Sunday, January 23, 2022

தீராத நோய் தீர்க்கும் ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில், செட்டியாபத்து தலவரலாறு

                                   தீராத நோய் தீர்க்கும் ஐந்துவீட்டு சுவாமி                                                      திருக்கோவில்,

இந்த கோவிலானது நான்கு திசைகளிலும், நான்கு வாசல்களை கொண்டுள்ளது. இதில் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது முதலில் ஸ்ரீ பெரியசாமி சன்னதி அமைந்திருக்கிறது. அடுத்ததாக ஸ்ரீ வைணவ பெருமாள் சன்னதியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அனந்தம்மாள் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ ஆத்தி சுவாமி சன்னதியும், அதனையடுத்து ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ பெரியபிராட்டி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே கோவிலுக்குள் 6 தெய்வங்கள், ஐந்து சன்னதிக்குள் அமைந்திருப்பதால் இந்த கோவிலுக்கு ஐந்து வீட்டு சுவாமிகள் கோவில் என்று பெயர் வந்தது.

ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், கோவிலுக்கான செலவுகளை பஞ்சபாண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் செய்யப்படும் அன்னதானமானது மீனவர்கள், அங்காடியில் வியாபாரம் செய்பவர்கள், வெற்றிலை விற்கும் நாடார்கள், ஆடு மாடுகளை வளர்த்துவந்த கோணார்கள், நெசவாளர்கள் இப்படி ஜாதி மத வேறுபாடின்றி இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட சன்மானத்தில் இந்த ஆலயமானது பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.


ஜாதி பேதம் நீங்கிய வரலாறு 

எல்லா ஜாதி மக்களும் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலுக்கு வந்து வணங்கினாலும், அவரவர் மனதுக்குள் ஜாதி வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருந்தது. ஜாதி ஏற்றத்தாழ்வு அதிகமாக பார்க்கும் அந்த காலகட்டத்தில் ஒரு துப்புரவு தொழிலாளி இறைவனுக்கு பிரசாதத்தை படைத்து வழிபட்டான். ஆனால் அந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, யாரும் அந்த பிரசாதத்தை பெற்றுக் கொள்ள வில்லை. அதன் காரணம், அவன் செய்யும் துப்புரவு தொழிலும் அவன் ஜாதியில் குறைந்த அந்தஸ்தை உடையவன் என்பதும் தான்.

அவன் அந்த கோவிலில் அழுது புலம்பி தவித்து சோர்ந்து கோவில் வாசலிலேயே உறங்கிவிட்டான். அந்த சமயத்தில் தொழிலாளியின் கனவில் வந்த பெரியசாமிகள், ‘அந்த பிரசாதத்தை ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டு அடுத்த வருடம் வந்து அதை திறந்து பார்க்க சொல்’ என கூறிவிட்டு மறைந்து விட்டனர். திடுக்கிட்டு விழித்த அந்தத் தொழிலாளி அந்த கோவிலுக்கு தெற்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் பிரசாதத்தை ஒரு வாழை இலை கொண்டு மூடி, அதை பானையோடு புதைத்து வைத்தான். மறுவருடம் அந்த கோவிலுக்கு வந்த துப்புரவு தொழிலாளி பெரியசாமியை வணங்கிவிட்டு, அவன் புதைத்து வைத்திருந்த அந்த பிரசாதத்தை தோண்டி எடுத்து பார்த்தான். அந்த பிரசாதமானது அப்பொழுதுதான் புதியதாக செய்ததைப் போன்று ஆவி பறக்க இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் அந்தத் தொழிலாளியின் பிரசாதத்தின் மகிமை கண்டு, அந்த பிரசாதம் தங்களுக்கும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு கேட்டு வாங்கிச் சென்றனர். அந்த துப்புரவு தொழிலாளிக்கு இறைவன் கொடுத்த ஆசிர்வாதம் தான் இது. அந்த நாளில் இருந்து யாரும் இந்த கோவிலில் ஜாதி மதத்தினை மனதளவில் கூட பார்ப்பதில்லை.

பலன்கள்

 ‘ஹரி ஓம் ராமானுஜாய’ ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் மந்திரமாக இது கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை உச்சரித்து அந்த இறைவனிடம் வேண்டினால், திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். நவக்கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். மனோதைரியம், நிம்மதி, எடுத்த காரியத்தில் வெற்றி, இவைகளை பெற்று வளமாக வாழலாம்.

 தரிசன நேரம்: காலை 7AM-8.30AM மணி வரை மதியம் 11AM-12 மணி வரை மாலை 5.30PM- 7 மணி வரை.

முகவரி: திருச்செந்தூர், தூத்துக்குடி, செட்டியாபத்து, தமிழ்நாடு 628210. 

தொலைபேசி எண். 04639-250630.


Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...