்மன்

 


இருக்கன்குடி மாரியம்மன் இருக்கன்குடியில் அர்ஜுனா ஆறு, வைப்பாறு என்று இரண்டு ஆறுகளுக்கு இடையில் மாரியம்மன் அருள் பாவிப்பதால் இந்த இடத்திற்கு இருக்கன்குடி மாரியம்மன் என்ற பெயர் வந்தது. அர்ஜுனா ஆறு என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நதியானது, வத்திராயிருப்பு என்னும் இடத்தில் உள்ள மகாலிங்கம் மலையிலிருந்து உற்பத்தியாகிறது. மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்ற சமயத்தில் கரடுமுரடான பாதைகளில் நடந்து மகாலிங்க மலையடிவாரத்தை வந்து அடைந்தனர். அவர்களது உடல் களைப்பை போக்குவதற்கு நீராட வேண்டும் என்று விரும்பினார்கள். அருகில் எங்கேயும் நீராடுவதற்கு நதிகள் இல்லை என்பதால் அர்ஜுனன் பூமி மாதாவையும், கங்கை தேவியையும் வணங்கி தனது அம்பினை பூமியில் செலுத்தியதன் மூலம் உருவாக்கப்பட்டது தான் இந்த அர்ஜுன் ஆறு. இந்தக் கோவிலின் வடக்குப் பக்கத்தில் அர்ஜுனன் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தக் கோவிலுக்கு தெற்குப் பக்கமாக ஓடும் வைப்பாறு இராமபிரானினால் உருவாக்கப்பட்டது. இராவணனை வீழ்த்துவதற்காக தனது படைகளுடன் சென்ற இராமன் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வந்தடைந்தார். இவர்கள் கடந்து வந்த பாதையில், ஏற்பட்ட களைப்பினை நீக்கிக்கொள்ள நீராட வேண்டும் என்று நினைத்தபோது, உருவாக்கப்பட்டதுதான் இந்த வைப்பாறு. ராமனும் ராமனுடைய சேனைகளும் நீராடுவதற்காக அங்கு ஏதேனும் நதி உள்ளதா என்று தேடிப் பார்த்தார்கள். அந்த சமயம் வழிப்போக்கன் ஒருவர், அகத்திய முனிவரானவர் உலகில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் ஒரு குடத்தில் சேமித்து, இந்த இடத்தில் புதையலாக புதைத்து வைத்திருப்பதாக கூறினார். இதைக் கேட்ட இராமன், தன் ஞானதிருஷ்டியினால் குடம் புதைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்து, தனது பானத்தின் அம்பினை எய்து புண்ணிய தீர்த்தங்களை வெளிவரச் செய்தார். ‘பைப்பு’ என்றால் புதையல் என்ற அர்த்தத்தை குறிக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த ஆறுக்கு வைப்பாறு என்ற பெயர் வந்ததாகக் கூறுகிறது வரலாறு.

அர்ஜுனனாலும், ராமராலும் உருவாக்கப்பட்டதால், இந்த இரண்டு நதிகளும் கங்கைக்கு நிகரான புண்ணியத்தை பெற்றுள்ளது. இதனால் இந்த ஊருக்கு ‘இருகங்கை குடி’ என்ற பெயர் உருவானது. அந்தப் பெயரே காலப்போக்கில் மருவி தற்போது இருக்கன்குடி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

தல வரலாறு அம்பாளின் தரிசனம் வேண்டும் என்பதற்காக ஒரு முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்து வந்தார். அவரது தவத்தின் பலனால் அந்த சித்தருக்கு ஒரு அசரீதி குரல் கேட்டது. அந்தக் குரலானது ‘சித்தரை அர்ஜுன ஆறுக்கும், மற்றும் வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதிக்கு வருமாறு கூறியது.

இதன் மூலம் அந்த மேட்டுப் பகுதியை அடைந்த சித்தருக்கு அம்பாள் காட்சி அளித்தாள். தன் கண்களால் கண்ட அம்பாளின் உருவத்தை சிலையாக வடிவமைத்து, பிரதிஷ்டை செய்தார் சித்தர். ஆனால் இந்த சிலை இயற்கை சீற்றத்தினால் ஆற்று மண்ணில் புதைந்து போனது. சில காலங்கள் கடந்த பிறகு, இந்த இடத்திற்கு ஒரு சிறுமி சாணம் சேகரிக்க தினம்தோறும் வருவாள். ஒரு நாள் அவள் தரையில் வைத்த சாணக் கூடையை தூக்க முடியவில்லை. அந்தக் கூடையை தூங்குவதற்காக ஊர் மக்களின் உதவியை நாடினாள் அந்த சிறுமி. ஊர் மக்கள் அனைவராலும் தூக்கப்பட்ட கூடையின் அடியில் காட்சி தந்தாள் அம்பாள். இவ்வாறு இருக்கன்குடி மாரியம்மனின் சிலையானது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றளவும் மக்களுக்கு அருள் பாவித்து வருகின்றாள் அம்பாள்.

பலன்கள் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் இந்த அம்பாளை தரிசனம் செய்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. தீராத வயிற்று வலி, அம்மை உள்ளவர்கள் அம்பாளை மனதார தரிசனம் செய்தால் தாக்கங்கள் குறையும். செல்லும் வழி மதுரையிலிருந்து 73 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சாத்தூர் என்ற பகுதி. இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் இருக்கன்குடியை அடைந்துவிடலாம்.

தரிசன நேரம்: காலை 05.30AM – 01.00PM மாலை 04.30PM – 08.00PM முகவரி: சாத்தூர், இருக்கன்குடி, தமிழ்நாடு 626202. தொலைபேசி எண் +91-4562 259 614.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...