Friday, April 8, 2022

காஞ்சி மகா பெரியவருக்கு அருளிய அம்பிகை

*"காஞ்சி மகா பெரியவருக்கு அருளிய அம்பிகை"*

(குழந்தை உருவத்தில் ஒரு சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, "இந்தாருங்கள்.... தண்ணீர் கேட்டீர்களே" என்று கூறி கொடுத்தாள்- இது நங்கநல்லூர் அதிசயம்).

பல வருடங்களுக்கு முன்பு நடந்த அதிசயம் இது.

அப்போது ஒருநாள், காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார்.

வரும் வழியில், பழவந்தாங்கலில் ஓரிடத்தில் சற்று ஓய்வு கொள்ள எண்ணம் கொண்டவராக,அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார்.

அப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் பருக வேண்டும் என்று தோன்ற தனது சிஷ்யர் ஒருவரை அழைத்தார். மகா பெரியவா கேட்டது சிஷ்யர் காதில் விழவில்லை.

சிறிது நேரத்தில் ஒரு சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, "இந்தாருங்கள்.... தண்ணீர் கேட்டீர்களே" என்று கூறி கொடுத்தாள். அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு அவளை காணவில்லை.

உடனே தனது சிஷ்யரை அழைத்து விவரத்தைக் கூறி, "யார் அந்த சிறுமி, தண்ணீரை நீங்கள் தான் சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா?" என்று கேட்க, அவர்களோ, "இல்லையே... அந்த சிறுமி யாரென்றே தெரியாது" என்று வியப்புடன் கூறினார்களாம்.

தொடர்ந்து மகா பெரியவர் சற்றே கண்மூடி அமர்ந்திருந்தார். வந்தது சாட்சாத் அந்த அகிலமெல்லாம் காக்கும் அம்பிகையான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே என்பதை உணர்ந்து, அன்றைய கிராமமான பழவந்தாங்கல் கிராம பெரியவர்களையும், ஊர் மக்களையும் அழைத்து, "இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள். உடனே தோண்டி கண்டு பிடியுங்கள்" என்று சொல்லிவிட்டு ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்க சென்றுவிட்டார்.

மகா பெரியவர் கூறியபடி, கிராமப் பெரியவர்கள்
அந்த இடத்தைத் தோண்ட, முதலில் அம்பிகையின் குழந்தை வடிவிலான விக்ரகமும், தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைத்தது.

இந்தத் தகவல் மகா பெரியவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் மகிழ்வுற்று, அந்த இடத்தில் திரும்பவும் விக்ரக பிரதிஷ்டை செய்து, அந்த அம்பிகைக்கு 'ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி' என்ற திருநாமத்தை வைத்தார். இதுதான், நங்கநல்லூரில், பழவந்தாங்கல் நேரு காலனியில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில்.

இங்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, சிறுமி வடிவத்தில் அருள் பாலிப்பது சிறப்பு. இந்தக் காட்சியை வேறு எங்கும் காண்பது அரிது.

ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர 
காஞ்சி சங்கர காமகோடி சங்கர 
Vani Jayaraman 
01.04.2022

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...