Sunday, January 8, 2023

இருக்கன்குடி மாரியம்மன்

 


இருக்கன்குடி மாரியம்மன் இருக்கன்குடியில் அர்ஜுனா ஆறு, வைப்பாறு என்று இரண்டு ஆறுகளுக்கு இடையில் மாரியம்மன் அருள் பாவிப்பதால் இந்த இடத்திற்கு இருக்கன்குடி மாரியம்மன் என்ற பெயர் வந்தது. அர்ஜுனா ஆறு என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நதியானது, வத்திராயிருப்பு என்னும் இடத்தில் உள்ள மகாலிங்கம் மலையிலிருந்து உற்பத்தியாகிறது. மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்ற சமயத்தில் கரடுமுரடான பாதைகளில் நடந்து மகாலிங்க மலையடிவாரத்தை வந்து அடைந்தனர். அவர்களது உடல் களைப்பை போக்குவதற்கு நீராட வேண்டும் என்று விரும்பினார்கள். அருகில் எங்கேயும் நீராடுவதற்கு நதிகள் இல்லை என்பதால் அர்ஜுனன் பூமி மாதாவையும், கங்கை தேவியையும் வணங்கி தனது அம்பினை பூமியில் செலுத்தியதன் மூலம் உருவாக்கப்பட்டது தான் இந்த அர்ஜுன் ஆறு. இந்தக் கோவிலின் வடக்குப் பக்கத்தில் அர்ஜுனன் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தக் கோவிலுக்கு தெற்குப் பக்கமாக ஓடும் வைப்பாறு இராமபிரானினால் உருவாக்கப்பட்டது. இராவணனை வீழ்த்துவதற்காக தனது படைகளுடன் சென்ற இராமன் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வந்தடைந்தார். இவர்கள் கடந்து வந்த பாதையில், ஏற்பட்ட களைப்பினை நீக்கிக்கொள்ள நீராட வேண்டும் என்று நினைத்தபோது, உருவாக்கப்பட்டதுதான் இந்த வைப்பாறு. ராமனும் ராமனுடைய சேனைகளும் நீராடுவதற்காக அங்கு ஏதேனும் நதி உள்ளதா என்று தேடிப் பார்த்தார்கள். அந்த சமயம் வழிப்போக்கன் ஒருவர், அகத்திய முனிவரானவர் உலகில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் ஒரு குடத்தில் சேமித்து, இந்த இடத்தில் புதையலாக புதைத்து வைத்திருப்பதாக கூறினார். இதைக் கேட்ட இராமன், தன் ஞானதிருஷ்டியினால் குடம் புதைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்து, தனது பானத்தின் அம்பினை எய்து புண்ணிய தீர்த்தங்களை வெளிவரச் செய்தார். ‘பைப்பு’ என்றால் புதையல் என்ற அர்த்தத்தை குறிக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த ஆறுக்கு வைப்பாறு என்ற பெயர் வந்ததாகக் கூறுகிறது வரலாறு.

அர்ஜுனனாலும், ராமராலும் உருவாக்கப்பட்டதால், இந்த இரண்டு நதிகளும் கங்கைக்கு நிகரான புண்ணியத்தை பெற்றுள்ளது. இதனால் இந்த ஊருக்கு ‘இருகங்கை குடி’ என்ற பெயர் உருவானது. அந்தப் பெயரே காலப்போக்கில் மருவி தற்போது இருக்கன்குடி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

தல வரலாறு அம்பாளின் தரிசனம் வேண்டும் என்பதற்காக ஒரு முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்து வந்தார். அவரது தவத்தின் பலனால் அந்த சித்தருக்கு ஒரு அசரீதி குரல் கேட்டது. அந்தக் குரலானது ‘சித்தரை அர்ஜுன ஆறுக்கும், மற்றும் வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதிக்கு வருமாறு கூறியது.

இதன் மூலம் அந்த மேட்டுப் பகுதியை அடைந்த சித்தருக்கு அம்பாள் காட்சி அளித்தாள். தன் கண்களால் கண்ட அம்பாளின் உருவத்தை சிலையாக வடிவமைத்து, பிரதிஷ்டை செய்தார் சித்தர். ஆனால் இந்த சிலை இயற்கை சீற்றத்தினால் ஆற்று மண்ணில் புதைந்து போனது. சில காலங்கள் கடந்த பிறகு, இந்த இடத்திற்கு ஒரு சிறுமி சாணம் சேகரிக்க தினம்தோறும் வருவாள். ஒரு நாள் அவள் தரையில் வைத்த சாணக் கூடையை தூக்க முடியவில்லை. அந்தக் கூடையை தூங்குவதற்காக ஊர் மக்களின் உதவியை நாடினாள் அந்த சிறுமி. ஊர் மக்கள் அனைவராலும் தூக்கப்பட்ட கூடையின் அடியில் காட்சி தந்தாள் அம்பாள். இவ்வாறு இருக்கன்குடி மாரியம்மனின் சிலையானது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றளவும் மக்களுக்கு அருள் பாவித்து வருகின்றாள் அம்பாள்.

பலன்கள் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் இந்த அம்பாளை தரிசனம் செய்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. தீராத வயிற்று வலி, அம்மை உள்ளவர்கள் அம்பாளை மனதார தரிசனம் செய்தால் தாக்கங்கள் குறையும். செல்லும் வழி மதுரையிலிருந்து 73 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சாத்தூர் என்ற பகுதி. இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் இருக்கன்குடியை அடைந்துவிடலாம்.

தரிசன நேரம்: காலை 05.30AM – 01.00PM மாலை 04.30PM – 08.00PM முகவரி: சாத்தூர், இருக்கன்குடி, தமிழ்நாடு 626202. தொலைபேசி எண் +91-4562 259 614.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...