Wednesday, June 28, 2023

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டத்துக்கு

இஸ்ரோ அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் விண்வெளி வீரர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட தனது லட்சிய ககன்யான் ஏவுகணைத் திட்டத்துக்கான பணியைத் தொடங்க இஸ்ரோ தயாராகி வருகிறது.

குறிப்பாக நமது கிரகத்துக்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்களுக்குப் பயணத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். அந்த வகையில் விண்வெளி வீரர்களின் உயிர் காக்கும் பொருள்களில் ஒன்றான அவர்களின் உணவு முறை குறித்த விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

சமீபத்தில் இது குறித்து பேசியுள்ள இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், விண்வெளி வீரர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு இந்திய உணவுகளே வழங்கப்படும். இந்த அசாதாரண பயணத்துக்கான சிறப்பு உணவுப் பொருள்கள் மற்றும் மெனுக்களை உருவாக்கப் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாகக் குறைந்த நாட்கள் மட்டுமே பயணம் போன்ற பணிகளில் இட்லி, சாம்பார் போன்றவை மெனுவில் இருக்காது. அதற்குப் பதிலாக விண்வெளி வீரர்கள் பதப்படுத்தப்பட்டது போன்ற உணவுகளை உட்கொள்வார்கள். பின்பு நீண்டகால பயணம் மற்றும் அங்கேயே தங்கியிருந்து செய்யும் பணிகளுக்கு கோழிக்கறி உள்பட பலவகையான உணவுகள் வீரர்களுக்குக் கிடைக்கும். மேலும் உணவின் தன்மை பூமியில் நாம் உட்கொள்வதைப் போலவே இருக்கும்" என்று பகிர்ந்துள்ள அவர், இந்திய விண்வெளி வீரர்களுக்கான தேர்வு முறைகள் பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார். அதாவது இந்திய விமானப்படை விண்வெளி வீரர்களுக்கு முதன்மை ஆதாரமாக உள்ளது. காரணம் என்னவென்றால், அவர்கள் விமானப் பயணம் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்கள்.

குறிப்பாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டத்துக்கு விமானப் படையில் இருந்து நான்கு விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள், விண்வெளி வீரர் பயிற்சியாளர்களாகச் சேர்ந்துள்ளனர். மேலும் இந்தத் திட்டத்தை வெற்றிக்கரமாகச் செயல்படுத்த, முன்பு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் உதவியையும் நாடியுள்ளோம்.

இந்த ககன்யான் திட்டத்துக்கான இறுதித் தேதியை இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்தையும் தயார்படுத்துவதே தற்போது எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்.

அதேபோல் நிலவை ஆய்வு செய்வதற்குக் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த விண்கலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக லேண்டர் கலனை நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தகவல் வெளிவந்துள்ளது.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...