Sunday, May 22, 2022

நடவாவி கிணறு

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் நடவாவிக் கிணறு உற்ஸவ விவரங்கள் முழுதும் இப்போது தெரிந்துகொள்வோம் முதலில் வீடியோ பார்த்தோம் இப்போது விவரங்கள் இங்கே !
பூமிக்கு அடியில் நடைபெறும் அதிசய வரதராஜ பெருமாள் உற்சவம் இன்று 21/5/2022 சனிக்கிழமை தரிசிப்போம் 

காஞ்சிபுரத்திலிருந்து கலவை செல்லும் வழியில் ஐயங்கார் குளம் எனும் திருத்தலம் உள்ளது இங்குள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி உள்ள பெரிய குளத்தின் அருகே நடவாவிக் கிணறு என்ற சிறப்பு வாய்ந்த கிணறு உள்ளது. இந்தக் கிணற்றுக்குள் செல்ல சிறப்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
வளர்பிறையில் பிரம்மாவின் வேள்வியில் இருந்து அவதரித்தவர் வரதராஜ பெருமாள் என்கிறது தலபுராணம். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று அந்த வைபவம் நடவாவி உற்சவமாகக் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலிலிருந்து வரதர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அழகே தனி. அந்த திருநாளில் யாகம் வளர்த்து நெருப்பாலும், நடபாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் வரதராஜ பெருமாளை ஆலயத்திற்கு கொண்டு வருகின்றார்கள்.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் யாத்திரையை தொடங்கும் வரதர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, செவிலிமேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐய்கங்கார் குளம் வழியாக நடவாவி கிணற்றுக்கு வருகிறார். அங்கிருந்து பாலாறு, மீண்டும் செவிலிமேடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறமாக விளக்கடிக்கோயில் தெரு, காந்தி ரோடு வழியாக வரதராஜ பெருமாள் கோயிலுக்கு பெருமாளை அழைத்து வருகின்றார்கள்.

பெருமாளை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வருபவர்களுக்கு தனது அழகைக் காட்டி மயக்கிவிடுகிறார் பெருமாள். அவர்கள் மனதில் என்னென்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என நினைக்கின்றார்களோ, அவர்கள் வேண்டாமலேயே பெருமாள் அதை பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

சுட்டெரிக்கும் வெயிலில் வீதிகளில் நீரை தெளித்து குளிர்வித்து, கோலமிட்டு பெருமாளை வரவேற்கிறார்கள் பக்தர்கள். வழியெங்கும் தோரணங்கள், இளைப்பாற பந்தல்கள் என குதூகலத்தோடு பெருமாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றார்கள். புளியோதரை, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், சாம்பார்சாதம் என வழியெங்கும் அன்னதானம் செய்கிறார்கள். வெயிலில் வருபவர்களின் தாகம் தணிக்க பானகம், மோர், தண்ணீர் என கொடுக்கிறார்கள்.

நடவாவி கிணறு

வாவி என்றால் கிணறு என்று பொருள். நட என்றால் நடந்து வருதல் என்று பொருள். கிணற்றுக்குள் ஒரு கிணறு. தரைத்தளத்திலிருந்து படிக்கட்டுகளால் சுரங்கம் போன்றதொரு பாதை செல்கிறது. அதற்குள் மண்டபம். மண்டபத்திற்குள் கிணறு. இதுதான் நடவாவி கிணறு என்று அழைக்கப்படுகின்றது. சித்திரை பௌர்ணமியின் இருதினங்களுக்கு முன்பே, மண்டபத்தில் நீர் தேங்காத அளவிற்கு கிணற்றிலிருக்கும் நீரை வெளியேற்றுகின்றார்கள்.

48 மண்டலங்களை குறிக்கும் வகையில் 48 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. 27வது படி வரை கீழே இறங்க முடியும். இந்த 27 படியும் 27 நட்சத்திரங்களை குறிக்கின்றன. 27 படி ஆழத்தில் மண்டபத்தை அடையமுடியும். 12 ராசிகளை குறிக்கும் வகையில் 12 தூண்களால் கிணற்றை சுற்றி மண்டபம் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு தூணிலும் நாற்புறமும் பெருமாளின் அவதாரம் சிறிய மற்றும் பெரிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளன.

மேளங்கள் முழங்க, சிறப்பு அலங்காரத்துடன் நடவாவி கிணற்றுக்குள் இறங்கும் வரதராஜர், கிணற்றை மூன்றுமுறை சுற்றுகிறார். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் நான்கு திசைக்கும் ஒரு முறை தீபாராதனை நடைபெறுகிறது. இதுபோல் மொத்தம் 12 முறை தீபாராதனை நடைபெறுகிறது. கல்கண்டு, பழங்கள், என மொத்தம் 12 வகையான பிரசாதங்களை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

இரண்டாம் நாள் ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் நடவாவி கிணற்றுக்கு வந்து செல்கின்றார்கள். அதைத் தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் கிணற்றில் நீராடி மகிழ்கின்றனர். சித்திரை பௌர்ணமி முடிந்தும் 15 முதல் 20 நாள்வரை நீராடலாம்.

நடவாவி கிணற்றில் இருந்து கிளம்பும் வரதருக்கு, பாலாற்றில் வைத்து பூஜை செய்கிறார்கள். ஆற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் ஊறல் (அகழி போன்ற பள்ளம் ) எடுத்து, அதற்கு பந்தல் போட்டு அபிஷேகம் நடக்கின்றது. இதற்கு ஊறல் உற்சவம் என்று பெயர். அதைத் தொடர்ந்து காந்தி ரோடு வழியாக கோயிலுக்கு வந்தடைகிறார் வரதர்.

பெருமாள் செல்லும் இடங்களில் எல்லாம் திருவிழாவாகவே இருக்கின்றது.

படிக்கட்டுகள் வழியாகக் கீழே சென்றால் கருங்கல்லால் ஆன, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும் இந்தப் பெரிய கிணற்றில் ‘சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றிவிடுவார்கள் அன்று மாலை பூமிக்கு அடியில் (கிணறு) அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமானை எழுந்தருளப் பண்ணுவார்கள்.

மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம்.

அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும் வான்வழி பார்வையில் இந்த கிணறு சாவி போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. நடவாவி கிணறு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என கூறப்படுகிறது.

கிணற்றின் மூன்று பக்கங்கள் கருங்கற்களால் அமைந்துள்ளன. நான்காவது பக்க சுவற்றில் கதவு போன்ற அமைப்பு காணப்படுகிறது. இந்த கதவிற்கு பின்புறம் பாதை உள்ளதா? அது எங்கு செல்கிறது என்பது தேவ ரகசியமாகவே உள்ளது.

சஞ்சீவிராயர் ஆலயத்தில் மூன்று நாடாவி கிணறுகள் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது தற்போது ஒரு கிணறு மட்டுமே மக்கள் வழிபாட்டில் உள்ளது. மற்றொரு கிணறு சஞ்சீவிராயர் ஆலயத்தில் உள்ளே இருந்ததாகவும் தற்போது அந்த கிணறு முற்றிலும் அழிந்து இருக்கும் இடம் தெரியாமல் மாயமானது. மற்றொரு நடவாவி கிணறு ஐயங்கார் குளம் கிராமத்தில் ஒதுக்குப்புறத்தில் பாழடைந்து புதர் மண்டி அழியும் விளிம்பில் பரிதாபமாக காட்சியளிக்கிறது.

கிணற்றின் வெளித்தோற்றத்தில் இருக்கக்கூடிய கல்மண்டபம் மட்டுமே புதருக்குள் ஐந்தாயிரம் ஆண்டுகால வரலாற்றை தாங்கி நின்று கொண்டிருக்கிறது கல் மண்டபத்தில் இருந்து படிக்கட்டுகள் உள்ளே செல்கின்றன சுமார் 20 அடி உயரத்திற்கு கேட்பார் கவனிப்பார் யாரும் இல்லாத காரணத்தினால் மண்மூடி பாதை தடைசெய்யப்பட்டு அழியும் விளிம்பில் நடவாவி கிணறு பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

கிணற்றை சுற்றி இருக்கக்கூடிய கற்கள் வலுவிழந்து பெயர்ந்து தரையில் விழுந்துள்ளது இந்தக் கிணறு போதிய விழிப்புணர்வும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லாமல் தொடர்ந்து சேதமடைந்துகொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த நாடாவி கிணறு முற்றிலுமாய் அழிந்து போகும் அபாயம் உள்ளது.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...