Saturday, February 12, 2022

அருள்மிகு புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலயம்

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலயம்




புதுக்கோட்டை ராஜாகுளக்கரையில் புவனேஷ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.புதுக்கோட்டை நகரின் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் அருள் மிகு புவனேஸ்வரி அம்மனை தரிசிக்க தமிழகம் முழுவதிலிமிருந்து தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயில் அண்மைக்காலத்தில் உருவானதாகும்.

புவனேஸ்வரி கோவிலுக்கு அதிஷ்டானம் என்று பெயர். 1936ஆம் ஆண்டு முதல் இந்தக்கோவில் இருக்கிறது.

இக்கோயில் தோன்றியது குறித்த ஒரு கதையும் உண்டு. கேரள மாநிலம் திருவாங்கூரில் நேர்மையும் நீதி வழுவாத நீதியரசர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் விசாரணை செய்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கொலையாளி எனத் தீர்க்கமாகத் தெரிந்து சட்டப்படி தண்டைனை வழங்க இயலாமல் போனது. இதனால் மனமுடைந்த நீதிபதி தனது பதவியை துறந்து உலக வாழ்க்கையை வெறுத்து துறவியாகி அவதூதராக நாடெங்கும் சுற்றி வந்தார்.

புதுக்கோட்டைக்கு வந்த அவர் தற்போது புவனேஸ்வரி கோயில் அமைந்துள்ள இடத்தருகே தங்கினார்.
இதன் பிறகு பதினாறு ஆண்டுகள் கழித்து அவதூதரின் பக்தரான ஸ்ரீ சாந்தனாந்தசுவாமி எனும் ஞானியார் புதுக்கோட்டைக்கு வருகை தந்து ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் அருகே புவனேஸ்வரி அம்மனுக்கு ஒரு கோயிலை எழுப்பினார்.

அன்னை புவனேஸ்வரி இங்கு குடிகொண்டுள்ளதால் புவனேஸ்வரி அம்மன் கோயில் என்று தமிழக மக்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்ததும் நேர் எதிரில் ஜட்ஜ் சுவாமியின் அதிஷ்டானம் தென்படும். அவரை பக்தியுடன் வணங்கி இடது புறம் திரும்பினால் அஷ்டதசபுஜா மகாலட்சுமி துர்காதேவி சன்னதி உள்ளது. அம்பிகை மிக உயரமாக பத்து கரங்களுடன் இன்னருள் பாலிக்கிறாள். 

சற்றே நடந்தால் 18 சித்தர்களை தரிசிக்கலாம். சித்தர்களை அடுத்து நால்வர், 25 தலை கொண்ட சதாசிவர், அபீஷ்ட வரத மகாகணபதி, ஸற்குரு சாந்தானந்த சுவாமிகள், பஞ்சமுக மகா கணபதி, விஸ்வகர்மா, பஞ்சமுக ஆஞ்சநேயர், ஐயப்பன். பாலமுருகன், தெட்சிணாமூர்த்தி, தட்சிணகாளி, காசி விஸ்வநாதர், காவல் தெய்வமான பொற்பனை முனீஸ்வரர், கைவல்யானந்த சுவாமி, லட்சுமி நரசிம்மர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் இங்கு நடைபெறும் யாகம் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதால், நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் அச்சமயம் இங்கு கூடுகின்றனர்.

புதுக்கோட்டை கீழ ஏழாம் வீதியில் இத்தலம் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தொலைவிலுள்ள இத்தலத்தை ஆட்டோக்களில் அடையலாம்.

No comments:

Featured Post

உணவு முறைல முடிஞ்ச அளவு மாற்றம் பண்ணுங்க.

  நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு ...