Thursday, February 3, 2022

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் சிறப்புப்பதிவு.

மகாதீபக் கொப்பரைக்கும் ஒரு வரலாறு........

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு மஹா தீபம் ஏற்றப் படவுள்ள ௨௫௦[250] கிலோ எடை கொண்ட கொப்பரை , கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபக்கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சிக்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த ஆண்டு புதிய தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.௨௫௦ கிலோ எடை கொண்ட பஞ்சலோகக் கொப்பரை கோயம்பத்தூரைச் சேர்ந்த ஓர் அன்பரால் காணிக்கையாக வழங்கப்பட்டதாகும்.

நாளை , அதிகாலை, நான்கு மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, ஆறு மணிக்கு, ௨௬௬௮ [ 2668 ] அடி உயர மலை உச்சியில், ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இதையொட்டி,அண்ணாமலையார் திருக்கோயிலின் சிறிய நந்தியார் சந்நிதி முன்பு இன்று அதிகாலை பருவதராஜகுல மரபைச்சார்ந்த அன்பர் வேல்முருகன் அவர்களின் தலைமையில் மகா தீபக் கொப்பரைக்கு அலங்கார தீபாராதனை நிகழ்த்தப் பெற்று பதினைந்து ஊழியர்கள் மூலமாக "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற முழக்கத்துடன் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.சென்ற ஆண்டின் பழைய கொப்பரையை விட நூறு கிலோ எடை கொண்ட தீபக்கொப்பரையைக் கொட்டும் மழையிலும் பத்திரமாகக் கொண்டு சென்றனர்.
 
இதில், ஏற்றப்படும் மஹா தீபத்தை, ௪௦ கி.மீ., வரை பார்க்க முடியும்.கொப்பரை, வெப்பத்தால் சேதமாகாமல் இருக்க, மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவும், ௨௫௦ [250] கிலோ எடையில், கால் அங்குலம் தடிமன் கொண்டதாகவும், ௨௦ வளையங்களுடன் கூடிய செப்புத் தகட்டில் செய்யப்பட்டுள்ளது.

கொப்பரைக்குக், காவி வர்ணம் பூசப்பட்டு, ‘'சிவ சிவ’' என்ற வாசகம் எழுதப்பட்டு, விபூதிப் பட்டையுடன் கூடிய லிங்கம், , தீப விளக்கு எரிவது போலவும் அதன்கீழ் மகாதீபம் என்ற சொற்களுடன் படம் வரையப்பட்டுள்ளது.

முன்னதாக,இந்த கொப்பரை நேற்று கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன .

பழைய கொப்பரையும் பழுது பார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை ௨ ,௬௬௮ [ 2668 ] அடி உயரம் கொண்டது.[ தற்போது தமிழக அரசு இதன் உயரம் ௨௭௪௮ [ 2787 ] அடிகள் என அறிவித்துள்ளது.] இதன் உச்சியில் பிரம்மாண்டமான கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.

 பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த தீப உற்சவம். மலைமேல் மகாதீபம் என்ற பெருமை இங்கு மட்டுமே உள்ளது. பின்னாட்களில் திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் வழக்கம் உண்டானது.

 மகாதீபம் ஏற்றும் உரிமை செம்படவர் எனப்படும் மீனவர் இனத்தவருக்கு உரியது. மீனவர் தலைவரான பர்வதராஜன் என்பவனின் மகளாகப் பார்வதி தேவி பிறந்தார் . மீன் போன்ற அழகிய விழிகளை உடையவள் என்ற பொருளில் '' கயல் கண்ணி '' என்று பெயரிட்டனர். பலரும் '' கயல் கன்னி '' என்று குறிப்பிடுகின்றனர்; இது தவறு. '' கயல் கண்ணி '' என்பதே சரி. மீனாட்சி அம்மனுக்கு அங்கயற்கண்ணி, அதாவது அம் + கயல் + கண்ணி என்று ஒரு பெயர் உண்டு. இந்த கயல் கண்ணியினைச் சிவபெருமான், மீனவ இளைஞனாக வந்து, மணந்து, தேவியின் சாபம் நீக்கி, இருவரும் சிவ பார்வதியாக பருவதராஜனுக்குத் தரிசனம் தந்தனர். இதனால் மீனவர்களுக்குப் பருவதராஜகுலத்தார் என்று பெயர் ஏற்பட்டது.செம்படவர் என்ற பெயரும் இதே பொருளில்தான். படகுகளில் செல்வதால் படவர்; சிவன் + படவர் என்பதே செம்படவர் என்று ஆனது.
 இந்த பருவதராஜகுலத்தார் தான் தலைமுறை தலைமுறையாக மகாதீபம் ஏற்றும் உரிமைகளை உடையவர்கள். 

தீபத் திருவிழாவின் பத்தாம் நாள் மாலையில் மலைமேல் ஏற்றுவதற்காக தீபக் கொப்பரை, மலைமீது முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்.

 தீபத் திருவிழாவில் தீபம் ஏற்றும் கொப்பரை பற்றியும் வரலாறு உண்டு. 

ஆதி காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் செய்து கொடுத்துள்ளனர். அது பற்றி தகவல் திரட்ட படவில்லை. புதுயுகம் ௧௬௬௮ [1668 ] ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட ௩௫௦ ஆண்டுகள் முன்பு வேங்கடபதி என்பவர் நாலரைபாகம் எடைகொண்ட[ இது எந்தவகை எடை என்று தெரியவில்லை ] வெண்கலத்தால் செய்யப்பட்ட கொப்பரை செய்து அளித்துள்ளார்., கோயிலில் இது பற்றிய குறிப்பு பதிவாகி உள்ளது.இது, தொடர்ந்து நெடுங்காலம் பயன்படுத்தப்பட்டதால் சேதமடைந்தது.

 இதையடுத்து, இப்போது உள்ள கொப்பரையின் வடிவமைப்பு உருவானது.இது ௧௯௯0 [1990 ]ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ௯௨ [ 92 ] கிலோ செம்பு ௧௧௦ [ 110 ]கிலோ இரும்புச் சட்டங்களால் வடிவமைக்கப்பட்டது.கொப்பரையில் அடிப்பாகம் ௨௭ [ 27 ] அங்குல விட்டமும் மேற்புறம் ௩௭ [ 37 ] அங்குல விட்டமும் உடையது. மொத்த உயரம் ௫௭ [57 ] அங்குலம்.
இந்தக் கொப்பரையைத் தயார் செய்து தரும் பணியைப் பக்திபூர்வமாக செய்து வருபவர் சுமார் ௭௦ [70 ] வயதான மண்ணு நாட்டார் என்ற பருவதராஜகுலப் பெரியவர்.  

அவருடைய மகன் பாஸ்கர், இவ்வாறு கூறுகிறார்=

''கார்த்திகை தீபத் திருவிழாவின் சிறப்பே 'மகா தீபம்' தான். இந்த 'மகா தீபம்' ௨ ,௬௬௮ [ 2,668 ]அடி உயரம் உள்ள மலை உச்சியில் ௩௦ [ 30] ஆம் தேதி மாலை ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றும் உன்னதமான இந்தப் பணியை, 'நாட்டார்கள்' என்று அழைக்கப்படும் பர்வதராஜ குலத்தைச் சேர்ந்தவர்களான நாங்கள், தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகிறோம். மகா தீபத்துக்கான பிரம்மாண்டமான கொப்பரை தயாரிப்பதில் இருந்து, மலை மீது ஜோதியை ஏற்றுவது வரையிலான இறைப்பணியைச் செய்வது எங்கள் குல வம்சத்தினர்தான்.

இதில் நாங்கள், கடந்த ௧௯௯௦[ 1990] -ஆம் ஆண்டில் இருந்து கொப்பரையைச் செய்வது மற்றும் வருடம்தோறும் பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்யும் வாய்ப்பை அண்ணாமலையார் அருளால் பெற்றிருக்கிறோம்.

மலை மீது ஏற்றப்படும் ஜோதி பிரகாசமாக சுடர்விட முக்கிய காரணம் அதன் கொப்பரையே. கடந்தமுறை கொப்பரை தாமிரத்துடன் இரும்பு கலந்து தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை முழுக்க முழுக்க தூய தாமிரத்தகட்டினால் (செம்புத்தகடு) தயாரிக்கப்பட்ட கொப்பரையையே 'மகா தீபம்' ஏற்ற பயன்படுத்துகிறோம். ஆகம விதிகளின்படி மகா தீபக் கொப்பரை, மொத்த உயரம் ௫௭ [57 ] அங்குலம். அதன் வாய் ௩௭ [ 37 ] அங்குல விட்டமும் கொண்டதாக வடிவமைக்கப்படும்.

 மகா தீபத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கொப்பரை பழுதானதால் ௨௦௧௬ [2016] ஆம் ஆண்டு ஆண்டு புதிய கொப்பரை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை என் தந்தை மண்ணு நாட்டார் தயாரித்துத் தந்துள்ளார். அவர் தயாரித்துத் தரும் மூன்றாவது கொப்பரை இது.

சுமார் இரண்டு இலட்சம் மதிப்பில், மொத்த உயரம் ௫௭ [57 ] அங்குல உயரத்தில், கீழ்வட்ட சுற்றளவு ௨௭ [27 ] அங்குலம், மேல்வட்ட சுற்றளவு ௩௭ [ 37 ]அங்குலம், ௨௦௦ [ 200 ] கிலோ எடையில் கொப்பரை செய்யப்பட்டுள்ளது.''இவ்வாறு அவர் மகன் பாஸ்கர் கூறினார்.இந்த கொப்பரை மீண்டும் செப்பனிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்து என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...